அஞ்சா நெஞ்சன் அழகிரி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 25, 2023

அஞ்சா நெஞ்சன் அழகிரி

அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி அவர்கள் வாசுதேவன் - கண்ணம்மாள் ஆகியோருக்கு, 20.3.1900 அன்று தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டை புதுக்கோட்டை இடையில் "கருக்காக் குறிச்சி" எனும் கிராமத்தில் பிறந்தார்.

அழகிரி அவர்களுக்கு அய்ந்து வயதாகும் போது தந்தை இறந்து விட்டார். பின் தாயின் பராமரிப்பிலே வளர்ந்து வந்தார். அழகிரி பசுமலையில் உள்ள மிஷின் துவக்கப் பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார். கிறித்துவப் பாதிரியார் களால் நடத்தப்பட்ட அப்பள்ளியில் ஒழுக்கமும், கட்டுப்பாடும் அதிகமாய் இருந்தது. எனினும் அழகிரி எதற்கும் கட்டுப்படாத சிறுவனாக வளர்ந்து வந்தான். இதற்கிடையில் படிப்பும் பாதியில் போனது.

முதலாம் உலகப் போர் நடைபெற்றபோது, அழகிரி இந்தியப் போர்ப்படையில் சேர்ந்து, மெசபடோமியா வரை சென்று வந்தார். வெடி குண்டுச் சத்தங்கள், போர்க்களக் காட்சிகள், பிணக் குவியல்கள் இவைகளோடு வாழ்ந்த போது அழகிரிக்கு அஞ்சா நெஞ்சன் என்கிற அடைமொழி வரவில்லை. போர்ப்படையிலிருந்து விலகி, பார்ப்பனீயத்திற்கு எதிரான பகுத்தறிவுக் களம் புகுந்தபோது£தன் 'அஞ்சா நெஞ்சன்' என அழைக்கப்பட்டான்.

 போர் முனையிலே, துப்பாக்கிகளோடு எதிரிகளைச் சந்திப்பதைவிட பகுத்தறிவுக் களம் அமைத்து மக்களின் மடமையைச்  சந்திக்க அதிகமான அஞ்சாநெஞ்சம் தேவைப்படுகிறது. தனது போர்க் குணத்தால் பெருங் கூட்டத்தையும் நேரெதிர் சந்திக்கின்ற அபரிதமான துணிச்சல் பெற்றவர் அவர்.

பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு இருந்த எதிர்ப்பு முனை, இன்று கூர் மழுங்கிப் போயிருப்பதற்கு அழகிரியின் உழைப்பு பெரிய அளவில் துணையாய் இருந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அதிகப்படியான எதிர்ப்புகள்  எழக்கூடிய பணியினைச் செய்ய பலரும் முன்வரமாட்டார்கள். ஒரு வேளை முன்வந்தாலும் குடும்பத்தின் வறுமை, சொந்த மக்களின் கேலிப் பேச்சுகள், அரசியலாரின் அடக்குமுறை, நண்பர்களின் வெறுப்பு இவைகளையும் மீறிப் பகுத்தறிவுப் பணி செய்ய மிகுந்த பக்குவமும், பட்டற்றக் குணமும் அவசியம் தேவை.

தாயின் கண்ணீர், தந்தையின் சீற்றம், மனைவியின் மடைமை இவ்வளவு ஒரே சேரத் தாக்கும் போது அறிவுப் பிரச்சாரம் செய்திட எவருமே அஞ்சுவர்.

எனினும்,மேற்குறிப்பிட்ட அத்துணைக் கொடுமைகளையும், இன்னல்களையும் எதிர்த்து நின்று, பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கான எதிர்ப்பு களையும் குறைவாக்கி, இறுதிவரை அய்யா பெரியாருக்கு துணையாய் இருந்தவர்தான் 

அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி.

பலரையும் கவர்ந்திழுக்கக் கூடிய காந்தப் பேச்சாளர், அவர் பேச்சில் மயங்காதோர் தெளிவு பெறாதோர் அரிது. பாமரனுக்கும் புரியும் வகை யில் ஜாதிக் கொடுமையையும், குலத் தொழில் பற்றியும் இப்படிப் பேசுவார்.

நமது தோலுக்கு யாதொரும் தீங்கும் நேரிடாதபடி, மகா கூர்மையான கத்தி கொண்டு நமது ரோமத்தை வழித்து, நமது தலையை எண்ணெயிட்டு சீவி, நமது முகத்துக்கு ஸ்நோவும் பவுடரும் போட்டு, நம்மை அழகுற அலங்கரித்து ஒரு மாப்பிள்ளை மாதிரி அனுப்புகிறானே நமது தோழன், அவனோர் அம்பட்டப் பய.

நமது அழுக்குப் படிந்த, நாற்றமடைந்த துணிகளைத் துவைத்து அவற்றிற்கு நீலமும் கஞ்சியும் போட்டுச் சலவை செய்து, கண்ணாடி போல் பெட்டி போட்டு, நாமும் நம் மக்களும் உடுத்துக் கொண்டு, மெல்லிய தென்றல் காற்று வாங்க .. செல்ல உதவும் தோழன், நமக்கோர் வண்ணாரப் பய.

பங்குணி வெயிலில் நமது பாதம் எங்கு கொப்பளித்து விடுமோ, அல்லது கல்முள் குத்தி காலைக் கெடுத்து விடுமோ என்று நாம் பயப்படாமல் இருக்க, நமது காலுக்கேற்ற செருப்பை தைத்துக் கொடுக்கும் தோழன், நமக்கோர் சக்கிலியப்பய.

நமது வீடு மலஜல மூத்திரத்தால் நாற்றம் எடுக்காமல் இருக்கும்படி, நமது தெருக்களும் நாற்றம் எடுக்காமல் இருக்கும்படி, நமது கக்கூசைக் கழுவி, நமது சாக்கடையைச் சுத்தம் செய்து, நமது தெருக்களிலுள்ள குப்பைகளை அகற்றி, நமக்கு அசுத்தத்தால் நோய்கள் முதலியன வராமல் இருக்க உதவுபவனும், நமது வீட்டில் ஒருவர் இறந்தால் அவரது பிணம் அழுகிப் புழுக்கள் ஏற்படாமல் இருக்க, அதைச் சுட்டெரிக்க நமக்கு உதவுபவனுமாகிய தோழன் நமக்கோர் தோட்டிப்பய.

இந்த வகையில் சாமானியனுக்கும் புரியும் வகையில் எளிய முறையில், எழுச்சியுடன் பகுத் தறிவுப் பிரச்சாரம் செய்தவர் அஞ்சா நெஞ்சன் அழகிரி. அவர் நினைத்திருந்தால் செல்வச் செழிப்பில் மகிழ்ந்திருக்கலாம். எனினும் வறுமை அவரது குடும்பத்தை வதைத்த போதும், நோய் இவரது உடலை சிதைத்தபோதும் நிலை குலையா நெஞ்சுரத்துடன் இருந்தவர். 28.3.1949 தஞ்சையில் காச நோயால் அழகிரிசாமி உயிர் நீத்தார்.

தனது இலட்சியத்தை மரணத்தறுவாயிலும் நழுவ விட்டு விடாமல் கடைப்பிடித்து ஒழுகி, உயிர் நீத்த உத்தமன்தான் நம்மில் கலந்து போன அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி. அவரை என்றும் நினைவில் கொள்வோம்!

- வி.சி. வில்வம், தேவகோட்டை


No comments:

Post a Comment