ஒன்றிய அரசுக்குத் தமிழர் தலைவர் எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 18, 2023

ஒன்றிய அரசுக்குத் தமிழர் தலைவர் எச்சரிக்கை!

 100 நாள் வேலைத் திட்டத்திற்கும் ஆபத்து!

ஆண்டுதோறும் நிதியைக் குறைக்கும் ஒன்றிய அரசே!

ஏழைகள் வயிற்றில் அடிக்காதே! அடிக்காதே!!

மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதியைக் குறைத்து வருகிறது ஒன்றிய பி.ஜே.பி. அரசு. இது கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் கொடுமை என்று குறிப்பிட்டு, கொடுங்கோல் ஆட்சி காரணமாக துன்புற்றுத் துடிக்கும் ஏழை மக்களின் கண்ணீர் என்பது கொடுங்கோல் ஆட்சியாளனின் செல்வத்தை அழிக்கும் படை என்று திருவள்ளுவர் கூறியதை எடுத்துக் காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அறிக்கை வருமாறு:

2023-2024 நிதியாண்டின் ஒன்றிய அரசால், மகாத்மா காந்தி  100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ. 60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, ரூ.73,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது 21.6% குறைவாக ஒதுக்கப் பட்டுள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கை

100 நாள் வேலைத் திட்டம் என்பது, கிராமப்புறங்களில் உள்ள குடும்பம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 100 நாள்கள் கூலி வேலைக் கான உத்தரவாதத்தை வழங்குகிறது. மேலும், இந்தத் திட்டம் என்பது தேவைக்கேற்ற திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ்,  ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இந்தத் திட்டம் அளிக்கிறது. 100 நாள்கள் வேலை தர அரசு (பஞ்சாயத்து அமைப்புகள்) தவறினால், பாதிக்கப்பட்டவருக்கு முதல் 30 நாள்களுக்கு ஊதியத்தில் கால் பங்கும், மேலும் தவறினால் பாதி ஊதியத்தை அபராதமாக அரசு தர வேண்டும்.

100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ், 2022-2023 நிதியாண்டில் வேலை கேட்போரின் எண்ணிக்கை கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு மீண்டும் செல்லத் தொடங்கியுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

நிதியைக் குறைக்கும் கொடூரம்!

100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியின வகுப்பினர், அனைத்துப் பிரிவுகளையும் சார்ந்த    பெண்களே அதிகளவு பயனடைந்து வருகின்றனர். எடுத்துக் காட்டாக, தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளில், கிட்டத்தட்ட 85-90% பேர் பெண்களாக உள்ளனர். அதே போன்று, தேசிய அளவில், உருவாக்கப்பட்ட வேலை நாள்களில், சுமார் 57.19% வேலைகள் பெண்களுக்குத் தரப்பட்டுள்ளன. எனவே, இந்த நிதியாண்டில்  100 நாள் வேலைத் திட்டத்தை  முறையாக செயல்படுத்த, ஊதியம் மற்றும் பொருள்கள் வழங்குவதற்கான நிதியை அதிகப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில்,  100 நாள் வேலை திட்டத்துக்கு 21.6% குறைவாக நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது. 

கழுதை தேய்ந்து கட்டெறும்பா?

2021 - 2022 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அந்தத் திட்டத்திற்கு 98,467.85 கோடி ஒதுக்கப்பட்டது, 2022-2023 ஆம் ஆண்டு   ரூ.73 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டது. சமீபத்திய நிதிநிலை அறிக்கையில், அதற்கான நிதியை ரூ.60 ஆயிரம் கோடி யாகக் குறைத்திருக்கிறார்கள். இதில் இன்னும் கொடுமை என்ன வென்றால், மாநில அரசும் குறிப்பிட்ட அளவு நிதி அளிக்கவேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியிருப்பதுதான். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை!

காங்கிரஸ் தலைவர் கருத்து

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், 

‘ஒன்றிய பட்ஜெட்டில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு நிதி 33 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ‘‘இந்தத் திட்டம் வேலைவாய்ப்பு வழங்குவதற்கானது அல்ல'' என்று ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.  

இந்தத் திட்டத்தின் கீழ், 100 சதவிகிதம் ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்படும் பணிக்கு 40 சதவிகித நிதியை மாநிலங்கள் வழங்க வேண்டுமாம். இந்தத் திட்டத்தின் மீது ஒன்றிய அரசு கோடரியை பயன்படுத்துகிறது’ என்று கடுமையாக விமர்சிர்த் துள்ளார் காங்கிரஸ் தலைவர் கார்கே.

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், ஒருதேவை- உந்துதல் திட்டம் மற்றும் குறிப்பாக ஏழை மாநிலங்களில் முக்கியமானது மற்றும் தனிப்பட்ட மாநிலங்கள் மீது பொறுப்பை சுமத்துவதற்கு பதிலாக அதன் வலுவான நிதியை உறுதி செய்வது  ஒன்றிய அரசின் கடமையாகும். ஏழைகளின் வேலை செய்யும் உரிமையை வழங்குவதில் அதன் திறனை உணர்ந்து, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் மீதான அணுகுமுறையை அரசாங்கம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறது ஹிந்து தலையங்க செய்தி!

100 நாள் வேலை திட்டம் என்று அது அழைக்கப்பட்டாலும் மிகக் குறைவாக நிதி ஒதுக்கப்படுவதால் இதில் பதிவு செய்துகொண்டு வேலை செய்யும் குடும்பம் ஒன்றுக்கு சராசரியாக ஆண்டுக்கு 20 நாள்கள் தான் வேலை கிடைக்கிறது. மேலும் நிதி குறைக்கப்பட்டு இருப்பதால் 10 நாள்களுக்குக் கூட வேலை கொடுக்க முடியாது.

கிராமப்புற ஏழை மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மோடி அரசு  அழித்துக்  கொண்டிருக்கிறது இந்த அரசு. கிராமப்புற ஏழைகளின் வயிற்றில் அடிப்பதாகும்.

பலதரப்பிலும் கண்டனக் குரல்!

இது குறித்து கேரளாவின் நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் கூறுகையில், "நாடு மிக மோசமான வேலைவாய்ப்புத் திண்டாட் டத்தை சந்திக்கும் இவ்வேளையில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த ஆண்டைப்போலவே வஞ்சித்துள்ளது. இந்தப் பற்றாக்குறை நிதியை வைத்துக் கொண்டு ஏற்கெனவே தொடங்கிய பணிகளைக் கூட முடிக்க இயலாது" என்று கூறினார்.

திருவள்ளுவரின் எச்சரிக்கை!

100 நாள் வேலைத்திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்காததால் ஏழைகள் வஞ்சிக்கப்படுவதாக தற்போது பரவலாக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல் எழுந்து வருகிறது.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள் 555)

கொடுங்கோல் ஆட்சியால் துன்புற்று வடிக்கும் மக்களின் கண்ணீர், ஆட்சியாளனின் செல்வத்தை அழிக்கும் படையாகும் என்கிறார் திருவள்ளுவர் - எச்சரிக்கை!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

18.2.2023

No comments:

Post a Comment