பெரியார் பற்றி பெரியார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 24, 2022

பெரியார் பற்றி பெரியார்

நான் சாதாரண ஆள்தான் என்றாலும், இன்றைய மந்திரிகள் போன்றவர்களை விட எவ்வளவோ மேலானவன்; உலகம் சுற்றியவன்; பூரண பகுத்தறிவு வாதி; சொத்து சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லாதவன்; சொந்தத்திற்கும் பணம் சேர்க்க வேண்டிய தேவையில்லாதவன்; ஜாதி உணர்ச்சி, ஜாதிப்பற்று இல்லாதவன்; என்ன செய்தாவது ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பவன்.

70- ஆண்டு உலக அனுபவம், 30- ஆண்டு வியாபார அனுபவம். 1915-16,17,18,19 - வரை ரிஜிஸ்தர் செய்யப்பட்ட ஈரோடு வியாபாரச் சங்கத் தலைவன். தெ.இ.வியாபாரச் சங்க நிர்வாக சபை அங்கத்தினராக இருந்தவன். 5 ஜில்லாவுக்கு இன்கம்டாக்ஸ் டிரிபியூனல் கமிஷனர்கள் மூவரில் ஒருவனாக இந்திய கவர்ன்மெண்டாரால் நியமிக்கப்பட்டவன்.

ஈரோடு டவுன் ரீடிங்ரூம் செக்ரட்டரி, பழைய மாணவர் சங்க செக்ரட்டரி, ஹைஸ்கூல் போர்டு செக்ரட்டரி, பிறகு தலைவர். 1914ஆம் ஆண்டு நடந்த கோவை ஜில்லா காங்கிரசு மாநாடு செக்ரட்டரி, 10 ஆண்டு ஆனரரி மாஜிஸ்ட்ரேட், ஈரோடு தாலுக்கா போர்ட் பிரசிடெண்ட் பல வருடங்கள் ஈரோடு முனிசிபல் சேர்மென். ஜில்லா போர்டு மெம்பர்; வாட்டர் ஓர்க்ஸ் கமிட்டி செக்ரட்டரி, பிளேக் கமிட்டி செக்ரட்டரி, கோவை ஜில்லா 2ஆவது சர்க்கிள் தேவஸ்தான கமிட்டி செக்ரட்டரியாக 10 ஆண்டு, பிறகு 1929 வரை வைஸ்பிரசிடெண்ட்; பிரசிடெண்ட், 1918ஆம் ஆண்டு உலக யுத்தத்தில் ஆனரரி ரெக்ரூட்டிங் ஆஃபீசர்; 1918ஆம் ஆண்டு யுத்தத்தில் தாலுகா, ஜில்லா அரிசி கண்ட்ரோலில் கவர்மெண்டாரின் நிர்வாகி; அதாவது, அரிசி கண்ட்ரோலில் கவர்ன்மெண்டாருக்கு வரும் அரிசி வாகனங்களின் ரசீதுகளை வாரம் ஒவ்வொரு தாலுக்காவிலிருந்தும் 15, 20 டன் வீதம் எனக்கே கொடுத்து மற்ற வியாபாரிகளுக்கு விநியோகிக்கும்படி ஜில்லா கலெக்டர் கேட்டுக் கொள்ளும் டிஸ்டிரிபியூட்டிங் ஆஃபீசர்; கார்னேஷன் கமிட்டி செக்ரட்டரி; காங்கிரசிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செக்ரட்டரி தலைவர்; காதிபோர்டு (ஃபவுண்டர்) அமைப்பாளராக இருந்ததோடு, 5  வருடம் தலைவராக இருந்த போது எனக்குச் செயலாளராக டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், கே. சுந்தானம், எஸ்.ராமநாதன், கே.எம்.தங்கபெருமாள், அய்யாமுத்து முதலியவர்கள் இருந்தார்கள்.

இவைகள் ஒருபுறமிருக்க, 1940, 42இல் 2 வைஸ்ராய்கள்; 2 கவர்னர்கள் என்னை அழைத்து மந்திரிசபை அமைக்க வேண்டினார்கள். ராஜாஜியும் வேண்டினார். நான் மறுத்து விட்டேன்.

1919 ஜூலையில் நான் ஜில்லா தாலுக்கா போர்ட் மெம்பர் சேர்மென் முதலிய பதவியை ராஜிநாமா கொடுத்த காரியம் பேப்பரில் வெளியானவுடன் லோகல் அண்டு முனிசிபல் போர்டு கவுன்சில் மெம்பர் பி.ராசகோபாலாச்சாரியார் அவர்கள் ஈரோடு வந்து, “என்ன ராமசாமி நாயக்கரே! இப்படி முரட்டுத்தனமான வேலை செய்து விட்டீரே! உமக்குப் புத்தியில்லையா?” என்றார். அவர் பக்கத்தில் கெரோசின் ஆயில் டீலர்ஸ் ஏஜெண்ட் கோவிந்தாச்சாரி இருந்தார். உடனே நான் வணங்கி, “நான் என்ன செய்து விட்டேன்” என்று கேட்டேன். அவர் தனது மனைவியைப் பார்த்து “அம்மா இவருக்குச் சொல்லு” என்று சொல்லி விட்டு மௌனமாக இருந்துவிட்டார்.

அந்த அம்மையார், “அய்யர் உங்களுக்கு, நீங்கள் உங்கள் முனிசிபாலிடியில் தண்ணீர்க் குழாய் ஏற்படுத்தியதற்காக “ராவ்பகதூர்” கொடுப்பது என்று சிபாரிசு பண்ணியிருக்கிறார். உங்கள் கலெக்டர் ராவ் சாகிப் தான் சிபாரிசு செய்தார். அய்யர் ராவ்பகதூர் என எழுதி கவர்னருக்கு ஃபைல் போய் இருக்கிறது. நீங்கள் இப்படி அய்யருக்கு அவமானம் செய்துவிட்டீர்களே; இது சரியில்லை” என்று சொன்னார். நான் பல காரணங்களைக் கூறி மறுத்து விட்டேன்.

(‘நவசக்தி’ - 26.12.1973, பக்கம் 4)

No comments:

Post a Comment