ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 31, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: சென்னையைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்திலும் ஹிந்தியைப் பேசச் சொல்லி பாதுகாப்புப் படையினர் அடாவடி செய்துள்ளார்களே?

- வேலுச்சாமி, திருவண்ணாமலை

பதில் 1 : இது திட்டமிட்ட சிறுசிறு முயற்சிகளின் தொடர்ச்சியோ என்ற அய்யம் நமக்கு வரவே செய்கிறது. என்றாலும் நம் எதிர்ப்புகளுக்குப் பலன் இல்லாமல் இல்லை! நடிகர் சித்தார்த்துக்கு மதுரை விமான நிலையத்தில் ஏற்பட்ட இந்த கசப்பான அனுபவங்கள் குறித்து அவர் செய்தி பரப்பியவுடன், அத்துறையில் அப்படி நடக்கவே இல்லை என்று மறுப்பு நாளேடுகளில் வந்துள்ளது.

இதுபோன்ற நிலை தொடருமேயானால், விமான நிலையம் முன்பு கண்டன எதிர்ப்புப் பேராட்டங்கள் வெடிப்பது தவிர்க்க இயலாதவைகளாகிவிடும்!

---

கேள்வி 2: தமிழ்நாடு அரசு கொண்டுவர உள்ள தமிழ்நாட்டு மக்களுக்கான புதிய அடையாள எண் குறித்து?

- ஆறுமுகம், வேலூர்

பதில் 2 : மக்களுக்குத் தொல்லையின்றி இது நடக்க வேண்டும் என்பதே நமது விழைவு.

---

கேள்வி 3: கடந்த ஆட்சியோடு ஒப்பிடும் போது (2011-2021 அதிமுக ஆட்சி) இந்த ஆட்சியில் (2021-திமுக ஆட்சி) அதிகாரிகள் மக்கள் பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வருகிறார்களே? சென்ற ஆட்சியில் இவர்களைத் தடுத்த சக்தி எது?

- முருகேசன், திருக்கோவிலூர்

பதில் 3 : 'என்னப்பன் பணநாதன்தான்' என்ற ஒரு திரைப்பட வசனம் (அநேகமாக அண்ணாவின் வேலைக்காரியில் 'மணி' பேசுவதோ என்னமோ) - அதுதான் நினைவுக்கு வருகிறது!

---

கேள்வி 4: மாயாவதியும், அகிலேசும் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் பங்கேற்கமாட்டோம் என்று கூறியுள்ளது குறித்து?

- கன்னியப்பன், சாலவாக்கம்

பதில் 4 : மிகப் பெரிய அரசியல் பிழை (Political Blender  - அவர்களது பொதுவாழ்வில் ஒரு நீங்காக் குறை).

---

கேள்வி 5: "இராமர் பாலம் என்று ஒன்றும் இல்லை" என்று ஒன்றிய அரசே ஒப்புக்கொண்டு விட்டதே! அப்படி என்றால் இராமன்?

- குமரன், தஞ்சை

பதில் 5 : இராமர் அவதாரமா? மனிதனா? என்பதில் வால்மீகி இராமனை அவதாரமாக்காமல் மனிதனாகவே காட்டுகிறார். பிறகு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு துளசிதாசர், கூலி கம்பன் போன்றோர் கடவுளாக்கினர். அதுபோலவே பாலமும்! இராமர் பாலம் கட்டியிருந்தால், அனுமான் ஏன் பறந்து போக வேண்டும்? அப்பாலத்திற்கு பூஜை செய்துவிட்டல்லவா பிறகு இலங்கைக்குப் போய் சேர்ந்திருப்பார்? பதிலுண்டா?

---

கேள்வி 6: தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகள், வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு அலுவலகங்களிலும் மோடியின் படத்தை வைக்கச்சொல்லி ரகளை செய்துவருகின்றார்களே - பாஜகவினர்?

- செண்பகம், திருவரங்கம்

பதில் 6 : திட்டமிட்டு வன்முறை, காலித்தனத்தை உருவாக்கி, சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை என்று காட்டவே இதுபோன்ற வேலைகள் - திட்டமிட்ட ஒத்திகை போலும்!

---

கேள்வி 7: 'தலித்மக்கள் வீட்டில் சாப்பிடுகிறேன்' என்று பா.ஜ.க. தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் நாடகம் போடுகிறார்களே?

- வரதன், மீனம்பாக்கம் 

பதில் 7 : இது ஒரு பழைய செல்லாத நாணயம்! கீறல் விழுந்த கிராமபோன் பாட்டு போல. உணவு விடுதிகளில் எல்லாம் 'சமபந்தி போஜனம்'தான்! - ஒரே வேறுபாடு காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும் ஓட்டல்களில். அது இப்போது புரட்சி இல்லையே!

---

கேள்வி 8: தமிழ்நாடு அரசு கொண்டுவந்த 'நீட்' ஒழிப்பு மசோதா இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று ஒன்றிய ஆயுஷ் அமைச்சரகம் தெரிவித்துள்ளதே?

- கார்மேகம், மதுரை

பதில் 8 : அரசமைப்புச் சட்டத்தின் அறியாமை - புரியாமை - இறையாண்மையை முதலில் அருணாசலப் பிரதேசத்தில் சீன ஆக்கிரமிப்புப் பற்றி தெளிவாகச் சிந்தித்து செயல்பட்டால் அது ஒன்றிய அரசுக்கு நல்லது.

---

கேள்வி 9: இலங்கையில் அடுத்த ஆண்டு 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், இனப்பிரச்சினைக்கு முடிவு கட்டுவோம் என்று ரணில் விக்கிரமசிங்கே கூறியிருப்பது குறித்து உங்கள் கருத்து!

- சிவசுப்பிரமணியன், வேளச்சேரி

பதில் 9 : வெறும் அரசியல் புஸ்வாணம்! "உருட்டைக்கு நீளம் புளிப்பில் அதற்கு அப்பன்" என்ற பழமொழியைப் போல!

---

கேள்வி 10: 2022ஆம் ஆண்டு இந்தியாவில் அனைவருக்கும் வீடு கிடைத்துவிடும் - 2023ஆம் ஆண்டு பிறக்கும்போது இந்தியா வல்லரசு கனவை நினைவாக்கி இருக்கும் என்கிறாரே மோடி? 

- மோகனசுந்தரம், நாகை

பதில் 10 : வீடு கிடைத்தால் நல்லது. வரவேற்கிறோம். 'வீடு' (மோட்சம்) கிடைக்காமல் இருப்பது நல்லது.

---

கேள்வி 11: முதிய வயது பெற்றோர் மற்றும் ஆதரவில்லாத உடன்பிறப்புகளை சொத்திற்காக துன்புறுத்தும் நிகழ்வுகள் அன்றாடச் செய்திகளாக வருகிறதே? இது மனித உரிமை மீறலின் கீழ் வராதா?

- சந்திரசேகரன், சிவகங்கை

பதில் 11 : மனித உரிமை ஆணையம் தமிழ்நாட்டில் சிறந்த தலைமையின் கீழ் மிக அருமையாக செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க தாமே முன்வந்து, 'சுவோ மோட்டே' (SUO MOTO) நடவடிக்கை எடுத்தால் நல்லது!


No comments:

Post a Comment