இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 14, 2022

இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு

சென்னை, டிச.14- சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிச.14) தமிழ்நாடு அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று ( 14.12.2022) அமைச்சராகப் பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் சரியாக காலை 9.30 மணிக்கு தொடங்கிய விழாவில் முதலில் தேசிய கீதமும், பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. 

பின்னர் ஆளுநரிடம் அமைச்சராக பொறுப்பேற்கும் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். பின்னர் தலைமைச் செயலர் ஆளுநரை பதவிப் பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுத்தார். அதன் பின்னர் உதயநிதிக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் பதவியேற்பு உறுதிமொழியில் அமைச்சர் உதயநிதி கையெழுத்திட்டார். ஆளுநரும் கையொப்பமிட்டார். அவருக்கு ஆளுநர் மலர்கொத்து வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், "அனைவரின் ஒத்துழைப்புடன் எனக்கு அளிக்கப்பட்டு இருக்கும் பொறுப்பை என்னால் முடிந்த அளவுக்கு சரியாக செய்வேன். தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றும் திட்டம் உள்ளது. தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு தொகுதிக்கும் மினி விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளையும் செய்ய வேண்டும். முதல்கட்டமாக இந்தப் பணிகளில் எனது கவனம் இருக்கும்.

என் மேல் விமர்சனம் வைப்பவர்கள் வாரிசு அரசியல் என்று கூறுவார்கள். எனது செயல் மூலம் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பேன். அதற்கான பணிகளை தொடர்ந்து செய்வேன். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் ஆலோசனையின் படி செயல்படுவேன். கமல் தயாரிப்பில் நடிக்க போகும் படத்தில் இருந்து விலகிவிட்டேன். எனது கடைசிப் படம் மாமனிதன் தான். அதற்கு மேல் நடிக்க மாட்டேன்." இவ்வாறு அவர் கூறினார்.

'திராவிட மாடல்' அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்புக்கு நன்றி: உதயநிதி 

பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், "எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்" என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment