மணக்கும் இனிக்கும் மலர் தமிழர் தலைவர் ஆசிரியர் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 21, 2022

மணக்கும் இனிக்கும் மலர் தமிழர் தலைவர் ஆசிரியர் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் (2)

முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

நேற்றைய தொடர்ச்சி...

அதுபோல் இந்த ஆசிரியர் மலரில், ‘தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வினாக்கள் 25’ என்று 18 முதல் 31ஆம் பக்கம் வரை இவர் தொடுத்த வினாக்களும், அவர் அளித்த பதில்களும் படிப்பவர்களுக்குச் சுவை அமுதம் ஊட்டுகின்றன. வாரம்தோறும் ‘விடுதலை ஞாயிறு மலரில்’ ஆசிரியர் விடையளிக்கிறார். ஆனால், இங்கே கவிஞர் கேட்ட வினாக்கள் தனி ரகம் என்றால் ஆசிரியர் பதில்கள் ஒரு தனித்த வகை எனலாம்.

அது மட்டுமல்லாது அத்தனை பக்கங்களிலும் ‘வினா-விடையோடு’ இடம் பெற்ற படங்களும் கூடச் சிறப்பாக உள்ளன.

‘நச்சென்று’ கேள்வி என்போமல்லவா? அத்தகைய வினாக்களில் ஒன்று அப்பகுதியில் இடம் பெற்றவை.

“சொந்த புத்தி தேவையில்லை தந்தை பெரியார் தந்த புத்தி போதும்’ என்று நீங்கள் சொல்லுவது தந்தை பெரியார் கூறும் வளர்ச்சிப் பற்றுக்கு எதிரானது அல்லவா” கவிஞரின் துணிவான கேள்வியும்கூட.

ஆசிரியர் பதில்: மேலெழுந்தவாரியாகப் பார்ப்ப வர்களுக்கு அப்படித் தோன்றும். அதனடிப்படையில் அவர்கள் இப்படி ஒரு கேள்வி எழுப்புவது நியாயம் தான். ஆனால், சற்றுக் கூர்ந்து அந்த வாசகங்களை ஆய்வு செய்து பாருங்கள்.

‘சொந்த புத்தியை விடப் பெரியார் தந்த புத்தி உணர்ச்சி வசப்படாத அறிவு வயப்பட்ட அனுபவப்  பிழிவான பக்குவப்பட்ட புத்தி, நான் அவரைப் பின்பற்றும் ஓர் எளிய தொண்டன் என்பதால் அது முரண்பட்டதல்ல; மாறாக, சொந்த புத்தி என்ற குறுகலான பாதையை விடுத்து மேலும் அறிவை விரிவாக்கியும், ஆழப்படுத்தியும் உள்ள வளர்ச்சியை மறுக்காத என்றும் ஏற்கும் புத்தி என்பதுதான் அது!

‘விசாலப் பார்வையால் - உலகை விழுங்கும்‘ பாடம் கற்ற புத்தி அது. சொந்தப் புத்திக்குப் பல சபலங்கள் ஏற்படலாம். பெரியார் தந்த புத்தி - அது ஏற்படாது தடுக்கும். சொந்த புத்தியைப் புடம் போட்டதே பெரியார் தந்த புத்தி - பிரச்சினைகளை எதிர் கொள்வதில் - எதிர் நீச்சலில் - அதுதான் பாது காப்பு நிறைந்த பக்குவத்தோடு -இலட்சிய உழைப் பாளிகளுக்குப் பலன் தரும் கலங்கரை வெளிச்சம். வளர்ச்சிப் பற்றின் விரிவே அது. முரண் அல்ல. தடையில்லை  வழி தவறாதபடி சிறந்த திசைகாட்டி - நடத்தும் வழித்துணைவன்.”

கவிஞரின் கேள்விக் கணைகள் 25ற்கு ஆசிரியர் அளித்த பதில்கள் 25இல் இது ஒன்று. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல. இன்னும் ஒன்றிரண்டைத் தொட்டுக் காட்ட ஆசைதான். மலரின் மற்ற மலர்களை - எழுத்தோவியங்களை நுகர வேண்டுமே! 

தொண்டருக்கு இலக்கணம்

கேள்வி - பதில் பக்கங்களூடே நம்மை ஈர்க்கும் ஒன்று, பெரியார் தொண்டருக்குரிய இலக்கணம் என்று நான்கு இலக்கணங்களை ஆசிரியர் வகுத்தளித் தது காண்கிறோம்.

இன்பமும் துன்பமும் ஒன்றாகக் கருதுபவர்கள்.

* ‘வாழ்க’ ‘ஒழிக’ என்ற இரண்டையும் ஒன்றாக ஏற்றுக் கொள்பவர்கள்.

* சடங்கு சம்பிரதாயங்களுக்கு ஆளாகாதவர்கள்.

* எந்த நிலையிலும் நிலைகுலையாத உறுதி. பற்றற்ற உள்ளம் படைத்தவர்கள்.

வீரமணி காலம் ரொம்ப மாறிய காலம் ஆகிவிட்டது

அண்ணா ஒரு காலத்தில் ‘விடுதலை’ ஆசிரியராக இருந்தார். அவருக்குப் பின்னே மூன்று தலைமுறைக் காலம் கழித்தே தமிழர் தலைவர் விடுதலை ஆசிரியர் ஆனார். அவர் ஆசிரியரான பின் விடுதலை பெற்ற வளர்ச்சி, மாற்றம், புதுமை குறித்து என்.வி.நடராசன் அண்ணாவிடம் கூற அண்ணா கூறிய சுவையான பதிலையும் காண்கிறோம்.

என்.வி.என் அவர்கள், “அண்ணா, நமக்கெல்லாம் தராத தாராள பொருளாதார சுதந்திரத்தினை அய்யா அவர்கள் வீரமணிக்கு இப்போது விடுதலையில் வழங்கி உள்ளார் என்பது அவர் பல கலர்களில் அட்டை மற்றவைகளை வெளியிடுவதில் இருந்து தெரியவில்லையா?” எனக் கூற அண்ணா சிரித்துக் கொண்டே, “ஆமாம் நான் கூட விடுதலை மலரினைப் பார்த்து யோசித்தேன். நமக்கெல்லாம் தராத சுதந்திரத் தினை வீரமணிக்கு ஏராளம் தந்துள்ளார் அய்யா. அதனால்தான் விடுதலை மலர் அடையாளம் தெரி யாத அளவுக்கு மாறி உள்ளது. ரொம்ப ஆச்சரியமாகத் தான் உள்ளது. வீரமணி காலம் ரொம்ப மாறிய காலம் ஆகிவிட்டது” என்று குறிப்பிட்டாராம்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் பார்வையில்

செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டின் 80ஆம் ஆண்டு விழாவில் 18.2.2009 அன்று நிகழ்த்திய உரையில், ‘கருவூலமாகத் திகழ்கிறார் வீரமணி’ என முத்தமிழ் அறிஞர் கலைஞர் தம் உரையில்,

“நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர் களுடைய அரும் முயற்சி இன்றும் நூறாண்டு களுக்குப் பிறகு திராவிட இயக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள தந்தை பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்ள எங் கெங்கிருந்து ஆதா ரங்கள் திரட்டப்பட்டன எப்படியெல்லாம் நம் முடைய வரலாறு முன் னால் இருந்தது பின்னால் அமைந்தது என்பதை யெல்லாம் இன்றும் நூறாண்டு களுக்குப் பிறகு தெரிந்துகொள்ள வேண்டுமென் றாலும் அதற்கான கருவூலமாக நம்முடைய வீரமணி அவர்கள் விளங்குகிறார்கள் என்று சொன்னால் அதை யாராலும் மறுக்க முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர்

‘தாய்க்கழகத் தலைவரின் தொண்டறம் வாழ்க! வெல்க!’ என வாழ்த்தும் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

“இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல், ஹிந்தியைப் பொதுமொழியாக்கும் பரிந்துரை - மாநிலங்களில் மறைமுக இரட்டையாட்சி எனச் சமூகநீதிக்கும், ஜனநாயகத்திற்கும் தாய்மொழிக்கும் எதிரான சக்திகள் கிளைத் தெழும் சூழலில் அதனை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்திச் சமூகநீதி நீதியிலான சமத்துவத்தை நிலைநாட்டிட திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிட மாடல் அரசு ஆயத் தமாக இருக்கிறது. அத்தகைய நெடும் பயணத்தில் ஆசிரியர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலும் துணை நிற்றலும் பெரும் வலிமை சேர்க்கும்” என்ற தோடு, “90 வயதிலும் பெரியார் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டிடும் தாய்க் கழகத் தலைவர் அவர் களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று உணர்ச்சிபூர்வமாக வாழ்த்தைத் தெரிவிப்பதைக் காண்கிறோம்.

சமூகநீதிக் காவலர்

சமூக நீதி என்றால் இந்திய அளவில் அழிக்க முடியாத பெயர், மறக்கவியலாத பெயருக்கு உரியவர். இந்தியத் தலைமை அமைச்சர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள். அவர் உள்ளத்தில் நட்பு வட்டத்தில் நம் ஆசிரியர் எவ்வளவு நெருக்கமாய் இணைந்திருக்கிறார் என்பதை அந்நாளில் வெளியிட்ட கருத்து மணிகளில் காண்கிறோம்.

“நான் என்னுடைய நன்றியை வெளிப்படையாக நண்பர் வீரமணி அவர்களுக்கத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், மண்டல் அறிக்கையை நான் நடைமுறைக்குக் கொண்டு வந்தேன். அப்போது வடபுலமே எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தது. ஆனால், ஒரு மாபெரும் கவசக் கோட்டையாக மாபெரும் எஃகுக் கூடாரமாக நின்று எனக்கு ஆதரவு அளித்ததை இப்போது நினைவு கூர்கிறேன்.

இரண்டு நாட்களாக நான் தமிழகத்திலே உலா வந்து கொண்டிருக்கிறேன். நான் எங்கே சென்றாலும் திராவிடர் கழகத் தோழர்கள் கருப்புச் சட்டையுடனும் திராவிடர் கழகக் கொடியுடனும் நின்று வரவேற்கிற காட்சியினைக் காண்கிறேன். அது என் மனதை விட்டு அகலாத காட்சியாக இருந்து கொண்டிருக்கிறது” என்று பதவியிழந்து பவனி வந்தபோதும் பாராட்டியிருக்கிறார்.

 

No comments:

Post a Comment