ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 18, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: ஒன்றிய அரசு பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குகின்றது என்று கண் டனம் தெரிவிக்கிறார்களே, தமிழ்நாட்டில் போக்கு வரத்துத் துறையில் தனியார் பேருந்துகள் அனுமதிக்கப் படுகின்றனவே - அதுகுறித்து தங்கள் கருத்து என்ன?

- பா.முகிலன், சென்னை-14

பதில் 1: இதுபற்றி போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் ஓரளவு தெளிவுபடுத்தி யுள்ளார். உலக வங்கியின் அறிக்கைக்கேற்ப சில பரீட்சார்த்தமாக - அப்படி ஒரு செய்தி வெளிவந் துள்ளதே தவிர - தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை ஒருபோதும் நாட்டுடைமை திட்டத்திலிருந்து நகராது.

கலைஞர்தான் போக்குவரத்து பேருந்துகளை நாட்டுடைமையாக்கினார். ஆகவே, அவரது நூற் றாண்டில் தமிழ்நாடு அரசு இப்படி ஒரு தலைகீழ் மாற்றத்திற்கு ஒருபோதும் இணங்காது என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம்.

ஊடகங்கள் சில பொய்களைக்கூட ஊதி ஊதிப் பெருக்குவதால் இப்படிப்பட்ட நிலை!

---

கேள்வி 2: அரசுப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி அளிப்பதால், மாணவர்கள் வருகை உயர்வு என்று ஒரு பக்கத்தில் இருந்தாலும், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லையே?

- கி.இராமலிங்கம், செம்பியம்

பதில் 2: கவலைப்பட வேண்டிய முக்கிய அம்சம் இது! நாம் இதுபற்றி தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். அதன் பிறகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முழு விசாரணையைத் துவக்கியுள்ளார். இந்நிலையைத் தவிர்க்க உடனடியாக ஆசிரியர்கள் - பெற்றோர் - அதிகாரி கள் முக்கூட்டு, ஆலோசனைகளை பல பகுதிகளில் நடத்தி உண்மைகளைக் கண்டறிவது அவசரம் - அவசியம்.

---

கேள்வி 3: பா.ஜ.க.வின் அய்.டி. அணியிலிருந்து விலகியவர்கள், அ.இ.அ.தி.மு.க.வில் இணைகிறார் களே, இது அ.தி.மு.க.வின் எதிர்காலத்திற்கு உகந்ததா?

- பா.சிவகுமார், தஞ்சை-14

பதில் 3: இன்றைய அ.தி.மு.க.வின் கொள்கைத் திட்டங்களும், நடைமுறைகளும் - கூட்டணி அறிவிப்பை 2024 தேர்தலுக்குப் பல மாதங்கள் இருப்பினும் தற்போதே கூறுவதும் - இரண்டு கட்சிகளுக்கும் வித்தியாசம் இல்லை என்று கருதி இந்தப் பரிவர்த்தனை நடக்கிறதுபோலும்.

மகா மகா வெட்கக் கேடு! உதைக்கும் காலுக்கு மாற்றி மாற்றி முத்தங்களா?

---

கேள்வி 4: சிறியவர் முதல் பெரியவர் வரை திடீர் திடீரென்று மாரடைப்பால் மரணம் என்ற செய்தி ஊடகங்களில் வருகிறதே, என்ன காரணம்?

- மு.விக்னேஸ், பெங்களூரு

பதில் 4: கவலைப்பட வேண்டிய செய்தி, மருத்துவர் களும், தமிழ்நாடு அரசும் ஆய்வு செய்கின்றனர் என்ற செய்தி ஆறுதலாகும்! துரித உணவுகள் ஒரு முக்கியக் காரணம் ஆகும்! இளைஞர்களின் உடற்பயிற்சியின்மையும் மற்றொரு காரணம்.

---

கேள்வி 5: ஒருவரின் பொதுவாழ்க்கையில் எது மிகவும் முக்கியம்?

- ஜெ.சொர்ணா, வேலூர்

பதில் 5: 1. நாணயம். 2. தன்னைத்தானே ஏமாற்றும் தவிர்க்க வேண்டிய இரட்டை வேடம். 3. எளிமை - ஆடம்பரமற்ற எளிமை!

---

கேள்வி 6:  ராகுல் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வினர் சொல்கிறார்களே, இது திசை திருப்பலா?

- இரா.இராஜூ,  வடலூர்

பதில் 6: ஆம். அதிலென்ன சந்தேகம் - நாடாளுமன்றத்தை நடத்தினால் எதிர்க் கட்சியினர் பேசுவார்கள். அதன்மூலம் பல செய்திகள் வெளியே வரும். அதை எளிதில் தவிர்ப்பதற்காகவே இந்த ஒத்தி வைப்பு - திரிபுவாத முறை.

---

கேள்வி 7: சமையல் எரிவாயு உருளையின் விலையை ஒன்றிய அரசு ஏற்றிக்கொண்டே வருகிறது; எந்த மாநில முதலமைச்சரும் அதைக் கண்டிக்கவில்லையே, ஏன்?

- கே.சுந்தமூர்த்தி, திருநெல்வேலி

பதில் 7: நாடாளுமன்றத்தில் அத்துணை எதிர்க்கட்சி களும் கண்டித்துள்ளனவே! சுட்டிக் காட்ட வேண்டிய நேரத்தில் மாநில முதல் அமைச்சர்கள் சுட்டிக் காட்டுவார்கள்.

---

கேள்வி 8:  மீண்டும் கரோனா தொற்று பரவலாகி வருகிறதே, கட்டாய முகக்கவசம் அணிய தமிழ்நாடு அரசு உத்தரவு போடலாமே?

- ச.சரண்யா, சத்தியவேடு

பதில் 8: அதைக் கட்டாயமாக்குவதைவிட  முதற் கட்டமாக பிரச்சாரம் மூலம் சொல்லுவது சிறப்பானது - விரும்பத்தக்கது!

---

கேள்வி 9: அமெரிக்காவில் அடுத்தடுத்து வங்கிகள் திவாலாகக் காரணம் என்ன?

- வே.காசி, வந்தவாசி

பதில் 9: அந்த நாட்டு வங்கி அமைப்புகளில் உள்ள முக்கிய குறைபாடு - கண்மண் தெரியாமல் தாராளமயப் போட்டி - தொழிற்போட்டிகள்.


No comments:

Post a Comment