"குடிஅரசு" தரும் வரலாற்றுச் சுவடுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 11, 2023

"குடிஅரசு" தரும் வரலாற்றுச் சுவடுகள்

 தமிழில் பாடவைத்த தமிழ்த் தொண்டர்கள்

பட்டுக்கோட்டை நாடியம்மன் திருவிழாவுக்குப் பாட வந்த தோழர் மகாராஜபுரம் விசுவநாத அய்யர் அவர்களை, “அய்யர்வாள். இது தமிழர் பண்டிகை; இங்குள்ளவர்கள் தமிழர்கள்; தங்களுக்குக் கொடுக்கும் பணம் தமிழர்களுடையது; தயவு செய்து தமிழில் பாடுங்கள்" என்று ஒரு தமிழ்த் தொண்டன் பணிந்து வேண்டிக் கொண்டால், அதை லட்சியம் செய்யாமல் அய்யர் தெலுங்கில் பாட்டை ஆரம்பித்துவிட்டு, பிறகு அந்தத் தமிழ் தொண்டர், "ஓ அய்யரே, நான் சொல்லுவது உமக்குக் காதில் படவில்லையா” என்று உரத்துச் சொன்ன பிறகு அய்யர், "எனக்குத் தமிழ் மீது துவேஷமில்லை; தமிழில் பாடத் தெரியாது" என்று சொல்லியதற்குப் பதிலாக தமிழ்த் தொண்டர் உடனே எழுந்து, “ஏங்காணும், 12,000 ரூபாய் பெற்றுக்கொண்டு நந்தனார் நடிப்பில், தோழர் சுந்தராம்பாள் அம்மையார் (நந்தன்) காலில் விழுந்து தமிழ் பாடின நீர், எவ்வளவு தைரியமாய் இங்கு இவ்வளவு பேர் முன்னிலையில் தமிழ் தெரியாது என்கிறீர்" அன்றியும்,

"திருவையாறு தியாகய்யர் உற்சவத்தில் தமிழ் வித்துவானைக்கூட தமிழில் பாட இடந்தராமல் தடுத்த நீர், எனக்குத் தமிழினிடத்தில் துவேஷமில்லை என்று எவ்வளவு துணிவாகப் பேசுகிறீர்? தமிழில் பாடுவதானால் பாடும்; இல்லாவிட்டால் நாங்கள் போய் விடுவோம்" என்று சொன்ன பிறகு, அதுவும் தோழர் நாடிமுத்து பிள்ளை அவர்கள், “ஓ அய்யரே! தமிழில் தான் பாடித் தொலையுமே" என்றும் கூட்டத்தில் இருந்த டிப்டி கலெக்டரும், டிப்டி சூப்ரண்டும் தமிழ்த் தொண்டனைப் பார்த்து "இந்தப் பாட்டு தெலுங்கில் துவக்கப் பாட்டாய்விட்டது. இது முடிந்தபின் அய்யர் தமிழில் பாடுவார்' என்றும் சொன்ன பிறகு தமிழ்த் தொண்டர்.

"அதுவரை நான் வெளியில் இருந்துவிட்டு தமிழ் பாட்டு தொடங்கியவுடன் வருகிறேன்" என்று சொல்லி அதிகாரிகளிடம் வணக்கமாக அனுமதி பெற்று வெளியில் போய் இருந்துவிட்டு தமிழ்ப் பாட்டு துவக்கிய உடன் உள்ளே வந்து உட்கார்ந்த பிறகு அய்யர்வாள் முழுவதும் தமிழிலேயே பாடி மக்களைக் களிப்பித்தார் என்றால். இதை சுயமரியாதை மக்களின் காலித்தனமென்றோ கலாட்டா என்றோ சொல்லுவதா, அய்யர்வாளின் ஆரியப்புத்தி இவ்வளவு தொல்லை கொடுத்தது என்று சொல்லுவதா?

இது நடந்த பிறகு பட்டுக்கோட்டை அக்கிரகார ஆரியர்கள் பலர் சேர்ந்து பாகவதருக்கு பெரிய அவமானம் ஏற்பட்டுவிட்டதாகக் கருதி தமிழ்த் தொண் டர்கள் பலர் மீது 107 கிரிமினல் புரசிஜர்படி ஜாமீன் கேசு போட்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அது எப்படியோ நடந்து போகட்டும்.

- "குடிஅரசு" -  தலையங்கம் - 20.5.1944


No comments:

Post a Comment