ரத்தம் - ஒரு சிவ(ற)ப்புப் பார்வை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 27, 2023

ரத்தம் - ஒரு சிவ(ற)ப்புப் பார்வை

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள்

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்தசோகை வராது.

ரத்த வெள்ளை அணுக்களின் வேலை

ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க்கிருமிகளை முதலில் எதிர்த்துப் போராடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்’ அணுக்களின் வேலை உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்’ போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்லட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.

பிளாஸ்மா

ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருட்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள்(Factors) புரதப் பொருள்கள் இருக்கும். தீக்காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

ரத்தத்தில் உள்ள பொருட்கள்

ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள்  (White Blood Cells), பிளேட்லட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவநிலையில் “பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.


No comments:

Post a Comment