அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் பகுதிகளில் தமிழர் தலைவரின் கொள்கை விளக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 24, 2023

அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் பகுதிகளில் தமிழர் தலைவரின் கொள்கை விளக்கம்!

 அருப்புக்கோட்டை, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைக் கோட்டை!

சமூக நீதியும், சமத்துவமும் பிரிக்கப்பட முடியாத இரண்டு தத்துவங்கள்!

“தமிழ்நாட்டில் ஆட்சிகள் வரலாம்; காட்சிகள் மாறலாம்; சமூகநீதியில் கை வைக்கும் துணிவு யாருக்கும் வராது”



விருதுநகர், பிப்.24 ’சமூக நீதி பாதுகாப்பு’, ’திராவிட மாடல் விளக்கம்’, ’சேது சமுத்திரத் திட்டம் மறுபடியும் தொடங்கப்பட வேண்டும்’ ஆகியவற்றை விளக்கி நாடெங்கும் நடைபெற்று வரும் பரப்புரைப் பயணத்தில் அருப்புக்கோட்டை, விளாத்தி குளம் பகுதிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு  விளக்கவுரை ஆற்றினார்.

அருப்புக்கோட்டையில் தமிழர் தலைவர்!

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு, 23.2.2023 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற, சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாநில ப.க. எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் ந.ஆனந்தம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விடுதலை தி.ஆதவன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் இல.திருப்பதி, ப.க. மாநில துணைத் தலைவர் கா.நல்லதம்பி, சாத்தூர் நகர்மன்ற துணைத்தலைவர் பா.அசோக், மாவட்ட அமைப்பாளர் முரளி, மண்டல இளைஞரணி செயலாளர் அழகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் ஈட்டி கணேசன் அவர்களின் “மந்திரமா? தந்திரமா?'' நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார். 

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.  

முதல் சுயமரியாதை திருமணம்!

எல்லா பகுதிகளிலும் உள்ள மக்களைச் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இரண்டு கூட்டங்களில் ஒன்று நகரத்திலும், மற்றொன்று கிராமத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேரூராட்சி பகுதியான விளாத்திகுளத்தில் தமிழர் தலைவர் எடுத்த எடுப்பிலேயே, “இங்கே வந்து உங்களைக் காண்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்றார். 

“95 ஆண்டுகளுக்கு முன்னால், 1928 இல் இங்கேயிருக்கும் சுக்கில நத்தம் என்ற ஊரில்தான், ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்து, பெண்ணடிமைத்தனத்தைப் போக்கவும், ஜாதி ஒழிப்பு, பிறவி பேதத்தை நீக்கவும் அந்தக் காலத்திலேயே முதல் சுயமரியாதை திருமணம் நடந்தது இங்குதான்!” என்று தனது மகிழ்ச்சிக்கான கொள்கைக் காரணத்தையும் சொன்னார். 

அதை இன்னும் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல, “ஆகவே, அருப்புக்கோட்டை பெரியார் சுயமரியாதை இயக் கத்தின் கொள்கைக் கோட்டை” என்றார். அதைத் தொடர்ந்து பலத்த கைதட்டல்கள் எழுந்தது. துரைசாமி (ரெட்டியார்) என்பவருக்குத் திருமணம். தந்தை பெரியார், பட்டுக்கோட்டை தளபதி அழகிரிசாமி, முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், பொன்னம்பலனார் இப்படி பலரும் சுக்கில நத்தத்திற்கு வந்து, தந்தை பெரியார் அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார் என்று கூறிவிட்டு, இந்தத் திருமண முறையின் சிறப்பை கூடுதலாகச் சொல்ல, “1958 இல் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் ஜாதி மறுப்புத் திருமணமாக எனக்கு நடத்தினார்கள். மாலை நேரம் ஞாயிற்றுக்கிழமை கொழுத்த ராகு காலமான 5.30 மணி. தாலி இல்லை, மற்றவை எதுவுமில்லை. நன்றாகத்தான் இருக்கின்றோம். இன்றைக்கு 65 ஆண்டுகள் ஆகின்றன” என்று தனக்கு நடந்த திருமணத்தையே உதாரணமாக்கிச் சொன்னார். “இந்தத் திருமண முறை செல்லாது என்று சொல்லப்பட்டவர்களின் மகள்தான் எனது இணையர்” என்று தொடர்ந்து சொல்லி விட்டு, செல்லாது என்று சொன்ன பிறகும் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றன என்றார். இதை சட்டமாக்கியதை சுருக்கமாகச் சொன்னார். 

தொண்டர்களின் தியாகத்தால் அமைந்த மேடை!

தொடர்ந்து, ஈ.வெ.ரா.சகாப்தம், சு.ஆ.முத்து, தன்னுடைய ஜாதிப்பட்டத்தை எடுத்துவிட்டவர். அவரை முத்து நாடார் என்று அழைப்பார்கள். அதே மாதிரி அய்யா சிவசண் முகசுந்தரனார், கவிஞர் எம்.எஸ்.ராமசாமி, இவர், “நரகாசுரப் படுகொலை'' என்று மிகப்பெரிய ஆராய்ச்சிப் புத்தகத்தை எழுதியவர். ஆசிரியர் டி.கே.சுப்பிரமணியம், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.எஸ்.கருப்பையா, சீனி பாண்டியன், புலவர் கண்ணையன், ஆதவனின் தந்தை திராவிட நாதன் என்று அருப்புக்கோட்டையில் தொடக்க காலத்தில் இருந்த தோழர்களை நினைவு கூர்ந்து பேசி, “இப்படிப்பட்ட தொண்டர்களின் தியாகத்தின்மீது இந்த மேடை அமைக்கப்பட்டிருக்கிறது” என்று அறிவித்தார்.

“இப்படிப்பட்ட தொண்டர்கள் துணையோடு நமது தலைவர்கள் பெற்றுத்தந்த உரிமைகள் எல்லாம் பறிபோய்க்கொண்டிருக்கின்றன” என்று ஒரு அபாய எச்சரிக்கை மணியடித்து, சமூக நீதி வரலாற்றை விவரித்தார். அதில் எப்படி 69 விழுக் காடு வந்தது? ஆர்.எஸ்.எஸ். எப்படி இதற்கு எதிராக இருந் தது? ஒன்றிய அரசின் இட ஒதுக்கீடு இல்லாமல் இருந்தது ஏன்? மண்டல் கமிசன் எப்படி அந்த இடத்தை நிரப்பியது? என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் இருந்தது. முடிவாக, “தமிழ்நாட்டில் ஆட்சிகள் வரலாம்; காட்சிகள் மாறலாம்; சமூக நீதியில் மட்டும் கை வைக்கும் துணிவு யாருக்கும் வராது” என்றார். 

தொடர்ந்து கல்வி, சுகாதாரத்தில் தமிழ்நாடு எப்படி ஒரு மாடலாக உள்ளது. அதைத்தான் திராவிட மாடல் என்கிறோம் போன்ற கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். மேலும், சேது சமுத்திரத் திட்டத்தின் தேவை பற்றி பேசினார். மூன்று பார்ப் பனர்களும், இன்றைக்கிருக்கும் ஒன்றிய அரசும் தமிழ்நாட் டின் படித்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலை வாய்ப்பில் மண் அள்ளி போட்டது எப்படி? என்பதை விவ ரித்து, அதிலிருந்து மீள அனைவரும் விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியம். அதற்குத்தான் இந்தப் பயணம். வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு! என்று குறிப்பிட்டு தமது உரையை நிறைவு செய்தார்.

கலந்து கொண்ட தோழர்கள்!

இந்த பரப்புரைக் கூட்டத்தில் தி.மு.க. மேனாள் நகர்மன்ற தலைவர் தமிழ் காத்தான், காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் லட்சுமணன், ம.தி.மு.க. நகர செயலாளர் மணிவண்ணன், சி.பி.எம். நகர் செயலாளர் காத்தமுத்து, வி.சி.க. மாவட்ட செயலாளர் முருகன், ம.ம.க. மாவட்ட தலைவர் மதார்கான், தமிழ்ப்புலிகள் கட்சி கொ.ப.செ. கலைவேந்தன், தி.இ.த. பேரவை மாவட்ட செயலாளர் இராஜேசு, டாக்டர் எம்.எஸ்.ஆர்.புகழேந்தி, கவிஞர் நா.ம.முத்து, தி.மு.க. மேனாள் அவைத் தலைவர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். முடிவில் நகர செயலாளர் இராஜேந்திரன் நன்றி கூறினார். பிறகு ஆசிரியர் அருப்புக்கோட்டை தோழர்களிடம் விடைபெற்றுக்கொண்டு அடுத்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விளாத்திகுளம் புறப்பட்டார்.

விளாத்திகுளத்தில் தமிழர் தலைவர்!

விளாத்திகுளம் காய்கறிச் சந்தை அருகில் மாலை   6 மணிக்கு நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மா.பால்.இராசேந்திரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மு.முனியசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். விளாத்திகுளம் ஒன்றிய தலைவர் நாகராஜன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் செ.ஜெயா, மாவட்ட இளைஞரணி தலைவர் ஆ.கந்தசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் த.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக சொற்பொழிவாளர் 

இரா.பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார். 

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

எங்களுக்கும் எதிரிகள் உண்டு!

ஆசிரியர், “தோழர்களே இந்தியாவிலேயே நம்முடைய தமிழ்நாடுதான் கல்வியில் சிறந்து விளங்குகிறது. அதற்குக் காரணம் திராவிட மாடல் ஆட்சி” என்றே தொடங்கினார்.  “ஆனால், இந்தியா முழுவதும் மனுதர்மம்தான் ஆட்சி செலுத் தியது. இதோ ஆதாரம் இருக்கிறது” என்று அசல் மனுதர்மம் புத்தகத்தை எடுத்துக் காட்டினார். தொடர்ந்து, “நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல! எங்களை வேண்டுமானால் எதிரிகளாக பிறர் நினைக்கலாம்” என்று கூறிவிட்டு, தங் களுக்கு எதிரிகள் இல்லாமல் இல்லை என்பதை, “எங்களை யார் படிக்ககூடாது என்று சொல்கிறார்களோ, அவர்கள் தான் எங்கள் எதிரிகள்” என்று விளக்கி, தனிமனிதர்கள் அல்ல, தத்துவம் தான் தங்கள் எதிரி என்பதை சுட்டிக்காட்டினார். 

பிறகு “விளாத்திகுளத்தில் பெரியார் பேசியிருக்கிறார். பக்கத்தில் கொளத்தூரில் பேசியிருக்கிறார். கீழ இராலில்,  மேல் வெள்ளைச்சாமி போன்றவர்கள் இருந்த இடத்தில் பேசியிருக்கிறார்” என்று மறக்காமல் நினைவு கூர்ந்தார். பின்னர் ஒரு முக்கியமான கருத்தை எடுத்து வைத்தார். அதாவது, “இது சுதந்திர நாடு என்று சொல்கிறார்கள். சுதந்திரம் என்றால் சமத்துவம் இருக்கவேண்டும். அதனால்தான் நமது முதல மைச்சர், தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாள் என்றும், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாள் என்றும் அறிவித்தார். காரணம் சமூக நீதியும், சமத் துவமும் பிரிக்கப்பட முடியாத இரண்டு தத்துவங்கள்! இரண்டு கண்கள்! இரண்டு கைகள்!” என்று ஒன்றல்ல, அடுத்தடுத்து வரிசையாக உவமைகளை அடுக்கி, மக்கள் மனதில் கருத்தை அழுத்தமாக பதிய வைத்தார்.

சேது சமுத்திரத் திட்டம் வேண்டும்!

தொடர்ந்து, இந்த நாட்டுக்கே உரித்தான ஜாதியின் கொடுமைகளை பட்டியலிட்டார். அதை கையில் வைத்திருந்த மனுதர்மம் புத்தகத்திலிருந்து அத்தியாயம் 1 இல் இருக்கும் ‘அந்த பிரம்மாவானவர்’ என்ற பகுதியையும், ’சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கலாகாது’ என்பதையும் வாசித்துக் காட்டினார். 

மனுதர்மத்தில் இருப்பதை பாரதக் கதையில் கடைப் பிடிக்கப்பட்டு இருப்பதை எடுத்துக்காட்ட, ஏகலைவனை வஞ்சித்த துரோணாச்சாரியார் பகுதியை எடுத்துரைத்து, சூத்திரன் தானாக கற்றுக் கொண்டாலும் ஏற்கப்படவில்லை என்பதை பதிய வைத்துவிட்டு, “இதையெல்லாம் புறம் கண்டு தான் இன்றைக்கு நாம் கல்வியில் சிறந்திருக்கிறோம். அதைத்தான் நாம் திராவிட மாடல் என்கிறோம்” என்றதும் கைதட்டல் எழுந்து அடங்கியது. 

அதைத் தொடர்ந்து இந்தப் பயணத்தின் இன்னொரு நோக்கமான மறுபடியும் சேது சமுத்திர திட்டம் வரவேண்டும் என்பது குறித்து பேசினார். அதில் மூன்று பார்ப்பனர் செய்த சூழ்ச்சியையும், ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையையும் அழுத்தமாகக் குறிப்பிட்டு, “இது கட்சிப் பிரச்சினை இல்லை! ஜாதிப் பிரச்சினை இல்லை! மதப் பிரச்சினை இல்லை; இதில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் பிள்ளைகளுக்கும், பி.ஜே.பி.கார் களின் பிள்ளைகளுக்கும் வேலை கிடைக்கும். அதற்கு திராவிட மாடல் அரசு உறுதுணையாக இருக்கிறது. மக்களும் உறுதுணையாக இருக்கவேண்டும். வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு!” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

கலந்து கொண்ட தோழர்கள்!

இந்தப் பரப்புரை கூட்டத்தில் விளாத்திகுளம் பேரூராட்சி மன்றத் தலைவர் சூர்யா எஸ்.அய்யன்ராஜ், புதூர் கழகப் பொறுப்பாளர் பாலமுருகன், ம.தி.மு.க.மேற்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சி, காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் ஞானராஜ், சி.பி.எம். வட்ட செயலாளர் ஜோதி, சி.பி.அய். வட்டத் தலை வர் முருகன், வி.சி.க. பொறுப்பாளர் பரமசிவம், ஆதித்தமிழர் கட்சி பொறுப்பாளர் சேகர், தமிழ்ப்புலிகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் வீரப்பெருமாள், விளாத்திகுளம் ஒன்றிய கழக செயலாளர் பாலமுருகன், தி.மு.க. வார்டு கவுன்சிலர் கென்னடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் ஆழ்வார் நன்றி கூறினார். 

கழகத் தலைவர் மேற்கொண்டுள்ள சூறாவளி பரப்புரை பயணத்தில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன்,பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டி, சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment