பிற இதழிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

பிற இதழிலிருந்து...

இது நன்றிப் பெருவிழா!

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது சமுதாய நீதி. பிறப்பில் யாருக்கும் ஏற்றத்தாழ்வு இல்லை. ஆனால், ஜாதிகள் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் சமுதாயத்தில் உருவாக்கப்பட்டன. இதனால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் சமுதாய மக்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டு பள்ளத்தில் கிடந்தனர். அவர்களை கைத் தூக்கிவிடுவதற்காக, அவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்று நீதிக் கட்சியினர் ஆரம்பகாலத்தில் போராடினார்கள்.

திராவிட இயக்கமான நீதிக்கட்சி துணையுடன் ஆட்சி அமைத்த டாக்டர் சுப்பராயன் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவையில் இருந்த எஸ்.முத்தையா முதலியார், வகுப்புவாரி உரிமை ஆணையை பிறப்பித்தார். இடஒதுக்கீட்டுக்கு ஆரம்பமே இந்த அரசாணைதான். தந்தை பெரியார் 1919-இல் திருச்சியிலும், 1920-இல் திருநெல்வேலியிலும், 1921-இல் தஞ்சையிலும் நடந்த காங்கிரஸ் மாநாடுகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பற்றி பேசினார். சமூகநீதிக்காகவே, இடஒதுக்கீட்டு பிரச்சினைக்காகவே தந்தை பெரியார் 1925-இல் காங்கிரசைவிட்டு வெளியேறினார்.

இவ்வாறு பல தலைவர்கள் போராடியதாலும், அவர்களது அயராத முயற்சிகளாலும், இப்போது இடஒதுக்கீடு அமலில் இருக்கிறது. ஒன்றிய அரசாங்க பணிகளில், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இல்லாத நிலையை 11 மாதங்கள் மட்டும் பிரதமராக இருந்த வி.பி.சிங், மண்டல் ஆணையப் பரிந்துரைகளை நிறைவேற்ற பிறப்பித்த ஆணையினால் 27 சதவீத இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. அதனால்தான் வி.பி.சிங், 'சமூகநீதி காவலர்' என்று போற்றப்படுகிறார். அதுபோல மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.தான் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவந்தார்.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது தமிழ்நாட்டுக்கு பல நன்மைகள் கிடைத்தன. அதில் முக்கியமானது காவிரி நடுவர் மன்றத்தை அமைத்ததாகும். சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலைஞரின் வேண்டுகோளையேற்று, சென்னை விமானநிலையத்தின் ஒரு முனைக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரையும், மற்றொரு முனைக்கு அறிஞர் அண்ணாவின் பெயரையும் அந்த மேடையிலேயே சூட்டி அறிவித்தவர் பிரதமர் வி.பி.சிங். 

அவர் பிறப் பால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் அல்ல. ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல. ஆனாலும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்கியே தீரவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் மண்டல் ஆணையப் பரிந்துரைகளை நிறைவேற்றி சாதனை படைத்தவர். அந்தநேரம் நாடாளுமன்றத்தில் பேசும்போது தந்தை பெரியாருக்கு தனிப்பட்ட நன்றியை பதிவுசெய்து, புகழ்சேர்த்தார்.

கலைஞர் மீது அளப்பரிய அன்புகொண்டவர். ''காலம் மாறினாலும், தான் மட்டும் மாறாமல் இருக்கிற ஒரு தலைவர் உண்டென்றால் அது கலைஞர்தான். பதவியை காப்பாற்றிக்கொள்ள என்னுடைய கட்சி முதலமைச்சர்களே என்னைவிட்டு ஓடிய நேரத்தில் என்னுடன் இருந்தவர் கலைஞர்'' என்று புகழாரம் சூட்டினார். பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒளிவிளக்கான வி.பி.சிங் அளித்த 27 சதவீத இடஒதுக்கீடு, காலம்காலமாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் உள்ளத்தில் நன்றியுணர்வு பெருக்கெடுத்தோட செய்யும்.
இந்தியா முழுமைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிதாமகன் வி.பி.சிங்குக்கு, சென்னையில் சிலை எடுத்திருக்கிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

காலங்கள் மாறினாலும், தமிழர்களின் நன்றியுணர்வு ஒருபோதும் பட்டுப்போகாது என்பதை எடுத்துச்சொல்லும் விழாவாக இது அமைந்தது. அதை பறைசாற்றும் வகையில்தான் வி.பி.சிங் சிலை திறப்புவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, அதில் கலந்து கொண்ட வி.பி.சிங் மனைவி மக்களை பார்த்து "வி.பி.சிங் குடும்பத்தினர் என்று உங்களை நான் அழைக்க விரும்பவில்லை. நீங்கள் வி.பி.சிங் குடும்பத்தினர் என்றால் நாங்கள் யார்?, நாங்களும் வி.பி.சிங் குடும்பத்தினர்தான்" என்று கூறி தமிழர்களும், வி.பி.சிங் குடும்பத்தினர்-சமூகநீதி குடும்பத்தினர் என்று பிரகடனப்படுத்திவிட்டார்.
நன்றி: 'தினந்தந்தி' தலையங்கம் 30.11.2023

No comments:

Post a Comment