புற்றுநோயை எதிர்த்து வாழும் ‘நேக்கட் மோல்’ எலி: மனிதர்களின் நீண்ட ஆயுளுக்கான ஆய்வில் பலன் தருமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

புற்றுநோயை எதிர்த்து வாழும் ‘நேக்கட் மோல்’ எலி: மனிதர்களின் நீண்ட ஆயுளுக்கான ஆய்வில் பலன் தருமா?

நேக்கட் மோல் எலியின் பண்புகள்

வாயில் இருந்து நீளும் நீண்ட பற்கள், முடியற்ற தோல்கள் என நேக்கட் மோல் எலி பார்ப்பதற்கு உங்கள் செல்லப்பிராணிகளை போல இருப்பதில்லை. அழகில்லாத குறையை இதன் அசாத்திய குணநலன்கள் நிவர்த்தி செய்கின்றன. அளவில் 13 அங்குலம் மட்டுமே இருக்கும் இந்த சிறிய எலிகள், சராசரியாக 30 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. இந்த எலிகள் தனது பற்களை கொண்டு வாழ்வதற்கு தேவையான பொந்துகளை மண்ணுக்கு அடியில் தோண்டுகின்றன. இப்படி செய்வதன் மூலம், மண்ணில் பல்லுயிர் பெருக்கம் மேம்பட்டு சுற்றுச்சூழலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. அகழெலி என்று அழைக்கப்பட்டும் இந்த நேக்கட் மோல் எலிக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட நாட்பட்ட நோய்கள் ஏதும் வருவதில்லை. அதற்கு உறுதுணையாக இதன் நோய் எதிர்ப்புச் சக்தி செயல்படுகிறது. முதுமை மற்றும் வலியிலிருந்து விடுபட்டுள்ள இந்த விசித்திரமான தோற்றமுள்ள உயிரினங்கள் நீண்ட காலமாக விஞ்ஞானிகளை கவர்ந்துள்ளன.

மனித குலத்திற்கு அளிக்கும் கொடை

நேக்கட் மோல் எலியின் பண்புகளில் இருந்து, மனிதனுக்கு அதிக ஆயுள் மற்றும் புற்றுநோயை எதிர்க்கும் சக்தியை அதிகரிப்பது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. வரலாற்று ரீதியாக எலிகள் மற்றும் சுண்டெலிகள், மனிதர்களின் உடற்கூறு பண்புகளை புரிந்து கொண்டு வரும் நிலையில், நேக்கட் மோல் எலிகளினால் மனித குலத்திற்கு தேவையான மருத்துவ ஆராய்ச்சிகளின் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் நடக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

நேக்கட் மோல் எலிகளால் குறைந்த ஆக்சிஜன் அளவு இருக்கும் சூழலில் நீண்ட காலத்திற்கு வாழ முடியும். ஆக்சிஜனை சுவாசித்து உயிர் வாழும் வேறு எந்த உயிரினங்களாலும், இந்த எலிகள் வாழும் சூழலில் வாழ முடிவதில்லை. இது இந்த எலிகளின் அசாதாரண பண்புகளின் ஒரு அறிகுறியாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். குறைவான ஆக்சிஜன் இருக்கும் சூழலில் சாதாரண எலிகளால், இரண்டு ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியுமெனில், அதே அளவுள்ள நேக்கட் மோல் எலியால் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும். மனிதர்களின் உருவத்துடன் ஒப்பிடும் போது 450 ஆண்டுகளுக்கு மனிதன் வாழ்வதற்கு இது சமமாகும். பெரும்பாலான ஏரோபிக்(ஆக்சிஜன் சுவாசித்து வாழும் உயிரினங்கள்) உயிரினங்கள் இந்த சூழலில் உயிர் வாழ போராடும்.

இந்த இன எலிகள், `ஹெட்டரோசெபாலஸ் கிளாபர்` என்னும் அறிவியல் பெயரால் அழைக்கப்படுகிறது. இதன் அர்த்தம் “வழுக்கை தலை பொருள்” என்பது ஆகும். இந்த எலிகள் வடகிழக்கு ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல பகுதிகளில் வாழ்பவை. பல கால்பந்து ஆடுகளங்களின் நீளத்திற்கு இந்த எலிகளின் பொந்துகள் பூமிக்கடியில் சுரங்கம் போல பல அறைகளுடன் இருக்கும். கென்யா, எத்தியோப்பியா மற்றும் சோமாலியா காடுகளில் காணப்படும், நேக்கட் மோல் எலிகள், சுமார் 70 முதல் 80 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக வாழ்கின்றன, சில இடங்களில் இந்த எண்ணிக்கை 300 ஆகக் கூட இருக்கும். இந்த கூட்டங்களுக்கு ஒரு ராணி தலைவியாக செயல்படுவார். இந்த எலிக்கூட்டங்களில் பல்வேறு படிநிலைகள் இருக்கும், ஒவ்வொரு எலிகளுக்கும் தனித்தனி வேலைகள் பிரித்து வழங்கப்பட்டு இருக்கும். நிலத்துக்கு அடியில் இருக்கும் தாவரங்களில் இருந்து அதன் வேர், கிழங்கு ஆகிவற்றை கொண்டு வந்து உண்ணும்.

நேக்கட் மோல் எலிகள் உயிரியல் நம்பமுடியாத தனித்துவமானது. இவை நிலத்தடியில் நிலவும் தீவிர சூழலிலும் செழித்து வளரக்கூடியவை என்பதால் “எக்ஸ்ட்ரீமோபைல்ஸ்”(extremophiles) என்று கருதப்படுகின்றன என்று இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உணர்வு நரம்பு மண்டலத்தை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர் ஈவன் செயின்ட் ஜான் ஸ்மித் கூறுகிறார்.

இவற்றின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, நேக்கட் மோல் எலியின் வயதை கணிப்பது மிகவும் கடினம். ஏனெனில் வயதானால் இவற்றின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து குறைந்த அறிகுறிகளை மட்டுமே வெளிப்படுத்துகிறது. ஆனால் மனிதர்களின் உடலில் சுருக்கம், நரை முடி மற்றும் நோய்களுக்கு ஆளாக கூடுவது என வயது முதிர்வை காட்டும் பல்வேறு அறிகுறிகள் ஏற்படுகின்றன.

வயதாகும் பாலூட்டிகளிடம் ஏற்படும் உடல் மாற்றங்கள் ஏதும் இந்த எலிகளுக்கு ஏற்படுவதில்லை. இதன் இதய செயல்பாடு, உடல் அமைப்பு, வளர்சிதை மாற்றம், எலும்பின் உறுதி என எதிலும் குறிப்பிடும் அளவில் மாற்றம் ஏற்படுவதில்லை. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர் ஸ்மித்தின் குழு, சுமார் 160 நேக்கட் மோல் எலிகளை அய்ந்து குழுக்களாக வைத்துள்ளனர். இவையனைத்தும் 60% ஈரப்பதத்தில் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்கப்படுகின்றன.

“நான் கேம்பிரிட்ஜில் 10 ஆண்டுகளாக இந்த விலங்குகளை வைத்திருக்கிறேன். இது வரை எந்தவொரு எலியும் இயற்கையான காரணங்களால் இறப்பதை நான் ஒருபோதும் கண்டதில்லை” என்று ஸ்மித் கூறுகிறார். அடைபட்டிருக்கும் நிலையில், இரண்டு எலிகளுக்கு இடையில் சண்டை ஏற்படுவதாலேயே மரணம் நிகழ்ந்துள்ளது என்று அவர் கூறுகிறார்.

காடுகளில் வாழும் போது பாம்பு போன்ற உயிரினங்கள் வேட்டையாடுவதால் இந்த எலிகள் மரணிக்கின்றன. நிலத்துக்கு அடியில் வாழ்வதால் தான், இந்த எலிகளின் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு அதிகரித்து இருக்கிறது. குளிர், மழை மற்றும் காலநிலை மாற்றங்களில் இருந்து இப்படித்தான் இந்த உயிரினம் தப்பிப் பிழைக்கிறது. ஆனால் மனிதர்களுக்கு மரணம் ஏற்படுவதற்கான காரணம் இதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. மனிதர்களில் இரண்டு பேரில் ஒருவருக்கு புற்றுநோயால் மரணம் ஏற்படுகிறது, என்கிறார் ஸ்மித். எலிகளுக்கும், சுண்டெலிகளுக்கும் இதே போன்ற புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு காணப்படும் நிலையில், நேக்கட் மோல் எலிகளுக்கு புற்றுநோயே ஏற்படுவதில்லை, இது மிகவும் அரிதானது, என ஸ்மித் கூறுகிறார்.

புற்றுநோயை வென்ற எலிகள்

நேக்கட் மோல் எலிகள் புற்றுநோயைத் தவிர்ப்பதற்கான காரணம் இன்னும் ஒரு புதிராக உள்ளது. இதை விளக்க பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும், வலுவான விளக்கத்தை விஞ்ஞானிகளால் முன் வைக்க முடியவில்லை. ஒரு கோட்பாட்டின்படி, இந்த எலிகள் `செல்லுலார் செனெசென்ஸ்`(cellular senescence) எனப்படும் புற்றுநோயை எதிர்க்கும் ஒரு பயனுள்ள வடிவத்தைக் கொண்டுள்ளன. இது பாதிக்கப்பட்ட செல்கள், கட்டுப்பாடற்ற முறையில் மேலும் பிரிந்து புற்றுநோயாக உருவாகாமல் தடுக்கிறது. மற்றொரு கோட்பாடு, ஒரு சிக்கலான “சூப்பர் சர்க்கரையை” சுரக்கின்றன, இது செல்கள் ஒன்றிணைந்து புற்றுநோய் கட்டிகளாக வளர்வதை தடுக்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த சோதனையின் போது ஆராய்ச்சியாளர்கள், 11 தனிப்பட்ட நேக்கட் மோல் எலிகளின் குடல், சிறுநீரகம், கணையம், நுரையீரல் மற்றும் தோல் திசுக்களிலிருந்து வளர்ந்த 79 வெவ்வேறு செல் கோடுகளை பகுப்பாய்வு செய்தனர். அவற்றில் புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணு மாற்றப்பட்ட வைரஸ் செல்களை செலுத்தினர். ஆச்சரியமூட்டும் விதமாக, பாதிக்கப்பட்ட எலிகளின் செல்கள் விரைவாக பெருகத் தொடங்கின. இது நேக்கட் மோல் எலியின் உடல் சூழல் தான் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது என்பதை உறுதிப்படுத்தியது.

“புற்றுநோய் என்பது செல்கள் பிறழ்வின் ஒரு விளைவாகும், இது செல்கள் கட்டுப்பாடற்ற முறையில் பெருக காரணமாகிறது”, என்று ஸ்மித் கூறுகிறார். “பிற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது, நேக்கட் மோல் எலிகள் மிகவும் மெதுவான பிறழ்வு விகிதங்களைக் கொண்டுள்ளன.” குறுகிய ஆயுட்காலம் கொண்ட விலங்குகள் பொதுவாக வேகமான பிறழ்வு விகிதங்களைக் கொண்டிருக்கும்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக, மோல் எலிகளின் பிறழ்வு விகிதம் ஒட்டகச்சிவிங்கிகள் போன்ற நீண்ட காலம் வாழும் பாலூட்டிகளின் அளவை ஒத்து மெதுவாக உள்ளன. மெதுவான பிறழ்வு விகிதம் என்பது, விலங்குகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் புற்றுநோயைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதாகும்.

வலிகளை வென்ற உயிரினம்

நேக்கட் மோல் எலியின் விசித்திரமான பண்புகளில் ஒன்று, இவற்றுக்கு வலி அதிகமாக ஏற்படுவதில்லை. “இது அநேகமாக இவற்றின் உயர் கார்பன்-டை-ஆக்சைடு சூழலில் ஏற்பட்ட பரிணாம தழுவலின் விளைவாக இருக்கும்“ என்று ஸ்மித் விளக்குகிறார். இந்த எலிகள் சுவாசித்து வெளியே விடும் கார்பன்-டை-ஆக்சைட், இவை வசிக்கும் பொந்துகளில் சிக்கி அதிகரிக்கத் தொடங்கும். இது போல வேறு எந்த பாலூட்டிகளுக்கும் ஏற்பட்டால், அவை நிச்சயமாக பிரச்சினைக்கு வழிவகுக்கும். கார்பன் டை ஆக்சைட் தண்ணீருடன் வினை புரிந்து, கார்போனிக் அமிலமாக மாறி, நரம்புகளில் வலியை தூண்டும். மனிதர்களுக்கு ஏற்படும் முடக்கு வாதம் போன்ற நோய்களில் இந்த வினை தான் நடக்கிறது. இதன் மூலம் அதிக வலி ஏற்படும். ஆனால் நேக்கட் மோல் எலிகளுக்கு இந்த வலி ஏதும் ஏற்படுவதில்லை. இந்த வலி என்பது நமக்கு ஏற்படும் காயத்தின் மீது எலுமிச்சை சாறு அல்லது வினிகரை ஊற்றும் போது ஏற்படும் வலிக்கு ஒப்பானது, என்கிறார் ஸ்மித். இந்த சகிப்புத்தன்மைக்கான மூலக்கூறு அடிப்படையை அவர் ஆய்வு செய்தார். அபோது இந்த எலிக்கு உணர்வு நரம்புகளின் ஆக்டிவேட்டராக அந்த அமிலம் செயல்படாமல், ஒரு மயக்க மருந்து போல செயல்பட காரணமான ஒரு மரபணுவை அடையாளம் கண்டார்.


ஆய்வின் அவசியம்

நேக்கட் மோல் எலிகளின் உயிரியல் செயல்பாடுகள் நம் மனதை எப்படி மயக்குகிறதோ, அவைகளை கண்காணித்து வேலை செய்யும் அளவுக்கு எளிதான இனங்கள் அல்ல, அதாவது உலகளவில் சில ஆராய்ச்சிக் குழுக்கள் மட்டுமே நம்பமுடியாத இந்த இனத்தை குறித்து ஆய்வு செய்கின்றன. “இவற்றின் தீவிர உயிரியல் மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், அதிக தகவல்களை தரக்கூடியவையாக இருந்தாலும், அனைவராலும் இந்த இனத்தை குறித்து ஆய்வு செய்ய ஆய்வகங்கள் அமைப்பது அவ்வளவு எளிதல்ல, என ஸ்மித் கூறுகிறார். சூடான மற்றும் ஈரப்பதமான சூழல்களைப் பிரதிபலிக்கும் தளவாடங்களைத் தவிர, நேக்கட் மோல் எலியின் ஆயுட்காலம் பிற எலிகளை விட நீண்டது. ஒரே ஒரு இனப்பெருக்க ஜோடி மட்டுமே உள்ள நிலையில், அவை பிரசவிக்க 75 நாட்கள் வரை ஆகும். இதன் விளைவாக சோதனைகளைத் திட்டமிடும்போது நீண்ட காத்திருப்பு நேரம் ஏற்படுகிறது. புற்றுநோய் போன்ற பிற மருத்துவத் துறைகளில் உள்ள நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றவும், தனது எலிகளைப் பயன்படுத்தி புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், ஸ்மித், “நேக்கட் மோல் எலி அமைப்பு” ஒன்றை அமைத்தார். இந்த பாலூட்டிகள் ஏன் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க முடிந்தால், இந்த அறிவை நோய்த்தடுப்பு சிகிச்சைகள் அல்லது புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் மருந்துகளாக மாற்ற முடியும் என்று ஸ்மித் கூறுகிறார்.

-பிபிசி தமிழ் இணையம், 2.1.2023


No comments:

Post a Comment