திருப்பம் தரும் திருப்பத்தூர் வாரீர்! வாரீர்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 14, 2022

திருப்பம் தரும் திருப்பத்தூர் வாரீர்! வாரீர்!!

மின்சாரம்

வரும் டிசம்பர் 17 அன்று மாலை திருப்பத்தூரில் ‘சுயமரியாதைச் சுடரொளி’ ஏ.டி.கோபால் நூற்றாண்டு விழா, தமிழர் தலைவர் ஆசிரியரின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, ‘விடுதலை’ சந்தா வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் எழுச்சியுடன் நடைபெற உள்ளன.

இயக்க வரலாற்றில் அன்றைய வட ஆற்காடு மாவட்டத்திற்கு தனிச் சிறப்பான அத்தியாயம் உண்டு. அதிலும் குறிப்பாக திருப்பத்தூருக்கு தனி முத்திரை உண்டு. அந்த வகையில் நடக்க இருக்கும் முப்பெரும் விழா தனித்தன்மையுடன் ஒளி வீசும்! மாநாட்டில் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி, மேனாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங் கோவன்,  திமுக மகளிர் அணி செயலாளர் - மக்களவை உறுப்பினர் கனிமொழி,  தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண் டியன்,  விடுதலை  சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், பொறியாளர் மு.செந்தில் அதிபன் (அரசியல் ஆய்வு மய்ய செயலாளர் மதிமுக),  பெரியார் பன்னாட்டு அமைப்புத் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் (அமெரிக்கா) ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்குகின்றனர்.

இதே திருப்பத்தூரில் 2010 அக்டோபர் 19 அன்று மண்டல மாநாடு திராவிடர் எழுச்சி மாநாடு வெகு நேர்த்தியாக நடைபெற்றன. அன்றைக்கு கழக இளைஞரணி பொறுப்பிலிருந்த தோழர் கே.சி.எழிலரசன் - இன்றைக்கு  மாவட்ட கழக தலைவராக பணியாற்றி வருகிறார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை வருகின்ற 17ஆம் தேதி முப்பெரும் விழாவிற்காக பம்பரம் போல் சுழன்று, சுழன்று பணியாற்றுகின்றனர். எழிலரசன் தலைமையில் மாநில  கழக அமைப்பாளர் உரத்த நாடு குணசேகரன்,  கழக அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், மாவட்ட கழக செயலாளர் பெ.கலைவாணன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் அண்ணா.சரவணன், மண்டல கழக இளைஞரணி செயலாளர் எ.சிற்றரசு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் தமிழ்ச் செல்வன், நகர கழக செயலாளர் தோழர்  ஏ.டி.ஜி.சித்தார்த்தன், தஞ்சை ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு இராமலிங்கம், உரந்தை முத்து ஆகியோர் அடங்கிய பெரும்படை விழாவின் நேர்த்திக்கு பெரும்பாடுபட்டு வருகின்றனர். 2010 அக்டோபரில் திருப்பத்தூரில் நடைபெற்ற மண்டல மாநாடு திராவிடர் எழுச்சி மாநாடு மாநாட்டில் 5000 கழகக் கொடிகளை பறக்கவிட்ட ஒரு வரலாறு உண்டு. ஒரு லட்சம் காகிதக் கொடிகள் எங்கெங்கும் பறந்து அனைவரையும் வரவேற்றன! நடக்கவிருக்கும் முப்பெரும் விழா விற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து கழகத்தினர் திரண்டு வர இருக்கின்றனர். இன்றைக்கு கழகம் இளைஞர்களின் பாசறையாகப் பரிணாமம் பெற்றிருக்கிறது. அதனை திருப்பத் தூரில் காணப் போகிறோம்.

1929 மே நான்காம் தேதி வேலூரில் நடைபெற்ற வடாற்காடு மாவட்ட பார்ப்பனர் அல்லாத இளைஞர் மாநாட்டில் தந்தை பெரியார் ஆற்றிய உரை இந்த இடத்தில் குறிப்பிடத் தகுந்ததாகும். இதோ தந்தை பெரியார் பேசுகிறார்: “எனது இயக்கத்தையும், தொண்டை யும், எனது உடல் நலிவும், சரீர தளர்ச் சியும், எதிரிகள் தொல்லையும், ஒரு சிறிதும் தடை செய்ய முடியாமல், என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்தி, வெற்றிக் கொடியை நாட்டி வருவதற்கு பெரிதும் உதவியாய் இருந்து வருகிறது.

இது வாலிப இயக்கமே ஆகும். உண்மையிலேயே இப்போதைய வாலிபர்களிடம் எனக்கு அளவுக்கு மேற்பட்ட நம்பிக்கை இல்லாது இருக்குமானால் என்னுடைய கடையை வெகு நாளைக்கு  முன்பு கட்டிக் கொண்டு வேறு ஏதாவது ஒரு துறையில் மூழ்கி இருப்பேன்.

ஆதலால் இந்த வாலிப இயக்கம் தான் நமது நாட்டிற்கு மட்டுமல்லாமல், வெளிநாட்டிற்கும் சுதந்திரமும், விடுதலையும், சுயமரியாதையும் வாங்கிக் கொடுக்கப் போகின்றது. எப்படி எனில், எந்த ஒரு நாட்டிற்கும் அரசியல் தலைவனோ, தேசிய தலைவனோ மதத் தலைவனோ பாஷைத் தலைவனோ, சாஸ்திரியோ முயற்சித்து உண்மையான சுதந்திரமோ விடு தலையோ வாங்கிக் கொடுத்ததாக காலந்தொட்டு நமக்கு ஆதாரங்கள் கிடையாது.

எங்கும் வாலிபர் கிளர்ச்சி தான் விடுதலை அளித்திருக்கிறது. ஒவ்வொரு விடுதலை முயற்சியும் கட்டுப்பாட்டை உடைத்தெறிந்த பின் தான் வெற்றி பெற்றிருக்கின்றது. கட்டுப்பாடுகளை உடைப்பதற்கு வாலிபர்களால் தான் முடியுமே ஒழிய, மற்றவர்களால் சுலபத்தில் சாத்தியப்படாது. ஆதலால் நான் முழுவதும் இந்த வாலிபர்களையே பூர்வமாக நம்பி இருக்கின்றேன். அவர்கள் இயக்கமும் கிளர்ச்சியும் சீக்கிரத்தில் உலகை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இம் மகாநாட்டை திறக்கின்றேன்.” என்று 93 ஆண்டுகளுக்கு முன்பு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தொலைநோக்கோடு முழங்கினார். இன்றைக்கும் அதே நிலைதான்!

மதவாத சக்திகள் தலை தூக்கி நிற்கும் இந்தக் காலகட்டத்தில் இளைஞர்கள் பட்டாளம் எஃகு தோள் தூக்கி இயக்கத்தை நோக்கி வீறு கொண்டு எழுந்து வருகின்றனர். திருப்பத்தூரிலும் அந்தத் திருப்பத்தை நாம் பார்க்கப் போகிறோம்.  விடுதலை சந்தா தொகையை தமிழர் தலைவரிடம், எடைக்கு இருமடங்கு கொடுத்து சரித்திரம் படைத்த ஊராயிற்றே திருப்பத்தூர். இயக்க தோழர்களே! இன உணர்வெழுச்சிப் புயலாய் வாரீர்! வாரீர்!! குடும்பம் குடும்பமாக வாரீர்!

No comments:

Post a Comment