வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 25, 2023

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

 சில எண்ண ஓட்டங்கள்:   45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் - எனது நினைப்பும்! - (6)

முக்கியத் திருத்தம்  - கவனிக்க

[நேற்றைய (24.3.2023) "வாழ்வியல் சிந் தனைகள்" கட்டுரையில், சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி டாக்டர் பி.வி. இராஜமன்னார் அவர்களது அறிவுரை பெற்று செயல்பட்ட நிகழ்வுபற்றிய குறிப்பில், அவர் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்று சில ஆண்டு காலம் ஆனநிலையில் - பலருக்கும் சட்ட ஆலோ சனைகளை வழங்குவதை தனது வாழ்நாள் தொண்டாகக் கருதி உதவிய காலத்தில் தான் அறிவுரை பெறப்பட்டது. படிக்கும்போது அவர் பதவியில் இருந்த நிலையில் கருத்து  - அறிவுரை பெறப்பட்டது என்று யாரும் தவறாக நினைத்து விடக் கூடாது.]


அந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றத் தில் பெரியார் அறக்கட்டளைக்காக பிரபல மூத்த வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் அவர்கள் ஆஜராகி வாதாட ஒப்புக் கொண்டார்; காரணம் இஸ்மாயில் கமிஷன் விசாரணையின்போது, மிசாக் கைதியாக என்னைப் போன்ற தோழர்கள் அனுபவித்த சித்திரவதைக் கொடுமை வழக்கு நடவடிக்கைகளை, விசாரணைகளை அவர் தொடர்ந்து கவனித்து வந்ததில், நம்மீது அவருக்கு ஒரு வகையில் 'பற்று' உண்டு. எனவே அவர் நாங்கள் அணுகிக் கேட்டவுடன் ஒப்புக் கொண் டார்!

இடஒதுக்கீடு போன்ற கொள்கையில் அவருக்கு நம்மிடமிருந்து மாறுபட்ட சிந்தனை உண்டு என்றாலும், நட்புப் பாராட்டுவதில் என்றும் தொடர்ந்து நம்மிடம் அன்பு காட்டுபவராகவே உள்ளார்கள்!

வழக்கு நிதி என்று அறிவித்து வேண்டுகோள் விடுத்தவுடன் - நமது இயக்கத் தோழர்களும், இயக்கத்திற்கு அப்பாற்பட்ட பொது மக்களும்கூட தங்களால் இயன்ற அளவுக்கு நன்கொடைகளை மணியாடர் மூலம் அனுப்பி, இந்த அழி வழக்குகளை நடத்துவதற்குப் பெரிதும் துணைப் புரிந்ததை என்றுமே மறக்க முடியாததால்தான் அக்கடன்களை அடைக்க - மூச்சிருக்கும் வரை உழைப்பின் மூலம் அடைக்க உழைத்துக் கொண்டுள்ளேன் - வயதுபற்றிக் கவலைப்படாமல்!

காரைக்குடியில் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர், பெருவணிகர் என்.ஆர். சாமி அவர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில்தான் முதல் முறையாக இந்த வழக்கு நிதி வசூல் திட்டத்தை அறிவித்தோம்.

மக்கள் போட்டி போட்டு, ஒரு ரூபாய், இரண்டு, ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் என்று மகிழ்ச்சியுடன் நன்கொடைகளைக் குவித்தனர். 

(தினமும் 'விடுதலை'யில் பட்டியல் வெளிவரத் தொடங்கியது).

கூட்டத்தில் பட்டாணித் தட்டை வைத்து விற்றுக் கொண்டிருந்த எளிய தோழர்  ஒருவர் ஆர்வத்தோடு மேடை நோக்கி வந்து, ஓர் எட்டணா காசினை உணர்ச்சி பொங்க அளித்தார் என்னிடத்தில், - "வசதி படைத்தவர்கள் அளித்த பல பெரிய தொகை நன்கொடைகளைவிட இந்த எளிய எம் அருந்தோழனின் எட்டணாவை நாங்கள் கோடியாக மதிக்கிறோம்" என்று மேடையில் தெரிவித்தபோது எனது கண்களின் ஓரங்களில் கண்ணீர்த் துளிகள் கசிந்தன.

கடமையாற்றுவதில் இனிமேலும் நமக்கு ஏன் தயக்கம்  என்ற உறுதியுடன் அந்த எதிர்நீச்சல் பணியைத் தொடர்ந்தோம்.

 (வளரும்)


No comments:

Post a Comment