மயிலையிலும் புரசையிலும் பொழிந்த பொன்மழை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 14, 2023

மயிலையிலும் புரசையிலும் பொழிந்த பொன்மழை!

*மின்சாரம்

-[மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகிலும் சென்னைப் புரசைவாக்கம் தாணா தெருவிலும் முறையே தென் சென்னை, வட சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று (13.2.2023) நடைபெற்ற பிரச்சாரப் பெரும் பயணப் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உரையில் உதிர்ந்த தரவுகளும், கருத்துகளும் - ஒரு சுருக்கப் பார்வை-].

«  இடையில் ஈராண்டுகள் கரோனா தாக்குதலால் நம் பிரச்சாரம் தடைபட்டு இருந்தது. 

« இந்த நிலையில் கடந்த  ஆண்டிலும் இவ்வாண்டிலும் பிரச்சாரப் பெரும் பயணத்தைத் தொடர்ந்தோம் - தொடர்கிறோம். 

« கடந்தாண்டு நீட் எதிர்ப்பு. தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில சுயாட்சி மீட்பு என்ற அடிப்படையில் பிரச்சாரம் (21 நாட்கள்).

« இப்பொழுது சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் பரப்புரைப் பெரும் பயணம் (40 நாட்கள்) மேற்கொண்டுள்ளோம்.

« ஒரு நூற்றாண்டாக அறிவுப் புரட்சி, அமைதிப் புரட்சி நடத்தியதன் காரணமாக நம் இளைஞர்கள் படித்தார்கள் - வேலை வாய்ப்புக்காகக் காத்துக் கிடக்கிறார்கள்.

« பிஜேபி ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2  கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்றார் பிரதமர் மோடி.

« அப்படிப் பார்க்கப் போனால் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 18 கோடி இருபால் இளைஞர்களுக்கும் வேலை கிடைத்திருக்கும் - நாட்டின் பொருளாதாரமும் வளர்ந்திருக்கும்.

« சேது சமுத்திரத் திட்டம் 1860 முதல் பேசப்பட்டு வருகிறது. நமது இனத்தின் அறிஞர் டாக்டர் ஏ. இராமசாமி முதலியார் இந்தத் திட்டத்தை அறிவித்தார்.

« இந்தத் திட்டம் மட்டும் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் நம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கில் வேலை வாய்ப்புக் கிடைத்திருக்குமே - இதனைத் தடுத்தது யார்?

« பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்ட திட்டம். தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு அத்துறை அமைச்சராக இருந்து விரைவாக அத்திட்டத்தை செயல்படுத்தினார். 2000 கோடி ரூபாய் செலவிடப்பட்டது; இன்னும் 23 கிலோ மீட்டர் பணியே முடிக்கப்படவிருந்த நிலையில் உச்சநீதிமன்றம் சென்று இடைக்காலத் தடையைப் பெற்றவர்கள் யார்?

« ஜெயலலிதா, சோ, இராமசாமி, சுப்பிரமணியசாமி ஆகிய மூவர்தானே!

« என்ன காரணம் - 2009 தேர்தல் நெருங்கும் நேரம் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் அந்தச் சாதனைப் பெருமை தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் கிடைத்து விடும் என்ற அரசியல் நோக்கம்தானே!

« ராமன் பாலம் - அதை இடிக்கலாமா என்றார்கள்.

« இராமன் என்ன என்ஜினியரா? எந்த என்ஜினியரிங் கல்லூரியில் படித்தார் என்று கேட்டார் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

« அப்பொழுது விசுவ ஹிந்து பரிஷத் தலைவரான ராம் விலாஸ் வேதாந்தி என்ற சாமியார் கலைஞரின் தலையைச் சீவுவேன் என்றார்.

« கலைஞர் அளித்த பதில் என்ன? நான் என் தலையைச் சீவியே பத்து வருஷம் ஆச்சு. இவர் எங்கே சீவப் போகிறார் என்று அவருக்கே உரித்தான முறையில் ஒரு வன்முறையை எளிதில் கடந்தார்.

« இப்பொழுது என்னாயிற்று? நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் 22 அன்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அத்துறை அமைச்சர் ஜிதேந்திரசிங் "நாங்கள் ஆய்வு செய்து பார்த்ததில் வெறும் சுண்ணாம்புக் கற்களும் பவளப் பறைகளும்தான் இருக்கின்றன. எந்தப் பாலமும் கிடையாது என்று பதில் கூறி விட்டாரே!

« இப்பொழுது என்ன செய்யப் போகிறார்கள்?

« 2000 கோடி ரூபாய் நட்டத்திற்கு யார் பொறுப்பு?

« சரி, இராமன் பாலம் இல்லை என்று அதிகாரப் பூர்வமாகத் தெரிந்து விட்டபிறகு சேது சமுத்திரத் திட்டப் பணியைத் தொடங்க வேண்டியதுதானே!

« நாடாளுமன்றத்தில் ராமன் பாலம் என்ற ஒன்று கிடையாது என்று அறிவித்த நிலையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உடனடியாக சேதுசமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறி, அத்தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதே - இதற்குப் பெயர்தான் "திராவிட மாடல்" அரசு என்பது.

« சேது சமுத்திரத் திட்டம் செயல்பாட்டுக்கு வந் திருந்தால் இந்நேரம் இலங்கையைச் சுற்றிக் கப்பல்கள் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காதே - பயண நேரம் குறைந்திருக்குமே, எரிபொருள் செலவும் குறைந்திருக்குமே!

« சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய்க்கு நிக ராகப் பேசப்பட்டு இருக்குமே!

« தன்மானம், இனமானம் என்பது நமது பக்கம் - வருமானம் அடமானம் என்பது இன்னொரு பக்கம்  - இதனை எதிர்த்துதான் இப்பொழுது பிரச்சாரம்.

« திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கேட்கிறார்கள்.

« நீ சூத்திரன் உனக்குப் படிப்புக் கிடையாது என்று சொன்ன மனுவை எதிர்த்து எரித்துப் போர் புரிந்தது திராவிட இயக்கம்.

« சென்னைக் கடற்கரை சாலையில் ஒரு முறை நடந்து பாருங்கள். எத்தனை எத்தனைக் கல்லூரிகள் பல்கலைக் கழகம் - எந்த ஆட்சிக் காலத்தில் வந்தது?

« சென்னை மாநிலக் கல்லூரியில் பார்ப்பன ரல்லாத மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்பதற்கே நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டிய நிலை இருந்ததே! (நிளி 636) நாள் 20.5.1922).

« கல்வியில் இடஒதுக்கீட்டுக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட காரணமாக இருந்தவர் தந்தை பெரியார் தானே - தமிழ்நாடு தானே.

« இந்தியாவிலேயே 69 விழுக்காடு இடஒதுக்கீடு 76ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தோடு 9ஆவது அட்டவணையில் இணைக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் திராவிடர் கழகம் இல்லையா?

« என்னைப் பார்க்கும்போது இதோ 31சி வருகிறது என்று சொல்லுவார்களே!

« மண்டல் குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்த 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியது திராவிடர் கழகம் அல்லவா!

« எம்.ஜி.ஆர். அவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு ஆண்டு வருமானம் ரூ.9,000 இருந்தால் இடஒதுக்கீடு கிடையாது என்று பிறப்பித்த ஆணையை எதிர்த்துப் போராட்டங்களையும், மாநாடுகளையும் முன்னெடுத்தது யார்?

« திராவிடர் கழகம் முன்னெடுத்த இந்தப் பணி களுக்கு தி.மு.க., காங்கிரஸ், சி.பி.அய்., இந்திய யூனியன் முசுலிம் லீக், ஜனதா முதலிய கட்சிகளின் பங்களிப்பு முக்கியமானவை.

« கடந்த ஞாயிறன்று (12.2.2023) ஆந்திர மாநிலம் குண்டூரில் மண்டல் குழு தலைவர் பி.பி. மண்டல் (பிந்தேஷ்வர் பிரகாஷ் மண்டல்) சிலையைத் திறந்து வைக்க யாரை அழைத்தார்கள்? திராவிடர் கழகம் தானே அவர்களின் கண்களுக்குத் தெரிந்தது. நான் சென்று திறந்து வைத்தேன்.

நமது மூன்றாவது துப்பாக்கியாகிய அருமைச் சகோதரர் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவனை அவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக அழைத்தது ஏன்? தமிழ் மண் சமூகநீதி மண் - பெரியார் மண் என்பதால்தானே!

« கருநாடக மாநிலத்தின் அமைச்சராக இருந்த ரகுராமரெட்டி என்பவர் அவ்விழாவிற்கு நான் சென்று இருந்தபோது என்னைப் பார்த்துக் கேட்டார். 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை எப்படி ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கும் அதிசயத்தை உங்களால் செய்ய முடிந்தது என்று கேட்டார். நடந்தவற்றை எங்கள் போராட்டக் களத்தை விவரித்துச் சொன்னேன்.

« முதல் அமைச்சர் ஜெயலலிதா (தமிழ்நாடு), பிரதமர் பி.வி. நரசிம்மராவ் (ஆந்திரா) குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா (உ.பி.) ஆக மூன்று பார்ப்பனர்களைப் பயன்படுத்தி இதனைச் சாதித்தது பற்றி விளக்கினேன். மிகவும் வியந்து பாராட்டினார்.

« தந்தை பெரியார் மறைந்தபின்னர் அவரின் தொண்டர்களால் இதனை சாதிக்க முடிந்தது.

« படிக்காதே என்பது  ஆரியம் - படி  படி என்றது திராவிடம். ஒரு துளி ரத்தம் சிந்தாமல் ஆயுதம் ஏந்தாமல் சமூகநீதித் துறையிலே இதனை சாதித்து இருக்கிறோம்.

« இப்பொழுது என்ன நடக்கிறது? ஒன்றிய பிஜேபி அரசு நாம் போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டைத் கொல்லைப் புறம் வழியாக சூழ்ச்சியாகப் பறித்துக் கொண்டுள்ளது.

« ஒன்றிய அரசு துறைகளில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் நாம் போராடிப் பெற்ற 27 சதவிகித இடஒதுக்கீடு முழுவதுமாக நமக்கு அளிக்கப்படுகிறதா? 13 விழுக்காட்டை இன்னும் தாண்டவில்லையே!

« இன்னொரு சூழ்ச்சி! உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடாம்.

« நாள் ஒன்றுக்கு ரூ.2222 வருவாய்ப் பெறுவோர் ஏழைகளாம்!

« ஏழு லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வருமான வரி கட்டத் தேவையில்லை என்கிறது ஒன்றிய அரசின் பட்ஜெட். ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் பெறும் இந்த உயர் ஜாதி பார்ப்பனர்கள் - அதாவது இன்கம்டாக்ஸ் கட்டும் பிச்சைக்காரர்கள்! (பலத்த சிரிப்பு). இவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடாம்!

« பிஜேபி ஆட்சியில் இருந்தாலும் அதன் லகான் ஆர்.எஸ்.எஸிடம் தான் இருக்கிறது. பொம்ம லாட்டம் நடத்துவது ஆர்.எஸ்.எஸ். தான். அதற்கு அடமானப் பொருளாகவும் தமிழ்நாட்டில் ஒரு கட்சி கிடைத்திருக்கிறது (சிரிப்பொலி).

« 'குஜராத் மாடல்' 'குஜராத் மாடல்!' என்றனர். 

« அது என்ன குஜராத் மாடல்? 56 இஞ்ச் மார்பளவு என்று தனது மார்பை டேப் எடுத்து அளந்து காட்டுகிறார் நரேந்திரமோடி.

« வளர்ச்சி வளர்ச்சிஎன்று வாய்க்கிழியப் பேசு கிறார்கள்? யாருக்கு வளர்ச்சி?

« கரோனா காலத்தில் மக்கள் எல்லாம் பசியும் பட்டினியுமாக உழன்ற கால கட்டத்தில் அதானி, அம்பானிகளின் ஒரு நாள் வருமானம் மட்டும் ரூ.1002 கோடியாம். இது யாரால் வந்த வளர்ச்சி? பிரதமர் மோடிக்குத் தான் வெளிச்சம்!

« இதற்கு முடிவுதான் என்ன? 2024 பொதுத் தேர்தல்தான் அமைதிப் புரட்சி - வாக்குச் சீட்டு மூலம் புரட்சிதான் ஒரே வழி!

« இப்பொழுது நடக்கும் போராட்டம் சமத்துவத் துக்கும் சனாதனத் துக்குமிடையிலான போராட்டமே!

« சமத்துவம் என்பது அனைவருக்கும் அனைத்தும் என்பது; சனா தனம் என்பது அனைவருக்கும் அனைத்தும் இல்லை - கிடையாது என்பதாகும்.

« ஸநாதன தர்மம் என்றால் என்ன?

« பனாரஸ் ஹிந்துக் கல்லூரியில் பி.ஏ. பட்டப் படிப்பில் சொல்லிக் கொடுக்கப்பட்ட அந்த ஸநாதனம் என்பதற்கு என்ன பொருள் தருகிறது? இதோ ஆதாரம்.

« ஸநாதனம் என்றால் ஆரியம் என்கிறது; ஆரியம் என்றால் மேன்மை பொருந்தியது. ஒழுக்கம் நிறைந்த இந்த ஜாதியார் இந்தியாவின் வடபகுதியில் வந்து குடியேறினர்.

« ஆரியர் வந்தேறிகள் என்று அவர்களின் ஸநாதனம் கூறி விட்டதே - ஒப்புக் கொண்டுதான் தீர வேண்டும்.

இந்தியாவிலேயே பெயருக்குப் பின் ஜாதிப் பட்டம் போடாத நாடு தமிழ்நாடுதான். இங்கு ஜாதிக்கட்சியை நடத்துபவர்களே தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டத்தைப் போடுவதில்லை.

« இதற்குக் காரணம் திராவிட இயக்கம் அல்லவா!

« 1929இல் செங்கற்பட்டு மாநாட்டில் ஜாதி பட்டத்தைத் துறக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த மாநாட்டிலேயே, உடனடியாக ஜாதிப் பட்டத்தைத் துறந்தனர் என்பது உன்னதவரலாறு.

« இது திராவிட இயக்கத்தின் சாதனை என்பதை மறுக்க முடியுமா?

தந்தை பெரியாரும் - அண்ணல் அம்பேத்கரும்

(தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரை ஒப்பிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கூறியவை)

பஞ்சாபில் ஜாதி ஒழிப்பு மாநாட்டுக்குத் தலைமை ஏற்குமாறு அண்ணல் அம்பேத்கர் அழைக்கப்பட்டார்.  அழைத்தவர்கள் லாகூரில் உள்ள ஜாட்- பட்தோடக் மண்டலத்தார் (ஜாதி ஒழிப்புச் சங்கத்தார்) அதற்கு ஒப்புதலும் கொடுத்து மாநாட்டுத் தலைமை உரையையும் எழுதி அனுப்பினார்.

அந்த உரையில் வேதங்கள், உபநிஷத்துகள், இதிகாசங்கள் பற்றி எல்லாம் தம் கருத்தை வெளியிட்டு இருந்தார் டாக்டர் அம்பேத்கர்.

மாநாட்டு வரவேற்புக் குழுவினர் அந்தப் பகுதிகளை நீக்க வேண்டும் என்று கேட்டனர். அம்பேத்கர் அதனை ஏற்கவில்லை. அந்தத் தலைமை உரையை தந்தை பெரியார் அம்பேத்கரிடமிருந்து பெற்று, தமிழில் மொழிபெயர்த்து "ஜாதியை ஒழிக்கும் வழி" என்ற நூலாக வெளியிட்டார் (1936). இதுவரை பல பதிப்புகளுக்கு மேல் வெளியிடப்பட்டு இலட்சக்கணக்கில் மக்களிடம் பரவி விட்டது.

« சூத்திரர்கள், பஞ்சமர்கள் படிக்கக் கூடாது என்கிறது மனுதர்மம். இதுபற்றி டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார். நானும் வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று படித்திருக்கிறேன். அங்கும் கறுப்பர், வெள்ளையர் வேறுபாடுகள் உண்டு; ஆனாலும் கறுப்பர்களைப் படிக்கக் கூடாது என்று சொல்லவில்லை; அவர்கள் படிக்க தனி கல்விக் கூடங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலைதான் என்கிறார் அண்ணல் அம்பேத்கர். (மனுதர்மத்தை தந்தை பெரியாரும் கொளுத்தினார்; அண்ணல் அம்பேத்கரும் கொளுத்தினார்).

« படிகளே இல்லாத நான்கு மாடி வீடு - இதுதான் ஹிந்து மதத்தின் வருணாசிரமம் என்றார் அம்பேத்கர்.

« ஈரோட்டில் 29 பதவிகளை ஒரே காகிதத்தில் ராஜினாமா செய்து விட்டு காங்கிரசில் சேர்ந்தவர் பெரியார்.

« காங்கிரஸின் மாநில தலைவராகவும், மாநில செயலாளராகவும் இருந்தவர் பெரியார். சமூகநீதிக்காக அந்தப் பதவிகளையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு சுயமரியாதை இயக்கம் கண்டவர் தந்தை பெரியார்.

«  நீதிக்கட்சி தலைவராக இருந்தபோது இரண்டு முறை சென்னை மாநில முதல் அமைச்சர் பதவியை வகிக்குமாறு வெள்ளைக்கார கவர்னர்கள் கேட்டுக் கொண்டபோதும்கூட என் பணி அரசியல் பணியல்ல, சமுதாயப் பணி என்று மறுதலித்தார் தந்தை பெரியார்.

அண்ணல் அம்பேத்கரும் அப்படியேதான் இந்துத் திருத்த சட்டம் - பெண்களுக்குச் சொத்துரிமை சட்டத்தை செயல்படுத்த அமைச்சராக இருந்த டாக்டர் அம்பேத்கர் முயற்சித்தபோது, -சனாதனிகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டபோது 'எனக்குப் பதவி முக்கியமல்ல - கொள்கைதான் முக்கியம்!" என்று கூறி, அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்து வெளியேறியவர் ஆவார்.

« 95 வயதைக் கடந்து வாழும் மிசோரம் மேனாள் ஆளுநரும் மேனாள் தமிழ்நாடு தலைமைச் செயலாளருமான ஏ. பத்மநாபன் அய்.ஏ.எஸ். அவர்கள் மாணவராக இருந்தபோது, சக மாணவர்களுடன் அண்ணல் அம்பேத்கர் அவர்களை சென்னை விருந்தினர் மாளி கையில் சந்தித்தபோது, 'எங்களுக்கு வழிகாட்டும் அறிவுரைகளைக் கூறுங்கள் என்று கேட்டனர்.

அதற்கு அண்ணல் அம்பேத்கர் சொன்ன பதில்தான் முக்கியம்.

"உங்கள் நாட்டிலேயே ஒரு தலைவர், நானும் அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டு இருக்கிறேன். அவரிடம் செல்லுங்கள் அறிவுரையைப் பெறுங்கள் என்று சொன்னவர் அம்பேத்கர். ('உண்மை' இதழில் நேர்முகப் பேட்டியில்).

« இங்கே நாங்கள் கூடியிருப்பது அரசியல் கூட்டணி அல்ல - சமூகநீதி கூட்டணி.

« சமூக நீதிக்காகப் பிச்சை கேட்கவில்லை நாங்கள்.

« உரிமையைத்தான் கேட்கிறோம்.

« உங்களில் எத்தனை எம்.பி.க்கள் இருக்கிறீர்கள் என்று எங் களைக் கேட்பவர்கள் உண்டு.

பெரும்பாலானவர்கள் எங்கள் எம்.பி.க்கள்தான்  - சமூகநீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள் - சமூகநீதிக் கட்சிக்காரர்கள் தான் என்பது - எங்கள் பதிலும் - யதார்த்தமும்!

No comments:

Post a Comment