வரலாற்றுச் சுவடுகளிலிருந்து... சில பகுதிகள் வரலாறும் தலைகுனியும் அவமானகரமான வரி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 25, 2023

வரலாற்றுச் சுவடுகளிலிருந்து... சில பகுதிகள் வரலாறும் தலைகுனியும் அவமானகரமான வரி!

"இது போன்ற கட்டுப்பாடுகள், அவமானங்களிலிருந்து தப்பிக்க, 

மதம் மாறுவதே தீர்வு என்று நாடார் 

இன மக்களில் பெருங்கூட்டம் கிறிஸ்தவத்தைத் தழுவியது."

நாம் இன்று எத்தனையோ விஷயங்களுக்காக அரசுக்கு வரி கட்டுகிறோம் அல்லவா... அதுபோலவே 18ஆம் நூற்றாண்டிலும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வரிகள் இருந்தன. ஆனால், அவை இன்றுபோல் அனைவருக்கும் சமமானதாக அல்லாமல் பலவிதமான பாகுபாடுகளுடனும், கொடூர ஒடுக்குமுறையுடனும் இருந்தன. மனிதகுல வரலாற்றில் மிக அவமானகரமான காலத்தின் சாட்சியமாக அந்த வரிகள் இருந்தன!

இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்துவந்த சாணார்/நாடார், பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட பதினெட்டு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் விதவிதமான வரிகளை எதிர்கொண்டார்கள். வீட்டில் பசுமாடு வளர்த்தால் வரி, மண்வெட்டி-அரிவாள் வைத்திருந்தால் வரி, வளர்க்கும் பனை மரங்களுக்கு வரி, தலைப்பாகை கட்டினால் வரி, முகத்தில் மீசை வளர்த்தால் வரி, திருமணங்களில் தாலி கட்டினால் வரி, வீட்டுக்குக் கதவு இருந்தால் வரி, ஜன்னல் இருந்தால் வரி... என அன்றைய காலத்தில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள்மீது மட்டும் 110 விதமான அநியாயமான வரிகள் விதிக்கப்பட்டன. இவர்களின் வீட்டுக் கதவுகள் குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. இவர்கள் சொந்தமாக நிலம் வைத்திருக்க உரிமையில்லை. வீட்டில் செம்புப் பாத்திரங்கள் வைத்திருக்கக் கூடாது. குடும்பத்தில் யாரையும் செல்லப்பெயர்களை வைத்து அழைக்கக் கூடாது. இவர்கள் வடிக்கும் சோற்றைக் கஞ்சி என்றே அழைக்க வேண்டும். இவர்கள் வசிப்பிடத்தைக் குடிசை என்றே அழைக்க வேண்டும். பெரிய கோயில்களில் உள்ள தெய்வங்களை வழிபடக் கூடாது என்பது போன்ற எண்ணற்ற கட்டுப்பாடுகளும் இருந்தன.

1754ஆம் ஆண்டில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ராணுவச் செலவுகளுக்காகத் தாழ்த்தப்பட்ட மக்கள்மீது மட்டும் தலைஇறை வரி விதிக்கப்பட்டது. இந்த வரியின் சுமையைத் தாங்க முடியாமல், இனி இங்கே வாழ முடியாது எனக் குடும்பம் குடும்பமாக மக்கள் திருநெல்வேலி நோக்கிப் படையெடுத்தார்கள். 1807ஆம் ஆண்டு மட்டும் தலைஇறை வரியாக 88,000 ரூபாய் வசூலிக்கப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன என்றால் அதன் சுமையை நீங்கள் யூகித்துக்கொள்ளுங்கள். மனிதாபிமானமற்றவர்கள் ஆட்சி செய்யும்போது, வரி என்பது ஒருவித தண்டனையாக மாறுகிறது, குடிமக்களை வறுமை நோக்கித் தள்ளுகிறது என்பதை வரலாறு நெடுகிலும் பார்க்கிறோம்.

இதையெல்லாம்விட முக்கியமானது அங்கு அமலில் இருந்த ஒரு வரி. உலகம் முழுவதிலும் எந்தவோர் அரசும் யோசித்துக்கூடப் பார்க்காத ஒரு வரி. அந்த வரியை எப்படித் திட்டமிட்டிருப்பார்கள், எப்படி நிர்ணயம் செய்திருப்பார்கள் என்று நம்மால் யூகிக்கவே முடியவில்லை. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த பெண்களின் முலைகளுக்கு வரி போடப்பட்டது. தமிழில் `முலை வரி’ என்றும், மலையாளத்தில் அதை `முலைக்காரம்’ என்றும் அழைத்தார்கள்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த ஜாதி நம்பூதிரிகள் உள்ளிட்ட ஆதிக்க ஜாதிப் பெண்களும் ஒரு கட்டம் வரை மேலாடை அணியவில்லை. அய்ரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு, அய்ரோப்பியப் பெண்கள் தங்களின் மார்புகளை மறைத்து மேலாடை அணிந்திருப்பதைப் பார்த்து, இவர்களும் மெல்ல மெல்ல மேல் முண்டு அணிந்து நாகரிகமாகத் தங்களது மார்பகங்களை மறைத்துக் கொண்டார்கள். அப்படித் தங்களின் மார்பகங்களை மறைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட அவர்கள், அந்தப் பழக்கத்தை ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் பின்பற்றி விடாதபடி தடைகளை விதித்தார்கள்.

அந்தத் தடைகள், கட்டுப்பாடுகள், பாகுபாடுகளுக்கிடையே பெண்கள் எவ்வளவு அவமானகரமான உணர்வுகளுடன் வாழ்ந்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே பெரும் வலியாக இருக்கிறது. பிரிட்டிஷ் அரசு, ஆரம்பத்தில் இந்த விஷயத்தில் தலையிட்டுப் பார்த்தது. ஆனால் “இது எங்கள் நிலம், எங்கள் நிலத்தின் கலாசாரத்தில், சடங்குகளில், சம்பிரதாயங்களில் தலையிடுவதற்கு உங்களுக்கு உரிமையில்லை” என்று சமஸ்தானத்தின் ஆதிக்க ஜாதியினர் வைத்த வாதங்களில் குழம்பிப்போய், பின்வாங்கியது பிரிட்டிஷ் அரசு.

இதுபோன்ற கட்டுப்பாடுகள், அவமானங்களிலிருந்து தப்பிக்க, மதம் மாறுவதே தீர்வு என்று நாடார் இன மக்களில் பெருங்கூட்டம் கிறிஸ்தவத்தைத் தழுவியது. ரொட்டிக்காக, அரிசிக்காக அல்ல, தங்களின் சுயமரியாதைக்காகவே மதமாற்றம் நிகழ்ந்தது. ஆனால் மதம் மாறிய பின்னரும் அவர்களுக்கு மேலாடை அணிய அனுமதியில்லை என்றார்கள். சீர்திருத்தக் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட நாடார்கள், முதன்முதலில் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக பலமாகக் குரல் எழுப்பினார்கள்; போராடினார்கள். தேவாலயங்களுக்கு வரும் பெண்களை மேலாடை அணிந்துவரும்படி கோரினார்கள். அதேசமயம், மேலாடை அணிந்து வந்த பெண்களைத் தெருவில்வைத்து அவர்களது மேலாடையைக் கிழித்து அவமானப்படுத்தினார்கள் ஆதிக்க ஜாதியினர். இந்த வன்முறைக்குப் பயந்து, பல பெண்கள் ஒரு மாற்று உடையுடன் தேவாலயம் நோக்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள், பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம், ‘கிறிஸ்தவம் தழுவியவர்கள் மட்டும் இனி மேலாடை அணியலாம்‘ என்று 

அறிவித்தது.

1822 முதல் 1859 வரை மேலாடை அணியும் உரிமைக்கான போராட்டம் இடைவிடாமல் நடைபெற்றது. நெய்யாற்றின்கரை, பாறசாலை, நெய்யூர், ஆத்தூர், திற்பரப்பு கண்ணனூர் அருமனை, உடையார்விளை புலிப்புனம் என்று போராட்டம் சூடுபிடித்தது. போராடிய பெண்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள்; அவமானப்படுத்தப்பட்டார்கள். மேலாடை அணிந்த பெண்களை ஏரில் பூட்டி உழவு செய்தார்கள். அய்யா வைகுந்தர் போன்றோர் போராடும் பெண்களுக்குத் துணை நின்றார்கள்; ஊக்கமளித்தார்கள். இந்தப் போராட்டம் வெகு மக்கள் போராட்டமாக மாறியது. தொடர் போராட்டத்துக்குப் பிறகு 1859, ஜூலை 26ஆம் தேதி, ‘அனைத்து சமயப் பெண்களும் மேலாடை அணியலாம்‘ என்கிற அதிகாரப்பூர்வ அறிக்கை வந்தது ‘சாணார் பெண்கள், கிறிஸ்தவப் பெண்கள் அணியும் குப்பாயம் அல்லது மீனவப் பெண்களைப் போன்று கட்டிச்சீலை உடுத்திக்கொள்ளலாம். ஆனால், ஆதிக்க ஜாதிப் பெண்கள் அணிவதுபோல் மேலாடை அணியாமல் வேறு விதங்களில் மார்பை மறைத்துக் கொள்ளலாம்’ என்றது. அப்போதும்கூட சமஸ்தானம் இந்தத் தீர்ப்புக்குப் புதிய விளக்கமளித்து, ‘இந்த உரிமை சாணார் சமூகப் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பிற தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்களுக்கு இந்த உரிமையில்லை’ என்று தனது பிரித்தாளும் சூழ்ச்சியையே செய்தது. உடையைவைத்து ஜாதியை அடையாளம் காணும் ஆணவ வெறியின் வெளிப்பாடாகவே இது கருதப்பட்டது.

‘ஆங்கில அரசுடனான தங்களது உறவு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, இந்தச் சமரசம்‘ என்றும் மகாராஜா தரப்பு தெரிவித்தது. பின், 1865இல்தான் அனைத்து ஜாதியைச் சேர்ந்த பெண்களும் மேலாடை அணிவதற்கான உரிமையைப் பெற்றனர். இத்தனை போராட்டங்களுக்குப் பின்புதான் ஒடுக்கப்பட்ட பெண்கள் தங்களின் மார்புகளை மறைத்துக்கொள்ள முடிந்தது.

பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு, மார்பகங்கள் வளரத் தொடங்கியதுமே அரசாங்கம் அவர்களுக்கு முலை வரியை நிர்ணயம் செய்யும். வரியை வசூலிப்பவர்கள் ஒவ்வொரு வீடாக வந்து பெண்ணின் மார்பகங்களை அளவெடுத்து அதன் அளவைப் பொறுத்து வரியை நிர்ணயிப்பார்கள்; வசூல் செய்வார்கள். நம்பூதிரி பிராமணர்களுக்கு முன்பாக இருக்கும்போது தங்கள் மார்பகங்களைப் பெண்கள் மறைக்க அனுமதியில்லை. ‘இது ஒடுக்கப்பட்ட ஜாதிகள், நம்பூதிரிகளுக்கு அளிக்கும் மரியாதை’ என்றே மக்கள் நம்ப வைக்கப்பட்டார்கள்.

“ஜாதி அமைப்பு புனிதமாகக் கட்டப்பட்டிருக்கிறது. இந்தப் புனிதத் தன்மையை முதலீடாகக் கொண்டு இயங்கும். மதத்தையும், சாஸ்திரங்கள் மீதான நம்பிக்கையையும் ஒழிக்க வேண்டும்” என்றார் பாபாசாகேப் அம்பேத்கர்.

சேர்த்தலை என்கிற கிராமத்தில் வசித்த நங்கேலிக்கு, இந்த முலை வரி விதிப்பின்மீது தீராத கோபம் ஏற்பட்டது. அதை அவளால் ஏற்கவே முடியவில்லை. 1803இல் அவளது வீட்டுக்கு வரி வசூல் செய்ய, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ‘பார்வதியார்’ என்கிற வரி வசூலிப்பவர்கள் வந்தார்கள். ‘இதோ உங்களுக்கு வரியைக் கொண்டுவருகிறேன் என்று வீட்டுக்குள் சென்ற நங்கேலி, சற்று நேரம் கழித்து வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தாள். தனது கைகள் இரண்டிலும் வாழையிலைகளை வைத்திருந்தாள். இலையில் தனது இரண்டு மார்புகளையும் அறுத்து வைத்திருந்தாள். ‘இதுதான் உங்களுக்கு நான் செலுத்தும் வரி’ என்று அதை நீட்ட, வரி வசூலிக்க வந்தவர்கள் தெறித்து ஓடினார்கள். ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்து உயிரிழந்தாள் நங்கேலி.

இன்று விதவிதமான ரவிக்கைகளை அணியும் பெண்கள், இந்தச் சுதந்திரத்தைத் தங்களின் முலைகளை அறுத்தெறிந்துதான் நங்கேலிகள் தங்களுக்குப் பெற்றுத் தந்திருக்கிறார்கள் என்கிற சமூக வரலாற்றை அறிவார்களா... நம் பாடப்புத்தகங்கள் நமக்கு இந்தச் சமூக வரலாற்றை ஏன் கற்றுத் தரவில்லை?

(ஆதாரம்: அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய போராட்டங்களின் கதை என்ற நூலிலிருந்து, பக்கம் 109-114 வரை)

No comments:

Post a Comment