பல்லாவரத்தில் பட்டுத்தெறித்ததுபோல்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 11, 2023

பல்லாவரத்தில் பட்டுத்தெறித்ததுபோல்....

நேற்று (10.2.2023) பல்லாவரத்தில் 

தமிழர் தலைவர்  ஆசிரியர் உரையிலிருந்து...

« வெள்ளைக்காரன் வருவதற்குமுன் நம்மை ஆண்ட சட்டம் மனுநீதி

« படிக்காதே என்றது மனுதர்மம்

« படி படி என்றது திராவிடம்

« சரஸ்வதி என்ற நம் பாட்டிக்கு சரஸ்வதி என்று கையொப் பம் போடத் தெரியாது.

« இப்பொழுது பேத்தி டாக்டர் சரஸ்வதி.

« பெண்ணுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று 1928ஆம் ஆண்டிலேயே குரல் கொடுத்தார் தந்தை பெரியார். (தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாடு)

« ஒன்றிய அரசில் அண்ணல் அம்பேத்கர் சட்ட அமைச்ச ராக இருந்தபோது பெண்களுக்குச் சொத்துரிமை சட்டத்தை முன் மொழிந்தார்.

« சனாதனிகள் எதிர்த்தனர்.

« கொள்கை முக்கியமே தவிர பதவி முக்கியமல்ல என்று பதவியைத் தூக்கி எறிந்தார் அண்ணல் அம்பேத்கர்.

« பதவி என்பது துண்டு - கொள்கை என்பது வேட்டி என்றார் அறிஞர் அண்ணா.

« இப்பொழுதோ தலை கீழாக மாறி வருகிறது.

« துண்டுக்காக அல்ல தொண்டுக்காக அலைபவர்கள் நாங்கள்.

« சமூகநீதி, சமத்துவ நீதி இரண்டும் நம் விழிகள்.

« அதனால்தான் 'திராவிட மாடல்' ஆட்சியில் தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாகவும் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ  நாளாகவும் அறிவித்தார் சமூகநீதிக்கான சரித்திர நாயகராம் நமது முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

« அனைவருக்கும் அனைத் தும் என்பது சமூகநீதி. ஆனால் எல்லார்க்கும் சமமாகக் கொடுக்காதே என்பது மனுதர்மம்.

« மனுதர்மப்படி வருணசிரமத் தன்மைப்படி பெண்கள் உள்பட எல்லோரும் கீழ் ஜாதிதான்.

« திருமணம் செய்து கொள் ளக் கீழ் ஜாதிக்கு உரிமை கிடையாது.

« தற்காலிகமாக உயர் ஜாதி யாக்கிக் கல்யாணத்தை நடத்துவது தான் புரோகிதத் திருமணம்.

« இங்கே ஒரு போட்டி அரசு நடத்துகிறார் ஆளுநர்.

« நீட் மசோதா உள்பட அத்தனையையும் கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.

« ஆளுநரிடம் இருப்பது 20 மசோதா அல்ல - 15 மசோதா தான் என்கிறார் பிஜேபி அண்ணாமலை.

« அண்ணாமலை என்ன ஆளுநர் மாளிகையில் செய்தித் தொடர்பாளரா?

« சனாதனப் பிரச்சாரம் செய்வதுதான் ஓர் ஆளுநரின் வேலையா?

« தமிழ்நாட்டில் இந்த வித்தைகள் எல்லாம் எடுபடாது.

« நூறு ஆண்டுகள் மன்றாடினாலும் தமிழ்நாட்டில் பிஜேபி காலூன்ற முடியாது  என்று ஓங்கி அடித்தார் ராகுல்காந்தி.

« இந்தத் தொடர் பிரச்சாரத்தில் சமூக நீதியை முன்னிறுத்து கிறோம்.

« ஒன்றிய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இல்லாத நிலை?

« வாராது வந்த மாமணியாம் வி.பி. சிங் பிரதமராக இருந்த போது வேலை வாய்ப்பில் 27விழுக்காடு இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார்.

« அதுகூட இதுவரை முழுமையான அளவு செயல்படுத் தப்படவில்லை. 15 விழுக்காட்டைத் தாண்டவில்லை.

« வி.பி.சிங் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததால் அவ ருக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வந்த பிஜேபி தனது ஆதரவை விலக்கிக் கொண்டு ஆட்சியைக் கவிழ்த்தது.

« சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக் காதே என்பதுதான் அவாள் தர்மம்.

« பிஜேபி சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல - பெரும் பான்மை யினருக்குமே விரோதி (பெரும் பான்மை மக்களான பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லையா?)

« மண்டல் குழு பரிந்துரைகளை செயல்படுத்த வைக்க திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும் 16 போராட் டங்களையும் நடத்தியிருக்கிறது.

சென்னைப் பெரியார் திடலில் கொடுக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பி.பி. மண்டல் கூறினார் - எங்களைப் பார்த்து நாங்கள் கொடுக்கும் பரிந்துரைகள் செயல்படுவது பெரியார் மண்ணைப் பொறுத்தது - உங்களைப் பொறுத்தது என்றார்.

« இப்பொழுது நீதிமன்றம் உயர் ஜாதி ஆதிக்கத்தின் கைகளில்தான் இருக்கிறது. நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்துள்ளனர். 

இந்தியாவிலேயே 69 விழுக்காடு தமிழ்நாட்டில்தான் அரசியல் சட்டத் திருத்தத்தோடு (76ஆவது சட்ட திருத்தம்) ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப் போடு செயல்பட்டு வருகிறது. இதற்கான சட்ட வரைவை எழுதிக் கொடுத்ததே நாங்கள்தான்.

« அதிகார பீடத்தில் உள்ள மூன்று பார்ப்பனர்களைப் பயன்படுத்தி இந்தக் காரியத்தை திராவிடர் கழகம் சாதித்துள்ளது. 

1) முதலமைச்சர் ஜெயலலிதா, 

2) பிரதமர் பி.வி. நரசிம்மராவ், 

3) குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா.

« இடஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்றது உச்சநீதிமன்றம்.

« பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டு (EWS) வந்துள்ளார்களே - அப்படியானால் 50 அய்த் தாண்டி 60 சதவீதம் ஆகி விட்டதே என்று உச்ச நீதிமன்றத்திடம் கேட்டால் அதெல்லாம் இதற்குப் பொருந்தாது என்று கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள்.

« அப்படியே பார்த்தாலும் ஏழைகள் உயர்ந்த ஜாதியில் தான் இருக்கிறார்களா? தாழ்த்தப்பட்டவர்களிடம் ஏழைகள் இல்லையா?

பிற்படுத்தப்பட்டவர்களிடம் ஏழைகள் இல்லையா? சிறுபான்மை மக்களிடம் ஏழைகள் இல்லையா? ஏழைகளில்கூட ஜாதி பார்ப்பது புதிய மனுதர்மம் தான்.

« பசி ஏப்பக்காரனுக்கு முதல் பந்தியில்இடம் கொடு என்று கேட்கிறோம். அவர்களோ புளியேப்பக் காரனுக்குத்தான் முதல் பந்தி, மீதி மிச்சம்தான் பசி யேப்பக்காரர்களுக்கு என்று பிடிவாதம் பிடிக் கிறார்கள்.

« ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு தற்கொலைகள் நாளும் பெருகி வருகின்றன. அதனைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மசோதா கொண்டு வந்து சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பினால் அதற்குக் கூட ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

« ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து, அவர்களின் பரிந்துரையின் மீது தான் சட்டம் இயற்றப்பட்டது. அதற்கே ஒப்புதல் இல்லை என்றால் ஆளுநரின் அத்துமீறல் அளவு கடக்கவில்லையா?

« சூதாட்டம் என்றால் அவர்களுக்குப் பிரியம்தான். மகாபாரதத்தில் சூதாட்டம் மிக முக்கிய அத்தியாயம் ஆயிற்றே!

 இருப்பதிலேயே மகாயோக்கியர் தர்மன் நாட்டை எல்லாம் விற்று சூதாடினான். கடைசியில் விஞ்சியது திரவுபதைதான். அவரையும் வைத்து சூதாட வில்லையா?

சட்டப்படி திரவுபதையிடம் உரிமை என்பது தர்மனுக்கு அய்ந்தில் ஒரு பங்குதானே! அதிலும் ஆக்கிரமிப்பா?

« இந்தத் தொடர் சுற்றுப் பயணத்தில் 'திராவிட மாடல்' அரசின் சாதனைகள் பற்றியும் பிரச்சாரம் செய்து வருகிறோம்.

« பேருந்து கட்டணம் பெண்களுக்கு கிடையாது என்று ஆக்கினார்கள். அன்றாடக் கூலி வேலைக்குச் செல்லும் பெண்களின் ஊதியத்தில் பேருந்து பயணத்துக்கே பாதி போய்விடும். மீதியை வைத்துதான் கஞ்சிக் காய்ச்சிக் குடிக்க வேண்டும். இப்பொழுது பெண்களுக்குப் பேருந்து கட்டணம் இலவசம் என்கிறபோது அவர்கள் வயிற்றில் பால் வார்த்தது 'திராவிட மாடல்' அரசு.

« பெண்கள் உயர் கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக அந்த நிலையை எட்டும் பெண்களுக்கு மாதம்  ஒன்றுக்கு ரூபாய் ஆயிரம் - ஒரு வீட்டில் நான்கு பெண்கள் இருந்தாலும் திராவிட மாடல் ஆட்சியில் ரூபாய் 4000 கிடைக்கும்.

« இந்தியாவிலேயே பி.எச்.டி. ஆய்வுப் பட்டம் அதிக எண்ணிக்கையில் பெற்றவர்களில் தமிழ்நாடுதான் முதலிடம்.

« நீதிக் கட்சி ஆட்சி தொடங்கும்போது தமிழ் மாநிலத்தில் படித்தவர்கள் 7 சதவிகிதம் மட்டுமே! இன்று அது 67 சதவீதமாக வளர்ந்திருக்கிறது.

« ஆண்களைவிட தமிழ்நாட்டில் பெண்களே அதிகம் தேர்ச்சி பெற்று வருகிறார்கள்.

« சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான திட்டம் - 160 ஆண்டு கால வரலாறு இதற்குண்டு.

இந்தத் திட்டம் செயல்பட்டால் தமிழ்நாட்டில் செல்வம் கொழிக்கும், வேலை வாய்ப்பு அதிகரிக்கும். இலங்கையைச் சுற்றிச் செல்லும் கப்பல்கள், அப்படி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. காலம் மிச்சம், எரிவாயு மிச்சம், வெளிநாட்டுச் செலாவணி கிடைக் கும். நாட்டின் பாதுகாப்பு அம்சக் கண்ணோட்டத் திலும் மிகவும் முக்கியமானது.

« இந்தத் திட்டம் செயல்பட்டால், அத்துறை அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு அவர்கள் இருந்ததால், தி.மு.க.வுக்கு நல்ல பெயர் கிட்டுமே, அதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்ற பின்னணியில் இருந்தவர்கள் மூவர்.

ஜெயலலிதா, 

சோ. ராமசாமி, 

சுப்பிரமணியசாமி 

இன்னும் 23 மைல் பணி பாக்கி இருந்த நேரத்தில் திடீரென்று ஒரு 'ஞானோதயம்' ஏற்பட்டு - ராமன் பாலம் - அதை உடைக்கக் கூடாது என்று நீதிமன்றம் சென்றனர்.

« ரூ.2,000 கோடிக்கு மேல் செலவழிக்கப்பட்டு முடியும் தறுவாயில் இருந்த ஒரு மகா திட்டத்திற்கு மூடு விழா நடத்தி விட்டனர்.

« இதில்  ஜாதியில்லை - மதம் இல்லை - அரசியலும் இல்லை. மக்களின் நலவாழ்வும், வளமும்தான் முக்கியம்.

« இவற்றை எல்லாம் மக்கள் மத்தியில் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்களின் இந்தத் தொடர் பிரச்சாரப் பயணத்தின் நோக்கம் என்று பட்டுத் தெறித்தது போல் முத்து முத்தாக கருத்துச் சரம் தொடுத்தார் தமிழர் தலைவர் பல்லாவரம் பிரச்சாரக் கூட்டத்தில் (10.2.2023) 

தொகுப்பு: மின்சாரம்


No comments:

Post a Comment