யாருக்கும் அடமானம் ஆகாத - ஆக முடியாத இயக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 11, 2023

யாருக்கும் அடமானம் ஆகாத - ஆக முடியாத இயக்கம்

10.2.2023 'தினமலர்' ஏட்டில் பக்கம் 10-இல் கீழ்க்கண்ட பெட்டிச் செய்தி வெளியாகியுள்ளது.

கழுதைக்கும் நான்கு கால் - யானைக்கும் நான்கு கால் - அதனால் இரண்டும் ஒன்றே என்று கூறும் மட சாம்பிராணித்தனமான கருத்து தான் 'தினமலரின்' சரடு.

திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் தி.மு.க.வுக்கு மட்டுமல்ல - எந்தக் கட்சிக்கும் அடமானம் போகக் கூடிய தல்ல - போக வேண்டிய அவசியமும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டதும் இல்லை - ஏற்படப் போவதும் இல்லை.

காரணம் இது அரசியலில் குதித்து சட்டமன்றத்துக்கோ  நாடாளு மன்றத்துக்கோ, ஏன் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மன்றங்களில் ஒரு சாதாரண உறுப்பினராகவோ போகாத சமுதாயப் புரட்சி இயக்கம்.

எந்த ஆட்சியாக இருந்தாலும், கட்சியாக இருந்தாலும் கொள்கைக் கண்ணோட்டத்தோடு எதையும் அணுகி, ஆழ்ந்து பார்த்து, ஆதரிக்கவோ, எதிர்க்கவோ செய்யும் இலட்சியத்தை மூச்சுக் காற்றாகக் கொண்டு முந்துறும் இயக்கமாகும். 

அதே நேரத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திராவிடர் கழகத்தின் கொள்கைகளை, அதன் தலைவரின் அறிக்கைகளை உரைகளைப் புறந்தள்ள முடியாது. இன்னும் சொல்லப் போனால் எதைச் செய்ய வேண்டும், திட்டமிட வேண்டும் என்று திராவிடர் கழகம் வலியுறுத்துகிறதோ, அதை சட்டமாக, திட்டமாக ஆளும் அரசுகள் செயல்படுத்தி வந்திருக்கின்றன என்பதுதான் உண்மையாகும்.

பல கட்சிகள் ஆட்சியில் இருந்த நேரங்களில் கூட ஆதரிக்க வேண்டியதை ஆதரித்தும் எதிர்க்க வேண்டியவற்றை எதிர்த்தும் வந்ததுதான் திராவிடர் கழகம்.

ஆச்சாரியாரை அரசியல் பொது வாழ்விலிருந்து அகற்றி அந்த இடத்திற்குக் காமராசரைக் கொண்டு வரக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியார்.

கல்வி வள்ளல் பச்சைத் தமிழர், கர்மவீரர் என்று காமராசரைப் பாராட்டிப் பெருமை சேர்த்தது பெரியார் தான். திராவிடர் கழகம்தான். காமராசர் ஆட்சிக் காலத்தில் அதிகப் போராட்டங்களை நடத்தியது. ஜாதியை ஒழிக்க - ஜாதியை பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பகுதியைப் பகிரங்கமாக 10 ஆயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் எரித்து மூன்றாண்டுகள் வரை சிறை சென்றனர் என்பது ஞாபகத்தில் இருக்கட்டும்.

விதைத்தவர் பெரியார் - நாம் அதை அறுவடை செய்கிறோம் என்று சொன்னவர் பச்சைத் தமிழர் காமராசர்.

இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை என்று சட்டப் பேரவையில் பிரகடனப்படுத்தியவர் முதல் அமைச்சர் அண்ணா.

"பெரியார் மொழியில் சொல்லுகிறேன் - இது சூத்திரர்களுக்காக சூத்திரர்களால் ஆளப்படும் அரசு" என்று சட்டப் பேரவையில் முழக்கமிட்டவர் முதல் அமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

"நேற்றும் சரி, இன்றும் சரி, நாளையும் சரி, எங்களை வழி நடத்துவது பெரியார் திடல்" என்று பகிரங்கப்படுத்துபவர் திராவிடர் மாடல் ஆட்சி நடத்தும் சமூகநீதிக்கான  சரித்திர நாயகர் முதலமைச்சர்  மாண்புமிகு மானமிகு முத்துவேல் கருணாநிதி  ஸ்டாலின் என்பதும் நினைவிருக்கட்டும். 

 சட்ட ப் பேரவைக்கே செல்லாத ஒரு கட்சிக்கு இவ்வளவு செல்வாக்கா - மக்களிடத்தில் மரியாதையா? என்ற பொறாமை யில் பூணூல் வெறியில் 'தினமலர்' எழுதுமேயானால், அது தமிழ் நாட்டில் எதிர் விளைவைத் தான் ஏற்படுத்தும்.

மறைந்த பொதுவுடைமைவாதி தோழர் தா. பாண்டியன் அடிக்கடி சொல்லுவார் - 'சட்டமன்ற உறுப்பினர் இல்லை, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக்கூட வைத்திராத தந்தைபெரியார்தான் அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்படுவதற்கு காரணமாக இருந்தார் என்று சொன்னது உண்டே!

"தினமலராகட்டும், 'தினமலர்' போல் எண்ணங் கொண்ட வர்களுக்கும் அறிவார்ந்த பதில் இதுதான். திராவிடர் கழகம் யாருக்கும் அடமானமாகாத - அடமானமாக முடியாத சமூகப் புரட்சி இயக்கம் - சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் என்பது வரலாற்றுக் கல்வெட்டாகும்! வீண் உளறல் வேண்டாம்!!

No comments:

Post a Comment