வரலாற்றைத் திரிப்பதுதான் பிரதமர் வேலையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 29, 2022

வரலாற்றைத் திரிப்பதுதான் பிரதமர் வேலையா?

குரு கோவிந்த் சிங் அனந்த்பூர் சாகிப் நகரத்தில் தங்கி முகலாயர்களுடன் போரிட்டுவந்தார், நீண்ட நாள் போர் காரணமாக அனந்தபூர் சாகிப் மக்கள் பஞ்சம் பட்டினியால் பாதிக்கப்படவே குருகோவிந்த் சிங் போரைக் கைவிட்டு தானும் தனது குடும்பமும் நகரத்தில் இருந்து வெளியேறு கிறோம் என்று கூறினார். இதனை அடுத்து அவுரங்கசீப் படைத்தளபதி வாசிம் கான் தாக்குதலை நிறுத்தி, அவர்களை வெளியேற அனுமதித்தார். 

குரு கோவிந்த் சிங் அவர்களுக்கு 3 மனைவிகள், அவர் களுக்குப் பல குழந்தைகள் இருந்தனர். அதில் 3 குழந்தை களையும் தனது தாயாரையும் தனது குடும்பத்தின் வரவு செலவை நிர்வகிக்கும் பார்ப்பனரான திவான் சச்சானந்த் என்பவரோடு அனுப்பி வைத்தார். 

ஆனால், அந்த பார்ப்பனரோ தன்னிடம் குரு கோவிந்த் சிங்கின் இரண்டு மகன்கள் இருக்கின்றனர் என்று கூறி வாசிம்கானிடம் பேரம் பேசி தங்கத்தைப் பெற்றார் என்று வரலாறு சொல்கிறது, இதையே சீக்கியர்கள் புனித நூலான  தாசம் கிராந்த்  (Dasam Grant) கூறுகிறது. 

சச்சானந்த் என்ற பார்ப்பனர் குருகோவிந்த் சிங் குடும்பத்தின் திவானாக (வரவு செலவு கணக்கர்) இருந்தார். அவர் குருகோவிந்த் சிங்கின் புதிய கொள்கையான சமத்துவம், பார்ப்பனர் என்றோ இதர கீழ் ஜாதியர் என்றோ எதுவும் இல்லை, பூணூல் அணியக்கூடாது, குடுமி வைக்கக் கூடாது, பெண்களும் ஆயுதங்களை ஏந்த வேண்டும், கிர்பான் என்ற வாளை அனைத்து சீக்கியர்களும் வைத் திருக்க வேண்டும், என்று கொள்கைப் பரப்புரை செய்தார். 

மேலும் உணவு உண்பது அனைவருக்குமானது, உணவு உண்ணும் போது அனைவருமே ஒற்றுமையாக இருந்து சமையல் செய்து சமமாக அமர்ந்து சாப்பிடவேண்டும், அதே போல் உணவுப் பாத்திரங்களைக் கழுவும் போதும் மக்கள் ஒன்று கூடி கழுவ வேண்டும்; போன்ற குரு கோவிந் சிங்கின் பல சமத்துவ ஒற்றுமைக் கருத்துகளை சச்சானந்த் என்ற பார்ப்பனர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அந்தக் கால கட்டத்தில் வாளை சத்திரியர்கள் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்பதும், பார்ப்பனர்கள் சாப்பிட்டதற்குப் பிறகு தான் அனைவரும் சாப்பிடவேண்டும் என்பது போன்ற மனுஸ்மிருதி நியதிகள் இருந்தபோது - கோவிந்த் சிங்கின் இந்த கொள்கைகள் பார்ப்பனர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது, இதனால் அவர்கள் குருகோவிந்த் சிங்கின் திவானாக இருந்த சச்சானந்திடம் எடுத்துக் கூறினர். 

இவை எல்லாம் சேர்த்து குருகோவிந்த் சிங்கை பழி வாங்கும் எண்ணத்திலேயே - குருகோவிந்த் சிங்கின் தாய் மற்றும் அவரது மகன்களை வாசிம் கானுக்குக் காட்டிக் கொடுத்தார் சச்சானந்த். இதற்கு பலனாக வாசிம்கானின் அமைச்சரவையில் நிர்வாக அமைச்சர் பதவியையும் பெற்றுக் கொண்டார் என்று வரலாறு சொல்கிறது.  

பொதுவாக போரில் கைது செய்யப்பட்டவர்களை கொலை செய்வது ஈழப்போரில் கூட நடந்தது, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகனான 11 வயது சிறுவனைக் கூட விட்டு வைக்காமல் அவரது மார்பில் நெருக்கமாக துப்பாக்கியை வைத்து சுட்டுக்கொலை செய்துள்ளனர். அதே போல் தான் அன்று வாசிம் கான் குரு கோவிந்த் சிங் மகன்களைக் கொலை செய்தார், இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சச்சானந்த் என்ற பார்ப்பனர் தான். இதுதான் வரலாற்று உண்மை. 

ஆனால், பிரதமர் மோடி கட்டுக் கதையாளரைப் போல் - கோவிந்த் சிங்கின் இளைய மகன்கள் பாபா சோராவார் சிங் (9), பாபா பதே சிங் (6) ஆகியோரை மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்தி  - மறுத்ததால் கடந்த 1704-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி இரு சிறுவர்களையும் உயிரோடு புதைத்து சமாதி கட்டப்பட்டது என்று  மேடையில் பேசுகிறார். எந்த ஒரு வரலாற்று சான்றுகளும் இன்றி சமூக வலை தளங்களில் பேசினார்.

 பிரதமர் மோடி பொது வெளியில் இந்த வதந்தியை அப்படியே பேச, தற்போது ஊடகங்களிலும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டது. மோடியின் இந்தப் பேச்சு இஸ்லாமியர்கள் மீதான வன்மத்தை மேலும் அதிகரிக்கவே வழி வகை செய்யும்.

ஒரு பிரதமராக இருக்கக் கூடியவர் பேசும் பேச்சா இது? வரலாற்றைத் திரிப்பது தானே ஆர்.எஸ்.எஸ். பிஜேபி வகையறாக்களின் வேலை! பிரதமர் மோடியும் இதற்கு விதி விலக்கா என்ன?

No comments:

Post a Comment