பிற இதழிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 30, 2023

பிற இதழிலிருந்து...

 'தினத்தந்தி' தலையங்கம்

 இந்தியாவின் பாதுகாப்புக்கு தன்னலமற்ற சேவை செய்பவர்கள் நமது ராணுவ வீரர்கள். இந்திய எல்லையில் ஒரு பக்கம் சீனா, மற்றொரு பக்கம் பாகிஸ்தான். இந்த இரு நாடுகளின் அச்சுறுத்தல் எப்போதுமே இருக்கிறது. நேருக்கு நேர் போர் என்பதோடு, பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவல், போதை மருந்து கடத்தல் ஆகியவற்றை தடுக்கும் பணியிலும் நமது வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பனி படர்ந்த மலையில் வாட்டும் பனியோ, கொட்டும் மழையோ எதையும் பொருட்படுத்தாமல் உயிரை துச்சமாக நினைத்து, நமது வீரர்கள் நாட்டைக் காக்கும் சேவையில் உள்ளனர். இந்திய ராணுவ வீரர்களின் வீரம் இணையற்றது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு 'பரம் வீர் சக்ரா' விருது பெற்ற கேப்டன் விக்ரம் பாத்ரா சொன்ன உணர்ச்சிமிகு வார்த்தைகள்தான். அவர் சொன்னது, 'ஒன்று நான் மூவர்ண கொடியை ஏற்றிவிட்டு திரும்புவேன் - அல்லது மூவர்ண கொடியால் சுற்றிவைக்கப்பட்ட என் உடல் வரும். ஆனால் நிச்சயமாக திரும்பி வருவேன்'.

இதுதான் ஒவ்வொரு ராணுவவீரரும் நாட்டுக்காக எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி. அந்தவகையில் நாட்டுக்கான பாதுகாப்புக்காக நமது இளைஞர்கள் மட்டுமல்லாமல், பெண்களும் துணிச்சலாக இப்போது ராணுவத்தில் சேர முன்வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மய்யத்தில் ஒரு ஆண்டு பயிற்சி முடித்த 121 ஆண் அதிகாரிகள், 36 பெண் அதிகாரிகள் மற்றும் பூடான் ராணுவத்துக்காக 5 ஆண் அதிகாரிகள், 24 பெண் அதிகாரிகளின் அணிவகுப்பு நடந்தது. வங்காளதேச ராணுவ தளபதி இந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த ஆண்டு பயிற்சி முடித்த பெண் அதிகாரிகளில் 5 பேர் முதல்முறையாக பீரங்கிப் படையில் சேருகிறார்கள் என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கிறது. இந்த வீரமிகு 5 பெண் அதிகாரிகளில் 3 அதிகாரிகளுக்கு சீன எல்லையையொட்டிய முன்களப் பிரிவிலும், இரு அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் எல்லையிலும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பீரங்கிப் படைக்கு தேர்வு பெற்றவர்களில் 20 சதவீதம் பேர் பெண்கள் என்பது கூடுதல் பெருமையாகும்.

இந்த அணிவகுப்பில் மற்றொரு உணர்ச்சிகரமான தேர்வு எது என்றால், 2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் உயிரிழந்த 20 வீரர்களில் ஒருவருடைய மனைவி நாட்டுக்காக தன் கணவன் ஆற்றிய கடமையை தொடர்ந்து செய்ய ராணுவ அதிகாரியானதுதான். அந்த மோதலில் 'நர்சிங்' உதவியாளராக இருந்து 30 வீரர்களின் உயிரைக்காப்பாற்றி வீர மரணம் அடைந்த தீபக்சிங்கின் இளம் மனைவி ரேகா சிங் இப்போது ராணுவ அதிகாரியாகியிருக்கிறார். இதையெல்லாம் நினைத்து மகிழ்ச்சி அடையும் வேளையில் இந்த தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு ஆண் அதிகாரியோ அல்லது ஒரு பெண் அதிகாரியோ இல்லை என்பது பெரிய மனக்குறையாக இருக்கிறது.

ராணுவத்தில் சிப்பாய்களாக தமிழர்கள் இருக் கிறார்கள். ஆனால் அதிகாரிகளாக இருப்பவர்கள் மிகவும் குறைவாக இருக்கிறார்கள். பெண் அதி காரிகளின் எண்ணிக்கை வெகுசொற்பம். அனைத்துப் பணிகளிலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கணிசமாக இருக்கும்போது நாட்டை காக்கும் பணியில் அதிகாரிகளாக சேர நமது இளைஞர்களுக்கு இந்த தேர்வுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். ஊக்கம் அளிக்கவேண்டும். அதற்குரிய பயிற்சிகளை அரசும், தன்னார்வலர்களும் அளிக்கவேண்டும்.

நன்றி: 'தினத்தந்தி' - 29.5.2023

No comments:

Post a Comment