பெரியாரை மொய்க்கும் புதிய தலைமுறையினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 29, 2022

பெரியாரை மொய்க்கும் புதிய தலைமுறையினர்

பேராசிரியர் முனைவர்

சுவாமிநாதன் தேவதாஸ்

தலைவர், தமிழக மூதறிஞர் குழு

ஒரு தலைவரின் கொள்கையை அவர் காலத்தில் அவர் நடத்திய போராட்டங்களை வைத்துதான் மதிப்பீடு செய்ய வேண்டும். தந்தை பெரியார் தொடுத்த அத்தனை போராட்டங்களும் மனித உரிமைப் போராட்டங்களே. வைக்கம், சேரன்மாதேவி, சட்ட எரிப்பு என்று அத்தனை போராட்டங்களும் மானுட விடுதலை, சமத்துவம் சகோதரத்துவம் என்ற இலக்கினை நோக்கியே அமைந்தன. தந்தை பெரியார் மானுட விடுதலைக்கான சமத்துவத்திற்கான சித்தாந்தவாதி மட்டுமல்ல, அவர் ஒரு மாபெரும் போராளி. மனிதனை மனிதன் மதிக்கத்தக்க ஒரு சமூக ஒழுங்கினை புதிதாய் கட்டியமைக்க தோன்றிய மாபெரும் அழிவு வேலைக்காரர். அதனால் தான் அவர் மறைந்து நாற்பத்தி ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அகிலம் அவரை அறிய துடியாய் துடிக்கிறது. "சாக்ரடீசை மொய்த்த கிரேக்கத்து அந்நாளைய இளைஞர்களைப் போல இப்போது பெரியாரை தேடுகிறார்கள்" என்பார் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி. 

தலைமுறைகள் தாண்டி....

தந்தை பெரியாரின் நாற்பத்தி ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் சென்னை பெரியார் திடலில் 

(24-12-2022) வழக்கத்தைவிட கூடுதலான எழுச்சி யோடு நடந்ததை பார்க்க முடிந்தது. தந்தை பெரியார், அவர் வாழ்ந்த காலத்தை விட அவர் மறைந்த பின் னரும் தலைமுறைகள் தாண்டி அவர் சித்தாந்தங்கள் மேன்மேலும் வலிமை பெறுவதை கண்கூடாய் பார்க்க முடிந்தது. திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் புறப்பட்ட கருஞ்சட்டை பட்டாளம் அதை வெளிப்படுத்தியது. ஏராளமான இருபால் இளைஞர்கள்,மாணவர்கள் என்று ஊர்வலம் களைகட்டியது. அய்யாவின் மற்றும் அன்னை மணியம்மையாரின் நினைவிடங்களில் மலர் வைத்து மரியாதை செலுத்திய பின் விண்ணதிர எழுந்த வீரவணக்க முழக்கங்கள் தந்தை பெரியாரின் சித்தாந்த வெற்றியை எக்காளமிட்டு காட்டியது. 

அதைத்தொடர்ந்து நடிகவேள் எம்.ஆர் ராதா மன்றத்தில் நடந்த கருத்தரங்கு முற்றிலும் புதுமையாக கட்டமைக்கப்பட்டு இருந்ததை அறிய முடிந்தது.இளைஞர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட கருத்தரங்கு. "தலைமுறைகள் கடந்து தந்தை பெரியார்" என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் கருத்துகள் பொழி வால் தந்தை பெரியாரின் சித்தாந்தங்கள் புதிய பரி ணாமம் கொண்டிருப்பதை உணர முடிந்தது. கருத் தரங்கிற்கு கருத்தாளர்கள் மிக கவனமாக கண்டறியப் பட்டிருந்தார்கள். கவிஞர் கலி. பூங்குன்றன் மேடை யில் அமர்ந்திருந்தாலும் கருத்தரங்கில் உரையாற்ற வில்லை.

கருத்தரங்கின் தலைப்பை, உரையாற்றும் தோழர் களின் சிறப்பை, அவர்களுக்கு பெரியார் சித்தாந்தத் தின் மீதுள்ள ஈர்ப்பை,நெருக்கத்தை குறிப்பிட்டு நிகழ்ச்சிக்கு அணி சேர்த்தார். 

மூன்று மணி நேர கருத்துப் பொழிவு. தந்தை பெரியாரை பல்வேறு கோணங்களில் அணுகி ஆய்வுரைகள் போல் கருத்துப் பொழிவுகள் நடந்தன. திராவிடர் கழக இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் அவர்களின் வரவேற்புரை, அதைத்தொடர்ந்து திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை அவர்களின் தொடக்கவுரை கருத்தரங்கின் நோக்க உரைகளாகவே அமைந்தன. 

நாம் ஆற்ற வேண்டிய பணி

இந்தியாவில் கம்யூனிஸ்டு இயக்கங்கள் தந்தை பெரியாரை, அவரது சித்தாந்தங்களை ஏற்றுக் கொள்ளாத ஒரு காலகட்டம் இருந்தது. தற்போது கம்யூனிஸ்டு இயக்கங்கள் பெரியாரை போற்றிப் புகழ தொடங்கிவிட்டன என்பதற்கான ஒரு முக்கியமான தகவலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் தோழர் மு. வீரபாண்டியன் பகிர்ந்து கொண்டார்.முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் தந்தை பெரி யாருக்கு நினைவு நாள் நிகழ்ச்சி நடந்து கொண்டி ருக்கிறது. 

எனவே, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் - தான் முதலிலேயே பேசிவிட்டு விடை பெறுவதாக குறிப்பிட்டார். உலகின் மாபெரும் புரட்சியாளர்களுடன் ஒப்பிட்டு, பெரியாருக்கு தேவை புகழாரம் அல்ல. அவர் கனவு கண்ட ஒரு புதிய உலகம்.ஆதிக்கம் இல்லாத சுரண்டல் இல்லாத அடக்குமுறை இல்லாத மனிதன். இன்னொரு மனிதனை தாழ்த்தாத ஒரு சமதர்ம சமத்துவ சமூகம். அதுகுறித்த  தந்தை பெரியார் கனவைப்பற்றி நாம் நினைவு கொள்வது, அவருடன் நெருங்கி அவரது சித்தாந்தத்தை முழுதுமாய் அறிந்து கொள்வது, அதைப்பற்றிய உரையாடலை தொடர்வதுதான் இன்றைக்கு நாம் ஆற்ற வேண்டிய பணி என்று "சமஉரிமைச் சமூகப் படைப்பில்..." என்ற தலைப்பின் கீழ் தோழர் மு வீரபாண்டியன் கருத்துப் பொழிந்தார். 

திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி "பெண்ணுரிமைப் பேரிகையாய்..." தந்தை பெரியார் பெண் விடு தலைக்காக ஆற்றிய பெரும் பங்கினை சமகால உரை யாடல்களுடன் பொருத்தி, தனக்கே உரிய இளைய தலைமுறை பாணியில் ஆற்றிய சொற்பொழிவு அரங்கத்தில் மகிழ்வலைகளை ஏற்படுத்தின. 

மூன்றாவது குழல் என தமிழர் தலைவர் ஆசிரியர் அழைத்து மகிழும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு அவர்கள், ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் தொடுத்த போராட்டங்கள் குறிப்பாக 1957இல் நடத்திய மாபெரும் அரசமைப்புச் சட்ட எரிப்பு போராட்டம் குறித்தும், சுயஜாதி பற்றாளர்கள் சனாதன சக்திகளுக்கு சாமரம் வீசுபவர்கள் தான் என்றும் "ஜாதி ஒழிப்புச் சமர்க்களத்தில்..." என்ற தலைப்பின் கீழ் ஆற்றிய உரை அரங்கத்தை அதிர வைத்தது. 

தமிழ் தேசியத்தின் முன்னோடி தந்தை பெரியார்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணி தலைவர் வழக்குரைஞர்   இரா.ராஜிவ் காந்தி அவர்கள்" மொழி-இன-உரிமைப் போரில்..." என்ற தலைப்பின் கீழ் உரையாற்றினார். தமிழ் தேசியத்தின் முன்னோடி தந்தை பெரியார் என்று வருணித்து, மொழி எல்லைகளை கடந்து சமத்துவத்தை சம வாய்ப்பை மனிதநேயத்தை முன்வைத்து பல போராட்டங்களை இந்திய விடுதலைக்கு முன்பும் பின்பும் வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர் தந்தை பெரியார் என்றார். 

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்  

வீ.அன்புராஜ் தந்தை பெரியார் நினைவு நாள் கருத் தரங்கில் தலைமை ஏற்றது ஒரு சிறப்பான நிகழ்வாக கருஞ்சட்டைத் தோழர்களால் பார்க்கப்பட்டது. பொதுவாகவே மேடையில் அமர்வதைத் தவிர்த்து, நிகழ்ச்சிகள் சிறப்புற நடத்துவதில் தன்னை முழுதும் ஈடுபடுத்திக் கொள்வது அவரது தனிச் சிறப்பு. மூன்று மணி நேரம் மேடையில் அமர்ந்திருந்தாரே என்று பல கருஞ்சட்டைத் தோழர்கள் பேசியது காதோரமாய் வந்து சென்றது. 

சிந்திக்க வைக்கும் வரலாற்று உண்மைகள்

"வைக்கம் போராட்டம் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில் நடப்பதற்கான போராட்டம் அல்ல. அது பிரிட்டிஷ் இந்தியாவில் நடந்த முதல் மனித உரிமைக்கான போராட்டம்.   காந்தியார் உட்பட அந்த போராட்டத்தை நீர்த்துப் போக எடுத்த முயற்சிகளை எல்லாம் சுக்கு நூறாக்கினார் வைக்கம் வீரர் தந்தை பெரியார். அவருடைய பெண்ணிய தத்துவங்கள், கிராமப் பொருளாதார அபிவிருத்திக்கான கருத் துக்கள், ஜாதி ஒழிப்பு பிரச்சாரங்கள், போராட்ட முன் னெடுப்புகள், சமவாய்ப்புகளுக்காக அவர் தொடுத்த போராட்டங்கள் இவை அனைத்தும் தலைமுறைகள் தாண்டி சிந்திக்க வைக்கின்ற வரலாற்று உண்மைகள். தந்தை பெரியாரின் தத்துவங்கள் பல தலை முறைகளைத் தாண்டி வருகிறது என்பதை ஊர்வ லமும் இந்த கருத்தரங்கம் வெளிப்படுத்துகிறது. 

தந்தை பெரியார் 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி என பல தலைமுறைகளைத் தாண்டி வருவார். எனவே இனி வரும் உலகம் தந்தை பெரியார் காண விரும்பிய சமத்துவ உலகமாக பகுத்தறிவு உலகமாக இருக்கும்" என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். 

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் அமைதிப் புரட்சி

பெரியார் திடலில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் ஓர் அமைதியான புரட்சியை தந்தை பெரியார் வழியில் செய்து வருகிறது என்பதை புள்ளி விவரங்களோடு விளக்கியபோது அரங்கு கைதட்டல்களால் அதிர்ந்ததை உணர முடிந்தது. 

 2022 ஜனவரி 1 முதல் 20-12-2022 வரை நடந்த சுயமரியாதைத் திருமணங்கள் மொத்தம் 762. இதன்படி ஒரு நாளில் சராசரி இரண்டு திருமணங் களுக்கு மேல் நடந்துள்ளன. இதில் ஜாதி மத மறுப்பு திருமணங்கள் 734, வேற்று மாநிலத்தவர்கள் திருமணங்கள் 34, பார்ப்பனர்களின் திருமணங்கள் 24, மணமுறிவு பெற்றோர் திருமணங்கள் 19 மற்றும் இணையர் இறந்தவர்கள் திருமணங்கள் 13 அடங்கும் என்று தமிழர் தலைவர் போன்று துல்லியமான புள்ளி விவரங்கள், ஆதாரங்கள் கொண்டு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆற்றிய உரை அரங்கத்தில் மகிழ்வலைகளை ஏற்படுத்தியது. 

இறுதியில், திராவிடர் கழக வட சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் அவர்களின் நன்றியுரையுடன் கருத்தரங்கு முடிவுற்றது. 

தந்தை பெரியார் சித்தாந்தங்கள் தலைமுறைகள் கடந்து நாடு, மொழி என்ற எல்லா எல்லைகளைத் தாண்டி வேகவேகமாய் உலகமயமாகி வருவதை எண்ணி அசைபோட்டு மகிழ்ந்தபடி,பெரியார் திடலில் நடுநாயகமாய் வானுயர நின்று கொண்டிருக்கும் அந்த மாபெரும் புரட்சியாளர் சிலையை பார்த்தபடியே புறப்பட்டேன். தந்தை பெரியாரின் நாற்பத்தி ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள் சனாதன சக்திகள் இவர் சிலையைக் கண்டு மிரட்சி அடைய காரணங்களை விளங்க வைத்தது. 


No comments:

Post a Comment