பெண் விடுதலையை நேர்மையாக பேசிய ஆண்-பெரியார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 31, 2023

பெண் விடுதலையை நேர்மையாக பேசிய ஆண்-பெரியார்!

'ஊடகத் துறையில் பெண்கள் கருத்தரங்கில்  

மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பெருமிதம்

சென்னை, மார்ச் 31- பெண் விடு தலையை நேர்மையாக பேசிய ஆண் - பெரியார்தான் என்று பெருமிதத்துடன் கனிமொழி கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஜே.பி. ஓட்டலில்  "Media Mavens 2023" â¡ø î¬ôŠH™ Press Information Bureau Ministry Of Information And Broadcasting Govt Of India சார்பில் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றும் பெண் களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச்செயலாள ரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

"ஊடகத்துறையில் பெண்கள் என்று சொல்லும்போது... நான் முதன் முதலில் ‘தி இந்து’வில் வேலை செய்தபோது டெஸ்க்கில் நிறைய பெண்கள் இருப் பார்கள். கலை, இலக்கியம் பற்றி எழுது வார்கள். டெஸ்க்கை தாண்டி ஃபீல்டு ரிப்போர்ட்டர் என்று பார்த்தால் ஒரே ஒரு பெண். அவருக்கும் பொலிடிகல் பீட் கொடுக்க மாட்டார்கள். இப்படி ஒரு சூழல். இப்படி பத்திரிகை நிறுவன அலுவலகங்களில் பெண்களுக்கு என்று கழிப்பறைகூட இருக்காது. பெண்களுக்கு கழிப்பறைகூட இல்லாத நிலையை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்,

இப்படிப்பட்ட நிலையில் இருந்து ஊடகத்துறையில் பெண்கள் பற்றிய கருத்தரங்கு நடத்தும் அளவுக்கு வந்தி ருக்கிறோம் என்றால், இந்த விஷயத்தில் நாம் நீண்ட தூரம் கடந்து வந்திருக் கிறோம். அதற்காக நாம் சாதித்துவிட் டோம் என்றும் சொல்லிவிட முடியாது.

இந்த நிகழ்ச்சி என்பது அரசு திட் டங்களை மக்களிடம் எப்படி ஊடகத் தினர் கொண்டு சேர்க்கவேண்டும் என் பது பற்றிய உரையாடல் என்று சொன் னார்கள். அதைத் தாண்டி நம்மை பாது காத்துக் கொள்வதற்கு, நம் இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு களமாக இதைப் பார்க்கிறேன்.

பெண்கள் எதிர்கொண்டவை அதிகம்!

இப்படி ஊடகத்துறையில் இருக்கும் பெண்களுக்கு எப்படிப்பட்ட வாய்ப் புகள் வழங்கப்படுகிறது. ஒரு பத்திரிகை யாளர் சந்திப்பிற்கு போனீர்கள் என்றால் ஒரு பெண் செய்தியாளர் அரசியல் வாதியைப் பார்த்து ஒரு சீரியசான கேள்வியைக் கேட்கும்போது, அதை சுலபமாகத் தாண்டி ஆண் செய்தியாளரை பார்த்து, ‘உங்க கேள்வி என்ன?” என்று கேட்பார்கள். இதை நானே பார்த்திருக் கிறேன். அதாவது சீரியசான அரசியல் கேள்விகளைக் கேட்பதற்கு பெண் களுக்கு தகுதி இல்லை என்பது அவர் களின் நிலைப்பாடு. அதையும் தாண்டி மீண்டும் வலியுறுத்தி அந்த கேள்வியைக் கேட்டால், ‘இவள் ஆணைப் போல கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாள்' என்பார்கள். பெண்கள் அதிகமாக மீடியாவுக்குள் வரத் தொடங்கியது அச்சு ஊடகங்களை விட தொலைக்காட்சி ஊடகங்களில்தான். சோஷியல் மீடியா என்பது இவ்வளவு பெரிதாக இல்லாத காலகட்டத்திலே அந்த பெண்கள் எதிர்கொண்டவை அதிகம்.

ஆண்கள் எழுந்து கேள்வி கேட்டால் கம்பீரமாக கேட்கிறார். ‘கட்’ஸ்ஸோடு கேட்கிறார், உறுதியோடு கேட்கிறார் என்பார்கள். அதேபோன்ற கேள்விகளை அதே ஆக்ரோஷத்தோடு, ஆவேசத் தோடு பெண்கள் கேட்டால் 'அக்ரசிவ்' என்பார்கள்.

ஆன்லைனில் இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது புதிதான ஒன்று கிடையாது. பத்திரிகையாளர்கள் சிலர் மீதான வெறுப்புணர்வு, காழ்ப் புணர்வு எப்படி வன்முறையாக மாறியது என்பதை பார்த்திருக்கிறோம்.

ஒரு கலவரத்தின்போது ஒரு பெண் பத்திரிகையாளர் செய்தி சேகரிக்கச் சென்றபோது அவர் தாக்கப்பட்டார், 'அப்யூஸ்' செய்யப்பட்டார். இன்று ஊடகத்திலேயே அவர் இல்லை.

ஊடகத் துறையில் பெண்களைப் பார்க்க மகிழ்ச்சி! 

அவற்றை எல்லாம் தாண்டி நின்று போராடும் பெண்களை ஊடகத் துறை யில் பார்க்கும்போது மகிழ்வாக இருக் கிறது,

வெறுப்புணர்வை எல்லாராலும் ஓரளவுதான் தாங்கிக் கொள்ள முடியும். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஊடகத்தில் இருந்து நகர்ந்திருக்கக் கூடிய பெண்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.

அது ஊடகமாக இருக்கலாம், அரசியலாக இருக்கலாம், பொது இடமாக இருக்கலாம், எழுத்தாளராக இருக்கலாம், சிந்தனையாளராக இருக்கலாம். இந்த சமூகத்துக்கு முரணான கருத்தை ஒரு பெண் முன்வைக்கும்போது வரும் 'கமெண்ட்ஸ்' எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் அத்தனை பேரும் உணர்ந்திருப்பீர்கள். 'கேரக்டர் அசாசி னேஷன்', 'டார்கெட்', 'ட்ரோல்' என்றெல் லாம் பாய்கின்றன.

ஓர் ஆண் இதுபோன்ற தன் மீதான அவதூறுகளை எப்படி ஒதுக்கித் தள்ளி விட்டுப் போகிறானோ அதுபோல பெண்ணும் ஒதுக்கித் தள்ளிவிட்டு போக வேண்டும் என்பார்கள். ஆனால் பெண் அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டு போவ தற்கு இந்த சமூகம் தன்னை தயார் செய்து கொண்டிருக்கிறதா என்றால் இல்லை.

ஓர் ஆண் 'டார்கெட்' செய்யப்ப டும்போதோ ஓர் ஆண் பத்திரிகை யாளர் அரசாங்கத்தை எதிர்த்து போராடி ஒரு வேளை கைது செய்யப்படும் போதோ அல்லது வேறு அடக்கு முறைகளை எதிர்கொள்ளும் போதே அந்தக் குடும்பம் அந்த ஆணுக்குப் பின்னால் நிற்க வேண்டும், நிற்க வில்லை என்றால் அந்தக் குடும்பம் சரியில்லை என்பார்கள். ஓர் ஆண் இப்படி தன்னை விட பெரியவற்றை எதிர்த்து போராடும் போது அதைக் கொண்டாடுகிறார்கள், அந்த ஆண் பின்னால் நிற்கிறார்கள். ஆனால் ஒரு பெண் இதேபோல் ஓர் அரசாங்கத்தையோ, ஒரு நிறுவனத் தையோ, ஓர் அதிகாரத்தையோ எதிர்த் துப் போராடும்போது என்ன சொல் கிறார்கள், அவள்தான் அந்த குடும் பத்தை முதலில் காப்பாற்ற வேண்டும், அந்தக் குடும்பத்துக்கு அவள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார்கள். 

இரட்டை நிலை! 

இந்த இடத்தில் இருக்கும் இந்த இரட்டை நிலை என்பது தொடர்ந்து கொண்டிருக்க கூடியது. பெண்களிடம் இருந்து இந்த சமூகம் எதிர் பார்க்கும் விடயங்கள், பெண்களிடம் இருந்து குடும்பம் என்கிற அமைப்பு எதிர் பார்க்கும் விடயங்கள் என்பது...ஆணி டம் இருந்து எதிர்பார்க்கக் கூடிய வற்றை விட முற்றிலும் வேறானதும் முரண்பா டானதுமாக இருக்கிறது. இத் தனையையும் தாண்டித்தான் இங்கே இருக்கக் கூடிய பெண் பத்திரிகையா ளர்கள் பணியாற்றிக் கொண்டிருக் கிறார்கள். 

சில நாட்களுக்கு முன்னால் நான் எனக்கு எதிரணியிலே இருக்கக் கூடிய ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டி ருந்தேன். அப்போது சோஷியல் மீடி யாவில் பெண்கள் எப்படி 'டார்கெட்' செய்யப்படுகிறார்கள் என்று உரை யாடினோம். 

அப்போது, நாம் ஒரு 'போஸ்ட்' போட்டுவிட்டால் அதற்கு 'கமென்ட்ஸ்' என்ன வருகிறது என்பதை பார்க்கா மலேயே இருந்துவிடலாம் என்று நாங்கள் இரண்டு பேருமே சொல்லிக் கொண்டிருக்கிறோம். 

ஒரு கருத்தைப் பதிவிட்டதும் அதற்கு என்ன மாதிரியான எதிர்வினைகள் வருகின்றன என்பதை அறிந்துகொள்ள வேண்டிய இடத்தில் இருக்கும் நாங்கள் இரண்டுபேருமே, ‘அந்த கமென்ட்ஸை படிக்காம இருந்தாலே நிம்மதியா இருக்க லாம்' என்று சொல்லக் கூடிய இடத்திலே இருக்கிறோம் என்றால் இன்றைக்கு பொதுத் தளங்களிலே பணியாற்றக் கூடிய பெண்களின் நிலை என்ன என் பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

அதிகமான பெண்கள் மீடியாவுக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர் களுக்கான பாதுகாப்பு, அவர்களுக்கான இடம் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கிக் கொண்டேதான் வருகிறது. உலகத்திலே இருக்கும் 73% பெண் பத்திரிகையா ளர்கள் குறிவைத்து தாக்கப்படுவதையும் அச்சுறுத்தப்படுவதையும் எதிர்கொள் கிறார்கள். அவர்களும் அவர்கள் குடும்பமும் இதை எதிர்கொள்கின்றனர். 

இதுதான் நிதர்சனம். இதற்குள் நாம் எப்படி பணியாற்றப் போகிறோம், எப்படி ஒருவருக்கொருவர் பாதுகாத்துக் கொள் ளப் போகிறோம் என்பதுதான் முக்கியம். 

'சோஷியல் மீடியா' என்பது உண் மையான உலகம் அல்ல என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள முடியாது. இதுதான் உண்மை, இதுதான் உண்மையான உலகம். அதில்தான் நாமும் ஒரு அங்கமாக இருக்கிறோம்.

எப்படி நூறு ஆண்டுகளுக்கு முன் பெண்கள் மருத்துவர்கள் ஆகவும்  பொறியாளர்கள் ஆகவும் எழுத் தாளர்கள்  ஆகவும் ஓர் இடத்துக்கு வர பொது தளத்துக்கு வந்து பணி யாற்றியபோது எதையெல்லாம் எதிர்கொண்டார்களோ... முதன் முதலில் மருத்துவருக்கு படிக்க விரும்பிய பெண்கள் ஆண் போல் உடை உடுத்திக்கொண்டு ஆண் பெயரிலேயே படித்தார்கள். இன்று பெண் பத்திரிகையாளர்கள் தன் பெயரில்கூட கட்டுரை எழுத முடியாமல் பெயர் இல்லாமலோ, அல்லது ஓர் ஆண் பெயரிலோதான் எழுதுகிறார்கள். 

நாம் முன்னேறி வந்துவிட்டதைப் போல தெரிந்தாலும் கொஞ்சம் உற்று நோக்கினால் ஆரம்பித்த இடத்திலேதான் இன்னும் நாம் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள முடியும். புதிய உலகத்தை நாம் உருவாக்கியபோதும் இங்கேயும் அதே அவமானங்கள், அதே தடைகள். 

துவங்கிய இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறோம்! 

ஒரு காலத்தில் பெண்களை மய்யப் படுத்தி நிறைய படங்கள் வந்துகொண்டி ருந்தன. திரைப்படங்களின் கதைகள் பெண்களை மய்யப்படுத்தி இருந்தன. இப்போது அவை எங்கே?

ஓர் ஆணுக்குப் பின்னால் நின்று கொண்டிருக்கக் கூடிய பெண்ணை தான் நாம் மறுபடியும் மறுபடியும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

பெண் விடுதலையை நேர்மையாக பேசிய ஆண்-பெரியார்! 

எல்லாத் துறைகளிலும் பெண்கள் நாம் வளர்ந்துவிட்டோம் என்று நினைக்கிறோம். ஆனால் கொஞ்சம் உற்று நோக்கினால் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் துவங்கிய இடத்திலேயே இன்னும் நின்று கொண்டிருக்கிறோம். அதனால் பார்ப்பதற்கு நாம் பல இடங்களைக் கடந்துவிட்டோம் என்ற நிலை இருந்தாலும்... இன்னும் நாம் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறோம் என்ற சூழலையும் மறந்துவிடக்கூடாது. 

பெண்கள் தங்களுக்கென விதிக்கப் பட்ட மரபுத் தடைகளை உடைத்துக் கொண்டு கூண்டைவிட்டு வெளியே வந்து சாதிக்கத் தொடங்கி இந்த உலகத் திலே தங்களது அடையாளங்களை அழுத்தமாக பதித்துக் கொண்டிருக் கிறார்கள். நாம் எல்லாரையும் ஒருங் கிணைத்துக் கொண்டு ஆண்களையும் சேர்த்துக் கொண்டு, பெண் விடு தலையைப் பற்றி மிக நேர்மையாக பேசிய ஆண் - பெரியார் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அதனால் ஆண்களையும் சேர்த்துக் கொண்டு பெண்கள் நமக்கான தடைகளை உடைத்துக் கொண்டு சாதிப்போம். 

-இவ்வாறு மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  உரையாற்றினார். 

இந்த நிகழ்வில் ஒன்றிய திரைப் பட சான்றிதழ் வாரிய உறுப்பினர் கவுதமி, Ministry Of Information And Broadcasting  முதன்மை இயக்குநர் (South Zone) வெங்கடேஷ்வர், Chennai Press Information Bureau கூடுதல் இயக்குநர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment