நாணயத்தை திட்டமாகக் கொள்ளுங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

நாணயத்தை திட்டமாகக் கொள்ளுங்கள்!

இந்த நாட்டில் ஸ்தல ஸ்தாப னங்கள் என்று சொல்லப்படும் ஜில்லா போர்டு, தாலுகா போர்டு, முனிசிபாலிட்டி முதலியவைகளில் நீங்கள் குறித்து இருப்பது போல் எனக்கு அனுபவம் உண்டு என்றும் அந்த ஸ்தாபனங்கள் வரவரப் பெரிதும் பொறுப்பற்றும் நாணயக் குறைவாயும் நடந்து வந்து தமது அதிகாரத்தையும் கவுரவத்தையும் நாளுக்கு நாள் குறைத்துக் கொண்டு வருகின்றன என்றும் அதற்குக் காரணம் இந்த நாடு பல லட்சியங் களுக்கு, பல இன நல உணர்ச்சிக்கு ஆளாகி ஒவ்வொரு கூட்டமும் தன் சுய நலத்துக்கேயும் தங்கள் கட்சி நலத்திற்கேயும் பாடுபட ஆரம் பித்ததே காரணம் என்றும், இவை இன்று கண்டிப்பாகச் சீர்திருத்த முடியாததாக ஆகிவிட்டன என்றும், இவைகளைக் கலைத்து சர்க்கார் நேர் பார்வையிலாக்கி பொறுப்பை, பொறுப்புக்கு ஆளான (சம்பளம் பெறும்) அதிகாரி வசம் விட்டு நடத்த வேண்டும் என்றும், இது இன்று சில அரசியல் தலைவர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிற தென்றும் சர்க் காரும் இதை உணர்ந்து அப்படியே செய்ய முற்பட்டுச் சிறிது சிறிதாகச் செய்து வருகிறார்கள் என்றும், தான் முனிசிபல் சேர்மென், ஜில்லா போர்ட் மெம்பர், தாலுகா போர்டு மெம்பர் ஆகிய ஸ்தானங்களை ஒன்றாய் ஒரே தாளில் ராஜிநாமாக் கொடுத் ததற்குக் காரணம் இதுவும் ஒன்று என்றும், அதுமுதல் இன்றுவரை இந்த ஸ்தாபனங்கள் இன்றைய பொது மக்கள் இடம் இருக்கக்கூடாது என்றே சொல்லி வருவதாயும் சொன்னார்.

இந்த ஸ்தாபனங்கள் நல்ல முறையில் நடக்குமானால் போலீசு, நீதிபதிகள் ஆகிய இலாகாக்களும், வர்த்தகம், கூட்டுறவு, தொழிற்சாலை, ரயில் போக்கு வரவு ஆகிய இலா காக்களும் இந்த ஸ்தாபனத்தின் மூலமே நடத்தி, சொத்துவரியே இல்லாமல் லாபத்திலேயே சர்க்கார் நடத்தப்படக்கூடும் என்றும் விளக்கிக் காட்டினார்.

பின்னர் வியாபாரிகளின் வர்த்தக சங்க வரவேற்புக்குப் பதிலளிக்கையில், நம்நாட்டு வர்த்தக சங்கத்திற்கு மதிப்பு இல்லை என்றும், அது சர்க்கார் தொடர்பால் சிலர் கொள்ளை அடிக்க அமைத்துக்கொள்ளப்பட்ட ஸ்தாபனமாக ஆகி வருகிறதே தவிர மக்களுக்குப் பயன்பட அதில் அம்சங்கள் அரிது என்றும், நம் நாட்டு வர்த்தகர்களில் அனேகருக்குப் பெரிதும் நாணயத்தில் கவலை இல்லை என்றும், மேல் நாட்டு வர்த்தகர்களிடத்தில் உள்ள நாணயத்தால் வர்த்தகர்களுக்கும் பொது மக்களுக்கும் லாபமும் சவுகரியமும் உண்டு என்றும், ஒரு சிறு குழந்தை சாமான் வாங்கச் சென்றாலும் சீட்டைக் கொடுத்து சாமானையும் பில்லையும் உடனே வாங்கிக்கொண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு கவலையற்று வரும் என்றும், ஒரு சிறு பிசகும் இருக்காதென்றும், எடை, குணம், விலை சரியாய் இருக்கும் என்றும், அங்கு நாணயக்காரர்களுக்குத்தான் கவுரவமென்றும் இங்கு புரட்டுக் காகவே - புரட்டின் சக்திக்குத் தக்கபடி கொள்ளை அடிக்கவே வியாபாரம் துவக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறதென்றும், புரட்டுக்கார வியாபாரிக்குத்தான் இங்கு நல்ல பேர் என்றும், இந்த 40 வருஷ காலத்தில் வியாபாரம் முன்னையைவிட துரோகமும் திருட்டும் கலந்த தொண்டாக ஆகிவருகிறதென்றும், நாணயத்தின் அருமையும் சவுகரியமும் திருப்தியும் நம் மக்களுக்கு விளங்கவில்லை என்றும், நாணயத்தில் லாபமும் பெருமையும் இருக்கிறதென்றும், நான் நாணயத்தை ஒரு கொள்கை யாகக் கொள்ளுங்கள் என்றுகூடச் சொல்லவரவில்லை என்றும், அதை மகான்களுக்கு விட்டுவிடுகிறேன் என்றும், நான் சொல்லுவது உங்கள் லாபமே உங்கள் வியாபாரக் கொள் கையாக இருக்கட்டும் என்றும், ஆனால், அதன் வெற்றிக்கு உண்மையான நாணயம் ஒரு திட்டமாக இருக்கட்டும் என்றும், இது ஒரு தந்திரம் என்றும் இந்தத் தந்திரம் நான் 10 வயதில் வியாபாரத்தில் புகுந்த காலமுதல் கண்டு அனுபவித்து வந்தவன் என்றும், என் தகப்பனார் உண்மையான நாணயத்தைத் திட்டமாக வைத்து, மற்றவர்களை அதிக லாபம் சம்பாதித்து நல்ல பலன் அனுபவித்து வர்த்தகத் துறையில் நல்ல பெருமை பெற்றுப் பலருக்கு வழிகாட்டி இருக்கிறார் என்றும், இன்று அதில்லாததால் தான் வர்த்தகத் துறை பொது மக்களுக்குக் கோர்ட்டுகள், வக்கீல்கள், தாசி வேசிகள், ஆகியவர்கள் போல் ஒரு தொல்லையும் ஏமாற்றமும் கொடுக்கும் ஸ்தாபனமாக ஆகிவருகிறதென்றும், அதனாலேயே பொதுவாழ்வில் இவர்கள் எவ்வளவு பணக்காரர்களாக இருந்தாலும் இவர்களுக்குப் போதிய மதிப்பு இல்லை என்றும், சர்க்காரும் சர்க்கார் சிப்பந்திகளும் இவர்களுக்கு ஒரு வக்கீலுக்குக் கொடுக்கும் மரியாதைகூட கொடுப்பதில்லை என்றும் கூறினார்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 17.03.1945


No comments:

Post a Comment