சென்னை அய்.அய்.டி.யா? தற்கொலைக் கூடாரமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 15, 2023

சென்னை அய்.அய்.டி.யா? தற்கொலைக் கூடாரமா?

சென்னை, மார்ச் 15- சென்னை அய்.அய்.டி.யில் ஆந்திர மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை அய்.அய்.டி.யில் படிக்கும் மாணவ-மாணவிகள் தொடர்ந்து உயிரிழப்பை சந்திக்கும் சோகங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

கரோனா காலத்தில் அய்.அய்.டி.யில் படித்த கேரளாவைச் சேர்ந்த பாத்திமா என்ற மாணவி இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக புகார் கொடுக்கப் பட்டது. அந்த வழக்கு சி.பி.சி.அய்.டி. விசாரணையில் உள்ளது. அடுத்ததாக கருநாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சிறீவத் சன்னி என்ற ஆராய்ச்சி படிப்பு மாணவரும் சரியாக படிக்க முடியவில்லை என்று தூக்கில் தொங்கிவிட்டார். அதே நாளில் கருநாடகத்தை சேர்ந்த வீரேஷ் என்ற மாணவர் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு உயிரைவிட முயற்சித்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். தற்போது அவர் படிப்பை தொடர்கிறார்.

ஆந்திர மாணவர் தற்கொலை

இந்த நிலையில் நேற்று (14.3.2023) சென்னை அய்.அய்.டி.யில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்த மாணவர் பெயர் புஷ்பக் சிறீசாய் (வயது 20). இவர் 3ஆவது ஆண்டு பி.டெக் படித்து வந்தார். ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் சீனிவாசலு. பேருந்து நடத்துநராக வேலை செய்கிறார்.

அய்.அய்.டி. வளாகத்தில் உள்ள அலக்நந்தா விடுதியில் 273-சி அறையில் தங்கி படித்தார். இவருடன் 2 மாணவர்களும் அதே அறையில் தங்கி படித்தார்கள். நேற்று அவர்கள் வகுப்புக்கு போய்விட்டனர். மாணவர் புஷ்பக் மட்டும் போகவில்லை. அறையில் தனியாக இருந்தார். பிற்பகல் 1 மணி அளவில் வகுப்புக்கு போன இரு மாணவர்களும் விடுதி அறைக்கு வந்தனர். அப்போது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டிக் கிடந்தது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அறைக்குள் அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய வைத்தது. மாணவர் புஷ்பக் அறையில் உள்ள மின்விசிறியில் கயிற்றில் தூக்கில் தொங்கினார். உடனே அய்.அய்.டி. நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல் துறைக்கும் தகவல் பறந்தது.

தகவல் அறிந்ததும் கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையர் சிறீகாந்த், ஆய்வாளர் விஜயன் மற்றும் காவல் துறையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மாணவர் புஷ்பக்குடன் அறையில் தங்கி இருந்த மற்ற 2 மாணவர்களிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

கடந்த 3 நாள்களாக புஷ்பக் வகுப்புக்கு போகவில்லை என்றும், எவ்வளவு படித்தும் கிரேடு வாங்க முடியவில்லை என்று புலம்பியதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. நன்றாக படிக்கக்கூடிய மாணவர் புஷ்பக்கின் உயிர் இழப்பு சென்னை அய்.அய்.டி.யில் மீண்டும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சந்தேக மரணம் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது மாணவர் புஷ்பக்கின் கைப்பேசி, மடிக்கணினிகளில் தற் கொலைக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய உள்ளதாக காவல் துறையினர் கூறினார்கள். சென்னை அய்.அய்.டி.யில் கடந்த 7 ஆண்டுகளில் மாணவர் புஷ்பக் உயிரிழப்பையும் சேர்த்து மொத்தம் 14 உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப் படுகிறது.

No comments:

Post a Comment