'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' ஆண்டு மலர் மற்றும் தமிழர் தலைவரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஏற்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 31, 2022

'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' ஆண்டு மலர் மற்றும் தமிழர் தலைவரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஏற்புரை

 «‘ரிவோல்ட்’ ஏடு தொடங்கிய காலத்தில் தமிழ்நாட்டில் படித்தவர்கள் எண்ணிக்கை 7%

தேந்தை பெரியார் மறைந்தபோது 60% - தந்தை பெரியார் ஊட்டிய விழிப்புணர்வே இதற்குக் காரணம்!

«திராவிட இயக்கம் நடத்திய ஆங்கில ஏடுகள் ஆவணக் காப்பகங்களில் கூட இல்லையே!

சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நூலகமே 

ஆவணக் கருவூலமாக விளங்குகிறது!

சென்னை, டிச.31  திராவிட இயக்கம் நடத்திய ஆங்கில ஏடுகள் எங்கும் கிடைப்பதில்லை. சென்னை பெரியார் திடல்தான் இவற்றின் ஆவணக் காப்பகமாக விளங்கு கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ ஆண்டு மலர் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழா

நேற்று (30.12.2022) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ ஆண்டு மலர் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரையாற்றினார்.

அவரது  ஏற்புரை வருமாறு:

தொய்வில்லாமல் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது

மிகுந்த எழுச்சியோடும், கருத்தியலோடும் நடை பெறக்கூடிய இந்த அற்புதமான ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' ஆண்டு மலர் வெளியீட்டு விழா - அந்த மலரை சிறப்பான வகையில், குறுகிய காலத்தில், இரவு பகல் பாராமல் தொடர்ந்து செயல்பட்டு, அந்த மலரைக் கொண்டு வந்து -  ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’  இதழுக்கு அதிகாரப்பூர்வமான ஆசிரியராக நான் இருந்தாலும்கூட, நம்முடைய அருமைத் தோழர் குமரேசன் போன்றவர்கள் கிடைத்த காரணத்தினால்தான், அந்த இதழ் தொய்வில்லாமல் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

எனது பல பணிகளுக்கிடையில், அந்த இதழ் நடக் கின்றது  என்று சொன்னாலும், ஆண்டு மலர் தயாரிப் பிற்காக ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு இரவு பகல் பாராமல் உழைத்து இந்த மலரை தயாரித்திருக்கிறார்!

நம்முடைய இதழ்களைப்பற்றி சிறப்பாக விளக்கிய ‘விடுதலை’ நிர்வாக ஆசிரியர் கலி.பூங்குன்றன்

இது 11 ஆவது ஆண்டு மலர் - எனக்கே வியப்பாக இருக்கிறது. அப்படிப்பட்ட அருமையான இந்த மலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு, அறிமுக உரையை சிறப்பாகத் தந்து, நம்முடைய இதழ்களைப்பற்றி சிறப்பாக விளக்கிய, மானமிகு கழகத் துணைத் தலைவரும், ‘விடுதலை' நிர்வாக ஆசிரியருமான அன்பிற்குரிய தோழர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

இந்நிகழ்ச்சியில், இம்மலரை வெளியிட்டுப் பெரு மைப்படுத்திய சென்னை ரஷ்ய தூதரகத்தின் துணைத் தூதர் செர்ஷி அஸராவ் அவர்களே,

இது ஒரு மைல் கல் - 

மறக்க முடியாத நாள்

இந்த நிகழ்ச்சியில் மிகச் சிறப்பான வகையில், தலைமை விருந்தினராக வரவேண்டும் என்று நாம் சொன்னவுடன், தட்டாமல் வந்திருக்கும் அவர், என்றைக்கும் நம்மோடு இருந்து பெரியாரிஸ்டாக இருக்கக்கூடியவர் - வாழ்நாள் முழுவதும். வி.அய்.டி. என்று எல்லோராலும், உலகம் முழுவதும் அறிந்திருக்கக் கூடிய அப்படிப்பட்ட ஓர் அற்புதமான, எடுத்துக்காட்டான ஒரு முன்மாதிரியான கல்வி நிறுவனம் இந்தியாவிலேயே இதுதான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கக் கூடிய கல்லூரியின் நிறுவன வேந்தர் அருமை நண்பர் முனைவர் ஜி.விஸ்வநாதன் அவர்கள் ஆண்டு மலரைப் பெற்றது என்பது அந்தப் பத்திரிகையினுடைய வளர்ச்சி யில், இது ஒரு மைல் கல் - மறக்க முடியாத நாள் என்பதுதான் மிக முக்கியம்.

மற்றபடி, என்னுடைய 90 ஆவது பிறந்த நாளைப்பற்றி சொன்னார்கள். எனக்கு இதுவரையில் வசவுகளை வாங்கித்தான் பழக்கமே தவிர, வாழ்த்துகளை வாங்கிப் பழக்கமில்லை.

தொடர்ந்து சர்க்கரை போடாமல் சாப்பிடுகிறவனுக்கு, திடீரென்று ஒரு நாள் சர்க்கரைப் போட்டு கொடுத்தால், அதை சாப்பிடுவது கஷ்டமாக இருக்கும். ஏனென்றால், சர்க்கரை இல்லாமல், காபியோ, டீயோ குடித்துப் பழக்கப் பட்டவர்களுக்கு, அது கஷ்டம்தான்.

அதுபோன்று சங்கடமான ஒரு சூழ்நிலையில்தான் நான் இங்கே இவ்வளவு நேரம் அமர்ந்திருந்தேன்.

கருத்தியல் போருக்கு 

ஒரு பெரிய ஆயுதப் பட்டறை

ஆனால், மிக அற்புதமான நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி. அதிலும் நம்முடைய விஜயசங்கர் அவர்கள் மிகவும் ஆழமானவர். இன்று நடக்கக் கூடிய கருத்தியல் போருக்கு அவர் ஒரு பெரிய ஆயுதப் பட்டறை.

அதுபோன்று நம்முடைய ஏராளமான நண்பர்கள் இங்கே இருக்கிறார்கள். இது ஓர் அறிவியல் பரிசோத னைக் கூடம். மிகக் குறைவாக இருக்கிறார்களே என்று நினைக்கவேண்டாம்; நோபல் பரிசு வாங்கியவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்.

140 கோடி மக்கள் உள்ள நாட்டில், பாதுகாப்பிற்காக இருக்கும் ராணுவம் குறைவாகத்தான் இருக்கும். அதுபோல, கருஞ்சட்டை ராணுவம் மிகக் குறை வாகத் தான் இருக்கும். எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல; எண்ணத்தைப் பொறுத்ததுதான்.

பெரியார் பன்னாட்டமைப்பில் சிகாகோவில் இருக்கக்கூடியவர்; இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். - இப்படி பல தோழர்கள்.

லட்சுமணசாமி முதலியார்

ஒரு காலத்தில் துணைவேந்தர் என்றால், நம்முடைய லட்சுமணசாமி முதலியாரைத்தான் சொல்வார்கள். அந்தக் காலத்தில் லட்சுமணசாமி முதலியார்தான் 26 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக இருந்தார்.

பல பேருக்கு ஆச்சரியமாக இருக்கும். ‘‘என்னடா, நாமம் போட்டவரை பெரியார் பாராட்டுகிறாரே’’ என்று.

டாக்டர் கிருஷ்ணசாமி

லட்சுமண சாமி முதலியார், ராமசாமி முதலியா ஆகிய இருவரும் நெற்றியில் நாமம் போட்டிருப்பார்கள். டாக்டர் கிருஷ்ணசாமியே நாமம் போட்டிருப்பார். டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் அற்புதமான ஆங் கிலத்தில் பேசக் கூடியவர். 

கோபால்சாமி அய்யங்கார் அய்க்கிய நாடுகள் சபைக்குச் சென்று, காஷ்மீர் பிரச்சினையை சரியாக சொல்லி தீர்வு காண்பதில் தடை இருந்த நேரத்தில், ராமசாமி முதலியாரை அனுப்பித்தான் வெற்றிகரமாக ஆக்கினர்.

புதிதாக இளைஞர்கள் இயக்கத்திற்கு நிறைய வந்த வுடன், அவர்களுக்கெல்லாம் ஆச்சரியம். அண்ணா  அமர்ந்திருக்கிறார், அவருக்குப் பக்கத்திலே நாமம் போட்ட ஒருவரை அமர வைத்திருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டனர்.

அண்ணாவின் விளக்கம்

அதைப் புரிந்துகொண்ட அண்ணா அவர்கள் நாசூக்காக சொல்லும்பொழுது, ‘‘என்னடா, நெற்றியில் ஒரு கோடு இருக்கிறதே, அந்தக் கோடு நம்மைப் பிரிக்கிறது என்று நினைக்காதீர்கள். அந்தக் கோட்டைத் தவிர, மீதியெல்லாம் ஒன்றாகத்தான் உள்ள நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம்'' என்று சொன்னார்.

ஆக, அத்தகைய உணர்வு படைத்த சூழ்நிலையில், இன்றைக்கு ஓர் அற்புதமான, ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக இது அமைந்திருக்கிறது. நல்ல கருத்துகளை இன்றைக்கு  எடுத்துச் சொன்னார்.

வி.அய்.டி. வேந்தர் துணிச்சலான 

ஒரு பெரியாரிஸ்ட், பகுத்தறிவுவாதி

அதைவிட எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்ன வென்றால், அவரை அழைத்ததினுடைய நோக்கம் மலரை வெளியிடுவது, அவர் வாங்குவது என்பதைவிட, நம்முடைய வி.அய்.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதன் அவர்கள், எந்த நிலைப்பாடு அரசியலில் இருந்தாலும், அவர் துணிச்சலான ஒரு பெரியாரிஸ்ட், பகுத்தறிவுவாதி. இவற்றை அவர் என்றைக்கும் குறைத்து மதிப்பிட்டதில்லை.

டாக்டர் நாவலர் நெடுஞ்செழியனின் வேண்டுகோள்

அதைவிட வேடிக்கை என்னவென்றால், இந்த மன்றம் இப்போதுதான் இப்படி இருக்கிறது. இதற்கு முன்பு இராதா மன்றம், பழைய மன்றாக இருந்தது. இதை மாற்றிக் கட்டுங்கள் என்று டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் அடிக்கடி சொல்லுவார்.

இங்கே செழியன் அவர்கள் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற சோ, ‘‘சார், இந்த மன்றத்தை ஏர்கண்டிஷன் செய்யுங்களேன்'' என்பார்.

நாவலர் சொல்லுவார், ‘‘என்னய்யா, அய்யா விட்டுச் சென்றதுபோலவே அப்படியே இருக்கிறதே, கொஞ்சம் புதுப்பித்துக் கட்டுங்களேன்'' என்பார்.

குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமனின் வியப்பு

வி.அய்.டி. வேந்தர் விஸ்வநாதன் அவர்களுடைய இல்லத் திருமணத்தை பெரியார் திடலில் நடத்தினார். அவர் நினைத்திருந்தால், சென்னையில் வேறு எங்கே யாவது நடத்தியிருக்கலாம். ஆனால், சுயமரியாதைத் திருமணமாக பெரியார் திடலில் நடத்தினார்.

அந்தத் திருமணத்திற்கு யாரை அழைத்தார் என்றால், குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் அவர்களை அழைத்திருந்தார்.

அவரை பெரியார் திடலுக்கு அழைத்து வந்தார்; அவர் பெரியார் திடலில் முதன்முதலில் கால் வைக்கக் காரணம், இவர்தான்.

அந்த சுயமரியாதைத் திருமணத்தில், நாங்கள் எல்லாம் கலந்துகொண்டு வாழ்த்தினோம்.

குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், முதன் முதலாக சுயமரியாதைத் திருமணத்தை அன்றுதான் பார்த்தார். பார்த்துவிட்டு, நன்றாகத்தானே நடைபெறுகிறது என்று சொன்னார்.

சட்டப்பேரவையில் மாதவன் அவர்கள் கொண்டுவந்த தனி நபர் மசோதாவை எதிர்த்தவர் ஆர்.வெங்கட்ராமன் 

அவர்தான் முதலில், சட்டமன்றத்தில் சுயமரியாதைத் திருமணச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று மாதவன் அவர்கள் தனி நபர் மசோதாவைக் கொண்டு வந்தபொழுது, சுயமரியாதைத் திருமணத்தை வரவேற்க முடியாது என்று மேல்சபையில் விளக்கம் சொன்னவர் ஆர்.வெங்கட்ராமன் அவர்கள்தான். அதற்கு ஒரு காரணமும் சொன்னவர்.

அப்படிப்பட்டவர், சுயமரியாதைத் திருமணத்தை நேரில் கண்டவுடன், ஓகோ, இவ்வளவு எளிமையாக இருக்கிறதே என்றார்.

அய்யா அவர்கள் இன்றைக்கு இருந்திருந்தால், இவரைக் 

கட்டிப் பிடித்துப் பாராட்டியிருப்பார்

அதற்குக் காரணமாக இருந்தவர் நம்முடைய நண்பர் விஸ்வநாதன் அவர்கள்தான். கல்வித் துறையில் எல்லோரும் வளரவேண்டும் என்பதற் காக ஒரு பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர். ‘‘வடக்கே படையெடுத்தார்கள், வடக்கே படையெடுத்தார்கள் - அங்கே இருந்து தலையில் கல்லைத் தூக்கி வந்தார்கள்’’ என்று நாமெல்லாம் வரலாற்றைப் படிக்கிறோம். 

இவர்தான் கல்வியை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்ற அளவிற்கு அவருடைய கல்வி நிறுவனத்தை உருவாக்கி வைத்துள்ளார் பாருங்கள் - இந்த செயலுக்கே அய்யா அவர்கள் இன்றைக்கு இருந்திருந்தால், இவரைக் கட்டிப் பிடித்துப் பாராட்டியிருப்பார்.

தொடக்கத்தில் இந்தக் கொள்கையில் எல்லோ ரும் இருப்பார்கள்; கொஞ்சம் வளர்ந்த பிறகு, இந்தக் கொள்கையாளர் என்பது தெரிந்துவிடக் கூடாது என்று நினைப்பார்கள்.

இவர் வளர்ந்த பிறகும், ‘‘என்னுடைய அடையாளத்தை நான் மாற்றிக் கொள்ளமாட்டேன்’’ என்பதில் உறுதியாக இருக்கக் கூடியவர்.

ஆகவே, அப்படிப்பட்ட ஒருவர் இங்கே வர வேண்டும் என்று நினைத்தோம். அப்படியே வந்து, சிறப்பாக உரையாற்றி இருக்கிறார்.

‘இதழாளர் பெரியார்’ என்ற தலைப்பில் இறையனாரின் ஆய்வுரை

‘இதழாளர் பெரியார்' என்ற தலைப்பில், இறையன் அவர்கள் ஒரு பெரிய ஆய்வுச் சொற்பொழிவையே நடத்தியிருக்கிறார். அதில் அய்யாவைப்பற்றி சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.

நம்முடைய திராவிட இயக்கத்திற்கு இத்தனை இதழ்கள் இருந்தன என்று சொன்னார்கள். ஆனால், ஒரு இதழை தொடங்கும்பொழுது, அந்த இதழுக்கு எவ்வளவு பாப்புலாரிட்டி இருக்கும் என்பதை நம்முடைய வேந்தர் விஸ்வநாதன் அவர்கள் அழகாகச் சொன்னார்.

‘சு’னா, ‘ம’னா கட்சி 

என்றுதான் சொல்வார்கள்

ஜஸ்டீஸ் கட்சி என்று அழைக்கக் கூடிய அளவில் இல்லை; நம்முடைய திராவிடர் கழகத்தைக்கூட, சுயமரி யாதை இயக்கம்  என்று சொல்லமாட்டார்கள், அந்தக் காலத்தில். ‘சு’னா, ‘ம’னா என்று சொல்வார்கள்.

சாதாரணமாக கிராமத்தில் என்ன சொல்லுவார்கள் தெரியுமா? யாராவது கருப்புச் சட்டைக்காரர்கள் ஊருக்கு ஒருத்தர், இரண்டு பேர் இருந்தால், எப்படி சொல்வார்கள் என்றால், ‘‘அதான்யா, அந்தக் கட்சிக்கு ஒரே ஒரு ஆள் இருந்துகொண்டு, விவாதம் செய்வானே - அதான்யா, சாமி இல்லை என்று சொல்கின்ற கட்சிக்காரன்'' என்பார்கள்.

சாமி இல்லை என்று சொல்கிற கட்சிக்காரன் என்று சொன்னால், ‘‘ஓ, பெரியார் கட்சியா?'' என்பார்கள்.

கொள்கையைச் சொல்லி வெறுக்கிறார்கள் பாருங்கள், அதைவிட பெரிய வாய்ப்பு, 

பரிசு எங்களுக்கு வேறு உண்டா?

ஆக, அப்படி அறிமுகமாகக் கூடியவர்கள் நாங்கள். கொள்கை ரீதியாக, திட்டும்பொழுதுகூட, வெறுக்கும் பொழுதுகூட, கொள்கையைச் சொல்லி வெறுக்கிறார் பாருங்கள், அதைவிட பெரிய வாய்ப்பு, பரிசு எங்களுக்கு வேறு உண்டா?

அப்படிப்பட்ட ஒரு கொள்கையை இன்றைக் கும் நிலை நாட்டியிருக்கக் கூடிய அளவிற்கு இருப்பதற்கு இந்த ஏடுகள்தான் அஸ்திவாரம்.

அவ்வளவு பாப்புலரான ஜஸ்டீஸ் ஏட்டை நடத்த முடியவில்லை. இன்னுங்கேட்டால், பழைய பத்திரிகை யாவது இருக்கிறதா? என்றால், ஆவணக் காப்பகத் தில்கூட இல்லை. ஜஸ்டீஸ் பத்திரிகையை நீங்கள் பார்க்கவேண்டும் என்றால், கன்னிமாரா நூலகத்திற்குச் சென்று தேடிப் பார்க்கலாம்; அதற்கடுத்து பெரியார் திடலில் உள்ள நூலகத்திற்குத்தான் வரவேண்டும்.

இன்றைய இளைஞர்கள் இந்தத் தகவலைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

நாளைக்கு இதே கதி, நமக்குப் பின்னாளில் ஏற் படலாம். அதைத்தான் நண்பர்கள் இங்கே சொன்னார்கள். குறிப்பாக விஜயசங்கர் அவர்கள் சொன்னாரே, அவர்கள் எவ்வளவு திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்று.

நீதிபதியாக இருக்கின்றவரே ஏட்டிக்குப் போட்டியாக தீர்ப்பளிக்கிறார்

இப்பொழுது நீதிபதியாக இருப்பவர், ஏட்டிக்குப் போட்டியாக தீர்ப்புக் கொடுப்பது; ‘‘அரைக்கால் சட்டை அணிந்து, ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் வந்து, அய்க் கோர்ட் ஜட்ஜ் ஆகிவிட்டேன்’’ என்று வெளிப்படையாக சொல்லக்கூடிய அளவில் இருக்கிறார்.

அவர் நான்கு நாட்களுக்கு முன்பு பேசியதைப்பற்றி சொன்னார்; Bharatiya Jurisprudence  என்று.

நாங்கள் அடுத்த வாரம் கூட்டம் போடுகிறோம்; ‘‘பார் தீய ஜூரிஸ் புரூடென்ஸ்’’ அதை விளக்கிச் சொல்வோம். ஏனென்றால், மனுதர்மம்தானே!

அப்படி வரும்பொழுது நண்பர்களே, ஜஸ்டீஸ் பார்ட்டி என்று முடிவு செய்துவிட்டார்கள். ‘ஜஸ்டீஸ்’ இதழ் தொடங்குவதற்கே எவ்வளவு விஷமம் செய்தார் கள் என்ற வரலாற்றை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

மூன்று பத்திரிகைகளைத் தொடங்குவதற்கு 

முடிவு செய்தார்கள்

சர் பிட்டி தியாகராயர், நடேசனார், டி.எம்.நாயர் ஆகியோர் சேர்ந்து கட்சியைத் தொடங்கினார்கள். அந்தக் கட்சிக்குப் பத்திரிகைகள் அவசியம் என்று கருதி, மூன்று பத்திரிகைகளைத் தொடங்குவதற்கு முடிவு செய்தார்கள்.

ஆங்கிலத்தில் ‘ஜஸ்டீஸ் பார்ட்டி', தெலுங்கில், ‘ஆந்திரப் பிரகாசி', தமிழில் ‘திராவிடன்' என்று ஆரம்பித்தார்கள். முதன்முதலில் திராவிடன் என்று அடையாளம் கண்டது அவர்கள்தான். நாளேட்டுக்குப் பெயர் திராவிடன்.

கருணாகர மேனன் என்பவரை ஆசிரியராக நியமிக்க ஏற்பாடு செய்தார்கள். அவர் ஒரு ஜர்னலிஸ்ட்.

ஜஸ்டீஸ் பத்திரிகை இந்தத் தேதியில் வெளிவரும் என்கிற அறிவிப்பையும் செய்துவிட்டார்கள்.

கருணாகர மேனனை 

பார்ப்பனர்கள் மிரட்டி பணிய வைத்தனர்

அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, அன்னிபெசன்ட் மற்றும் சில பார்ப்பனர்கள் சேர்ந்து, கருணாகர மேனனை மிரட்டி, ‘‘‘இந்து’ பத்திரிகையில் உங்களுக்கு வேலை வாங்கி தருகிறோம்; ஆகவே, நீ ஜஸ்டீஸ் பத்திரிகைக்கு ஆசிரியராகப் போகக்கூடாது; அதைவிட சம்பளம் அதிகமாக வாங்கித் தருகிறோம்‘‘ என்று சொன்னவுடன், அவரும் அப்படியே நடந்துகொண்டார்.

தந்தை பெரியாரின் ஆதங்கம்!

புரட்சிக்கவிஞர் அவர்கள்கூட, ‘‘உன்னை விற்காதே!'' என்று எழுதினார். அய்யா சொல்வார், ‘‘நம்மாள் விற்றுக் கொள்வதைப்பற்றிக் கூட கவலையில்லை; நல்ல விலைக்கு விற்றுக்கொள்ளக் கூடாதா? குறைந்த விலைக்கு விற்றுக்கொள்கிறானே, அதை நினைத் தால்தானே கஷ்டமாக இருக்கிறது'' என்பார்.

ஆங்கிலத்தில் யார் எழுதுவார்கள்? பத்திரிகை குறிப்பிட்ட நாளில் வெளிவருமா? என்று மிகப்பெரிய கேள்விக்குறியானது.

உடனே டாக்டர் நாயர் அவர்கள், அந்தப் பத்திரி கையின் ஆசிரியராக இருந்து நடத்தினார்.

‘நான் பிராமின்’ இதழ் 

ஆவணக் காப்பகங்களில்கூட இல்லை!

அதற்கு முன்பு, சர் பிட்டி தியாகராயர் அவர்கள், ‘நான் பிராமின்' என்ற தலைப்பில் வார பத்திரி கையை நடத்தியிருக்கிறார். ஆனால், ஒரு இதழ் கூட இல்லை. ஆனால், ‘நேட்டிவிட்டி' என்ற தலைப்பில் வெள்ளைக்காரன் அனுப்புவான். அதுதான் இருக்கிறது. 

‘நான் பிராமின்' பத்திரிகையில் வந்த செய்தியை எதிர்த்து, எதிரிகள் பேசினார்களே, விமர்சனம் செய்தார்களே அந்தக் குறிப்புகள்மூலம்தான், ‘நான் பிராமின்' பத்திரிகையில் என்ன வந்தது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது.

டாக்டர் நாயர் அவர்கள் தொடங்கிய 

‘‘ஆண்ட்டி செப்டிக்‘‘  இதழ்!

அதேபோன்று, டாக்டர் நாயர் அவர்கள் ஒரு பத்திரிகையை நடத்தினார். அவர் லண்டனில் படித்தவர்; காது மூக்குத் தொண்டை சிறப்பு நிபுணர் அவர். அந்த வாரப் பத்திரிகையின் தலைப்பு  ‘‘ஆண்ட்டி செப்டிக்''. 

காயம் ஏற்பட்டால், செப்டிக் ஆகக்கூடாது என்று சொல்வார்கள் அல்லவா - அதுபோல, ‘‘ஆண்ட்டி செப்டிக்‘‘ என்ற தலைப்பில் நடத்தினார்.

இதுபோன்று நிறைய செய்திகள் இருக்கின்றன.

‘திராவிடன்’ பத்திரிகையை தொடர்ந்து நடத்த முடியவில்லை; ஆனால், தந்தை பெரியார் அவர்கள், 1925 இல் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்த பெரியார் அவர்கள், 1928 இல் ‘‘ரிவோல்ட்'' என்ற தலைப்பில் வாரப் பத்திரிகையைத் தொடங்கினார்.

தந்தை பெரியார் நடத்திய 

பத்திரிகைகளின் தலைப்புகள்!

பத்திரிகைளுடைய தலைப்புகளைப் பார்த்தீர்களே யானால், ‘‘குடிஅரசு'', ‘‘பகுத்தறிவு'',  ‘‘விடுதலை'', ‘‘ரிவோல்ட்'', ‘‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்'', ‘‘உண்மை'' இப்படித்தான் இருக்கும்.

‘ரிவோல்ட்' பத்திரிகையை 1928 இல் தொடங்கினார். கலகம் செய்; எதிர்த்துப் பேசு; சிந்திக்க வை என்று சொன்னார்.

அந்தப் பத்திரிகைக்கு இரண்டு ஆசிரியர்கள்; ஈ.வி.இராமசாமி அண்ட் எஸ்.இராமநாதன்.

இராமநாதன் அவர்கள் ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தவர். நன்றாக ஆங்கிலத்தில் எழுதுபவர்.

‘ரிவோல்ட்’ ஆங்கிலப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர் தந்தை பெரியார்!

அய்யாவிற்கு இருந்த துணிச்சலைப் பாருங்கள்; அய்யா எதுவரையில் படித்தவர்?

ஆனால், ஆங்கிலப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருக்கிறார். அந்தப் பத்திரிகை தொடங்கிய ஓராண்டில், எஸ்.இராமநாதன், வேறு கட்சிக்குச் சென்றார்; காங்கிரசில் சேர்ந்தார்; அமைச்சரானார்; இராஜகோபாலாச்சாரியாரி டம் சென்றார்.

அதற்குப் பிறகு,  இங்கே வந்து அய்யாவுடன் ரஷ்யாவிற்குச் சென்றார்.

ஓராண்டிற்குப் பிறகு ‘ரிவோல்ட்' ஆங்கிலப் பத்திரிகையில்  ஆசிரியர் ஈ.வி.இராமசமி என்றுதான் இருக்கும். மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார்.

ஆங்கிலம் தெரிந்தவன்தானே பத்திரிகையைப் படிக்கிறான்; 

அவன் திருத்திப் படித்துக் கொள்வான்!

சில பேர் அய்யாவிடம் வந்து சொன்னார்கள், ‘‘ஆங் கிலப் பத்திரிகை நன்றாக இருக்கிறது; ஆனால், கொஞ்சம் எழுத்துப் பிழை இருக்கிறது; பிழை திருத்துபவர்கள் கொஞ்சம் சரியாகப் பார்க்கவேண்டும்‘‘ என்றார்கள்.

அய்யா சொன்னார், ‘‘கருத்துக்காகத்தான் நான் பத்திரிகை நடத்துகிறேன். அவன் காம்ப்போசிசனா திருத்துறான்?  ஆங்கிலம் தெரிந்தவன்தானே பத்திரிகை யைப் படிக்கிறான்; அவன் திருத்திப் படித்துக் கொள் வான்'' என்றார்.

இந்தத் துணிச்சல், ஆங்கிலப் பத்திரிகையை நடத்து கிறவர்களுக்கு இருக்குமா? என்பதை எண்ணிப் பாருங்கள்.

‘‘அவன் படித்திருக்கிறான்; படித்தவனுக்குக் கருத்துப் போய்ச் சேரவேண்டும்; அதுதான் மிக முக்கியம். அவன் என்ன நம்முடைய இங்கிலீஷ் ஸ்டையிலாக இருக்கிறது என்று நமக்குப் பரிசா கொடுக்கப் போகிறான்? கருத்துப் போய்ச் சேருகிறது என்பதுதான் மிக முக்கியம்‘‘ என்பார் தந்தை பெரியார்.

அய்யா பெரியாரின் சமயோசிதம்

சிந்தனையாளர் எம்.என்.ராய் அவர்கள், 

‘‘என்னுடைய அரசியல் குருநாதர் பெரியார்'' என்று சொன்னவர்.

கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டிற்காக அய்யா சென்றார்; அண்ணாவும் சென்றார்.

கல்கத்தாவில் மாநாடு முடிந்து, சிம்லாவில் உள்ள எம்.என்.ராய் பங்களாவில் விருந்து கொடுக்கிறார்கள்.

பெரியார் நன்றாக சாப்பிடுவார் என்று சொல்லி, ‘‘சவுத் இண்டியன்’’ ஸ்டைலில் சாப்பாடு எல்லாம் தயாராக இருக்கிறது.

சாப்பாட்டில், ஊறுகாய் வைத்தார்கள்; அதைச் கொஞ்சம் சாப்பிட்டவுடன், அந்த ஊறுகாய் நல்ல ருசியாக இருந்திருக்கிறது.

‘‘வாட் யூ வாண்ட் நாயக்கர் சார்’’ என்று எம்.என்.ராய் கேட்கிறார்.

‘‘ஊறுகாய் வேண்டும்‘‘ என்று கேட்கிறார் பெரியார்.

அண்ணா பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்; என்னதான் நடக்கப் போகிறது பார்க்கலாம் என்று.

பெரியார் அவர்கள், ‘‘அய் வாண்ட்'', ‘‘அய் வாண்ட்'' என்று சொன்னார்.

‘‘வாட் யூ வாண்ட் மிஸ்டர் நாயக்கர்'', ‘‘வாட் யூ வாண்ட் மிஸ்டர் நாயக்கர்'' என்று இரண்டு பேர் வந்து கேட்கிறார்கள்.

அண்ணாவிற்கு பிக்கிள் என்று சொல்லத் தெரியும். இருந்தாலும் அய்யா அவர்கள் இந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதைப் பார்க்கலாம் என்று, கவனிக்காததுபோன்று சாப்பிட்டுக் கொண்டிருக் கிறார்.

‘‘அய் வாண்ட், டொக், டொக்'' என்று நாக்கை நீட்டிக் காட்டினார்.

‘‘ஓ, யூ வாண்ட் பிக்கிள்ஸ், பிக்கிள்ஸ்'' என்றார்கள்.

காரியம் நடைபெறவேண்டுமே தவிர, இலக்கணம், இலக்கியம், சட்டம், வரம்பு இவையெல்லாம் முக்கியம் கிடையாது தந்தை பெரியாருக்கு.

பெரியாரிடம் பயிற்சி 

பெற்றவர்கள்தான் நாங்கள்

ஆகவே, அப்படிப்பட்ட இந்த இயக்கத்தை அசைத்துப் பார்க்கலாம் என்று நினைக்கவேண்டாம்; பெரியாரிடம் பயிற்சி பெற்றவர்கள்தான் நாங்கள். 

பெரியார் மறைந்துவிடவில்லை; பெரியார் வாழ்கிறார்; பெரியார் உலகமெங்கும் பரவியிருக்கிறார். ‘‘உலகம் பெரியார் மயம்; பெரியார் உலக மயம்‘‘ என்று சொல்லக் கூடிய அளவில் இருக்கிறது.

ஏழு  சதவிகிதம்தான் 

எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள்

சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டபொழுது, ‘ரிவோல்ட்' பத்திரிகையை தொடங்கியபொழுது, 7 சதவிகிதம்தான் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள்.

அதனுடைய விளைவுதான், அய்யா அவர்கள் 1973 ஆம் ஆண்டு மறையும்பொழுது, 65 சதவிகிதம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் - இந்தியாவின் சராசரி சதவிகிதம்.

7 சதவிகித மக்களுக்கு படிக்கச் சொல்லிக் கொடுத்த இயக்கம் இந்த இயக்கம் இல்லையென்றால், நம்முடைய ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் பெரும்பான்மையாக படித்திருக்க மாட்டார்கள். 7 சதவிகிதத்தை 60 சதவிகிதமாக்கினார்.

பெரியார், மாலை நேரக் கல்லூரிகளை நடத்தி, தமிழ்நாட்டின் முதல் பேராசிரியராக இருந்தார்

அந்த 7 சதவிகிதத்தை 60 சதவிகிதமாக்க வேண்டும் என்பதற்காக அவர் கையாண்ட முறை - படிக்கத் தெரியாதவனிடம் புத்தகத்தை அச்சடித்துக் கொடுத்தால், அது பயனில்லை. ஆகவே, ஒவ்வொரு மாலை நேரமும், அண்ணா அவர்கள் சொன்னதுபோன்று, பெரியார் மாலை நேரக் கல்லூரிகளை நடத்தி, தமிழ்நாட்டின் முதல் பேராசிரியராக இருந்தார் என்பதுதான் இந்த இயக்கத்தினுடைய வளர்ச்சிக்கு அடித்தளம்.

3 மணிநேரம், 4 மணிநேரம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றுவார்.

‘திராவிட மாடல்’தான் உலகம் முழுவதும் பேசப்படக் கூடியதாக இருக்கிறது

ஆகவே, இந்த இயக்கத்தை எளிதில் அசைத்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடய சிறப்பு என்னவென்பதைப்பற்றி நம்முடைய விஅய்.டி. வேந்தர் அவர்கள் சொன்னார்.

குஜராத் மாடல் எங்கோ இருக்கிறது; ‘திராவிட மாடல்’தான் உலகம் முழுவதும் பேசப்படக் கூடியதாக இருக்கிறது என்பதுதான் மிக முக்கியம்.

இந்தப் பணியைத் தொடரவேண்டும். உங்கள் ஆதரவைத் தரவேண்டும்.

ஏடுகளை ஆதரியுங்கள்! திராவிட ஏடுகளை ஆதரியுங்கள், படியுங்கள், தூக்கிப் பிடியுங்கள்!

அந்த வகையில், அவர் எப்படி கல்வியில் சாதனை செய்திருக்கிறாரோ, அதேபோல, ஒவ்வொருவரும் இந்த ஏடுகளை வீடுகளில் பரப்புங்கள்.

‘‘பெரியார் பிஞ்சு’வை குழந்தைகளிடம் பரப்புங்கள். ஆங்கிலம் தெரிந்த நண்பர்கள், பாதி ஆங்கிலம் தெரிந்தவர்கள்கூட ஆங்கில அகராதியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு ‘மாடர்ன் ரேசனலிஸ்ட்’ பத்திரிகையை வாங்கிப் படியுங்கள்.

சமஸ்கிருதத்தை எப்படி அவர்கள் ‘புனிதம்' என்று கருதுகிறார்களோ, அதுபோல, திராவிட இயக்கத்தை வளர்க்கவேண்டுமானால், இந்த ஏடுகளுக்கு நீங்கள் இடம் கொடுங்கள். அது உங்களுக்காக அல்ல - வருங்கால சந்ததியினருக்காக! நம்முடைய லட்சியத்திற்காக என்று சொல்லி, நம்முடைய திராவிட இயக்க ஏடுகள்  - பகுத்தறிவு ஏடுகள் - அவை ஆயுதங்கள் என்று சொன்னால், வெறும் காகிதம் அல்ல - ஆயுதம் - போராயுதம் - பேராயுதம், ஆதரியுங்கள்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

No comments:

Post a Comment