பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்பட்டது பற்றிய தனது தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்திருக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 21, 2022

பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்பட்டது பற்றிய தனது தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்திருக்க வேண்டும்

[19-12-2022 நாளிட்ட 'தி இந்து' ஆங்கில நாளிதழில் வெளியான தலையங்கத்தின் தமிழாக்கம்]

பல கொடூரமான படுகொலைகளுடன் இணைந்த பில்கிஸ் பானு  கூட்டு பாலியல் வன் கொடுமை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த 11 குற்றவாளிகளின் தண்டனைக் காலத்தைக் குறைத்து அதற்கு முன் விடுதலை செய்வதற்கான அதிகாரம் பெற்றது குஜராத் அரசுதான் என்று கடந்த மே மாதம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கு உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது மிகவும் கவலை தரும் ஒரு விவகாரமாகும். ஆவணங்களில் காணப்படும் தவறுகளை சரி செய்து தனது தீர்ப்பை தானே மறுபரிசீலனை செய்வதற்கான ஓர் எல்லை உள்ளது. அது போன்றதொரு தேவைக்கேற்ப நிவாரணம் பொதுவாக நீதி மன்றங்களில் விசாரிக்கப்படுவதில்லை. தண்டனைக் காலத்தைக் குறைக்கும் அதிகாரம் குஜராத் அரசுக்கு உள்ளது என்ற தீர்ப்பில் காணப்படும் மிகமிக முக்கியமான தவறு ஒன்றை கவனிக்க இரண்டு நீதிபதி அமர்வு தவறிவிட்டது என்றே தோன்றுகிறது. 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இனப் படுகொலைகள் தொடர்பாக எழுந்த இந்த வழக்கின் விசாரணையை குஜராத்தில் இருந்து மும்பைக்கு  உச்சநீதிமன்றம் மாற்றி ஆணையிட்டது. அந்த வழக்கின் தீர்ப்புக்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீடு ஒன்றை மும்பை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. குற்றவியல் நடைமுறை விதிகளின் 432(7) ஆவது பிரிவில் "கைதிகளின் தண்டனைக் காலத்தைக் குறைத்து முன்னதாக விடுதலை செய்வதற்கு தகுதி பெற்ற அரசு, குற்றவாளிக்கு  தண்டனை அளிக்கப் பட்ட நீதிமன்றம் உள்ள மாநில அரசுதான்" என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தெளிவான விதி ஒன்று இருக்கும்போது, குற்றம் நிகழ்ந்த இடம் குஜராத் மாநிலம்தான் என்பதால், மும்பையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை முடிந்த பிறகு அதனைத் தொடர்ந்த நடவடிக்கைகள் அனைத்தும் குஜராத் மாநில அரசின் அதிகார எல்லைக்கே திரும்பிவிடுகிறது என்ற கண்ணோட்டத்தை உச்சநீதிமன்றம் மேற்கொண் டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை சில அசாதாரணமாக சூழ்நிலைகளில் குஜராத் மாநிலத் திலிருந்து மும்பை மாநிலத்துக்கு மாற்றப்பட்டது என்றும் இந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

உச்சநீதிமன்ற அமர்வின் கண்ணோட்டம் சட்ட விதிகளுக்கு எதிராக இருப்பதால், மிகமிக விசித்திரமானதாக இருக்கிறது. மேலும் இந்த வழக்கு விசாரணை குஜராத்தில் நேர்மையாக நடைபெறாது என்ற கருத்தின் அடிப்படையில்தான் மும்பைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தண்டனைக் காலத்தைக் குறைத்து குற்றவாளிகளை முன்னதாக விடுவிக்கும் அதிகாரம் குஜராத் மாநில அரசிடமிருந்து பறிக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும். முந்தைய தீர்ப்பின் முக்கிய அம்சங் களில் ஒன்று, இந்த தண்டனைக் குறைப்பு என்பது, தற்போது நடைமுறையில் உள்ள 1992 ஆம் ஆண்டு கொள்கையின் படிதான் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதுதான். அதன்படி,  அந்த விதி களில் ஏதேனும் ஒன்று. குறிப்பிடப்பட்ட கட்டுப் பாடுகள் இல்லாத நிலையில்,  இந்த கொடூரமான குற்றங்களை இழைத்தவர்களின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு விடுதலை செய்யப் பட்டுள்ளனர். இந்த முடிவை ஒன்றிய அரசும் ஏற்றுக் கொண்டது என்று பின்னர் கூறப்பட்டது. உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மறுத்திருப்பது, இவ்வாறு அவர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதான  வழக்கு விசாரணையின் தீர்ப் பினை பாதிக்காது என்பது ஒரு நல் வாய்ப் பேயாகும். இவ்வாறு தண்டனைக் காலத்தைக் குறைத்து குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட் டதை எதிர்த் துக் கேள்வி கேட்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதென தெரிய வந்துள்ளது. மேலும், இவர்கள் விடுவிக்கப்பட்டதில் விசாரணை நீதிமன்ற நீதிபதியின் கருத்து ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்பதை உச்சநீதிமன்ற ஆவணக் கோப்புகள் தெரிவிப்பதாகவும் தோன்றுகிறது. அது மட்டுமன்றி இந்தத் தண்டனை குறைப்பு மற்றும் விடுதலையைப் பரிந்துரைத்திருக்கும் குழுவில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பொறுப்பாளிகளும் இருந்துள்ளனர். அதுவும் இந்த முடிவை மேற்கொள்வதற்கான உந்துதலை ஏற்படுத்தி இருக்கலாம்.

மத அடிப்படையிலான நோக்கம் கொண்ட வர்கள் நேரடியாக  ஈடுபட்டு இருக்கும் இந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு தண்டனை குறைப்பு மற்றும் முன்னதாக விடுதலை செய்யப்பட்டதின் நியாயத் தன்மையை பரிசீலிப்பதற்கான வாய்ப்பு இன்னமும் உச்சநீதிமன்றத்துக்கு உள்ளது.

நன்றி: 'தி இந்து' 19-12-2022

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment