அய்தராபாத் தலைமைச் செயலகத்தை இடிப்பார்களாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 14, 2023

அய்தராபாத் தலைமைச் செயலகத்தை இடிப்பார்களாம்!

தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தாஜ்மஹால் போன்று உள்ள தெலங்கானா மாநில தலைமைச் செயலகம் இடிக்கப்படும் என பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

 தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் அய்தராபாத் போயினப்பள்ளியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போது, “முஸ்லிம்களின் வாக்குகளை வாங்க  தாஜ்மஹால் வடிவில் தலைமை செயலகம் கட்டப்பட்டுள்ளது. 

இங்கு பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் தாஜ் மஹால் போல் காட்சிதரும்  தலைமைச் செயலகம் இடிக்கப்படும். இந்த கட்டடம் நமது ஹிந்து கலாச்சாரத்துடன்  ஒத்துப் போகவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஹிந்து கலாச்சாரத்திற்கு ஏற்ற வாறு தலைமை  செயலகம் மாற்றி அமைக்கப்படும்.

 சாலையோரம் உள்ள கோவில்கள், மசூதிகள் இடிக்கப்படும் என அமைச்சர் கே.டி.ராமாராவ் கூறியுள்ளார். அவருக்குத் தைரியம் இருந்தால் அய்தராபாத் பழைய நகரத்தில் இருந்தே இடிப்பைத் தொடங்க வேண்டும்.  இங்குள்ள கட்சிகள் அனைத்தும் முஸ்லிம்களின் வாக்கு களைப் பெறுவதில் குறியாக இருந்து ஹிந்துக் களுக்கு துரோகம் செய்கின்றனர். அதனால் தான், தாஜ்மஹாலை விட சிறப்பான புதிய செயலகத்தை கட்டியதாக முஸ்லிம்களின் அரசியல் தலைவர்கள் பாராட்டிக்கொண்டு இருக்கின்றனர்."     

பா.ஜ.க. தலைவர் புதிய செயலகம் இடிக்கப்படும் என்று கூறிய திட்டம் தற்போது பரபரப்பாக பேசப் படுகிறது.   மறுபுறம், புதிய தலைமை செயலகத்தின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.  தெலங்கானா அரசால் ஹுசைன் சாகரில் ஏரியை ஒட்டி கட்டப்பட்டுள்ள புதிய தலைமைச்  செயலகத்தை முதலமைச்சர் கே.சி.ஆர். பிறந்தநாளான  17ஆம் தேதி அன்று திறக்க  ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சங்பரிவார்களைப் பொறுத்த வரை மாற்று மதத்தினரை வசைப்பாடுவது, அவர்களின் நினைவுச் சின்னங்களை இடித்துத் தள்ளுவது என்பதெல்லாம் சர்வ சாதாரணம்.

 450 ஆண்டு கால வரலாறு படைத்த இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியை ஒரு பட்டப் பகலில் பல்லாயிரக்கணக் கானவர்கள், பிஜேபியின் முக்கிய தலைவர்களின் வழிகாட்டுதல்படி - குறிப்பாக எல்.கே. அத்வானி, உமாபாரதி முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள் எல்லாம் முன்னின்று அடித்து நொறுக்கித் தள்ள வில்லையா?

இதில் வெட்கக்கேடு என்னவென்றால், யார் இடித்தார்களோ, அவர்களிடமே அந்த இடத்தை உச்சநீதிமன்றம் ஒப்படைத்த கொடுமைதான்! இப்பொழுது வேக வேகமாக அந்த இடத்தில் ராமன் கோயில் கட்டிக் கொண்டு இருக்கின்றனர். 2024 மக்களவைத் தேர்தலின்போது, ராமன் கோயிலைத் திறந்து, மக்களைத் தங்கள் வாக்கு வங்கிப் பக்கம் திருப்பிடத் திட்டமிட்டுள்ளனர்.

வரலாறு நெடுகப் பார்த்தால் ஆயிரக்கணக்கான புத்த விகாரங்களை இடித்து ஹிந்துக் கோயில்களாக உருமாற்றிய தரவுகள் ஏராளம் உண்டே! பூரி ஜெகந்நாதர் கோயில் - புத்தர் கோயில் தான் என்று விவேகானந்தர் கூறியுள்ளாரே - இடிக்கலாமா? மதம் மிருகத்துக்குப் பிடித்தாலும் ஆபத்து, மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்தே!


No comments:

Post a Comment