முதியோர் உதவித்தொகையை எதிர்பார்த்திருக்கும் விசிறி வசந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 30, 2023

முதியோர் உதவித்தொகையை எதிர்பார்த்திருக்கும் விசிறி வசந்தா

மழைக்காலம், பனிக்காலம் முடிந்து கோடை வெயிலின் தாக்கம் துவங்கிவிட்டது. வெயில் நம் அனைவரையும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க மக்கள் ஏ.சியின் பயன்பாட்டிற்கு மாறிவருகின்றனர். குளிர் சாதனம், மின் விசிறி வசதி இருந்தாலும், இவை எல்லாம் மின்சாரம் இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். நகர மக்களுக்கு மின்சார பயன்பாடு என்பது தொடர்ந்து இருந்தாலும், சில சமயம் அதில் பழுது ஏற்படும் போது, வெயிலின் தாக்கத்தை தணிக்க ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக விசிறி மட்டை இருப்பது அவசியம்.

கிராமப்புற மக்கள் வீடுகளில் விசிறி இல்லாமல் இருக்காது. குளிர்ந்த காற்றினை நம்மேல் வருட செய்யும் இந்த பனை ஓலை விசிறியினை செய்வது ஒரு தனிப்பட்ட கலை. அதனை 83 வயதிலும் அசராமல் செய்து வருகிறார்கள் பழூரைச் சேர்ந்த 80 வயது நிரம்பிய இணையர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பழூர் கிராமத்தில் வசித்து வருபவர் குஞ்சிதபாதம். 83 வயது முதியவர். இவருடைய மனைவி 77 வயதான வசந்தா. 45 ஆண்டு திருமண வாழ்க்கை. ஆனால், இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஆனாலும் இந்த வயதிலும் தங்களின் உழைப்பை மட்டுமே நம்பி இந்த இணையர் வாழ்ந்து வருகிறார்கள்.

இத்தொழிலில் பெரிதாக வருமானம் இல்லை என்றா லும், யாரிடமும் கையேந்தாமல் ஏதோ அன்றாட சாப்பாட் டிற்காவது இந்தத் தொழில் கைகொடுத்து உதவுகிறது என்கிறார் குஞ்சிதபாதம். அவருக்கு உறுதுணையாக மனைவி வசந்தா, வீட்டு வேலைகளைச் செய்வதோடு மட்டுமின்றி விசிறி செய்வதற்குத் தேவையான உதவிக ளைச் செய்து கொடுத்து, கணவன் உழைப்பில் தாமும் பங்கெடுத்துக்கொள்கிறார்.விசிறி தயாரிப்பதற்காக முதியவ ரான குஞ்சிதபாதம் தனது வீட்டிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிள் ஓட்டிச் சென்று, பனை மட்டைகளை சேகரித்து வருகிறார். அதன்பிறகு அவற்றைக் காய வைத்து, ஒவ்வொரு மட்டையாக வெட்டி, பிறகு விசிறியாக தயாரிக்கிறார்.

மாதம் 300 ரூபாய் வாடகை கொடுத்து தற்போது கூரை வீட்டில்தான் வசித்து வருகின்றனர். முதியோர் உதவித் தொகை கேட்டு இருவரும் அரசுக்கு கோரிக்கை வைத்த தைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சார்பில் முதியோர் உதவித்தொகை குஞ்சிதபாதத்துக்கு மட்டும் ரூ.1000 வழங் கப்பட்டு வருகிறது. ஆனால், அவரின் மனைவி வசந்தா வுக்கு வழங்கப்படவில்லை. முதியவருக்கு வழங்கப்படும் அந்தப் பணம் வீட்டு வாடகைக்கும், அன்றாட செலவுக்கும் சரியாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

‘‘நாங்கள் இன்னும் கொஞ்சக் காலம்தான் வாழப் போகிறோம். எனவே, என் மனைவிக்கும் தமிழ்நாடு அரசு உதவித்தொகை வழங்கினால் பேருதவியாக இருக்கும்’’ என்கிறார் முதியவர் குஞ்சிதபாதம்.

முகத்தில் வறுமை தெரிந்தாலும், உள்ளத்தில் கவலை இருந்தாலும், எதையும் காட்டிக்கொள்ளாமல் தள்ளாடும், வயதிலும், தம் உயிர் மூச்சு நிற்கும் வரை உழைப்பையே மூலதனமாகக் கொண்டு, கம்பீரமாக நடை போடுகிறார்கள் குஞ்சிதபாதமும் வசந்தாவும்!

No comments:

Post a Comment