எத்தனை தந்திரங்கள், சூழ்ச்சிப் படலங்களை நிகழ்த்தினாலும், பெரியார் மண்ணும், மக்களும் - அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நின்று வென்று காட்டுவார்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 11, 2023

எத்தனை தந்திரங்கள், சூழ்ச்சிப் படலங்களை நிகழ்த்தினாலும், பெரியார் மண்ணும், மக்களும் - அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நின்று வென்று காட்டுவார்கள்!

வெறும் கானல் நீர் வேட்டையில் இறங்காதீர் ஆளுநர் அவர்களே!

தமிழ்நாடு பெரியார் மண் - சுயமரியாதை மண் - 

அதன் சூட்டை காவி தாங்காது- கனவுகள் சிதைக்கப்படும்!

எத்தனை தந்திரங்கள், சூழ்ச்சிப் படலங்களை நிகழ்த்தினாலும், பெரியார் மண்ணும், மக்களும் - அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நின்று வென்று காட்டுவார்கள்! பொய் நெல்லைக் குத்திப் பொங்கலிட்டு மகிழலாம் என்று நினைத்து, வெறும் கானல் நீர் வேட்டையில் இறங்காதீர் - ஆளுநர் அவர்களே! இந்த மண் சுயமரியாதை மண் - அதன் சூட்டை காவி தாங்காது - கனவுகள் சிதைக்கப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு: 

தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, வந்த நாள் முதல் இந்த நாள் வரை - தாம் அரசமைப்புச் சட்டப்படி தமிழ்நாடு அரசின் ஓர் அங்கம் - அதன் வாயாகவும், குரலாகவும், செயலாகவும் இருக்கவேண்டும் என்ற அடிப்படைக் கடமை உணர்வை மறந்து அல்லது துறந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி யான தி.மு.க. ஆட்சியின் முழு முதல் எதிர்க்கட்சித் தலைவர்போலவே நடந்து வருவதோடு, நித்தம் நித்தம் ஆளுநர் வசிக்கும் மாளிகையை ஆர்.எஸ்.எஸ். பிரச்சார கேந்திரமாகவும் மாற்றி, திராவிட ஆட்சித் தத்துவத்தின் கொள்கை லட்சியங்களுக்கு எதிரான தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அனைத்துத் தரப்பு மக்களின் ஆத்திரத்தையும் பரிசோதித்துக் கொண்டே இருக்கிறார்!

தமிழ்நாட்டு மக்களின் 

பொறுமையை சோதித்து வருகிறார்!

மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட வரைவுகளை (சுமார் 14-க்கும் மேற்பட்ட மசோதாக்களை) வேண்டுமென்றே ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு, தமிழ்நாட்டு ஆட்சி, தமிழ்நாட்டு மக்களின் பொறுமையை சோதித்து வருகிறார்!

இதற்கு ஓர் ஆழமான பின்னணியாம்; அந்தப் பின்ன ணியை பின்னியவர்களின் கெட்ட புத்தியும்  (Mala fide), தீய எண்ணமுமே இதன் அடிப்படையில் இருக்கவேண்டும் என்பதை சராசரி மக்களால் கூட ஊகித்துவிட முடியும்.

இதற்கிடையில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வினைப் பிளந்து, பிரிவுகளாக்கி சின்னாபின்னமானாலும் ஒரு பக்கம் சண்டை, மறுபக்கம் அரசியல் உறவு என்ற குரலொலி!

நாளும் அரங்கேறும் வித்தைகள் - 2024 இல் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரும் என்று தங்களது வாடகைக் குதிரைகளுக்குக் ‘கொள்ளு' காட்டுகிறது போலும்.

‘‘வெறும் பைதான் கொள்ளு இல்லை; 

காலிப் பை!''

முகமூடி அணிந்த அந்தக் குதிரைகளும் ‘‘வெறும் பைதான் கொள்ளு இல்லை; காலிப் பை'' என்பதைப் புரிந்துகொள்ளாமலே சவாரிக்குச் சரி என்று தலையாட்டி, அடிமை முறிச் சீட்டிலிருந்து வெளியேறிட ஆசை இருந்தாலும், துணிவின்றி அல்லாடுகின்றன!

இதற்காகவே மக்களின் ஆத்திரத் தீயில் அனுதினமும் நெய்யூற்றி வளர்க்கின்றன ஆர்.எஸ்.எஸ்.சும், அதன் ஆளுமை முகங்களும்!

அதில் சமீபத்திய வியூகம்தான் ஆன்-லைன் சூதாட்ட தடை மசோதா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, ஏறத்தாழ நான்கு மாதங்கள் - 142 நாள்கள் ஆன பிறகும், ஒப்புதல் தராமலேயே கிடப்பில் போட்டிருந்தார் ஆளுநர்.

தற்கொலைகள் 

எண்ணிக்கை 44

இக்காலகட்டத்தில், தமிழ்நாட்டில் ஆன்-லைன் சூதாட்டத்தினால் வாரந்தோறும் வளர்ந்த தற்கொலைகள் எண்ணிக்கை 44 என உயர்ந்து வந்தது!

இத்தனை உயிர்ப் பலிக்குப் பின்பு - இப்போது அச்சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தராமல், ஆளுநர் திருப்பி அனுப்பி - ஓர் அரசியல் போருக்கு ஆயத்த மாகிறார் போலும்!

அதற்குக் காரணம் இந்த சட்டமன்றத்திற்கு அப்படி ஒரு சட்டம் செய்ய அதிகாரம் இல்லையாம்!

எந்த காவி மரத்திற்குக் கீழ் அமர்ந்து 

'ஞானம்' பெற்றாரோ? 

அதை இத்தனை நாள் கழித்து எந்த காவி மரத்திற்குக் கீழ் அமர்ந்து ‘ஞானம்' பெற்றாரோ தெரியவில்லை!

உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்பற்றியும் ‘அறிவு சூன்யமா?'

அந்தப் படிக்கு அதிகாரம் இந்த ‘திராவிட மாடல்' ஆட்சிக்கு இல்லை என்று கூறும் இவர், அதே விதி, பிரிவுகளைக் கொண்ட சட்ட வரைவான அவசரச் சட்டத்திற்கு (Ordinance) ஒப்புதல் கொடுத்தாரே அது சரியா?

பதிலளிப்பாரா ஆளுநர் ரவி?

அது சரி என்றால், இப்போது மறுப்பது அபத்தம் அல்லவா? திட்டமிட்ட அரசியல் வம்பு வளர்க்கும் படலம் அல்லாமல் வேறு என்ன?

அவருக்கு அரசமைப்புச் சட்டத்தை இன்று தமிழ் நாட்டு மண்தான் போதித்துக் கற்றுக் கொடுக்கவேண்டும் போலிருக்கிறதே!

ஏழாவது அட்டவணையில் உள்ள மாநில அரசின் அதிகாரங்கள் - (சட்டம் இயற்ற) என்ற பிரிவில், 34 ஆவது தலைப்பாக, Betting and Gambling என்று உள்ளது கூடத் தெரியாமலா இந்த சட்டப் பேரவைக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று கூறுகிறார்!

வாதத்திற்காக இதை ஏற்றுக்கொண்டாலும்கூட, மற்றொரு கேள்வியை உடனே கேட்பார்களே!

அது தெரிந்த ‘சட்ட ஞானி' ஏன் 4 மாதம் மசோதாவைக் கிடப்பில் போட்டார் - உடனடியாகத் திருப்பி அனுப்பி, இதே காரணத்தை உடனே கூறியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை?

அறிஞர் அண்ணா அடிக்கடி எழுதுவார்:

‘சூட்சமம் புரிகிறதா தம்பி' என்று. அதுதான் இப்போது நமக்கு நினைவிற்கு வருகிறது!

மீண்டும் மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் கையெழுத்திடத்தானே வேண்டும்!

இப்போது அதே வாசகங்களுடன் அப்படியே மார்ச் 20 ஆம் தேதி கூடவிருக்கும் சட்டப்பேரவையில் அம்மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 200 ஆவது (Article 200) கூற்றின்படி, இவர் கையெழுத்திட்டு அனுப்பித்தானே ஆகவேண்டும்?

அப்போதும் இதைவிட பெரிய வித்தையையும், வியூகத்தையும் செய்ய அவரது ஆலோசகர்கள் யோசிப்பார்களோ?

அறிஞர் அண்ணாவின் ‘ஆரிய மாயை'யில் தெளிவாக கூறியிருப்பதுபோன்று,

‘தந்திர மூர்த்தி போற்றி

தாசர்தம் தலைவா போற்றி!'

தமிழ்நாட்டு மண் சுயமரியாதை மண் - 

அதன் சூட்டை காவி தாங்காது!

எத்தனை தந்திரங்கள், சூழ்ச்சிப் படலங்களை நிகழ்த் தினாலும், இந்தப் பெரியார் மண்ணும், மக்களும் - அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நின்று வென்று காட்டுவார்கள்!

பொய் நெல்லைக் குத்திப் பொங்கலிட்டு மகிழலாம் என்று நினைத்து, வெறும் கானல் நீர் வேட்டையில் இறங்காதீர் - ஆளுநர் அவர்களே!

இந்த மண் சுயமரியாதை மண் - அதன் சூட்டை காவி தாங்காது - கனவுகள் சிதைக்கப்படும்!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

11.3.2023

No comments:

Post a Comment