இலக்கணம் மீறிய தலைவர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 24, 2022

இலக்கணம் மீறிய தலைவர்!

கவியரசு நா.காமராசன் எம்.ஏ.


தந்தை பெரியாரின் மரணம் என்னை அழவைக்கவில்லை.அவர் தனது மரணவேளையின் போது எனது கண்களில் கண்ணீர்த் துளிகளை உருவாக்கி விட்டுச் செல்லவில்லை. மாறாக, இலட்சியக் கனவுகளை அங்கே நிரந்தரமாகக் குடியேற்றி வைத்து விட்டு மறைந்து விட்டார்.

தனது மேதைத் தனத்தை மக்கள் வணங்க வேண்டுமென அவர் என்றும் கருதியதில்லை. மக்களுடைய குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எல்லா விதமான தாழ்வு விலங்குகளையும் உடைத்தெறிய முயன்ற புரட்சிக்காரர் அவர்.

“மனிதன் சுதந்திரமாக பிறந்தான். ஆனால், வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் அவன் விலங்கிடப்பட்டுள்ளான்’’ என்று தனது புழ்பெற்ற “சமுதாய ஒப்பந்தம்“ என்கிற நூலில் ரூசோ எழுதியிருப்பதைப் போல இந்த மண்ணில் அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டிருந்த மனிதனுக்கு விலங்குகளை நொறுக்குகிற ஓசையே விடுதலைப் பாடலின் ராகம் என்கிற புதிய வேகத்தைக் கற்றுத் தந்தவர் பெரியார்.

அவருடைய பள்ளிக் கல்விக்குச் சொந்தமானது பத்து வயதுதான். ஆனால், அவரது ஞான வார்த்தை ஒவ்வொன்றும் நூறாண்டு மதிப்புடையதாகும்.அவருடைய பணியைப் பற்றி “நுற்றாண்டுகளை மாத்திரையில் கலக்கும் பணி” என அண்ணாஅவர்களே பாராட்டி விட்ட பிறகு நான் சொல்ல என்ன இருக்கிறது? புரட்சித் தலைவர் அவர்கள் தத்துவச் செழுமை மிகுந்த தனது இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிற மாதிரி “ஒரு காந்தியார் பிறந்து இருக்காவிட்டால்” என்ற கேள்வியைப் போல “ஒரு பெரியார் தோன்றியிருக்காவிட்டால்” என்ற கேள்வியை எழுப்பி ஆராய்ந்தால்தான் அவருடைய பெருமைகளை நாம் புரிந்துகொள்ள முடியும். அரசியல் துறையில் அண்ணா ஓர் இலக்கியம். பெரியார் ஒரு விமர்சகர். உலக தலைவர்களில் இப்படியொருமாறுபாடான தலைவரை - எதிர்மறை உண்மையையை நாம் காண முடியாது.

ஒருமுறை பெரியார் அவர்கள் டில்லி சென்றிருந்தார். பத்திரிகை நிருபர்கள் அப்போது அவரை சந்தித்தனர். ஜனநாயகத் தொட்டிலான நாடாளுமன்றத்தை பற்றிய பெரியாரின் விமர்சனத்தை அவர்கள் கேட்டனர்.

அப்போது அவர் கூறியதாகவது:-

“நாடாளுமன்றம் அரசியல் விபச்சாரம் செய்வதற்கான ஏற்படுத்தப்பட்ட ஒரு நிறுவனம்“ என்று குறிப்பிட்டார்.

எதிரே இருப்பவர்களை பற்றி கவலைப்படாமல், எதிர்காலத்தை மட்டுமே கவனத்தில் வைத்துக் கொண்டு கருத்துப் போராட்டம் நடத்திய புரட்சிக்காரர் அவர்.

“வைத்தியத்திலேயே இரண்டு முறை சொல்லுவார்கள்  1. பிசிசியன்ஸ் கியூர், 2. சர்ஜன்ஸ் கியூர் - அதாவது மருந்து கொடுத்து வியாதியை சொஸ்தப்படுமுத்துவது ஒரு முறை. கத்தியைப் போட்டு அறுத்து ஆபரேஷன் செய்து நோயாளியைப் பிழைக்க வைப்பது இன்னொரு முறை. நோயாளிக்குக் கஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. அவன் சாகக் கூடாது என்று கருதி அறுத்து ஆபரேஷன் செய்யும் இரண்டாவது முறையில் நம்பிக்கை உள்ளவன் நான். எனது இலட்சியமெல்லாம் வைத்திய முறைகள் கஷ்டமாக இருந்தாலும் ஆள் பிழைக்க வேண்டும் என்பதுதான்” என்று அவரே தன்னைப் பற்றி ஓரிடத்தில் சுயவிமர்சனம் செய்கிறார்.

அவருடைய வாழ்க்கை முறைகளே தனியானவை. அவர் ஓர் இலக்கணம் மீறிய தலைவர். சிறு வயதில் ஒரு சொட்டுத் தாய்ப்பால் கூட அருந்தாமல் ஆட்டுப் பால் அருந்தியே வளர்ந்த அதிசய மனிதர் அவர். ஆனால், ஆடு, மாடுகளைப் போல் நாம் வாழ்ந்த சூத்திர வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர். தேசம் இருளில் கிடக்கிறது என்றறிந்து ªஞ்சம் துடித்துத் துக்கம் கொண்டாடுவதற்காக நாள்தோறும் கறுப்புச் சட்டை அணிந்தவர். அந்தக் கறுப்புச் சட்டைதான் சூத்திரர்களைக் கவலை மழையில் நனையாமல் காத்த தத்துவக் குடை என்பது சரித்திர உண்மை.

கவிபாடிய தாகூர், தமிழகத்தின் கருத்துக் குருடர்களை வசைபாட வந்தது போல் அமைந்த அந்த வெண்தாடித் தோற்றம் - நில நடுக்கத்தையே சந்திக்காத தமிழ்நாட்டைப் போல், மனநடுக்கமே இல்லாமல் மேடையில் சம்மணம் போட்டு அமர்ந்தபடி புராணப் புரட்டை கதிகலங்க வைத்த அவருடைய மனஉரம் - கொஞ்சம் வயதான கவிதையைப் போலக் கொஞ்சுகிற குரல் வளம் - சிங்கம் மனித வடிவம் எடுத்ததுபோல் எடுப்பான தோற்றம் - கண்களின் ஞானஒளி - புகைவண்டி தண்டவாளத்தில் ஓடுவதுபோல் பொருள் பொதிந்த பேச்சிலே புரண்டோடும் தர்க்கரீதியான வாதங்கள் - இவையெல்லாம் நம் நெஞ்சிலே ஓவியமாகப் பதிந்துவிட்ட அவருடைய சித்திரகோடுகள்.

வாழ்க்கையில் சோதனையின் விளிம்புகளைத் தொட்டு விளையாடிய பிடிவாதக்காரர் அவர். தனது 25 வயதிலேயே துறவியாகி இருக்கிறார். ஒருமுறை தனக்கிருந்த 20 பதவிகளையும் ராஜினாமா செய்திருக்கிறார். 1940, 42இல் வைஸ்ராயும், கவர்னரும், மூதறிஞர் ராஜாஜியும் பெரியாரை அழைத்து தமிழக மந்திரி சபை அமைக்குமாறு வேண்டினர். பதவி சுகம், சாய்வு நாற்காலி இவைகளைவிட ஒலிப்பெருக்கிகளில் பகுத்தறிவின் கீதத்தை இசைப்பதையே பெரிதும் விரும்பிய இந்தச்சண்டைக்காரக் கிழவரின் மனம் எப்போதும் சபலங்களுக்கு அந்நியத்தன்மை கொண்டதாகவே இருந்திருக்கிறது. அவருடைய மனத்தில் எப்போதும் கனவு மலர்கள் பூத்ததில்லை வழ்க்கை முழுவதும் அங்கே “லட்சிய நெருப்பே” பற்றி எரிந்திருக்கிறது.

இவரை “ஜாதி ஒழிப்பு ஜாம்பவான்” என்று தோழர் பாலதண்டாயுதம் பாராட்டுகிறபோதும், “இந்தியாவின் முக்கியமான பிரபலஸ்தர்களில் ஒருவர்” என்று அறிஞர் ஆர்.கே.எஸ். பாராட்டுகிற போதும்,”உண்மையும், வாய்மையும், மெய்மையும் செரிந்த அறநெறித் தொண்டர்” என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க. பாராட்டுகிறபோதும், “எங்கள் தலைவரின் தலைவர்” என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பாராட்டுகிறபோதும் வார்த்தைப் பிரயோகங்கள் மாறுபடலாம். ஆனால், உள்ள உணர்ச்சிகள் ஒன்றாய்க் கலக்கின்றன. உயர் தமிழர் அனைவருக்கும் ஒரு தலைவர் இவர் என்ற உண்மை சாகாவரம் பெற்று விடுகிறது.

இளம் வயதில் தாழ்த்தப்பட்ட இனச் சிறுவர்களோடு பழகியதற்காக பெரியார் தமது பெற்றோரால் இரு  தோள்களிலும் விலங்கிடப்பட்டார். அந்த விலங்குகளை,தொடர்ந்து 15 நாட்கள் சுமந்தபடியே அவர் தாழ்த்தப்பட்ட இனச் சிறுவர்களோடு விளையாடடிக் கொண்டிருந்தாராம். ஜாதி ஒழிப்புச் சத்திய சோதனை அவருடைய பாலபாடம் என்பதை விளக்க இந்த ஒரு நிகழ்ச்சி போதுமே!

சிறுவயதில் தனது தந்தையாரின் கடையில் மூட்டைகளில் விலாசம் எழுதிய இவர் தனது பின் நாட்களில் புராணத்தின் பொய் மூட்டைகளுக்கு நெருப்பு மூட்டும் நீதிக் கட்சித் தலைவரானார். தனது சகோதரர் உடல் நோய்களைப் போக்கும் சிறந்த சித்த வைத்தியர் ஆனதைப் போல,இவர் தனது தமிழ்ச் சகோதரர்களின் மூட நம்பிக்கை மன நோய்களைப் போக்குகிற கடுமையான பத்திய விதி கூறும் சித்த வைத்தியராக மாறினார்.  

பெரியாரின் கொள்கை வெறி சில நேரங்களில் நம்மை ரத்தக் கண்ணீர் விட வைக்கிறது. தனது மனைவி நாகம்மையார் கோவிலுக்குப் போவதைத் தடுத்து நிறுத்த விரும்பிய இவர், ஒரு நாள் தன் மனைவி கோவிலுக்குச் செல்லும்போது மறைவாக நண்பர்களோடு சென்று “இவள் நமதூர் வந்திருக்கும் புதியதாசி” என்ற மனைவியை நண்பர்களுக்குச் சுட்டிக்காட்டிக் கலகம் விளைத்தாராம். நாகம்மையார் பிறகு கோயிலை எட்டிப் பார்க்கவே இல்லை. சரியான பிடிவாதக்காரர் - கொள்கை வெறியர். எனது தலைவனின் தலைவன்” என்பது காலா காலங்களுக்கும் வாழப் போகிற உண்மை.

பெரியார் மிகுந்த சிக்கனக்காரர். தனக்கு வரும் கடிதங்களின் காலியிடங்களைக் கிழித்து வைத்து அவைகளில்தான் இவர் ‘குடியரசு’ப் பத்திரிகைக்கான கட்டுரைகளை எழுதுவாராம்.

தந்தை பெரியார் மிகச் சிறந்த சொற்பொழிவாளர், “நினைவற்றுக் கிடமந்த தமிழர்களின் உள்ளத்தை அடி தெரியும்படி கலக்கிய பேச்சாளர் அவர். அவரது கொச்சை வார்த்தை உச்சரிப்பைக் கேட்கவும், உடல் துடிப்பைப் பார்க்கவும், ஜனங்கள் தொலைதூரத்திலிருந்து வண்டுகள் வந்து மொய்ப்பது போல் மொய்ப்பார்கள்” என்று அண்ணாவால் “அக்கிரகாரத்தின் அதிசய மனிதர்” எனப் பாராட்டப்பட்ட வ.ரா., பெரியாரின் பேச்சாற்றலைப் பாராட்டியிருக்கிறார்.

ஆக, எனது தலைவரின் தலைவர் ஒரு புரட்சிக்காரர் - பிடிவாதக்காரர் - தர்க்கரீதியான சமூக விஞ்ஞானி. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் புதிய மரபுகளை உருவாக்கிய இலக்கணம் மீறிய தலைவர், வால்ட் விட்மனின் இலக்கணம் மீறிய கவிதைகளில் சில வரிகளைத் தான் என்னால் ரசிக்க முடிகிறது. ஆனால், இந்த இலக்கணம் மீறிய தலைவரின் சில போக்குகளைத் தவிர பெரும்பாலானவற்றை நான் விரும்புகிறேன். அவைகளை நான் சாகும் வரை நேசிப்பேன்.

‘புரட்சி மலர்’ - 26.12.1973


No comments:

Post a Comment