பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக அய்யா ஆசிரியர் அவர்கள் கடலைப் பார்த்து அமர்ந்திருக்கும் ஒளிப்படக் கவிதையைப் பதிவிட்டு, இதற்குக் கவிதைகளை எழுதி அனுப்புங்கள் என்று கேட்டிருந்தோம்.சிறப்பான பல கவிதைகள் வந்தன.
உலகம் முழுவதும் இருந்து நமது தோழர்கள்,பொதுவான நிலையில் உள்ளவர்கள் பலர் கவிதைகளை எழுதி அனுப்பி இருந்தனர். மரபுக் கவிதை,புதுக்கவிதை என இரண்டு வகையிலும் சிறப்பான கவிதைகள் வந்தன.
பல கவிதைகள் சிறப்பாக இருந்த நிலையில்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பாக சென்னை, எழும்பூர் எழிலினி பதிப்பகம் அளிக்கும் ரூ.1000 பெறுமானமுள்ள நூல்களைப் பரிசாகப் பெறும் கவிதையாக வட அமெரிக்காவில் உள்ள மிக்சிகனில் வசிக்கும் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்களின் கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது.
போட்டியில் கலந்து கொண்ட கவிஞர்கள் அனைவருக்கும் நூல்களை அனுப்புவதாக பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்காவின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன் அறிவித்துள்ளார்.
கலந்து கொண்டு rationalistwriters@gmail.com மின்னஞ்சலுக்கு அய்யா ஆசிரியர் அவர்களைப் பற்றி கவிதைகளை அனுப்பிய அனைவரும் தங்கள் முகவரியை மேற்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
முனைவர் வா.நேரு, தலைவர்
கோ.ஒளிவண்ணன், மாநிலச்செயலாளர்
பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம், மாநிலச்செயலாளர்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு.
கழகப் பணிகளில்
களைத்துப் போகாமல்
இதழ்ப் பணிகளில்
இடைவெளி இல்லாமல்
தொடர் நடை போட்டு
தோல்வியைத் துரத்திவிட்டு
வெற்றியின் தன்மையை
விளைந்த நன்மையை
கருணை மனதோடு
கவனமாய்க் கடந்தே
கம்பீரமாய் அமர்ந்திருக்கும்
கருப்புத் தங்கமோ..
அமைதியின்
அர்த்தமென்னவோ?
ஆழ்கடலின்
பேரிரைச்சலோ அது?
தடைகள் எத்தனையோ
தாண்டியாயிற்று..
தனியாய்த் துணிந்தே
தலைமையாய் நிமிர்ந்து
தனக்கென முத்திரை பதித்து
தனித்தமர்ந்து இங்கு..
சலனமற்ற மவுனத்தில்
சரித்திரம் கடந்தே
சங்கீதமாய்
சமுத்திர அழகை
சாந்தமான ஒலியை
அலைகடலின் பொலிவை
அணுவணுவாய் ரசித்திங்கு..
பெரியார் பிஞ்சினை
பெருமையாய்த் துவக்கிய
பேராளுமையே...
சிந்தனையில் என்னவோ?
நிச்சயம் சிறப்பான
ஏதோ ஒன்று
சிந்தி விடக் காத்திருக்கும்..
- கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி,
மிச்சிகன், வட அமெரிக்காபகுத்தறிவுப் பார்வையே!
பகுத்தறிவு பகலவனின்
அறிவொளிச்சிதறலே!
பாதையில் வந்த
சோதனையை சாதனை
ஆக்கிய பாதுகாப்பே!
கடற்கரையில் உடல்
சோர்வைபோக்க
வந்த உத்தமரே!
இளைப்பாற வந்த
உழைப்பாளியே !
தொண்ணூறே - அறிவு
ஊற அட்டணக்கால்
போட்டிருக்கும்
பெருமை மிகு அடலேறே!
வாழிய நீவிர் -வளர்க
உங்கள் அறிவுத்தொண்டு
வாஞ்சையுடன் வாழ்த்துகிறோம்.
- சகாதேவன், கோட்டைக்களம் ,தேனி.
ஸீஸீஸீ
கடல் அலைக்கும் -
ஓய்வறியா
கடலூர் கால்களுக்குமா
போட்டி?!
ஒத்த
பார்வையில் -உள்ளே
ஓடிப்போனது
கடல்!.
- சங்கர் ராமசாமி
***
நீல - கடலில் உதிக்கும்
சிவப்பு - சூரியனோடு
கருப்பு - சட்டையின்
சமதர்ம கொள்கையும்
இணைந்தால்
நம் தமிழ்நாட்டில்
சமூகநீதி வெல்வதை
எந்த காவி-சங்கியாலும்
தடுக்க முடியாது ...
- சுசீந்திரம் மகாராஜன்,
கன்னியாகுமரி
***
இன்று என்னருகே
ஒற்றைத் தோணி
நாளை நம் அருகே
ஓராயிரம் கப்பல்கள்..!
வெல்லட்டும்
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்!!
- முருகையா
***
அலைகளே...
உனக்கும்
எனக்கும்...
ஒற்றுமையைப் பாரேன்..
ஓய்வு என்பது
இல்லவே இல்லை
நமக்கு...
- காளிமுத்து
***
திராவிட தலைமகன்.ஆசிரியர்
அய்யா அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்...
பல்லாண்டு நலம் வாழ்க ஆசிரியர் அய்யா
பகுத்தறிவு மணம் பாரெங்கும் கமழ!
ஆர்ப்பாட்டமிலா,
அயர்விலா களப்பணியாளரே!
கழகத்தின் ஆணிவேரே!
வாழ்க! வாழ்கவே!!!
உமது எழுத்தில் எழுச்சி இருக்கும்!
உங்கள் உரையில் வீரம் செறிக்கும்!
அடுக்கடுக்காய் வரும் செந்தமிழ் கேட்போரை ஈர்த்திழுக்கும்!
நேரத்தை மறந்து ரசிக்க வைக்கும்
எள்ளலும் இருக்கும்!
அகவை அறியாத புன்னகை தோற்றம்!
விடுதலை எனும் போர்க்களத்தில்
விழிப்புடன் செயல்படும் எங்கள் ஆசிரியர் அய்யாவே
உண்ண நேரம் இருக்கிறதா?
உறங்க நேரம் இருக்கிறதா?
யார் பார்த்தது?
எங்கே சமூகநீதிக்கு ஆபத்து வந்தாலும்
அங்கே உங்கள் குரல் உரக்க ஒலிக்கிறது!
எத்தனை! எத்தனை!
அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள்,
மாநாடுகள்,பொதுக்கூட்ட மேடைகள்,
பிரச்சாரக் களங்கள் என பயணங்களிளேயே
பயணிக்கும் தமிழர் தலைவரே!
பெரியார் பணியை பிறவிப் பணி
என வாழும் பெருந்தகையே!
விருதும் வியந்து பார்க்கும்
விடுதலை ஆசிரியரே!
மனிதநேயமும் சமூகநீதியை
காக்க வந்த மாமனிதரே!
அடக்கம் போர்த்திய பகுத்தறிவு சுடரே!
வாழ்க வாழ்கவே!
- லதா
***
கடல் அலை!!!
தினம் தினம் அதனுடைய
சீற்றத்தை தெரிவிக்கிறது..!!
அது என்றும் தன்னுடைய
வயது நினைத்துப் பார்ப்பதில்லை!
நினைத்தால் தன்னுடைய சீற்றத்தை
அது நிறுத்திக் கொள்ளும்..!!
“ஆனால்!!அந்த சீற்றத்தின் நோக்கம்
நமக்கு உத்வேகம் தருகிறது..!!
அந்த சீற்றம் சீற்றமே...!!
தமிழின தலைவர்
அய்யா கி.வீரமணி அவர்கள்
- அ.மணிகண்டன் இராசா
***
வியப்பின் மறுபெயர்
வீரமணியாரையே
விழிமலர்கள் விரிய
வியப்பிலாழ்த்தும்
கடலலைகள்!
ஓய்வுக்கே
ஓய்வு கொடுத்து
ஓய்வில்லாமல்
உழைப்பதில்
இருவரும் ஓரினமாய்
இருப்பது கண்டு
கருப்புத்தத்துவத்தின்
நெருப்புத்தலைவர்
வியப்பிலாழ்வதில்
வியப்பென்ன காண்!
-சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை.
***
வாழ்வின் கரை அறியா
வாழ்க்கை எனும் படகு
கலங்கரை விளக்கமான
ஆசிரியரை
கண்டடைந்ததோ...?
- செந்தில் கு.வெ.கி.
***
ஓடமாய் - நிற்கின்றேன்!
தெள்ளிய
வானழகே,
துள்ளியெழும்
நீரலையே,
தென்கிழக்குக்
காற்றசைவே!
மனிதருள் தான்
எத்தனை
கூறுபாடுகள்?
மனங்களில் தான்
எத்தனை
மாறுபாடுகள்?
மண்ணுக்காய்த் தான்
எத்தனை
போர்க்களங்கள்?
அரிமா போல்
சற்றே நான்
திரும்பிப் பார்க்கிறேன்!
பிறப்பில் யாவரும்
ஒன்றென்று
விதைத்துழுது
விளைச்சல் கண்ட
வெற்றியாளர்
பெரியாரின்
விரல் பிடித்தேன்!
ஊட்டினார் என்னுள்
உரிமை வேட்கை!
உருக்கொண்டேன் நான்!
ஆன மட்டும் மூழ்கி
ஆழ்கடல் தேடி
இட்டதொரு
பணிதனையே
கட்டளையாய்க்
கட்டிக் கொண்டு
புறப்பட்டேன்!
மிரட்டல் கண்டேன்
மிசா கண்டேன்!
எதிர்ப்பிலே
ஆற்றல் கொண்டேன்!
தொடரோட்டத்தில்
இட ஒதுக்கீட்டு உயர்வில்
அயர்வு களைந்தேன்!
அறிவுத் தந்தை
பிறந்தநாளை
பார்போற்றவும்
செவியுற்றேன்!
சிந்தை குளிர்ந்தேன்!
இப்போதோ,
அகத்தினுள்
ஆர்ப்பரிக்கும்
சிறுகனூர்
பெரியார் உலகை
புறக்கண்ணில்
பருகிவிடும்
பேரவாவின்
பெருக்கலாகி
நிற்கின்றேன்!
இனியும்
அட்டியென்ன?
ஒடுக்கப்பட்டோர்
ஒன்றாய்க் கரையேற
ஓடமாய்
நானிருப்பேன்!
உயிர்துடிக்கும்
நாள் வரையில்
ஓயாமல் நான்
உறுதியுடன்
நின்றிருப்பேன்!..
- ம.கவிதா. துணைத்தலைவர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
ஸீஸீஸீ
ஓய்வில்லா ஆசிரியர்
ஓய்வெடுக்கும் தருணத்திலும்,
கடற்கரை காற்றை ரசித்தபடியே
யோசிக்கிறார்.
பகுத்தறிவு பகலவனின் கொள்கைகளை
பாமர மனிதனுக்கும்
கொண்டு செல்லும் பணி
நேற்றும் இன்றும் நாளையும்
என்று தொடரவே,
தொடர் பரப்புரை செய்ய
சிந்தித்தப்படி முதிய இளைஞன்
நீலக் கடலை நோக்கினார்.
- ப. மணிகண்டன்
ஸீஸீஸீ
கடல் அன்னையே
தனது அணிகலன் எங்கே
எனத் தேடுவதைக்
கண்டு கொண்டாரோ?
தமிழர் கால்வாய்
தமிழ் நாட்டில்
எத்தனை விரைவில்
அமைய வேண்டும்
என வரைவுத் திட்டம்
தீட்டுகின்றாரோ?
கலைஞர் தொட்டுச்
சென்ற சேதுசமுத்திர
திட்டத்தைத் தொடர்வேன்
என சூழுரைக்கின்றாரோ?
தலைவர்களாம் பெரியாரின்,
அண்ணாவின் கலைஞரின்
வழித்தொடரும் தலைவர்
முதல்வரின் (முத்துவேல்
கருணாநிதி ஸ்டாலின்)
பணிகளுக்கு அசைக்க
இயலா தூணாக
துணை உள்ளேன் என
சூசகமாக விளக்குகின்றாரோ?
- டெய்சி ஜெயப்ரகாஷ், கலிஃபோர்னியா
***
கடலும்.... கடலும்...
அமைதியாய் அமர்ந்திருக்கும்
அறிவுக் கடலும்
ஆர்ப்பரிக்கும் நீல வண்ணக் கடலும்
அழகிய மவுன மொழிப் பகிர்வில்.....!!!!!
- வி. இளவரசி சங்கர்
***
பகலவனும் கடலும்
சேரும் இடம் - தொடுவானம் !
பகுத்தறிவு பகலவனும்
கருஞ்சட்டைக் கடலும்
சேரும் இடம் - தன்மானம் ! !
ஆசிரியராய் தன்மானம் -
இந்தப் பக்கம் !
ஆகச்சிறிதாய் தொடுவானம் -
அந்தப் பக்கம் ! !
பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்,
***
கரிய மேகங்கள் உருகி கடலை தந்தது
கருஞ்சட்டை தலைவர் பேச்சருவி அறிவுக்கடலை தந்தது
ஓய்வின்றி உழைக்கும் நம் தலைவர்
கடல் அலையைபோன்றவர்
அதனால்தானோ என்னவோ
கடல் அலையைப்பார்த்து
என்னைப்போல் நீயும்தான்
ஓயாமல் உழைக்கின்றாயோ?என்ற
எண்ண அலையில் நம் தலைவர்
அமர்ந்திருந்தாரோ?”
- இரா.தமிழன்பன்
***
அலையெல்லாம் உம்காலை கண்டுகண்டு நாணும்!
அவ்வானம் உம்மெழிலைப் வளைந்துநின்று காணும்!
நிலைகொள்ளாக் காற்றலைகள் நெஞ்சைவந்து கூடும்!
நினைவலைகள் மனக்கூட்டின் கதவுடைத்தே தாவும்!!
உலைக்களமாய்ப் பொங்குகின்ற உம்மனத்தின் ஓரம்!
ஒய்யாரம் கொண்டதுவோ முத்துநகர் ஈரம்!
வலைபோட்டுத் தடுத்தாலும் அடங்காத சிங்கம்!
வந்தவழி.. நின்றவிழி.. வானிலென்ன தேடும்??
தோளினிலே சுமப்பாரே நம்சுமையை நாளும்!
தூரவரும் பகையெண்ணித் தொடங்கிவைத்தார் போரும்!!
தேளினிலே கொடுந்தேளாம் ஆரியரின் சேட்டை
தீதின்றிக் காப்பாரே திராவிடநன் னாட்டை!
காலைபகல் கடுமிரவும் களத்தினிலே ஆடும்
கால்கைகள் மனமெல்லாம் நம்நலத்தை நாடும்!
நாளைவரும் விடுதலையில் நமக்குநல்ல பாடம்!
நடந்திருப்போம் அவர்வழியில் காலமெல்லாம் நாமும்!!
- சுப முருகானந்தம், மதுரை
***
வயதிலே முதுமை
வாலிபத்தோற்றமாய் இளமை
பார்வை ஒன்றே போதுமே..அது
பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் சிந்தனை
அமர்ந்த நிலையோ சுயமரியாதைச் சுடராய்
பெரியார் அண்ணா கலைஞர் வழியில்
தமிழாட்சி செய்யும் திராவிட மாடல் தலைவருக்கு
விளக்குத் தூணாய் நிற்கும்
வீரமணி யாரின்
தொலைநோக்குப் பார்வை
கடலில் அமையப் போகும்
கலைஞரின் எழுதுகோல்
- க.மோகனசுந்தரம். தி.மு.க இலக்கிய அணி
மானாமதுரை நகர அமைப்பாளர். சிவகங்கை மாவட்டம்
***
No comments:
Post a Comment