”பஞ்சமி நிலத்தை மீட்டுக் கொடுத்ததுதான் எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது!” - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 11, 2023

”பஞ்சமி நிலத்தை மீட்டுக் கொடுத்ததுதான் எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது!”

பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம் இரண்டிலும் இயங்கிய, பெரியார் பெருந்தொண்டர் தோழர் சீனிவாசனுடன் ஒரு சந்திப்பு.

தந்தை பெரியார், திராவிட சமுதாயத்தைத் திருத்தி மற்ற நாடுகளில் உள்ள மக்களைப் போல் மானமும், அறிவும் உள்ள மக்களாக மாற்ற வேண்டி, வாய்ப்பு இருக்கின்ற துறைகளிலெல்லாம் தனது பார்வையைச் செலுத்தி மக்களை மேம்படுத்தும் தகுந்த அமைப்புகள் பலவற்றை உருவாக்கி, அவை இயங்கும் வழிவகை களையும் செய்து வைத்தார். அப்படித்தான் 1970 செப்டம்பர் 6 இல் சென்னையில் முதன்முதலில், மனிதர் களுக்காக ஒரு கழகம் தொடங்குகிறேன் என்று சொல்லி, ”பகுத்தறிவாளர் கழக” த்தைத் தொடங்கி வைத்தார். 

இப்படி ஓர் அமைப்பு தொடங்கிய பிறகுதான், அரசுப் பணியில் இருந்துகொண்டே சமூகத்திற்கு பயன்படும் படியாக வாழ்ந்தவர்கள் ஆயிரமாயிரம் பேர்! அந்த ஆயிரமாயிரத்தில் ஒருவர்தான் நாம் சந்திக்கவிருக்கும் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த தோழர் சீனிவாசன்! அவரை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அரசு பொதுப் பணித்துறை விருந்தினர் மாளிகையில், 2022 நவம்பர் 11 அன்று, தந்தை பெரியர் நினைவுநாள் பொதுக்கூட்ட நிகழ்வுக்கு, தமிழர் தலைவர் ஆசிரியரின் தலைமையில் முகாம் அமைத்திருந்தபோது, சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 

பெரியார் பெருந்தொண்டர் தோழர் சீனிவாசனுடன் பேசியதிலிருந்து:

கேள்வி : வணக்கம்! உங்களைப் பற்றி, குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்?

பதில்: வணக்கம்! என் பெயர் சீனிவாசன். 1936 டிசம்பர் 6 இல் ஈரோட்டில் பிறந்தேன். அப்பா பெயர் ராமலிங்கம். அம்மா பெயர் செல்லம்மாள். ஒரு சகோதரி பங்கஜம்மாள். அவர் ஈரோட்டில் இருக்கிறார். மகன் மதிவாணன், ஈரோடு புத்தக நிலைய பொறுப்பாளர். முதல் மகள் தமிழ்ச்செல்வி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர். அவர் கோபி யில் சார்பதிவாளராக இருக்கிறார். மருமகன் திராவிடர் கழகத்தில் இருந்து, அண்ணா பிரிந்து சென்ற போது தி.மு.க. சென்றவர், பின்னர் வை.கோ.பிரிந்தபோதும் தி.மு.க. விலிருந்தும் வெளியில் வந்து, இப்போது ம.தி.மு.க.வில் மாவட்டச் செயலாளராக இருக்கிறார். 1992 இல் அவர் தி.மு.க.வில் இருந்தபோதுதான் எனது மகள் திருமணம் கு.வெ.கி. ஆசான் முன்னிலையில், கலைஞர் தலைமையில் நடைபெற்றது. இரண்டாவது மகள் கவிதா. ஈரோட்டில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக இருக்கிறார். மருமகன் கார்க்கில் போர் சமயத்தில் ராணுவத்தில் இருந்து, இப்போது காவல் துறையில் தலைமைக் காவலராக இருக்கிறார். 1949 இல் எனது தந்தைக்கு ஊட்டிக்கு மாறுதல் வந்தது. நான் SSLC  வரைதான் படித்தேன். 1955 இல் ஊட்டி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் முடித்தேன். இப்போது அது அரசு மேல்நிலைப் பள்ளியாக இயங்குகிறது. 11 ஆண்டுகள் கல்வி இது. அப்பா ராணுவத்தில் முதல் உலகப் போரின் போது ராணுவ வீரராக இருந்தார். போர் முடிந்த பிறகு அவருக்கு, கருநாடகா கொள்ளேகாலில் சிவில் துறையில் பணி கிடைத்தது. அப்போது அதுவும் கோயம்புத்தூர் மாவட்டம்தான். இப்போது, நான் துணை ஆட்சியராக இருந்து ஓய்வு பெற்றிருக்கின்றேன். எனது தந்தையார் ஈரோட்டில் சிவில் நீதிமன்றத்தில் பிராசஸ் சர்வராக இருந்தார். எனது பிறப்பு வளர்ப்பு எல்லாம் ஈரோட்டில் தான். 

கேள்வி: நீங்கள் பெரியார் பற்றித் தெரிந்து கொண்டது எப்போது?

பதில்: 1944 சேலத்தில் நடைபெற்ற ’திராவிடர் கழகம்’ பெயர் மாற்ற மாநாட்டை அடுத்து அதே ஆண்டில், ஈரோட்டில் அய்யா சிறப்பு மாநாட்டைக் கூட்டினார். எனக்கு அப்போது விவரம் தெரியாது. சிறப்பு மாநாட்டில் இரண்டு நாளும் எம்.ஆர்.ராதாவின் நாடகம். ஒரு நாடகத்தின் பெயர் ”தூக்கு மேடை” இன்னொரு நாட கத்தின் பெயர் நினைவில் இல்லை. இரண்டுமே ராதா நடித்த நாடகங்கள் தான். எனக்கு இந்த நாடகம் தொடர்பாக சரியாக எதுவும் இப்போது நினைவில் இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது. அப்போது ரவீந்திரநாத் தாகூரின்  நூற்றாண்டு விழா. காங்கிரஸ்காரங்க அதை மிகப்பெரிய அளவில் கொண்டா டுறாங்க. அப்படியொரு காட்சி அந்த நாடகத்திலும் வந்தது. காங்கிரஸ்காரர் ஒருவர் ரவீந்திரநாத் தாகூர் படம் வாங்கிட்டு வாயான்னு வேலைக்காரனைப் பார்த்துச் சொல்லுவாரு. அவரு, யாருங்க அது? எனக்கு தெரியல? அப்படிம்பாரு. தாடி வச்சிருப்பாருய்யா, பார்த்து வாங் கிட்டு வாங்கன்னு சொல்லுவாரு. வேலைக்காரர் ”பெரியார்” படத்தை வாங்கிட்டு வந்துருவாரு. (சிரிக்கிறார்) படத்தை மூடி எடுத்து வருகிறார் அந்தத் தொண்டர். காங்கிரஸ்கார முதலாளி அதைப் பிரித்துப் பார்க்கிறார். அதிர்ச்சியடைகிறார். இதுதான் எனக்கு அந்த நாடகத்தில் நினைவில் இருக்கின்ற ஒரே காட்சி. பிறகு அந்த காங்கிரஸ்காரரே, ’இது பெரியார்! தாகூரின் படம் அல்ல’ என்று சொல்வார்.  அதுதான் நான் பெரியார் பற்றி தெரிந்து கொண்ட முதல் தகவல்.

கேள்வி: பெரியாரின் அறிமுகம் பள்ளிக்கூடத்தில் ஏதாவது தாக்கத்தைக் கொடுத்ததா?

பதில்: ம்ம்... 1952 இல் ராஜாஜி குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்தார். அப்பொழுது நான் ஊட்டியில் படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு வயது 16. எங்க அப்பா அரசு ஊழியராக இருந்ததால் எனக்கென்று குலத்தொழில் எதுவும் இல்லை. அப்போது உயர்நிலைப்பள்ளி மட்டும் தான். 11 ஆண்டு படிக்கணும். பள்ளியை ஒட்டி அரசு நூலகம் ஒன்று இருக்கும். மாலையில் பள்ளி முடிந்ததும் நூலகத்துக்கு செல்வேன். அப்போது அங்கே "விடுதலை" வந்துகொண்டு இருந்தது. பதினாறு வயசுலயே "விடுதலை" எடுத்துப் பார்ப்பேன், படிப்பேன். "விடுதலை" படித்ததால், அய்யாவின் சீர்திருத்த எழுத்துகளை நான் ஆர்வத்துடன் பள்ளிக்கூடத்திலும் எழுதத் தொடங்கினேன். அப்போது நான்தான் வகுப்பில் முதல் மாணவன். இன்னொரு தோழர் இரண்டாம் இடத்தில் இருப்பார். எல்லா பாடத்திலும் முதலிடத்தில் இருந்தாலும், தமிழில் மட்டும் இரண்டாம் இடத்திற்குச் சென்று விடுவேன். ஏனென்றால், ஆசிரியர் சாதாரண தமிழ் எழுத்தில் எழுதுவார். நான் பெரியாரின் சீர்திருத்த தமிழ் எழுத்தில் எழுதுவேன். வாத்தியார் களுக்குப் பிடிக்காது. பாடமெல்லாம் சரியா இருக்கும். சீர்திருத்த எழுத்து காரணமாக எனக்கு இரண்டாம் இடம்தான் கொடுப்பாங்க.

கேள்வி: இப்படி எழுதக் கூடாதுன்னு யாராவது சொன்னார்களா?

பதில்: ஆமாம், தமிழ் ஆசிரியர் ஏன் இப்படி எழுதுறீங்கன்னு கேட்பாரு. இல்லைங்க இதுதான் எனக்கு வசதியா இருக்கு. சுலபமாகவும் இருக்கிறது என்று நான் சொல்லுவேன். இப்படி எழுத யார் கற்றுக்கொடுத்தாங்கன்னு அவரு கேப்பாரு. நான் "விடுதலை"யைப் பார்த்து எழுதுறேன்னு சொல்லுவேன். மாத்திக்கன்னு சொல்லுவாரு. இல்லைங்க இதுவே நல்லா இருக்கு நான் இப்படியே எழுதுறேன்னு நான் சொல்லுவேன்.

கேள்வி: பெரியாரை எப்பொழுது உணர்ந்தீர்கள்?

பதில்: அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந் தேன். இளநிலை உதவியாளரிலிருந்து அவிநாசிக்கு, உதவியாளராக பதவி உயர்வில் சென்றேன். அங்குதான் பொறியாளர் பரமசிவத்தின் அறிமுகம் ஏற்பட்டது. அவர் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர். அவர் தீவிரமான பெரியார் பற்றாளர். அவர் PWDஇல் பொறியாளராக இருந்தார். அவிநாசியில் 1972 இல், தங்கவேல் என்பவர் முன் நின்று பகுத்தறிவாளர் கழகத்தைத் தொடங்கினார். அதில் நானும், பரமசிவமும் உறுப்பினர்களாக இருந்தோம். தொடக் கத்தில் அதில் ஒன்றும் செயல்பாடுகள் பெரிதாக இல்லை. அவ்வப்போது ஏதாவது கூட்டங்கள் நடக்கும் சின்ன அளவில். எனக்கு அந்தக் கூட்டங்களில்தான் ’பெரியார்’ குறித்த ஒரு தெளிவு ஏற்பட்டது. முக்கியமாக, தந்தை பெரியாரின் ”சமூக நீதி” கருத்துதான் என்னை மிகவும் ஈர்த்தது. ஏனெனில், நானும் இட ஒதுக்கீட்டின் மூலம் வந்தவன் என்பதால், அந்தக் கருத்து என்னை பெரியார் பால் இயல்பாக ஈர்த்துவிட்டது. அப்போது அவிநாசிக்குப் பக்கத்தில் சேவூர் என்னும் ஊரில் இறையனார் ஆசிரியராக இருந்தார். அவரது இயற்பெயர் கந்தசாமி. அவரது இணையர் திருமகள். திருப்பூரில் ஆசிரியராக இருந்தார். அவர் நன்றாகப் பேசுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நான் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தில், வட்டக் கிளையில் தலைவராக இருந்தேன். பகுத்தறிவாளர் கழகத்திலிருந்து செய்ய முடியாததை இந்த அமைப்பில் இருந்து நான் செய்ய முயற்சி செய்தேன். வருவாய்த்துறை அலுவலகத்தில் பொதுக்குழு நடக்கவிருக்கிறது அதற்கு தாங்கள் வரவேண்டும் என்று இறையனாரை அழைத் தேன். அவர், வேட்டியை அவிழ்த்து, அவிழ்த்துக் கட்டிக் கொண்டே ஆவேசமாக கைகளை நீட்டி நீட்டிப் பேசியது, அனைவரையும் கவர்ந்து விட்டது. 

அதற்குப்பிறகுதான் பெரியார் பற்றிய புரிதல் எனக்கு இன்னமும் கூடியது. நெருக்கடி காலத்தில் அவிநாசியில் நான் ஒரு வீடு கட்டி இருந்தேன். ”பெரியார் இல்லம்” என்று தான் அதற்குப் பெயர். 

சந்திப்பு: உடுமலை வடிவேல்

உதவி: வழக்குரைஞர் சென்னியப்பன்

படங்கள்: கமலேஷ்சித்து

(தொடரும்...)


No comments:

Post a Comment