ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா அவசர சட்டத்திற்கு அனுமதியளித்த ஆளுநர் - நிரந்தர சட்டத்திற்கு அனுமதி மறுப்பது ஏன்? - தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 12, 2023

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா அவசர சட்டத்திற்கு அனுமதியளித்த ஆளுநர் - நிரந்தர சட்டத்திற்கு அனுமதி மறுப்பது ஏன்? - தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

தஞ்சை, மார்ச் 12 தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்டம் தடை அவசர சட்டத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டு, அதே பிரச்சினையில் நிரந்தர சட்டத்திற்கு அனுமதி மறுப்பது ஏன்? ஏனிந்த முரண்பாடு என்ற வினாவை எழுப்பியுள்ளார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

நேற்று (11.3.2023) தஞ்சையில் நடைபெற்ற மேனாள் அமைச்சர் மறைந்த எஸ்.என்.எம்.உபயதுல்லா படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். 

அவரது பேட்டி வருமாறு:

செய்தியாளர்: தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவை 142 நாள்கள் கழித்து திருப்பி அனுப்பியிருக்கிறாரே, தமிழ்நாடு ஆளுநர் - அதுபற்றி தங்கள் கருத்து என்ன?

அரசமைப்புச் சட்டத்தை ஆளுநர் சரியாகப் படித்தாரா?

தமிழர் தலைவர்:  தமிழ்நாடு ஆளுநர் அரசமைப்புச் சட்டத்தை சரியாகப் படித்துத்தான் ஆளுநராக வந்தாரா? என்பதே கேள்விக்குறியாகிறது. காரணம் என்னவென்றால், மிகத் தெளிவாக தமிழ்நாடு அரசுக்கு சட்டம் இயற்றுவதற்கு அதிகாரம் உண்டு என்பதே உயர்நீதிமன்றத்தினுடைய ஓய்வு பெற்ற நீதிபதி, சட்ட நிபுணர்கள் உள்பட அனைவரும் ஆராய்ந்துதான் அந்த வரைவையே தயாரித்திருக்கிறார்கள்.

காரணம், பரிந்துரை என்பது, ஓய்வு பெற்ற நீதிபதியாகிய சந்துரு அவர்களுடைய தலைமையில் அமைந்த ஒன்று. இது முதல் பதில்.

இரண்டாவதாக, ஏழாவது அட்டவணையில், முதலில் முதலாவது யூனியன் லிஸ்ட்; இரண்டாவது ஸ்டேட் லிஸ்ட் - மூன்றாவது கன்கரண்ட் லிஸ்ட் என்கிற ஒத்திசைவுப் பட்டியல் என்று அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு இருக்கின்றன.

மாநில அதிகாரம் என்ற தலைப்பில் 34 ஆம் பிரிவு என்ன கூறுகிறது?

இந்த அதிகாரங்கள் வரையறுப்பில், இந் திய அரசமைப்புச் சட்டத்தில், மாநில அதிகாரம் என்ற தலைப்பின்கீழ், 34 ஆவது பிரிவில், Betting and Gambling அதாவது சூதாட்டம் குறித்து சட்டம் செய்கின்ற அதிகாரம் முழுக்க மாநில அரசுக்கு உண்டு. 

ஒத்திசைவு பட்டியலில்கூட அது கிடையாது. மாநில அரசிடமே இருக்கிறது என்பது தெளிவானது.

மூன்றாவது தெளிவான பதில் என்னவென்றால், Ordinance என்ற அவசரச் சட்டத்தையும், சட்ட வரைவையும் தயாரித்தார்கள். இந்த சட்ட வரைவில் என்னென்ன பிரிவுகள் இருக்கின்றனவோ, அதே பிரிவுகள்தான் அதற்கு முன்பு வந்த அவசரச் சட்டத்திலேயும் இருக்கிறது.

அந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் எப்படி ஒப்புதல் கொடுத்தார்? அப்படி ஒப்புதல் கொடுத்துவிட்டு, அதே பிரிவுகளைக் கொண்டிருக்கக்கூடிய நிரந்தர சட்டத்திற்கு உரிமையில்லை, மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று இப்பொழுது சொல்கிறார் என்றால், முதலில் அவசரச் சட்டத்திற்குத் தெரியாமல் ஒப்புதல் கொடுத்துவிட்டாரா? அப்படி என்றால், அது தவறா? இது சரியா?

இந்தக் கேள்விக்கு அவர் தெளிவாக பதில் சொல்லவேண்டும்.

ஆகவேதான், அவருக்கு அரசமைப்புச் சட்டத் தெளிவு இல்லை என்று அர்த்தம்.

அரசமைப்புச் சட்டத்தின் 200 ஆவது பிரிவில், இவ்வளவு காலம் தாழ்த்தியிருக்க வேண்டிய அவசியமில்லை. அந்தச் சட்டத் திற்கு ஒப்புதல் தரவில்லையென்றால், உடனே திருப்பி அனுப்பியிருக்கலாம்.

அவசர சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தது ஏன்?

இவ்வளவு நாள் காலந்தாழ்த்திவிட்டு, இப்பொழுது திருப்பி அனுப்பியிருக்கிறார்.

அவசரச் சட்டத்திற்கு முதலில் ஒப்புதல் கொடுத்துவிட்டு,  இப்பொழுது முரண்பாடான நிலையை எடுக்கிறார் என்றால், இது எதற்காக? என்கிற கேள்விதான் எழுகிறது.

அதுமட்டுமல்ல நண்பர்களே, 200 ஆவது பிரிவின்படி, ஒரு மாநில அரசுக்கு ஆன்லைன் தடை சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு. அரசமைப்புச் சட்டத்தில் 34 ஆவது பிரிவில், Betting and Gambling என்பதில் இருக்கிறது.

இரண்டாவதாக, அதனை செய்யவேண்டிய அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது. அந்த சட்டம் செல்லுமா? செல்லாதா? என்று சொல்லவேண்டியது நீதிமன்றங்களுடைய வேலை. அந்த வேலையை ஆளுநர் செய்ய வேண்டிய அவசியமில்லை.

நீதிமன்றம் தனி - இவர் ஆளுமையினுடைய தலைவர் மட்டும்தான். எனவே, இவர் தன்னை அரசாங்கத்தில் ஓர் அங்கமாகக் கருதாமல், எதிர்க்கட்சித் தலைவரைப் போன்று பாவித்துக்கொண்டு கடந்த காலங்களில் நடந்துகொண்டிருப்பதுபோலவே, இப்பொழுதும் நடந்து கொள்கிறார்.

எனவேதான், மீண்டும் இப்பொழுது கூடவிருக்கின்ற சட்டப்பேரவையில் சட்டத்தை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பினால், அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர, அவருக்கு வேறு வழியே கிடையாது.

இதைத்தான் அரசமைப்புச் சட்டத்தின் 200 ஆவது பிரிவு கூறுகிறது. இதை மீறினால்,  ஆளுநர், அரசமைப்புச் சட்டத்தை மீறுகிறார் என்பது மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்தைக் கடைபிடிக்க வேண்டிய ஆளுநர், வேறு வேலை செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறதே, அந்தத் தீர்ப்பையும் மீறுகிறார் என்று அர்த்தம்.

சட்டத்தையும், நீதிமன்றத்தையும் மதிக்காத ஆளுநர்!

எனவேதான், ஆளுநர், அரசமைப்புச் சட்டத்தைப்பற்றியும் கவலைப்படவில்லை, உச்சநீதிமன்றத்தைப் பற்றியும் கவலைப்பட வில்லை. ஆர்.எஸ்.எஸ்.சைப்பற்றி மட்டும் தான் அவர் கவலைப்படுகிறார் என்றுதான் அர்த்தம்.

செய்தியாளர்: நெய்வேலியில், என்.எல்.சி. நிறுவனத்திற்காக நிலம் கையகப் படுத்தப்படுகிறதே?

தமிழர் தலைவர்:  அதைப்பற்றி நிச்சயமாக, தெளிவான ஒரு முடிவை தமிழ்நாடு அரசு எடுக்கவேண்டும்.

ஏனென்றால், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கிறோம் என்று சொன்ன ஒப்புதல்படி, அந்த நிறுவனம் வேலை வாய்ப்பைக் கொடுக்கவில்லை.

ஆகவேதான் அதற்கு ஒரு தீர்வை சுமூகமாகக் கண்டாகவேண்டும். அவர்களுடைய கிளர்ச்சியில் இருக்கின்ற நியாயத்தைப் புறக்கணிக்கவேண்டிய அவசியமில்லை.

ஆகவே, அதை ஓர் அரசியல் கிளர்ச்சியாக மாற்றாமல், தமிழ்நாடு அரசே முன்வந்து, ஒரு பகுதியை மட்டும் கையாளாமல்,  இன்னொரு பகுதியில் சொல்லப்பட்டு இருக்கின்ற வேலை வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்களா என்று ஆராய்ந்து, இதுவரை கொடுக்காவிட்டால், இனிமேலாவது கொடுக்கவேண்டும்; தமிழ்நாடு அரசு செய்யும் என்று நம்புகிறோம், செய்யவேண்டும்.

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment