மோடியின் இந்தியாபற்றி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 21, 2022

மோடியின் இந்தியாபற்றி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்

"இந்தியாவில் பிறந்த சமணம், பவுத்தம் மற்றும் பிற மதங்களை நேசிக்கிறேன். எனவே, அங்குள்ள அனைத்து மக்களின் உரிமைகளையும் நாம் பாதுகாக்க வேண்டும். மோடியின் இந்தியா நான் நேசித்த இந்தியா கிடையாது" என்று  அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும், வழக்குரைஞருமான ஆண்டி லெவின் வேதனையோடு குறிப்பிட்டுள்ளார்.

 பிரதிநிதிகள் சபையில் பதவிக் காலம் முடியும் நிலையில் உள்ள அவர்  - அந்த சிறப்புப் பிரதிநிதிகள் அவையில் "அமைதியான உலகமும் - தான் கண்ட நாடுகளும்" என்பது பற்றி விரிவான உரையாற்றினார். அதில் அவர் இந்தியா குறித்து கூறியதாவது :

``உலகின் பல பகுதிகளில் நிலைமை மோசமாக இருந்தாலும், மனித உரிமைகளில் அமெரிக்கா அதிக வெற்றியைப் பெற்றிருக்கிறது.  இந்தியா போன்ற நாடுகளில் மனித உரிமைகளுக்காக நான் குரல் கொடுத்து வருகிறேன். மேலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, இந்து தேசியவாத நாடாக மாறும் அபாயத்தில் இருக்கிறது. அதேசமயம், இந்து மதத்தை நேசிப்பவன் நான். இந்தியாவில் பிறந்த சமணம், பவுத்தம் மற்றும் பிற மதங்களையும் நேசிக்கிறேன். எனவே அங்குள்ள அனைத்து மக்களின் உரிமைகளையும் நாம் பாதுகாக்க வேண்டும். அவர்கள் முஸ்லிம்கள், இந்துக்கள், பவுத்தர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள் என யாராக இருந்தாலும் சரி" என்று கூறினார். 

"இன்றைய நரேந்திர மோடியின் இந்தியா நான் காதலித்த இந்தியா கிடையாது. நான் நேசிக்கும் ஒரு நாட்டை நான் ஏன் இவ்வளவு பகிரங்கமாக விமர்சிக்க வேண்டும்? ஏனென்றால் நான் இந்தியாவை நேசிப்பதால் தான், அதன் மக்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் உறுதியாக இருக்கிறேன். ஓர் இளை ஞனாக நான் அறிந்த துடிப்பான இந்திய ஜனநாயகத்திற்கான எனது ஆதரவில் மிகவும் உறுதியாக இருக்கிறேன். தலைமுறை தலைமுறையாக அந்த ஜனநாயகம் செழிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவித்தார்.

 முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு நிலை நீக்கம், 2019-இல் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றுக்கு எதிராகவும் ஆண்டி லெவின் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது உரையில், ரஷ்ய  - உக்ரைன் போர், மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் அரசியல் குழப்பம் மற்றும் உள்நாட்டுப் போர், ஆசிய நாடுகளில் நிலவும் பொருளாதார மந்த நிலை, தீவிரவாதம் போன்றவற்றைப் பற்றியும் குறிப்பிட்டு இதற்கான தீர்வைக்கான உலகம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பாரத மாதா என்கிறோம், ஞானபூமி என்று தோள் தட்டுகிறோம். உலகில் ஜனநாயகம் தவழும் - அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடு என்று புகழாரம் சூட்டுவது எல்லாம் உண்டுதான்.

ஆனால் என்றைக்கு பாரதிய ஜனதா ஆட்சி நரேந்திர மோடி தலைமையில் தொடங்கப்பட்டதோ, அமித்ஷா உள்துறை அமைச்சராக வந்தாரோ அன்று முதல் இந்தியாவைப் பற்றிய சிறப்புகள், கித்தாப்புகள் எல்லாம் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தப்பட்ட கோரமுகமாக மாறி விட்டது. உலக நாடுகள் பரிகசிக்கும் படுபாதாளத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது.

குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது அவருக்கு விசா கொடுக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மறுத்தது ஏன்?

திரு. மோடியின் மதவாத அரசியல் இந்தியாவின் தலையைத் தொங்கவிடும் நிலைக்குக் கொண்டு போய் சேர்த்து விட்டது.

இந்திய ஊடகங்கள் உயர் ஜாதி ஆதிக்கத்தின் கைகளில்  கெட்டியாக இருப்பதால் உயர் ஜாதி நலன் சார்ந்த பிஜேபி ஆட்சியைத் தாங்கிப் பிடித்துத் தூக்கி நிறுத்துகின்றன என்பதுதான் உண்மை. 

இதற்கொரு முடிவுரையை 2024இல் வெகு  மக்கள் எழுத வேண்டும்.

No comments:

Post a Comment