பெரியார் மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக்கழக சமூகப் பணித்துறை மாணவர்களின் "பெரியார் புரா" கிராமத்தில் 6 நாள்கள் நடைபெற்ற கிராமிய முகாம்-2022 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 28, 2022

பெரியார் மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக்கழக சமூகப் பணித்துறை மாணவர்களின் "பெரியார் புரா" கிராமத்தில் 6 நாள்கள் நடைபெற்ற கிராமிய முகாம்-2022

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப்பணித்துறை சார்பாக கிராமிய முகாமம் 2022 திருச்சி சிறுகனூர் பெரியார் புரா கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 12.12.2022 முதல் 17.12.2022 வரை 6 நாள்கள் நடைபெற்றது.

தொடக்க விழா (12.12.2022)

இந்த கிராமிய முகாமின் தொடக்கவிழா திருச்சி சிறுகனூ ரில் அமைய உள்ள பெரியார் உலக வளாகத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் (நிகர்நிலை) முதலாம் ஆண்டு சமூகப்பணித்துறை மாணவர்கள் மற்றும் திருச்சி வாய்ஸ் அறக்கட்டளையுடன் ஒன்றிணைந்து மாலை 5.30 மணியளவில் மரக்கன்றுகள் நட்டு, முகாமை துவக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து 6.30 மணியளவில், சிறுகனூர் புனித சவேரியார் ஆலயத் தெருவில் "கிராமிய முகாமின் தொடக்க விழா"வில் சட்ட விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தின், சமூகப்பணித்துறை உதவி பேராசிரியர் முனைவர் ஞானராஜ் அறிமுகவுரை வழங்கினார். உரையில் பெரியார் புரா கிராமங்கள் பற்றியும், முகாமின் முக்கியத்துவத்தை பற்றியும் விளக்கினார். சிறப்பு விருந்தினராக சிறுகனூர் காவல் ஆய்வாளர்சுமதி பாலியல் குற்றங்களிலிருந்து குழந் தைகளை பாதுகாக்கும் சட்டத்தை பற்றியும், பெண்கள் உதவி எண் 181 பற்றியும்எடுத்துரைத்தார். வாய்ஸ் அறக்கட் டளை நிறுவநர் கிரிகோரி தன் கருத்துரையில் இயற்கை வேளாண்மை குறித்தும், இன்றைய கிராமப்புற குழந்தை களுக்கே விவசாயத்தை கற்றுக் கொடுக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதாகவும், விவசாயத்தை மீட்கும் பொருட்டு கிராமப்புற குழந்தைகளுக்கே விவசாயம் கற்றுதரக் கூடிய ஞாயிறு விவசாய பள்ளிகளை நடத்தி வருவதாகவும் கூறினார். 

தொடக்க விழாவில் திருச்சி வாய்ஸ் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கவிதா, மனிதவள நிர்வாகி காட்வின் மற்றும் தஞ்சாவூர் சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் தனபால், வாழ்த்துரை வழங்கினர்.

பெரியார் மணிம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் மனிதநேயம், அறிவியல் மற்றும் மேலாண்மை துறைகள் முதன்மையர் விஜயலெட்சுமி, தலைமையுரையில் பெரியார் புரா கிராம வளர்ச்சியில், மாணவர்கள் மிகவும் அர்ப்பணிப் போடு ஈடுபட்டு வருவதாகவும், பெரியார் புரா திட்டத்தின் மூலம் அறிவு சார்ந்த பரிமாற்றங்கள், நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார். கலைநிகச்சிகளில் பங்கேற்றுக் கொண்ட குழந்தைகளுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார். 

முனைவர் ஆனந்த் ஜொர்டு செபாஸ்டின் இயக்குநர் (பொ), பெரியார் ஊரக வளர்ச்சி மய்யம் அவர்கள் கருத்துரையில் சமூகப்பணி மாணவர்கள் களப்பணியில் ஈடுபடுவதன் மூலம் முழுமையான பயிற்சி பெற்று சமூக மேம்பாட்டிற்கு பணியாற்றுவார்கள் என்றும், தொடர்ந்து சிறுகனூர் பகுதியில் பல்வேறு பணிகளை செய்ய திட்ட மிட்டுள்ளதாகவும் கூறினார்.

இறுதியில் கிராம குழந்தைகளின் பங்கேற்பு நடனம் மற்றும் முதலாமாண்டு சமூகப்பணித்துறை மாணவர்களின் பழைய தலைமுறை மற்றும் புதிய தலை முறை வேறு பாட்டை உணர்த்தும் ஊமை நாடகமாக அரங்கேற்றினர். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என 150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர். 

இரண்டாம் நாள் (13.12.2022) ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டம் வகுப்பு

இரண்டாம் நாளின் முதல் நிகழ்வாக வாய்ஸ் அறக்கட்டளையின் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டம் பற்றிய வகுப்பு, சமூகப் பணித்துறை மாணவர்களுக்கு நடைபெற்றது. இவ்வகுப்பில் முனைவர் ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின் அவர்களின் அறிமுகவுரையில் ஒருங் கிணைந்த கிராம வளர்ச்சியின் முக்கியத்துவத்தை பற்றியும், கிராமத்தை எவ்வாறு மேம்பாடு அடையச் செய்வது என்பதையும் விளக்கினார். வாய்ஸ் அறக்கட்டளையின் விவசாய ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் கருத்துரை யில் இயற்கை விவாசாயத்தின் முக்கியத்துவத்தை பற்றியும், எதற்காக இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டது என்றும் விளக்கினார். 

கிராமப்புற மக்கள் பங்கேற்பு மதிப்பீடு

இரண்டாம் நிகழ்வாக எதுமலை, வரதராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்பு "ஊரகப்பங்கேற்பு மதிப்பீடு" (றிஸிகி) நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பஞ்சாயத்து தலைவர் பழனியாண்டி தலைமை வகித்தார். இந்நிகழ்வில் மாணவர்கள் கிராமத்தின் வளங்கள் அங்கு நிலவும் பிரச்சினைகள் மற்றும் கிராமத்தில் கட்டமைப்பு மேம்பாடு பற்றியும் அறிந்துக்கொள்ள பெரிதும் உதவியது. இந்நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். 

குழந்தைகளின் நலன் - நாட்டின் வளம்

மூன்றாம் நிகழ்வாக மாலை வரதரராஜபுரம் கோவில் வளாகத்தில் ஞாயிறு விவசாய பள்ளி பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வாய்ஸ் அறக்கட்டளை நிகழ்ச்சி மேலாளர் சிலம்பரசன் விவசாயத் தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். முதலாமாண்டு சமூகப்பணித்துறை மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாடகம் கூடியிருந்த மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து "இயற்கை வேளாண்மையா? இல்லை செயற்கை வேளாண்மையா?" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடை பெற்றது. குழந்தைகள் பெற்றோர் முதியோர் என 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். நிகழ்வில் பங்கு பெற்ற குழந்தைகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங் கப்பட்டன. 

மூன்றாம் நாள் (14.12.2022)

முதல் நிகழ்வாக வாழ்க்கைத்திறன் மேம்பாட்டு பயிற்சி சிறுகனூர் வாய்ஸ் அறக்கட்டளையின் சார்பில் சமுகப்பணித் துறை மாணவர்களுக்கு வாழ்க்கைத்திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது. முனைவர் எஸ்.ஞானராஜ் அறிமுக வுரை வழங்கினார். வாய்ஸ் அறக்கட்டளையின் நிகழ்ச்சி மேலாளர் சிலம்பரசன், வாழ்க்கைத்திறன் மேம்பாட்டு பயிற்சியளித்தார். அவர்தம் உரையில் மூன்று முக்கியமான வாழ்க்கைத் திறன்களான உணர்ச்சிதிறன், சிந்தனைத்திறன் மற்றும் சமூகத்திறனைப் பற்றி விரிவாக விளக்கினார். இப்பயிற்சி சமுகப்பணித்துறை மாணவர்களுக்கு தங்கள் திறனை சுய பரிசோதனை செய்து தங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் முக்கிய காரண, காரணிகளை தாங்களே ஆராய்ந்து சமூக விழிப்புணர்வோடு தங்கள் பணிகளை திறம்பட செய்வதற்கு தூண்டுகோலாக அமைந்தது. 

இரண்டாம் நிகழ்வு

"மண் வளமே, மனித நலம்" என்ற கருப்பொருளோடு எம்.ஆர்.பாளையம், (அரசு ஆதி திராவிடர் நல) மேல் நிலைப் பள்ளியில் உடல் நலம் மற்றும் மன நலம் விழிப் புணர்வு  நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மோகன் தலைமை வகித்தார். முனைவர் எஸ்.ஞானராஜ் சிறப்புரையாற்றினார். அவர் தம் உரையில் கைப்பேசி மற்றும் இணையத்தினால் வரும் தீமைகளையும், அவற்றை எவ்வாறு பாதுகாப்பாக பயன் படுத்த வேண்டுமென்பதையும் கூறினார். நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளி வளாகத்தில் சமூகப்பணி மணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். 

மூன்றாம் நிகழ்வு

திருப்பட்டூர் பிள்ளையார் கோவில் வளாகத்தில், "பெண்களின் எழுச்சி சமூகத்தின் வளர்ச்சி"  என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டமும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முனைவர் எஸ்.ஞானராஜ் அறிமுகவுரை யாற்றினார். திரு.முருகன், திருப்பட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையுரை வழங்கினார். அவர் தம் உரையில் பெண்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும் பொழுது, தங்கள் குடும்பம் மட்டும் அல்லாமல் அந்த கிராமமே மேம்பாடு அடையும் என்று கூறினார். இதை உறுதி செய்யும் விதமாக, ஊராட்சியில் உள்ள அனைவரும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அனைத்து வளர்ச்சி திட்டத்திலும் பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டுமென்றார். முனைவர் அன்ந்த் ஜெரார்டு செபாஸ்டின் சிறப்புரையில் பெண்களின் கடமைகளும், பொறுப்புகளும் எவ்வாறு இருந்தன என்றும், பெண்கள் உணர்வுபூர்வமாகவும் சிந்திப்பார்கள், அதுவே ஆண்கள் அறிவு பூர்வமாகவும் சிந்திக்க உதவுகின்றது என்றார். சமூகப்பணித்துறை மாணவர்களின் கலைநிகழ்ச்சி களான, நாடகம், பாடல், கவிதை பட்டிமன்றம் மற்றும் ஊர் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது. குழந்தைகள், பெற்றோர், முதியோர் என 150 க்கும் மேற்பட்ட ஊர்பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர். 

நான்காம் நாள் நிகழ்வு  "மரங்களின் வளம் நாட்டின் நலம்"


15.12.2022 அன்று தமிழ் நாடு அரசின் வன மர விதை வங்கி மற்றும் வன மர விதை ஆய்வக மய்யத்தின்  தொழில் நுட்ப ஆய்வாளர் மற்றும் விதை ஒருங்கிணைப்பாளர் ராமசுந்தரம் மரம் நடல் பற்றிய தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டு, விதை தேர்வு செய்யும் யுத்திகளும், அதன் முளைப்புத்திறன் பற்றியும் கருத்துரை வழங்கப்பட்டது. விதைகளின் முளைப்புத் திறனை அதிகரித்தல், தரம் பிரித்தல் மற்றும் அவற்றின் நடைமுறைகளும் நேரில் பார்வையிட்டு தெரிந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டு மாணவர்கள் பெரிதும் பயன்பெற்றனர். மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டது ஒரு புது அனுபவமாக அமைந்தது. 

"இயற்கை விவசாயிகள் கணக்கெடுப்பு"

இரண்டாம் நிகழ்வாக நடு இருங்கலூர், புனித செபாஸ்டியார் ஆலயத்தின் முன்பு இயற்கை விவசாயம் மற்றும் நுகர்வோருக்கான கணக்கெடுப்பு குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் சுமார் அய்ம் பதுக்கும் மேற்பட்டோர் இயற்கை விவசாயம், நுகர்வோரின் புள்ளிவிவரங்கள் இணையதளத்தில் நேரடியாக பதிவேற்றம் செய்யப்பட்டனர். 

"பெற்றோரை போற்றுவோம்!  முதியோரை பாதுகாப்போம்!"

மூன்றாம் நிகழ்வாக , நடுஇருங்கலூர் மக்கள் மத்தியில் "பெற்றோரை மதிப்போம்! முதியோரை பாதுகாப்போம்"" என்ற தலைப்பில் விழிப்புணர்வுக் கூட்டம் மேற்கொள்ளப் பட்டது. இதில் இருங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட் தலைமை ஏற்று குழந்தைகளிடையே கலந்து ரை யாடினார். மாணவர்களின் பங்கேற்பை பாராட்டி விழாவை சிறப்பித்தார். சமூக மனநல ஆலோசகர் ஆத்மா மருத்துவமனை கரண்லூயிஸ் அவர்களால் குழந்தை வளர்ப்பு மற்றும் பெரியயோரின் முக்கியத்துதும் பற்றி விழிப் புணர்வு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குழந்தை களின் நடனம் மற்றும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 110 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். 

அய்ந்தாம் நாள் நிகழ்வு

மழை ஈர்ப்பு மய்யம் மற்றும் ஒருங்கிணைந்த பாளையத்தை பார்வையிடல்


அய்ந்தாம் நாள் நிகழ்வு 16.12.2022 அன்று இருங்கலூரில் நடைபெற்றது. 

இருங்கலூரில் அமைந்துள்ள மழை ஈர்ப்பு மய்யம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையையும் காலை 09.30 மணி அளவில் சமூக பணித்துறை மாணவர்கள் பார்வையிட்டனர். இருங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட் மழை ஈர்ப்பு மய்யத்தில் அமைந்துள்ள "மியாவாகி அடர் காடு வளர்ப்புத் திட்டத்தை" பற்றியும், மாணவர்கள் எவ்வாறு தங்களை சமூகத்திற்காக மேம்படுத்த வேண்டும் என்றும் விளக்கினார். இந்த மழை ஈர்ப்பு மய்யம் சுமார் 15 ஏக்கரில் 1.50 லட்சம் மரங்கள் கொண்ட அத்திட்டத்தைப் பற்றி அறிந்து கொண்டனர். அதன் பின் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் அமைக்கப்பட்டிருந்த வாழை, கீரை வகைகள் மற்றும் காய்கறி செடிகளுக்கு, சமூகப்பணித்துறை மாணவர்களால் இயற்கை உரம் நேரடியாக களத்தில் இடப்பட்டது. மாணவர்களுக்கு மண்புழு உரம்,  மற்றும் அசோலா பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இதன் மூலம் சமூகப்பணித்துறை மாணவர்கள் பெரிதும் பயன் அடைந்தனர். 

மூலிகை தோட்டம் அமைத்தல்

புரத்தாக்குடி கிராமத்தில் மாணவர்களுக்கு மூலிகைச் செடிகளை எவ்வாறு கண்டு அறிந்து சேகரிப்பது பற்றிய விளக்கங்கள் விவசாய ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் மூலம் அளிக்கப்பட்டது. சமூகப்பணித்துறை மாணவர்களால் மருத்துவ குணம் கொண்ட பல்வேறு மூலிகைச் செடிகளை பொதுமக்களின் ஆலோசனைப்படி சேகரித்து, அதன் பயன்களையும் அறிந்தனர். பின்பு மூலிகைப் பண்ணையை உருவாக்குவதற்கு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

"உன்னால் முடியும்"

மாலை நிகழ்வாக சிறுகனூர் வாய்ஸ் அறக்கட்டளையின் நட்பு சிறார் இல்ல குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி "உன்னால் முடியும்" என்ற தலைப்பில், ஜமால் முகமது கல்லூரியின் சமூகப்பணித்துறையின் உதவி பேராசிரியர் முனைவர் சேக் பாரித் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவரது உரையில் தலைப்பிற்கேற்ப உவமைகள் கூறப்பட்டு இல்லத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்க்கையில் வரும் தடைகளை தகர்த்து எறிந்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தார். அதனைத் தொடர்ந்து குழந்தைகளிடையே கலந்துரையாடி பல விளையாட்டுகள் மூலம் குழந்தைகளை ஈடுபடுத்தி, பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்  முறையை எளிமையாக விளக்கினார். கலை நிகழ்ச்சியில் சமூகப் பணித்துறை மாணவர்களின் நடனம் மற்றும் "உணவே மருந்து" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பாடலைப் பாடினர். மேலும் இல்ல குழந்தைகள் குழு நடனம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். 

ஆறாம் நாள்

"சிந்தனையில் மாற்றம் 

- "சமூகத்தில் ஏற்றம்" 

ஆறாம் நாள் காலை நிகழ்வாக சிறுப்பத்தூர் கிராம சேவை மய்யத்தில் பன்னாட்டு மாற்றுத் திறனாளிகள் தின விழாவை கொண்டாடும் விதமாக இச்சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முனைவர் எஸ்.ஞானராஜ் சிறப்புரையாற் றினார். அவர் தமது உரையில் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதற்கான காரணங்களையும், அதனை தவிர்க்கும் வழிமுறைகளையும் எளிய முறையில் விளக்கினார். மேலும் "முடியாது என்பது மூட நம்பிக்கை என்றும், முடியுமா என்பது அவநம்பிக்கை என்றும், முடியும் என்பதுதான் தன்னம்பிக்கை" என்று கூறி அனைவரையும் ஊக்கபடுத் தினார். இதைத் தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்காக பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் போட்டியில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் ஊக்க பரிசுகள் சமூகப்பணித்துறை மாணவர்களால் வழங்கப்பட்டன. வட்டார ஒருங்கிணைப் பாளர் ரமணி "சமூகப் பணித் துறையின் மாணவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து" வாழ்த்துரை வழங் கினார். இதில் 60 க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

"மது ஒழிப்பும் - மறுவாழ்வும்"

மது ஒழிப்பும், மறு வாழ்வும் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி சி.ஆர்.பாளையத்தில் மாலை நிகழ்வாக நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் முனைவர் ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின் அவர்கள் அறிமுகவுரையாற்றினார். கிராமங் கள் கிராமங்களாகவே இருக்க வேண்டும் என்றும், அனைத்து வசதிகளும் கிராமங்களை சென்றடைய வேண் டும் என்றும் அப்துல்கலாமின் சிந்தனையை மேற்கோள் காட்டி கிராமிய முகாமின் சிறப்பை எடுத்துரைத்தார். பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேரா.செ.வேலுசாமி அவர்கள் தலைமையுரை யாற்றினார். அவர் தமது உரையில் கிராமிய முகாமின் சிறப்பு அம்சங்களையும், சமூகப்பணித்துறை மாணவர்களின் பங்களிப்பினையும் பாராட்டி விழாவை சிறப்பித்தார். வாய்ஸ் அறக்கட்டளை மனிதவள மேலாளர் காட்வின் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஜேனட் ப்ரீத்தி அவர்களும் கிராமிய முகாமின் முக்கியத்துவத்தையும் மற்றும் முதலா மாண்டு மாணவர்களின் முழு அளவிலான ஈடுபாட்டையும் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக சமூகப்பணித்துறை தலைவர் முனைவர் பரமேஸ்வரன் அவர்கள் சமூகப்பணித்துறை மாணவர் களினால் நடத்தப்படும் இந்த கிராமிய முகாமில் அவர் களுடைய கற்றல் திறனை பெரிதும் வளர்த்துள்ளனர் என்பதைக் கூறி வாழ்த்துரை வழங்கினார். கலைநிகழ்ச்சியின் முக்கிய கூறாக மது போதை ஒழிப்பு பற்றி கலை குழு வினர்கள் காந்தி மற்றும் தங்கவேலு "மது ஒழிப்பும் மறு வாழ்வும்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பாடல்களும், மேலும் பல கிராமிய பாடல்களும் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து சமூகப்பணித்துறை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.  

இந்த நிறைவு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களி டையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று தந்தன.  முன்ன தாக கிராமிய முகாமின் ஆறு நாள் அறிக்கையும் முதலாம் ஆண்டு சமூகப்பணித்துறை மாணவர்களால் வாசிக்கப் பட்டது. சிறுகனூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மணிமாறன் மற்றும் ஊராட்சி மன்றக்குழு உறுப்பினர் இந்திரா முன்னிலையில் கிராமிய முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றன.  இந் நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட கிராமப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments:

Post a Comment