ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 24, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்


கேள்வி 1 : தெற்கு இரயில்வேயில் 80 விழுக்காடு பணி இடங்களில் வட இந்தியர்கள் நியமனமாகி இருப்பதுபோல் பிற இரயில்வே மண்டலங்களில் தென் இந்தியர்கள் இல்லையே?

- வாசுதேவன், திருத்தணி 

பதில் 1 : இரயில்வேக்கள் வடஇந்தியருக்கே என்பது மட்டுமா? நெய்வேலி நிலக்கரி நிறுவனம் போன்றவை - பல பொதுத்துறை நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளவற்றில் 'பகற்கொள்ளை' போல் இப்படி கூச்சநாச்சமின்றி... நமது மக்கள் வெறும் "அமைதிப் பார்வையாளர்களாகவே" இருப்பதால் இந்தக் கேடுகெட்ட நிலை. தொடர் அறப் போராட்டங்கள்தான் இக்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இரயில்வேயில் நாம் என்ன கேட்கிறோம் என்பதுகூட அந்த வடஇந்தியப் பணியாளர்களுக்குப் புரிவதில்லையே! அது கூடுதல் தொல்லை.

கேள்வி 2 : தியாகத்தின் நிறமாக கருதப்படும் காவியை ஹிந்துத்துவ அமைப்பினர் இழிவுபடுத்த பயன்படுத்துகிறார்களே?

- வெங்கடேசன், வேளச்சேரி

பதில் 2 : காவி - தியாகத்தின் நிறமா? என்ன தியாகம்? புரியவில்லையே! "சிரித்திடும் நரிகள் சிவ சொரூபத்தில்" என்ற அண்ணாவின் வசனம்தான் காவி. அதுதான் ஹிந்துத்துவா அமைப்பினர் ஏற்பது. ஒருவேளை அடிகளார் போன்றவர்களின் காவியை வைத்து அப்படி சொல்லுகிறீர்களோ! அது கறைபடாத, காவிகளுக்குப் பயன்படாத காவி - புரிந்து கொள்ளுங்கள்!

கேள்வி 3 : ஆளுநருக்கு எதிராக மகாராட்டிராவில் எதிர்க்கட்சி, கேரளா, தமிழ்நாடு, தெலங்கானாவில் ஆளும் கட்சிகள் ஆளுநரை நீக்க கோரிக்கை விடுத்துள்ளனவே?

- ஆறுமுகம், காஞ்சி

பதில் 3 : அவை மட்டுமா? மேலும் பல எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களும் கூட போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் - இம்மாதிரி கோரிக்கைகள் வலுப்பெறும் வாய்ப்புகள் நாளும் பெருகிவரும் நிலைதான் ஏற்பட்டுள்ளது.

கேள்வி 4 : புதுச்சேரியின் மேம்பாட்டிற்கான எனது முயற்சிக்கு அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று புதுச்சேரி முதலமைச்சர் புலம்பி உள்ளாரே?

- வேலுச்சாமி, வந்தவாசி

பதில் 4 : அவர் இப்போது புலம்புவதில் அர்த்தமே யில்லை; பா.ஜ.க.வுடன் தன் கட்சி கூட்டுச் சேர சம்மதிக்கும் முன்பே அல்லவா யோசித்திருக்க வேண்டும்? இது தும்பை விட்டு வாலைப் பிடிப்பதாகும்!

கேள்வி 5 : பகவத் கீதை, வேதங்களை பள்ளிப் பாடங்களில் சேர்க்கவேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளதே? 

- கோபாலகிருஷ்ணன், திருச்சி

பதில் 5 : இதைக் கண்டித்து வருகிற 2023 ஜனவரி முதல் வாரத்தில் தமிழ்நாடு முழுவதிலும் உளள திராவிட மாணவர் அமைப்புகள் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் முன்வந்து இதனை முறியடிக்கும் வகையில் அறவழியில் கண்டன ஆர்ப்பாட்டங்களை  நடத்திட ஆயத்தமாக வேண்டும்.

கேள்வி 6 : ஒரு மாதத்தில் மட்டும் பாஜக பிரமு கர்கள் 10 பேர் நில மோசடி, மிரட்டி பணம் பறித்தல், என்.அய்.ஏ. பெயரில் ரூ.2 கோடி அபகரிப்பு உள்ளிட்ட மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனரே?

- காவேரி, சேலம்

பதில் 6 : "பா.ஜ.க. என்றால் ஒரு தனித்தன்மையானது" என்று அதன் தலைவர்கள் முன்பு கூறுவார்கள். இப் படி கிரிமினல்களின் கூடாரமாக இருப்பதை மனதில் வைத்துதான் இப்படிக் கூறினார்கள் போலிருக்கிறது!

கேள்வி 7 : தமிழ்நாடு பாடத்திட்டத்தை இந்த ஆண்டோடு நிறுத்தி உள்ளதே புதுச்சேரி அரசு?

- கார்மேகம், மதுரை

பதில் 7 : ஆரிய பாடத் திட்டம் இனிமேல் அமலாக வேண்டும் என்பதற்கான ஆயத்தம்போலும். புது ச்சேரி இளைஞர்கள்,மாணவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? பொறுத்திருந்து பாருங்கள்!

கேள்வி 8 : அலைபேசி மோகத்தில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட பள்ளி - கல்லூரி மாணவர்கள் தன்னுயிரை மாய்த்துள்ளனரே?

- வேணு, வேலூர்

பதில் 8 : வேதனை, தாங்க முடியாத வேதனை. மாணவ, இளைஞர்களுக்குப் போதிய அளவுக்கு பெற்றோரின் நிலைமை - கவலையைப் புரிய வைக்க வேண்டும்.

கேள்வி 9 : ஆப்கானின்  தாலிபான் அரசு பெண்களை பள்ளி, கல்லூரிகளில் படிக்க தடைசெய்துள்ளதே?

- தமிழரசி, ஆவடி

பதில் 9 : பல உலக நாடுகளும் வெகுண்டெழுந்து கடும் கண்டனத்தை எழுப்பி, தலிபான்களின் இந்தக் கொடுமைக்கு - பெண் பிள்ளைகளது கல்விக் கண் ணைத் தோண்டும் கொடுமைக்கு - முற்றுப்புள்ளி வைக்க அழுத்தம் கொடுப்பது அவசரம் - அவசியம். மதவெறியின் அடிப்படைவாதம் எப்படிப்பட்டது - புரிகிறதா?

கேள்வி 10 : 2022இல் உங்கள் நினைவில் நின்ற நிகழ்வு எது? 

- மாசிலாமணி, செங்கை

பதில் 10 : 11.7.2022 அன்று அண்ணா அறிவாலயம் என்ற தி.மு.க.வின் தலைமை செயலகத்தில், "சமூகநீதிக்கான சரித்திர நாயகர்" நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூபாய் 20,000 தந்து, எனது வேண்டுகோளை ஏற்று `விடுதலை' நாளேட்டுக்கு ஆயுள் சந்தாதாரராக ஆனார்.

அதுபோலவே அமைச்சர் திரு.துரைமுருகன் அவர் களும் (பொதுச் செயலாளர், தி.மு.க.), தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு அவர்களும் ஆயுள் சந்தாதாரராக ஆனார்கள்.  இதை எனது வாழ்நாளில் அரிய பேறாகக் கருதுகிறோம்.

No comments:

Post a Comment