பெண் தொழில்முனைவோரின் இணைய விற்பனைத்தளம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 30, 2023

பெண் தொழில்முனைவோரின் இணைய விற்பனைத்தளம்

கரோனாவிற்கு பிறகு பலர் இணையவழி விற்பனையகத்திற்கு மாறிவிட்டார்கள். காரணம், கூட்டத்தில் சென்று அலைய வேண்டாம். விரும்பும் டிசைன்களை இருக்கும் இடத்தில் இருந்தே தேர்வு செய்யலாம். சரியாக இல்லை என்றாலும் ஆன்லைன் முறையிலேயே மாற்றிக் கொள்ளலாம். இப்படி பல வசதிகள் இருப்பதால், இன்றைய தலைமுறையினர் வீட்டுக்கு தேவையான பொருட்கள் முதல் ஆடைகள், செருப்பு, அழகு சாதனங்கள் என அனைத்தையும் இணையவழியில் வாங்கி வருகிறார்கள். இவர்களின் நாடித் துடிப்பினை புரிந்து கொண்ட ராஷ்மி பெண்களுக்காகவே ஒரு ஷாப்பிங் இணையத்தை துவங்கியுள்ளார். ஃபேப்லி என்று அழைக்கப்படும் இந்த இணையத்தில் விற்பனையாளர் களும் பெண்களே என்பதுதான் இதன் சிறப்பம்சம்.

இது அமேசான், பிலிப்கார்ட் போன்ற ஆன்லைனில் பொருட்களை வாங்கக்கூடிய தளம். ஆனால் இதில் பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும் பெண்கள். அதாவது பெண்கள் தயாரிக்கும் பொருட்களை மட்டும்தான் இந்த தளத்தில் விற்க முடியும். இதுவரை 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஃபேப்லியில் இணைந்து உள்ளனர். மேலும் 2500க்கும் மேற்பட்ட பொருட்கள் தளத்தில் விற்பனையில் உள்ளது’’ என்றவர் இதனை எவ்வாறு அமைத்தார் என்பது குறித்து விவரித்தார்.

‘‘நான் இதை 2022இல்தான் ஆரம்பித்தேன். நான் சாஃப்ட்வேர் துறையில் இருப்பதால், அமேசான் போன்ற இணையம் எவ்வாறு செயல்படும் என்று தெரியும். அதனால் இணையம் அமைப்பது எனக்கு சுலபமாக இருந்தது. ஆனால் பெண்களை இதில் இணையவைப்பது தான் எனக்கு பெரிய சவாலாக இருந்து வந்தது. கரோனாவிற்கு பிறகு பல பெண்கள் இன்ஸ்டா மற்றும் முகநூலில் தங்களுக்கான சிறிய அளவில் பிசினசை செய்து வந்தார்கள். அவர்களின் பட்டியலை எடுத்தேன். அதன் பிறகு அவர்களை தொடர்பு கொண்டு பேசினேன். அதற்கு முன்பு என்னுடைய ஆய்வுக் குழு அவர்களைப் பற்றியும் அவர்கள் விற்பனை செய்யும் பொருட்கள் குறித்தும் எனக்கு ரிப்போர்ட் கொடுத்திடுவார்கள். அடுத்து நான் அவர்களிடம் நேரடியாக உரையாடுவேன்.

அதன் பிறகு தான் அவர்களை எங்களின் விற்பனை தளத்தில் இணைப்பேன்.பெண்கள் வீட்டில் இருந்து செய்யும் தொழில் என்றாலும், அவர்களின் பாதுகாப்பு அவசியம் என்று நினைப்பார்கள். எல்லாவற்றையும் விட விற்பனையாகும் பொருட்களுக்கான தொகை சரியாக அவர்களை வந்தடையுமா என்ற சந்தேகமும் அவர்களுக்கு இருந்தது. அந்த நம்பிக்கையை நான் அவர்களுக்கு ஏற்படுத்த எனக்கு ஆறுமாதமானது. அதுவரை கொஞ்சம் போராட்டமாகத்தான் இருந்தது.

முதலில் குழந்தைகளுக்கான பொருட்களை விற்பனை செய்யும் ஒரு பெண்தான் எங்களை நம்பி எங்கள் இணையத்தில் இணைந்தார். அவரின் பொருட்களை மட்டும் தான் இதில் வெளியிட்டோம். அதன் பிறகு மற்றவர்களும் சேர முன்வந்தார்கள். தற்போது குழந்தை களுக்கான பொருட்கள், பரிசுப் பொருட்கள், செருப்புகள், ஹேண்ட்பேக், சிறுதானிய உணவுப் பொருட்கள், அழகு சாதனங்கள், உடைகள், ஹெர்பல் சானிட்டரி நேப்கின்கள் என பல விதமான பொருட்களை இங்கு வாங்கலாம்.

எல்லாவற்றையும் விட விற்பனையாகும் பொருட்களின் விலையினை விற்பனையாளர்களுக்கு சரியாக செலுத்தி வருவதுதான் எங்களின் வெற்றி என்று சொல்வேன். அதற்கென தனிப்பட்ட சாஃப்ட்வேர் அமைத்திருக்கிறோம். அது ஒருவரின் பொருள் விற்பனையாகிறது என்றால் அவர்களின் தொகை மற்றும் எங்களின் கமிஷன் தொகை என்ன என்று கணக்கிட்டுவிடும். இதை ஆய்வு செய்து அவரவர்களுக்கான தொகையினை நாங்க செலுத்திடு வோம். ஆரம்பித்த போது 15 பொருட்கள்தான் எங்களின் இணையத்தில் இருந்தது. அதன் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக விற்பனையாளர்களை சேர்த்தோம். ஒரு தொழில் செய்யும் போது மற்றவர்களுக்கு நம் மேல் நம்பிக்கை ஏற்பட வேண்டும். விற்பனையாளர்கள் மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் அவசியம்.

அடுத்து என்னதான் நாம் ஒரு தளம் அமைத்துக் கொடுத்தாலும் பெண் தொழில் முனைவோர்களால் அவர்களின் பொருட்களை மற்ற இடங்களில் விற்பனை செய்ய கொஞ்சம் சிரமப்படுகிறார்கள். 

அவர்களுக்காக இணையதள சந்தைகள் குறித்த பயிற்சி அளிக்க திட்டமிட்டிருக்கிறேன். இதன் மூலம் தங்களின் பொருட்களை எவ்வாறு விற்பனை செய்யலாம் என்பது குறித்து புரியும். இந்தியா மட்டுமில்லாமல் உலகளவில் அவர்களால் விற்பனை செய்ய முடியும்’’ என்றார் ராஷ்மி.

No comments:

Post a Comment