காலத்தால் அழியாத காலவார்ப்பு தமிழ்நாடு என்ற பெயர் காற்றடித்துக் கோபுரத்தில் ஒட்டியதல்ல ஆளுநரே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

காலத்தால் அழியாத காலவார்ப்பு தமிழ்நாடு என்ற பெயர் காற்றடித்துக் கோபுரத்தில் ஒட்டியதல்ல ஆளுநரே!

பாணன்

தமிழ்நாட்டை பார்க்கவேண்டுமென்றால் 50 ஆயிரம் ஆண்டு மனித வரலாற்றில் இருந்து துவங்கி, இன்றைய திராவிட இயக்க கருத்தாழம் மிக்க ஆட்சிவரை படிக்க வேண்டும். அதற்கு ஒரு தலைமுறை பத்தாது ஆளுநரே.

பரந்து விரிந்த இந்திய தீபகற்பத்தில் தமிழ்நாட்டின் பகுதிகளில் பழங்கற்கால குடியிருப்புகள் இருந்த வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதியானது பொ.ஆ. முன் 5 இலட்சம் ஆண்டிலிருந்து 3 ஆயிரம் ஆண்டுகள் வரை நீடித்திருந்ததாக மதிப்பிடப்படுகிறது. வடக்கே இது தொடர்பாக ஆங்கிலேயர்கள் கொடுத்த ஆய்வறிக்கையோடு அப்படியே மூடிப் போட்டுவிட - தமிழ்நாட்டில் தன் வரலாறு தேடிய திராவிட இயக்கத்தின் வார்ப்புகளான அரசுகள் அகழாய்வு செய்து கொண்டுவந்த வரலாற்றுப் வார்ப்புகள் எண்ணற்றவை.

இந்தப் பகுதிகளில் மக்கட்தொகை அடர்த்தி மிகக் குறைவாக இருந்தது - ஆகையால் தென்னிந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே தொடக்க பழங்கற்கால கலாச்சாரம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையின் வடமேற்கு பகுதியில் உள்ள அத்திரம்பாக்கம் பள்ளத்தாக்கு இந்தப் பகுதிகளில் ஒன்றாகும்.தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகளைச் சுற்றி பழங்கற்காலத்திய விலங்குகளின் புதைப்படிமங்கள் மற்றும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் சார்ந்த ஆய்வுகள் கூறுகின்றன.

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தற்கால மனித இனத்தின் மூதாதைய இனத்தினர் மிகவும் மேம்பட்ட நிலையிலும், பல்வேறு கற்களைப் பயன்படுத்தியதோடு தகடு போன்ற கருவிகள் மற்றும் மெல்லிய நுண்தகடு கருவிகளையும் உருவாக்கி பயன்படுத்தியிருந்தனர். சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து நுண்கல் கருவிகள் என்று அறியப்படும் இன்னும் சிறிய கருவிகளை மனிதர்கள் உருவாக்கினர். சூரிய காந்தக் கல், அகேட் கல், சிக்கிமுக்கி கல், குவார்ட்சு கல் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி நுண்கற் கருவிகளை மனிதர்கள் உருவாக்கினர். 1949 ஆம் ஆண்டில், இது போன்ற நுண்கல் கருவிகளை திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நுண்கற்கள் காலமானது பொ.ஆ.முன் 6000-3000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாகும் என தொல்லியல் துறை ஆய்வுகள் கூறுகின்றன.

தற்போதைய பொதுவான காலத்திற்கு முந்தைய தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் பற்றிய குறிப்புகள், பொ.ஆ.முன் 300அய் சேர்ந்த அசோகரின் சாசனத்திலும் பொ.ஆ.முன் 150அய் சேர்ந்த கதிகும்பா கல்வெட்டிலும்  கண்டறியப்பட்டுள்ளது. மிகப் பழைய வட்டெழுத்து ரீதியான சான்றில் தமிழ் நாட்டில் இருந்த ஆட்சி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன, அதில் பாண்டிய நாட்டிலிருந்து களப்பிரர்களை தோற்கடித்த பாண்டிய அரசன் கடுங்கோன் (பொ.ஆ.முன் 560-590) என்பவனைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. (நீலகண்ட சாத்திரி, தென்னிந்தியாவின் வரலாறு.)

அன்றே பதில் கூறிய பேராசிரியர்

ஆளுநரே  60 ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்த இனமானப் பேராசிரியர் அன்பழகனார் சட்டசபையில் ஆற்றிய உரையிலும் உங்களுக்கான பதில் உள்ளது.

“‘தமிழ்நாடு’ என பெயர் வைப்பதற்கு இவ்வளவு மறுப்புச் சொல்கிறவர்கள், ‘தமிழ்நாடு’ எனச் சொன்னால் என்ன இழுக்கு என்று சொல்லட்டும். தமிழன் மூச்சோடு வாழ்கிற வரையில், தமிழ்நாட்டில் தமிழ் இனம் இருக்கிற வரையில், ‘தமிழர் என்று ஓர் இனம் உண்டு, தனியே அவருக்கொரு குணம் உண்டு’ என்று நாமக்கல் கவிஞர் பெருமையாகப் பாடியிருக்கிற மக்கள் உள்ள வரையில் அவர்களுக்கு அடையாளமாக என்ன தரப் போகிறீர்கள் என்று கேட்கிறேன். ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைப்பதால் பிரிவினை வந்துவிடாது. நாட்டிற்கு பெருமை எனக் கருதுவதால்தான் தமிழ்நாடு என பெயர் வைக்கக்கோரி கேட்கிறோம். அதேபோல, சங்ககால இலக்கியங்களில் தமிழ்நாடு என்ற பெயர் இல்லையென சொல்வது சரியல்ல. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட சங்க இலக்கியப் பாடல்களில், சேர, சோழ, பாண்டிய நாடுகள் தனித்தனியாக இருந்த காலத்தில் தமிழ்நாடு என்ற பெயர் இருந்திருக்கிறது. 

சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு - பாடல்களில் தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெற்றிருந்ததை அதை படித்துப் பார்த்தாலே நன்றாகத் தெரிய வரும். ‘தண்டமிழ் வேலி தமிழ்நாட்டுக்கு அகமெல்லாம்‘ என பரிபாடலிலும், ‘இமிழ் கடல்வேலி தமிழகம்‘ என பதிற்றுப் பத்து ஏட்டிலும், ‘தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்’ என சிலப்பதிகாரத்திலும் ஒலிக்கிறது.

பழங்காலத்திலிருந்தே தமிழ்நாட்டை ஆண்டு வந்த வேந்தர்கள் இப்பெயரை ஏற்றிருந்திருக்கிறார்கள். இந்த ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்யக் கோருவதென்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மட்டுமே சொல்லியிருந்தாலாவது ஏற்கமாட்டேன் என நீங்கள் சொல்லலாம். தமிழ்நாடு என்ற பெயரை வைக்க வேண்டுமென்று தமிழ்ப் பெரியார் திரு.வி.க சொல்லியிருக்கிறார். விருதுநகரைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர் சங்கரலிங்கனார் இதற்காக பட்டினிப் போர் நடத்தி இன்னுயிர் நீத்தார். தமிழ்நாடு என பெயர் வைக்கப்பட்டு அதனை காதாரக் கேட்க வேண்டும் என நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்தனார் கேட்டுக்கொண்டார்.

“தமிழ்நாடு எனும் பெயரை வைத்துத் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும். பெருமைப்படுத்த வேண்டும். அப்பெயரைக் கொண்டே இந்நாட்டுக்கு புகழ்முடிசூட்டவேண்டும்“ என வேண்டிக்கேட்ட தமிழறிஞர்கள் பற்பலர். மத்தியில் ஆட்சியில் உள்ள அகில இந்திய காங்கிரசே இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.அப்படி இருக்கையில் இங்குள்ளவர்களுக்கு மட்டும் ஏன் மனம் வரவில்லை? மேனாள் காங்கிரஸ் தலைவர்கள் சொல்லியும் ஏன் இந்த மறுப்பு?” என அன்றே கேள்வி எழுப்பி இருந்தார் இனமானப் பேராசிரியர் அன்பழகனார்.

சுதந்திரத்திற்கு முன்பு - இன்றைய பாஜகவினர் பல்லக்குத் தூக்கும் பாரதியும் தமிழ்நாடு குறித்து பாடியுள்ளார்.

தமிழ் நாடு போற்றி

‘நீலத் திரைகடல் ஓரத்திலே நின்று

நித்தம் தவஞ்செய் குமரி எல்லை வட

மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்

மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு!’ என்று கூறியுள்ளார். 

சிலப்பதிகாரத்தில் “தமிழ்நாடு”

“கண்ணகிக்குச் சிலை எடுக்க இமயமலைக்குக் கல் எடுக்கப் போகும்போது - அங்கங்கே உள்ள மன்னர்கள் தடுப்பார்களோ, அதை எதிர்கொள்ளும் அளவுக்குப் படைகொண்டு செல்ல வேண்டுமோ - என சேரன் செங்குட்டுவன் அமைச்சர்களிடம் கலந்து ஆய்வு செய்தான். அப்போது அமைச்சர் வில்லவன் கோதை,

இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய

இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்

முதுநீர் உலகு முழுமையும் இல்லை

இமய மால்வரைக்கு எம்கோன் செல்வது

கடவுள் எழுதவோர் கற்கே யாதலின்”

சிலப்பதிகாரத்தின்‌ வஞ்சிக்‌ காண்டத்தில்‌ இளங்கோவடிகள்‌ இந்தியப்‌ பெருங்கடல்‌, வங்கக்‌ கடல்‌, அரபிக்‌ கடல்‌ ஆகிய மூன்று கடல்களையும்‌ வேலியாகக்‌ கொண்டு விளங்கும்‌ தமிழ்நாடு என்று குறிப்பிடுகிறார்‌.

சிலப்பதிகாரத்தில் மட்டுமேயன்றி மற்ற பழைய உரையாசிரியர்களில் ஒருவரும் தமிழ்நாடு என்ற சொல்லை வழங்குகின்றார். அது சிலப்பதிகாரத்தின் வழக்கை விட இன்னும் பழைமையானது . தொல்காப்பியத்தின்   செப்பும் வினாவும் வழுவாது வருதற்கு “நும் நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்” என்று வருகிறது.

 இந்தியா  என்று ஒரு நாடோ குடியோ இனமோ ஆங்கிலேயரின் ஆட்சிக்கு முன்னர்க் கிடையாது. யாரும் தம்மை இந்தியர் - பாரத தேசத்தவர் என்று அழைத்துக்கொண்டதில்லை. இந்தியா என்பதே அய்ரோப்பாவைப் போல் பலப்பல மொழி பேசும் இனங்கள் - நாடுகள் சேர்ந்த கண்டமே ஆகும். ஆதலால்தான் அதனை இந்தியத் துணைக் கண்டம் என்பார்கள். புகழ்வாய்ந்த வரலாற்று அறிஞர் துவி.நாராயண ஜா (D.N.Jha) என்பாரின் “இந்து அடையாளத்தின் மறு ஆய்வு” (Rethnking Hindu Identity) என்ற நூலில் இது தொடர்பாகப் பலசெய்திகளை விரிவாகக் காணலாம்.

1947இல் விடுதலை ஆன பிறகு இந்திய நாடு “யூனியன் கவர்மெண்ட் ஆப் இந்தியா” (இந்திய ஒன்றியம்) உருவானது அரசியல் பிழைப்பிற்காக தமிழர் என்ற  வரலாற்றுக்கு முந்திய பல செழித்த உயர்ந்த இன அடையாளங்களை சிதைக்க முயலும் சிந்தனைக்கூடவேண்டாம் என்பதே தமிழர்களின் அறவழிக் கோரிக்கையாகும்

 அறிஞர் அண்ணா கூறியதை இங்கே சுட்டிக்காட்டுகிறோம்.

“நான் இன்று மூன்று வேலைகள் செய்கிறேன். 

இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்கிறேன். 

இந்த தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பு என்பது இருமொழிக் கொள்கையாக இருக்கும். 

மூன்றாவதாக சுயமரியாதை திருமணம் சட்டபூர்வமாக செல்லுபடியாகும்.

இந்த மூன்றில் எதையாவது நீங்கள் மாற்ற நினைத்தால் பிறகு இந்த மாநிலம் இந்தியாவில் இருக்காது.

இந்த மூன்றில் நீங்கள் எதை மாற்ற வேண்டுமென்று நினைத்தாலும் மக்கள் பொங்கி எழுவார்கள் என்ற அச்சம் உங்களுக்கு இருக்கும் வரை இந்த அண்ணாதுரை தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.”

- பேரறிஞர் அண்ணா கூறியதைப்  புரிந்துகொள்வார் ஆளுநர்!

No comments:

Post a Comment