விண்வெளியில் எரிவாயு நிலையம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 25, 2023

விண்வெளியில் எரிவாயு நிலையம்

தெற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நியூமேன் ஸ்பேஸ் (Neuman space) என்னும் நிறுவனம் குறைவான உயரமுள்ள சுற்றுவட்டப் பாதைகளில் விண்கலத் திட்டங்கள், செயற்கைக் கோள்களை நகர்த்துதல், சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது. இப்போது இந்த நிறுவனம் வேறு மூன்று நிறுவனங்களுடன் இணைந்து விண்வெளிக் கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த ஆஸ்ட்ரோ ஸ்கேல் (Astroscale) என்னும் நிறுவனம் செயற்கைக் கோள்களின் உதவியுடன் வான் கழிவுகளை எவ்வாறு வெற்றிகரமாகக் கைப்பற்றுவது என்பதை மெய்ப்பித்துக் காட்டியுள்ளது.

அமெரிக்காவின் நானோ ராக்ஸ் (Nanorocks) என்னும் நிறுவனம் நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கழிவுகளை வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும்போதே வெட்டி எடுப்பதற்குரிய நூதன வழிகளைக் கண்டுபிடித்துள்ளது.

மற்றொரு அமெரிக்க நிறுவனமான சிஸ்லூனார் (Cislunar) கழிவுகளை கம்பிகளாக மாற்றும் வழியைக் கண்டுபிடித்துள்ளது. இவற்றை நியூமேன் ஸ்பேஸ் நிறுவனம் எரிபொருளாக மாற்றத் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் கழிவுகளில் உள்ள இரும்பை அயனியாக்கி இதன் மூலம் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி வட்டப்பாதையில் சுற்றி வரும் பொருள்களை நகர்த்த முடியும் என்று நம்புகிறது.

கழிவுகளில் இருந்து உலோகங்களை உருக்கும் முயற்சிக்காக நாசா நிதியுதவி செய்துள்ளது என்று நியூமேன் ஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஹெர்வ் அஸ்டியர் (Herve Astier) கூறியுள்ளார். சுற்றும் கழிவைப் பிடித்து அதை வெட்டி உருக்கினால் எரி ஆற்றலாக மாற்ற முடியும் என்று அவர் கூறுகிறார். பொருள்கள் ஒரு முறை வட்டப் பாதைகளுக்கு ஏவப்பட்டு விட்டால் அவை தானாகவே பாதையை விட்டு விலகிச் சென்றால் மட்டுமே, காற்று மண்டலத்திற்குள் நுழையும்போது எரிந்து சாம்பலாகலாம் அல்லது பூமியில் அரிதாக விழலாம்.

நாளுக்கு நாள் விண்வெளியில் குப்பைகளின் அளவு அதிகமாகிறது. இதைச் சமாளிக்க உதவும் வழிமுறைகளை உருவாக்குவதில் பன்னாட்டு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சிறிய திருகாணி முதல் பெரிய பொருள்கள் வரை விண்வெளியில் சுழலும் அனைத்துமே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. சேபர் அஸ்ட்ரநாட்டிக்ஸ் (Saber astronautics) என்னும் நிறுவனம் காலாவதியாகும் விண்கலனைப் பிடித்திழுத்து மீட்கும் திட்டத்திற்காக நாசாவின் நிதியுதவியைப் பெற்றுள்ளது.

சிட்னியைச் சேர்ந்த எலக்டோ ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் (Elecro Optic systems) கேன்பரா பல்கலைக்கழகத்துடன் இணைந்து இதுபோன்ற கழிவுகள் ஒன்றுடன் ஒன்று மோதாமல், காற்று மண்டலத்திற்குள் நுழைவதைத் தடுக்க உதவும் லேசர் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. விண்வெளியில் வலம் வரும் குப்பைகளை அடையாளம் கண்டுபிடிக்கும் முறையை மேம்படுத்த ஆஸ்திரேலிய இயந்திரக் கற்றல் ஆய்வுக் கழகம்  (Institute of machine learning) ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

விண்வெளிக் குப்பைகளைக் கைப்பற்றுதல் மற்றும் அழிப்பதைக் காட்டிலும் அவற்றை மறுசுழற்சி செய்வதே சிறந்தது என்று ஹெர்வ் அஸ்டியர் கூறுகிறார். வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு குப்பைகளைக் கைப்பற்றி அவற்றை மறுபடி பயன்படுத்தினால் அது நாளைய விண்வெளித் திட்டங்களுக்கு ஆகும் செலவைக் குறைக்க பெரிதும் உதவும். மாசுகளாலும், குப்பைகளாலும் ஏற்கெனவே பூமி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும்போது ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் விண்வெளிக் குப்பைகள் மனித குலத்திற்கு மேலும் அழிவையே ஏற்படுத்தும். இந்நிலையில் விண்வெளியில் இப்பொருள்களை மறுபயன்பாட்டிற்குக் கொண்டு வரும் காலம் விரைவில் வரும் என்று ஆராய்ச்சி வல்லுநர்கள் நம்புகின்றனர். அப்போது பூமியில் இன்று ஆங்காங்கே பெட்ரோல் நிலையங்கள் இருப்பது போல விண்வெளியில் எரிவாயு ஆற்றல் நிலையங்கள் உருவாகும்.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்


No comments:

Post a Comment