கல்வித்துறையில் திராவிட இயக்க சாதனைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 25, 2023

கல்வித்துறையில் திராவிட இயக்க சாதனைகள்

' விடுதலை' நாளிதழில் (20.3.2023) வெளியான 'தேர்வைக் கண்டு மாணவர்கள் அஞ்சி ஓடுவது ஏன்?' தலையங்கம் வாசித்தேன். கல்வித்துறையில் தமிழ்நாடு அரசின் சாதனைகளையும், செயல்படுத்தவேண்டிய திட்டங்களைப் பற்றியும் அறிய முடிந்தது. இக்கால மனப்பாட கல்வி என்பது பார்ப்பன முறை கல்வி என்றும், செய்முறை கல்வி, விளையாட்டு போன்றவை களிலும் அதிக கவனம் தேவை என்ற கருத்து நன்று. 

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை கொடுக்காதே என்ற மனுதர்மத்திற்கு எதிராகப் போராடி வென்றவர் தான் தந்தை பெரியார். 

சமூக நீதி, பகுத்தறிவு, சுயமரியாதை ஆகிய வற்றிற்காக மட்டும் பெரியாரும், திராவிடர் கழகமும் போராடவில்லை, மாறாக மனிதனின் முன்னேற்றத் திற்கு எது முதல் தேவை என்பதை உணர்ந்து தான் பெரியார் களம் கண்டார், வென்றார்.  நாட்டிலேயே முதன் முதலில் மதிய உணவு திட்டத்தை செயல்படுத் தியது நீதிக்கட்சி ஆட்சி. அதன்  தொடர்விதை தான் சத்துணவுத் திட்டம் - இன்று காலை உணவு திட்டம் வரை.... 

குலக் கல்வித் திட்டம் கொண்டு வந்த ஆச்சாரியாரை  மாற்ற செய்து காமராசர் அவர்களை ஆட்சியில் அமர்த்தி  சமூக நீதி காக்கவேண்டுமானால் சூத்திரனுக்கும் கல்வி உரிமை வேண்டும் என்று செயலில் வென்று காட்டிய தலைவர் பெரியார். கல்விச் சாலைகளை உருவாக்க காரணம் பெரியார், காரியம் காமராசர் என்ற பெருமையை உருவாக்கியது திராவிட இயக்கம். 

சேரன்மகாதேவி குரு குலத்தின் மாணவர்கள் பாகு பாட்டிற்கெதிராக உரிமைக்குரல் எழுப்பி வென்றவர் தந்தை பெரியார். 

'அ ' என்றால் அணில் என்பதை, 'அ'  என்றால் 'அம்மா ' என மாற்றியது திராவிட இயக்க ஆட்சி, உழவன், குயவன், கொல்லன், தச்சன் என்பதை உழவர், குயவர், கொல்லர், தச்சர் என மாற்றம் செய்தது திராவிட இயக்க ஆட்சி. மனிதநேயத்தையும், சமத்துவம், சமூக நீதியையும் கட்டிக் காத்து வருவது தான் திராவிட இயக்கத்தின் தலையாய பணி!

குலக் கல்வித் திட்டத்தின் வழிவந்த கூட்டம் தான் இன்று இட ஒதுக்கீடு வேண்டாம், பொருளாதார ரீதியில் ஒதுக்கீடு வேண்டும் என கூப்பாடு போடுகிறது இதன் காரணம், சூத்திரனுக்கு கல்வியை தராதே என்ற அந்த மனுதர்ம கோட்பாடுதான்.  அதற்காகத்தான் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள். அதை இன்றைய மாணவ சமுதாயம் உணர்ந்து கொள்ள வேண்டும். 

அன்றைய காலகட்டத்தில் பள்ளிகள், கல்லூரி வாயில்களில் நின்று மாணவர்களிடையே எழுச்சி யையும், வளர்ச்சியையும் உருவாக்கியது திராவிட இயக்கம். இப்படி கல்விக்காக தொடர்ந்து போராடி வென்று வருகிறது திராவிட இயக்கம். மாணவர்கள் இதனை உணர்ந்து நம்மால்  முடியாதது எதுவுமில்லை என்பதை மெய்ப்பித்து வெல்ல முன்வரவேண்டும். 

தமிழ்நாடு அரசும் மாணவர்களிடையே நல்ல இணக்கத்தை உருவாக்கி, செயல் முறை, விளையாட்டு ஆகியவற்றில் கவனம் செலுத்தி,  அடிக்கடி கலந்துரை யாடல் கூட்டம்போன்று நடத்தி அவர்களுக்கு ஊக்கம் தரவேண்டும். 

வகுப்பில் முதல் மாணவன், பள்ளியில் முதல் மாணவன், தெருவில் முதல் மாணவன், ஊரில் முதல் மாணவன், மாவட்டத்தில் முதல் மாணவன், மாநிலத் தில் முதல் மாணவன், நாட்டில் முதல் மாணவன் என்று  திகழ்ந்து ஒவ்வொரு மாணவச் செல்வங்களும்  புகழ் பெற்று வெற்றியை அடையவேண்டும்.மாணவர்கள் அனைவரும் முயற்சி செய்து, பயிற்சியால் வளர்ச்சி அடைய முன் வரவேண்டும். 

நாட்டிலேயே முதல் சட்டக்கல்லூரியை உரு வாக்கியது இந்த தமிழ்நாடுதான். இப்படி கல்விக்காக எண்ணற்ற திட்டங்களை உருவாக்கியது திராவிட இயக்கம்

விழிகளை காப்பது இமை என்றால், வலி என்ற சுமைகளை மறந்து, நல்வழிகளை உருவாக்குவது நமது கடமை என்பதை மாணவச் செல்வங்கள் அறிந்து வென்றெடுக்க வேண்டும். 

எட்டாதது எதுவுமில்லை எட்டும் தூரம் தான் என்பதை உணர்ந்து செயல்பட்டால் நமது கரம்  உறுதியாக சிகரம் தொடும் என்பது உறுதி என்பதை மாணவச்செல்வங்கள் மனதில் கொள்ள வேண்டும். 

திராவிடர் கழகம்  கடவுள் மறுப்பு இயக்கம்  மட்டுமல்ல, சமுதாய புரட்சி இயக்கம்.  கல்விக்காக, சமூக நீதிக்காக என்றும் குரல் கொடுக்கும் என்பதை 'விடுதலை' யின் தலையங்கம் செயலில் காட்டியுள்ளது.மாணவர்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும் என்பது உண்மையே! 

- மு. சு. அன்புமணி, மதிச்சியம் 


No comments:

Post a Comment