பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 15, 2023

பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

திருச்சி, மார்ச் 15- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் “ஊரக வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு” என்னும் மய்யக் கருத்தை கொண்டு 02.03.2023 முதல் 08.03.2023 வரை  தெற்கு சத்திரம் கிராமத்தில் நடைபெற்றது. 

இச்சிறப்பு முகாமின் துவக்க விழா தெற்கு சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாலை 6 மணி யளவில் நடைபெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரி யின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. அ. ஜெயலட்சுமி வரவேற்புரையாற்றினார். அப்பாத்துரை ஊராட்சி மன்றத் தலைவர் சி.குருசாமி முகாமினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில்: நாட்டுநலப்பணித்திட்ட பணிகளை தெற்கு சத்திரம் கிராமத்தில் செயல்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் வருகை புரிந்திருக்கும் பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு ஊராட்சி மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார். மேலும் பிளாஸ்டிக் பைகள் அதிகம் குப்பைகளாக கிராமத்தில் உள்ளன என்று நாங்கள் வருத்தமடையக்கூடிய இந் நேரத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் தூய்மைப்பணி களையும் அதனால் உண்டாகும் புற்றுநோய் குறித்தும் விழிப்புணர்வு வழங்கயிருப்பதை கண்டு பெரு மகிழ்ச்சியடைவதாகவும் உரையாற்றினார். மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆ. மைக்கேல் ராஜ் முன் னிலை வகித்து கிராம மக்களுக்கு சேவை மனப்பான்மை யுடன் பல சமுதாயப் பணிகளை செய்ய ஆயத்தமாகி யுள்ள பெரியார் மருந்தியல் கல்லூரிக்கும் நிர்வாகத் திற்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். 

நலவாழ்வுப் பணிகள்

அதனைத் தொடர்ந்து பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்கள் தமது தலைமையுரையில் மனித நேயப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் பெரியார் மருந்தி யல் கல்லூரி இலால்குடியைச் சுற்றியுள்ள வாழ்மான பாளையம், அப்பாத்துரை, கூத்தூர், தாளக்குடி போன்ற கிராமங்களில் தொடர்ந்து நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம்களை நடத்தியுள்ளதை அதன் தொடர்ச்சி யாக, தெற்கு சத்திரம் பகுதியிலும் நலவாழ்வுப்பணிகளை இந்த ஒருவாரகாலம் நடத்தவுள்ளது என்றும் இதனை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஒன்றிய கவுன்சிலர் எஸ். விஜய் (எ) சின்ன துரை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலை மையாசிரியர் சீ. கற்பகம், மேனாள் ஆசிரியர் கழகத் தலைவர் அ. தர்மலிங்கம், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் கவிதா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியர் தேவ அன்பு மற்றும் வார்டு உறுப்பினர் பி. சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி, திராவிடர் கழக இலால்குடி ஒன்றிய துணைத் தலைவர் தம்பி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்த இத் துவக்க விழா நிகழ்ச்சிக்கு மூலிகை மருந்தியல் துறை பேராசிரியர் ப. பாலசுப்ரமணியன் அவர்கள் நன்றியுரை யாற்றினார். 

கரோனா தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

இரண்டாம் நாளான  03.03.2023 அன்று காலை 9 மணியளவில் தெற்கு சத்திரம் பள்ளி வளாகம், சாலை கள் சுத்தம் செய்யப்பட்டு களப்பணிகள் மேற்கொள் ளப்பட்டன. மாலை 5 மணியளவில் “கரோனா மற்றும் இதர தொற்று நோய்கள்” மற்றும் “சுற்றுச்சூழல் பாது காப்பில் பொதுமக்களின் பங்கு”  ஆகிய தலைப்புகளில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மூன்றாம் நாளான 04.03.2023 அன்று காலை 9 மணியளவில் களப்பணிகளை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு யோகா உடற்பயிற்சி குறித்த செயல்முறை விளக்கம் யோகா உடற்பயிற்சி கவிஞர் சின்னையன் அவர்களால் அளிக்கப்பட்டது. நான்காம் நாளான 05.03.2023 அன்று காலை 8 மணியளவில் இலவச பொதுமருத்துவ முகாம் நடைபெற்றது. தெற்கு சத்திரம் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மாலை 6 மணி யளவில் சிறு, குறு தொழில் முனைவோர் சங்கத் துணைத் தலைவர் கனக சபாபதி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் சுய தொழில் குறித்து சிறப்புரை யாற்றினர். 

புற்றுநோய் தடுப்பு கருத்தரங்கம்

தேசிய மருந்தியல் கல்வி நாளான 06.03.2023 அன்று காலை 8 மணியளவில் மருந்துகள் பயன்பாடு குறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில் சுயமாக மருந்து உட்கொள்வது, பக்கவிளைவுகள், எதிர்விளைவுகள் மற்றும் புகையிலை பொருட்களின் பயன்பாடுகள் குறித்த விவரங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப் பட்டது. காலை 10 மணியளவில் புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் குறித்து தெற்கு சத்திரம் பொது மக்களிடையே விழிப்புணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது. தேசிய மருந்தியல் கல்வி நாள் முழுவதும் கிராம மக்களிடையே நலவாழ்வு தொடர்பான விழிப் புணர்வு செயல்பாடுகள் மருந்தியல் மாணவர்களால் நடத்தப்பட்டது.  நாட்டு நலப்பணித்திட்டத்தின் ஆறாம் நாளான 07.03.2023 அன்று காலை 9 மணியளவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டது. சிறுதானிய ஆண்டை முன்னிட்டு தினசரி உணவில் சிறுதானியங் கள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் தெற்கு சத்திரம் மக்களிடையே சிறுதானிய பயன்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

சமுதாயப் பணிகளுக்கு...

நிறைவுநாளான 08.03.2023 அன்று காலை 8 மணியளவில் மரம் நடும் விழா நடைபெற்றது. பள்ளி மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதனைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் நாட்டுநலப்பணித்திட்ட சிறப்புமுகாமின் நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்கள் வரவேற்புரையாற்றினார். அவர் தமது உரை யில் சமுதாயப்பணிகளுக்கு நிறைவு, முடிவு என்பது கிடையாது.  அதிலும் அறிவு ஆசான் தந்தை பெரியார் கற்பித்த மனிதநேயப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மக்கள் நலப்பணிகளுக்கு நிறைவு என்பது இல்லை. மாறாக மனநிறைவு மட்டும்தான் இருக்கும். 

பெண்களுக்கான நலவாழ்வுப் பணிகள்

அந்தவகையில் தெற்கு சத்திரம் ஊர்ப்பொது மக்களுக்கு தேவையான நாட்டுநலப்பணித்திட்ட பணி களை குறிப்பாக பெண்களுக்கான நலவாழ்வுப் பணிகளை மேற்கொண்டதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிர்வாகம் மனநிறைவை பெறுகின்றது என்றும் நலவாழ்வு சார்ந்த மருத்துவ முகாம்களுக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியை பொதுமக்கள் எந்நேரமும் அணுகலாம் என்றும் உரையாற்றி அனை வருக்கும் மகளிர் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். மேலும் திராவிடர் கழக திருச்சி மண்டலத் தலைவர் ப. ஆல்பர்ட் அவர்களால்தான் ஒவ்வொரு ஆண்டும் நாட்டுநலப்பணித்திட்டம் சிறப்பாக நடை பெறுகின்றது. அவர்கள் தம்முடைய வயது, நேரம் அனைத்தையும் பொருட்படுத்தாது ஒரு இளைஞ ரைப்போல சுறுசுறுப்புடன் நாள்தோறும் நாட்டுநலப் பணித்திட்டம் நடைபெற தம்முடைய முழு ஒத்து ழைப்பையும் வழங்கக்கூடியவர்கள். அவர்களுக்கு கல்லூரியின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். 

அதனைத் தொடர்ந்து அப்பாத்துரை ஊராட்சி மன்றத் தலைவர் சி. குருசாமி மற்றும் மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆ. மைக்கேல் ராஜ் ஆகியோர் தலைமை வகித்து நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் பல்வேறு சமுதாயப்பணிகளை செய்த பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர். 

பெண்கள் பல பொறுப்புகளில் திகழ்கின்றனர்

அப்பாத்துரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர் எஸ். விஜய் (எ) சின்னதுரை, திராவிடர் கழக திருச்சி மண்டலத் தலைவர் ப. ஆல்பர்ட், பெரியார் மருந்தியல் கல்லூரி யின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில் மற்றும் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் அப்துல் காதர் அவர்கள் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்  அவர்களால்தான் பெண்கள் இன்று பல பொறுப்புக் களில் திகழ்கின்றனர் என்றும் அத்தகைய தலைவர் பெயர் தாங்கிய இக்கல்லூரி ஒருவாரகாலம் சிறந்த முறையில் நாட்டுநலப்பணித்திட்டங்களை தெற்கு சத்திரம் கிராமத்தில் செய்திருப்பது பாராட்டிற்குரியது என்றும் உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரி யர் சீ. கற்பகம் அவர்கள் தமது வாழ்த்துரையில் நாட்டு நலப்பணித்திட்டத்திற்கு தெற்கு சத்திரம் கிராமத்தை தேர்ந்தெடுத்து பல சமுதாயப்பணிகளை செய்த கல்லூரியின் முதல்வர், நாட்டுநலப்பணித்திட்டக் குழு வினர் மற்றும் மாணவர்களை வெகுவாக பாராட்டினர். 

மக்கள் மனதில் நின்ற தலைவர்கள்

நிறைவு விழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மேனாள் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவர் ஏ. கனகராஜ் அவர்கள் வாழ்ந்தவர் கோடி மக்களாக  இருக்கலாம் மறைந்தவர் கோடியாக இருக்கலாம் ஆனால் மக்கள் மனதில் நின்ற தலைவர்கள் ஒருசிலரே. அதில் முதன்மையாக நிற்பவர் தந்தை பெரியார் என்றும் அய்யா அவர்களால்தான் சாதாரண கிராமத்தில் பிறந்த தான் இக்கிராமத்தின் முதல் மருத்துவராக உயரமுடிந்தது என்றும் உரை யாற்றினார். 

மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் அதிகமாக இருப்பதால் கல்வியை உங்கள் முன்னேற் றத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் ஒழுக்க மான வாழ்க்கை முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் உரையாற்றினார். இன்று பள்ளி மாணவர் களுக்கு மதிய சத்துணவு திட்டத்துடன் காலை உணவு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இது ஒரு சிறப்பான திட்டம். உங்கள் நலவாழ்வை ஊட்டச்சத்தை மேம்படுத் தக்கூடிய திட்டங்களை மாணவர்கள் மற்றும் பெற்றோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அன்று படிப்பதற்கு தெருவிளக்குகளை பயன்படுத்திய எங்களைப் போன்றோர்கள் ஏழை, எளிய மக்களின் சிரமங்களை புரிந்து கொண்டு மருத்துவத்துறையில் அவர்களுக்கான சேவைகளை செய்து வருகிறோம். இன்று பேருந்து வசதி, மதிய உணவுடன் காலை சிற்றுண்டி, பள்ளிச் சீருடை இன்னும் பல புதிய புதிய திட்டங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இதனை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு தாழ்ந்த சமுதாயத்தை உயர்த்திக்காட்ட இளைய சமு தாயம் முன்வரவேண்டும் என்று உரையாற்றி போற்றுத லுக்குரிய சமுதாயப்பணியில் ஈடுபட்ட பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு தமது பாராட்டுகளை தெரிவித்து விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். 

போட்டித் தேர்விற்கான புத்தகங்கள் வழங்கல்

இந்நிகழ்ச்சியில் மேனாள் ஆசிரியர் கழகத் தலைவர் அ.தர்மலிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி. மாவடியான், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் கவிதா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியர் தேவ அன்பு, வார்டு உறுப்பினர் பி. சண்முகம், திராவிடர் கழக இலால்குடி ஒன்றிய தலைவர் சி. பிச்சைமணி, மாவட்ட செயலாளர் ஆ. அங்கமுத்து மற்றும் ஒன்றிய துணைத் தலைவர் தம்பி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித் தனர். பெரியார் மருந்தியல் கல்லூரியின் சார்பில் ரூ. 10,000 மதிப்புள்ள தமிழ்நாடு அரசுப் பணித் தேர் வாணையத்தின் போட்டித்தேர்விற்கான புத்தகங்கள் அப்பாத்துரை ஊராட்சி ஒன்றிய நூலகத்திற்கு முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை வழங்கி சிறப்பித்தார். மேலும் தெற்கு சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் உருவப்படம், புத்தகங்கள் மற்றும் முதலுதவிப் பெட்டியினையும் தலைமையாசிரியர் அவர்களிடம் வழங்கி சிறப்பித்தார். திராவிடர் கழகத்தின் சார்பில் பொது அறிவு மற்றும் இயக்கம் சார்ந்த புத்தகங்களை திராவிடர் கழக இலால்குடி ஒன்றிய தலைவர் சி. பிச்சைமணி அவர்கள் ஊராட்சி மன்ற நூலகத்திற்கு வழங்கினார். 

அறுசுவை உணவு

இந்நிகழ்ச்சியில் அப்பாத்துரை ஊராட்சி மன்றத்தின் சார்பாக கல்லூரிக்கு மின்விசிறி வழங்கி சிறப்பிக்கப் பட்டது.  திராவிடர் கழக பொறுப்பாளர்கள், பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர்கள், பணியாளர் கள், நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. அ. ஜெயலெட்சுமி நன்றியுரையாற்ற விழா இனிதே நடந்தேறியது.   

இந்நாட்டு நலப்பணித்திட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளையும் திராவிடர் கழக திருச்சி மண்டலத் தலைவர் ப. ஆல்பர்ட் சிறப்பாக செய்ததுடன் முகாம் நடைபெற உறுதுணையாக திகழ்ந்தார். ஒருவார காலம் நடைபெற்ற நாட்டுநலப்பணித்திட்ட முகாமில் அறு சுவை உணவினை சமைத்து பேருதவி புரிந்த சோபியா அவர்களுக்கு நிகழ்ச்சியில் நன்றி பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment