சேலம் இரும்பு உருக்காலையை தனியாருக்குத் தாரை வார்ப்பதா? வரும் 30ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 27, 2022

சேலம் இரும்பு உருக்காலையை தனியாருக்குத் தாரை வார்ப்பதா? வரும் 30ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!

 மின்சாரம்

மக்களுக்குச் சேவை செய்யும் பொதுத் துறை நிறுவனங்களை அரசு பாதுகாக்க வேண்டும், இதன்மூலம் சமூக நீதி காக்கப்படும். தேச வளர்ச்சிக்குப் பயனளிக்கும். 

சேலத்திலுள்ள கஞ்சமலை வடக்குப் படுகை இரும்புத் தாது சுரங்கத்தை ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலைக்குக் கொடுக்காமல், தமிழ்நாடு அரசின் நியாயமான கோரிக்கைகளை புறக்கணித்து விட்டு தனியார் நிறுவனமான ஜிண்டலுக்கு ஒன்றிய அரசு உரிமம் வழங்கியுள்ளது. 

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட வினாக்களுக்கு விடையளித்த ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, "சேலம் இரும்பாலை தனியாருக்கு விற்கப்படுவது உறுதி. ஒன்றிய நிதியமைச்சகத்தின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையும், இரும்புத் துறை அமைச்சகமும் இதற்காக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இதற்காக முதலீட்டாளர்களை இரும்பாலைக்கு அழைத்து செல்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால், அதற்கான பாதுகாப்புச் சூழலை மாநில அரசு ஏற்படுத்தித் தரவில்லை.  ஆனாலும், அதற்கான நிதி ஒப்பந்தப் புள்ளிகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அது ஜனவரி மாதத்தில் ஏதேனும் ஒரு நாளில் நிகழும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் முயற்சிகளை ஒன்றிய அரசு தீவிரப்படுத்தி வருவதையே அமைச்சர் சிந்தியாவின் பதில் உணர்த்துகிறது. இந்திய இரும்பு எஃகு நிறுவனத்திற்கு சொந்தமான சேலம் இரும்பாலையை விற்பனை செய்வதற்கான முயற்சிகள் கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி உலக அளவில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்ட நிலையில், எவரும் ஒப்பந்தப் புள்ளி தாக்கல் செய்ய முன்வரவில்லை. அதன்பின் கரோனா காரணமாக அந்த முயற்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அவற்றை ஒன்றிய அரசு மீண்டும் தொடங்கியுள்ளது. மொத்தம் 1,357 பணியாளர்களைக் கொண்டு இயங்கும் உருக்காலையின் கட்டுமானப் பணிகளின் ஆரம்பக்கட்ட செலவுகள் மட்டும், சுமார் 181.19 கோடி ரூபாய். அதன் கட்டுமானப் பணிகள் 1972ஆம் ஆண்டு அப்போதைய எஃகு மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் மோகன் குமாரமங்கலத்தால் தொடங்கப்பட்டது. பாரத மிகுமின் நிறுவனம், எச்எம்டி, பாரத் எலக்ட்ரானிக், இந்தியத் தொலைப்பேசி நிறுவனம் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களுக்கு எஃகு, சேலம் உருக்காலையில் இருந்தே வழங்கப்படுகிறது.

அய்எஸ்ஓ நிறுவன சான்றிதழுடன் இயங்கும் சேலம் உருக்காலை 1994-95 ஆகிய ஆண்டுகளில் சுமார் 45 ஆயிரம் டன் எஃகை 27 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஒரு பக்கம் இதன் பணியாளர்களுக்கு தங்கும் விடுதிகள், பூங்காக்கள், திருமண மண்டபங்கள் என அனைத்து வசதிகளும் இருந்தும், தனியார்மயமாக்கல் என்ற மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது சேலம் உருக்காலை. 

தமிழ்நாட்டின் அடையாளமாகத் திகழும் சேலம் உருக்காலை திட்டமிட்டே தனியார் மயமாக்கப்படுகிறது. இதனால். 1500 ஊழியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது; சேலத்தின் அடையாளமாகத் திகழும் சேலம் உருக்காலை 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பொதுத்துறையாகும். இந்திய மகா ரத்தினங்களுள் ஒன்றாகத் திகழும் இந்த நிறுவனம், செயில் (SAIL)  நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. இதன் முக்கிய உற்பத்தியே ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் (Stainless Steel) என்று கூறப்படும் துருபிடிக்காத எஃகு உற்பத்தியாகும். நாட்டின் நாணயம் தயாரித்தல், வீட்டில் உபயோகப்படுத்தப்படும் பாத்திரங்கள், ரயில் பெட்டிகள், செயற்கைக்கோள்கள், அணு உலைகள் ஆகியவற்றிற்குத் தேவையான ஸ்டீல்வரை இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 136 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட 32 ஆயிரம் டன் உற்பத்தித் திறனுடன் தொடங்கப்பட்ட இந்த உருக்காலையின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் எட்டாயிரம் கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இந்த உருக்காலை உலகில் மூன்றாவது ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் உற்பத்தி செய்யும் நாடாகவும் அதிகமாக இரும்பு பயன்படுத்தும் நாடாகவும் இந்தியா உள்ளது. அதனோடு சேலத்தில் கிடைக்கின்ற இரும்பிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்தான் மிகவும் தரமானதாகவும் உறுதியாகவும் இருக்கிறது. 

இந்த உள்கட்டமைப்புத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு 10 விழுக்காடு தேவைப்பட்டாலும் அரசோ இதனை தனியார் நிறுவனத்திற்கு தாரைவார்க்க முனைப்புடன் செயல்படுகிறது. இந்த வர்த்தகம் எதிர்காலத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது.  அண்மைக் காலமாக பொதுத் துறை இலாபம் ஈட்டுவில்லை என்றும் கூறப்படுகிறது.  குறிப்பாக சேலத்தில் இயங்கிவரும் உருக்காலையின் ஒன்றிய விற்பனை மய்யம் கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டதால், இதன் விற்பனைத் துறை முடங்கிப்போனது. இதனால், வாடிக்கையாளர்கள் நிறுவனங்கள் 70லிருந்து ஒன்பதாக சரிந்துள்ளது. இந்த உருக்காலையை தனியார் வசம் ஒப்படைப்பதை எதிர்த்து போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. "சேலம் உருக்காலை தொடங்கப்படுவதற்கு முன்புவரை இந்தியா உருக்கு இறக்குமதி செய்து வந்தது. தற்போது பெரும் இழப்பில் இயங்குகிறது எனக்கூறி சேலம் உருக்காலையை தனியாரிடம் ஒப்படைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. 

இதற்கான வேலைகள் 2017- 2018ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது. நிறுவனத்தை முழுவதுமாக விற்பனை செய்ய ஒன்றிய அரசு சார்பில் விற்பனை அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டு, இதற்காக உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி கோருதலும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அரசின் ஒப்பந்த அறிவிப்பு கவர்ச்சிகரகமாக இல்லாததால் தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை  நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை.இந்நிறுவனம் நட்டத்தில் இயங்குவதற்கு பிரதான காரணம்  ஆலை விரிவாக்கப் பணிகளில் செய்யப்பட்ட முதலீட்டால் சேலம் உருக்காலையை ஆண்டுதோறும் 120 கோடி ரூபாய் வட்டி கட்டும் சூழலுக்குத் தள்ளப்பட்டது. இதனால் நிறுவனம் தொடர்ந்து லாபகரமாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 இதுதவிர சீனா, தென் கொரியா போன்ற நாடுகளிலிருந்து குறைந்த விலைக்கு உருக்கு இறக்குமதி செய்யப்படுவது, சேலம் உருக்காலைக்கு என தனி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படாதது, உருக்கு தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருட்களின் இறக்குமதி வரி குறைக்காமல் இருப்பது ஆகியவையே தற்போதைய நிலைக்கு காரணம்"    சேலம் உருக்கு ஆலை தொடங்கப்பட்டபோது அதன் திறன் 32 ஆயிரம் டன்னாக இருந்தது. அப்போது அந்நிறுவனத்தில் 1500 ஊழியர்களும் 300 ஒப்பந்த பணியாளர்களும் பணியாற்றிவந்தனர். தற்போது 3.6 லட்சம் டன் திறன் கொண்ட சேலம் உருக்காலையில் 900 ஊழியர்களும் 900 ஒப்பந்த பணியாளர்களும் பணியாற்றிவருகின்றனர்.  நிறுவனம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டால் மிக முக்கிய அதிகாரிகள் மட்டுமே செயில் நிறுவனத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள். மீதமுள்ளவர்களின் கதி என்ன என்பது கேள்விக்குறி.

உலக அளவில் ஒப்பிடுகையில் இந்தியாவின் தனிநபர் உருக்கு பயன்பாடு குறைவாகவே உள்ளது. மாறிவரும் காலச்சூழலால் இனிவரும் நாள்களில் உருக்கின் தேவை அதிகரிக்கவே வாய்ப்புள்ளதால், இந்தத் தொழிலுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.  உருக்கு உற்பத்தித் துறையில் வெகு சில நிறுவனங்கள் மட்டுமே உள்ள நிலையில், சேலம் உருக்காலையை தனியார்வசம் ஒப்படைப்பதன் மூலம் இந்தத் துறை தனியாரின் ஆதிக்கத்திற்குச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 60 ஆண்டுகளாக உருக்குத் துறையில் அனுபவம் கொண்ட செயில் நிறுவனம் இருக்கையில் உருக்குத் துறையில் எந்தவித முன் அனுபவமும் இல்லாத அதானி, அம்பானி உள்ளிட்ட மோடியின் நெருங்கிய நண்பர்களுக்குத் தாரைவார்க்க தயாராகி வருகின்றனர்.

அனைத்து முக்கியத் துறைகளும் பொதுத் துறை நிறுவனங்களாக இருப்பதால்தான் இந்தியப் பொருளாதாரம் சீராகவுள்ளது. பெரிய பொதுத் துறை நிறுவனங்களைத் தனித்தனியாக பிரித்து அதனை தனியாரிடம் விற்பனை செய்கின்றனர்.தனியார்மயமாக்கப்பட்டால் மக்களுக்கான சலுகைகள் ரத்து செய்யப்பட்டுவிடும். தனியார் நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் செயல்படும் - இடஒதுக்கீடும் குழி தோண்டிப் புதைக்கப்படும்!

இந்த நிலையை எதிர்த்துத் தான் வரும் 30ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!

கட்சிகளைக் கடந்து தமிழ்நாட்டின் உரிமைக்காகப் போராட முன்வாரீர்!  வாரீர்!" என்று அழைக்கிறோம்!


No comments:

Post a Comment