பா.ஜ.க.வின் பொய்கள் தொடர்ந்து அம்பலமாகின்றன! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 31, 2022

பா.ஜ.க.வின் பொய்கள் தொடர்ந்து அம்பலமாகின்றன!

பழைய படங்களை எடுத்து இந்த ஆண்டில் நடந்ததாக சமூக வலை தளங்களில் பரப்பிய சங்கிகளின் மோசடித்தனத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார் திமுக மாணவரணி தலைவர் ராஜிவ்காந்தி.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா, நயினார் கோவில் ஒன்றியம் போகளூர் ஊராட்சியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையிலிருந்த பள்ளத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. அதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இறங்கி அதனை சரி செய்யுமாறு கோரிக்கை விடுத்து காட்சிப்பதிவு ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து இரு தினங்களில் புதிய குழாய் அமைக்கப்பட்டு, பள்ளமான சாலைகளும் சீர் செய்யப்பட்டன.

இந்தச் சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையில், பா.ஜ.க. தொழில்நுட்ப பிரிவு மாநிலத் தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “அடேய் உ.பிஸ் இதெல்லாம் எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?” என அந்த காட்சிப் பதிவில் இணைத்து பதிவிட்டுள்ளார்.

அந்த காட்சிப் பதிவில், ``முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தி.மு.‌க. மாவட்டப் பொருளாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் ஆணைக்கிணங்க நடு ரோட்டில் நீச்சல் குளம் அமைத்து கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என அந்த வாலிபர் கூறுவது போன்று இருந்தது.

ஆனால் இந்த காட்சிப் பதிவு கடந்தாண்டு எடுக்கப்பட்டது எனவும், காட்சிப் பதிவு வெளியாகி, இரு தினங்களில் அது சீர் செய்யப்பட்டது எனவும், சீர் செய்யப்பட்ட ஒளிப் படங்களுடன் பதிவிட்டிருக்கிறார் தி.மு.க மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி.

இது தொடர்பாக அவர், ``கடந்தாண்டு அக்டோபர் மாதம் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக சாலையில் இருந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கியது. அதில் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இறங்கி முதலமைச்சர் இதனை சீர் செய்து கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தார். அதன் பின்னர் இரண்டு நாள்களில் குழாய் மாற்றப்பட்டு, பள்ளமான சாலையும் சரி செய்யப்பட்டது.

ஆனால். பா.ஜ.க. தொழில்நுட்பப் பிரிவு மாநிலத் தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமார், அந்த காட்சிப் பதிவில் குரலை மாற்றி தி.மு.க-வுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு பதிவிட்டுள்ளார். தற்போது பரமக்குடி சட்டமன்ற உறுப்பினராக தி.மு.க-வைச் சேர்ந்த முருகேசன் என்பவர் உள்ளார். ஆனால், அவர் பதிவிட்டுள்ள காட்சிப் பதிவில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் ஆணைக்கிணங்க என அந்த வாலிபர் கூறுகிறார். இதிலிருந்தே அந்த காட்சிப் பதிவு ‘எடிட்’ செய்யப்பட்டு குரலை மாற்றி வெளியிடப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அதன் காரணமாகத்தான் அவரது பதிவு பொய் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காக சீர் செய்யப்பட்ட படங்களை பதிவிட்டேன்” என ராஜீவ்காந்தி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment