பகுத்தறிவுப் பகலவனின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் சூளுரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 24, 2022

பகுத்தறிவுப் பகலவனின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் சூளுரை!

சனாதனத்தை விரட்டுவோம் - ஜனநாயகத்தை - சமூகநீதியைப் பாதுகாப்போம்!

நம் உயிர் மூச்சு உள்ளவரை இலட்சியத்திற்காக நாம் எதையும் இழக்கத் தயாராவோம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

சனாதனத்தை விரட்டுவோம் - ஜனநாயகத்தை - சமூகநீதியைப் பாதுகாப்போம்! நம் உயிர் மூச்சு உள்ளவரை  இலட்சியத்திற்காக நாம் எதையும் இழக்கத் தயாராவோம்! பகுத்தறிவுப் பகலவனின் 

49 ஆம் ஆண்டு நினைவு நாளில் இதுவே நம் சூளுரை  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பகுத்தறிவுப் பகலவன், ஒப்பற்ற சுயசிந்தனையாளர் தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைந்து, கொள்கையால் வாழ்ந்து கொண்டுள்ளார். அக்கொள்கை விரைந்து பரவிக் கொண்டுள்ளது. இன்று (24.12.2022) 49 ஆம் ஆண்டு நினைவு நாள் ஆகும்!

‘‘தந்தை பெரியார் என்பவர் தனிமனிதரல்ல; அவர் ஒரு சகாப்தம், திருப்பம், காலகட்டம்'' என்றார் பேரறிஞர் அண்ணா!

ஆரியம் அலறுகிறது!

இன்று புதிய இளைஞர்கள் தந்தை பெரியாரின் தத்துவங்களை  ‘சுவாசித்த' நிலையில், தந்தை பெரியார் சிலையாக மட்டுமில்லை; சீலமாக - கொள்கை லட்சியங் களின் குன்றாப் புயலாக எப்போதும் வீசி சனாதனக் கோட்டையைச் சரியச் செய்து வருவது கண்டு ஆரியம் அலறுகிறது!

காவிகள் கலங்கித் துடிக்கிறார்கள்!

விபீடணக் கூட்டம் விசை இழந்து நிற்கிறது!

ஈரோட்டுப் பாதையில் நடைபோட உலகம் தயாராகி விட்டது!

மாறாட்டம் இன்றி கொள்கை வீச்சுப் போர்ப் பரணியைப் பாடுகிறது!

''இறுதிச் சிரிப்பு எமக்கே!''

என்று காட்டுபவர் பெரியார்!

எரிமலையை நெருங்க நினைத்த நரிக் குஞ்சுகள் வாலாட்டம் போடுகின்றன. எப்படித்தான் பற்பல அவதாரங்களில் ஆர்.எஸ்.எஸ்., சனாதனம், வைதீக நெறி என்றாலும், ஆட்சியை சூழ்ச்சியால் பிடிக்க வித்தைகள் பல செய்தாலும், ‘இறுதிச் சிரிப்பு எமக்கே' என்று காட்டுபவர் பெரியார் என்ற பேராயுத பாசறை உற்பத்தியாளர்!

அவரது உடல் மறைவினால் எக்காளமிட்ட ஆரியம், இடுப்பொடிந்த நிலையில் கிடந்தாலும், கைப்பிடிகளால் உலாவரத் துடிக்கின்றது!

பகுத்தறிவுப் பகலவனின் முன்னோக்கு!

முன்னோக்காளர் தந்தை பெரியார் பல ஆண்டு களுக்கு முன்பே - தெளிவாகக் கூறினார் - அறுதியிட்டு!

‘‘ஆரியர்கள் நம்மைக் கடவுள் துவேஷி களாகக் காட்டினாலும் நம் இயக்கம் மறைந்து போய்விடாது.

நம் இயக்கம் (திராவிடர் கழகம் - திராவிடர் இயக்கம் - சுயமரியாதை - பகுத் தறிவு இயக்கம்) நீரற்ற கட்டாந்தரை யானாலும், வளர்ச்சியடையக் கூடிய பனைமரம் போன்றது.

அதற்கு யாரும் தண்ணீர் ஊற்ற வேண் டிய அவசியமில்லை; அது தானாகவே வளரும்.

மனிதனுக்கு வெட்கமும், ரோஷமும் ஏற்படுவதற்காகவே சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டது.

சுயமரியாதை இயக்கம் மனித சமு தாயத்தை மாற்றியமைக்க ஏற்பட்ட இயக்கமாகும்.

இந்தக் காரியம் ஒரு சமூகப் புரட்சியால் ஏற்பட வேண்டியதேயொழிய, சிரிப்பு, விளையாட்டால் ஏற்படக் கூடியதல்ல!

இதற்காக அநேக தொல்லைகளை அனுபவிக்க வேண்டி வரும்.

அஸ்திவாரத்தில் கையை வைத்து, ஜாதியை ஒழிப்பதற்கு, இன்று இந்த நாட்டில் சுயமரியாதை இயக்கம் தவிர, வேறு எந்த இயக்கமும் இல்லை என்பதை நன்றாக ஞாபகத்தில் வையுங்கள்!''

மேற்கண்ட கொள்கைப் பிரகடனங்களும், தெளி வுரை முழக்கங்களும் இந்நாளில் நமது மூச்சுக் காற்றா கட்டும்!

''பெரியாரின் போர் முறை'' - 

அண்ணா விளக்கம்!

‘‘மூல பலத்தை முறியடிப்பதுதான் தந்தை பெரியாரின் போர் முறை'' என்ற அண்ணா தந்த விளக்கம் - நம் லட்சியப் போரின் தனித்தன்மையைப் பறைசாற்றும்!

முன்பே அருமை அன்னையார் தலைமையில் 6.1.1974 திருச்சியில் எடுத்த சூளுரையை மீண்டும் உறுதியாக்கிச் சூடேற்றிக் கொள்ளும் நமக்கு - தமிழ் இன உணர்வாளர்களுக்கு இந்நாள் சூளுரைப் 

புதுப்பிக்கும் புத்தெழுச்சி நாளாகும்!

சனாதனத்தை விரட்டுவோம் - ஜனநாயகத்தை - சமூகநீதியைப் பாதுகாப்போம்!

சனாதனத்தை விரட்டுவோம் -

ஜனநாயகத்தை - சமூகநீதியைப் பாதுகாப்போம்!

நம் உயிர் மூச்சு உள்ளவரை இலட்சியத்திற்காக நாம் எதையும் இழக்கத் தயாராவோம்!

வாழ்க பெரியார்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

24.12.2022

No comments:

Post a Comment