2 ஆயிரம் பகுதி சபை உறுப்பினர்கள் நியமனம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 27, 2022

2 ஆயிரம் பகுதி சபை உறுப்பினர்கள் நியமனம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை, டிச. 27, சென்னை  மாநகராட்சிக்குட்பட்ட  200 வார்டுகளில் 2 ஆயிரம் பகுதி சபை உறுப்பினர்களை நியமிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நகர்ப் புறங்களில் நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பை விரிவுபடுத்தும் வகையில் நகர்ப்புறங்களில் வார்டு குழு மற்றும் பகுதி சபை உருவாக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னையை தவிர்த்து பிற மாநகராட்சிகளில் பகுதி சபை, நகராட்சிகளில் வார்டு குழு அமைக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி தேர்தல் ஜனவரியில் நடைபெற்று பிப்ரவரியில் உறுப்பினர்கள் பதவி ஏற்ற நிலையில், இன்னும் பகுதி சபை உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். இதையடுத்து,  பகுதி சபை உறுப்பினர்கள், வார்டு குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.  அதன் சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டும் 10 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, அதன் ஒவ்வொன்றுக்கும் வார்டு பகுதி சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு  நியமிக்கப்படும் உறுப்பினர்கள்,  வார்டு கவுன்சிலருடன் இணைந்து மக்கள் பணியாற்றுவார்கள்.

இந்த பதவிக்கு   அரசு ஊழியர்கள், குற்றவாளிகள் போட்டியிட முடியாது. இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. அதனை பகுதி சபை உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுபவர்கள் நிரப்பி கொடுக்க வேண்டும்.

தற்போது பகுதி சபை உறுப்பினருக்கான தேர்வு தொடங்கி உள்ளது. மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட பகுதி சபை உறுப்பினர்களை நியமனம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.  இது முழுமை பெறும் நிலையில், 3 மாதத்திற்கு ஒருமுறை பகுதி சபை கூட்டம் கூட்டப்பட வேண்டும். பின்னர் தங்கள் வார்டுக்கு உள்பட்ட பகுதி சபை உறுப்பினர்களை அனைத்து வார்டு குழு கூட்டத்தை கவுன்சிலர் கூட்ட வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தெருக்களில் அடிப்படையான பிரச்சினைகளை உடனுக் குடன் களைவதற்காக பகுதி சபை அமைக்கப்படுகிறது. பகுதி சபை உறுப்பினர்கள் நியமிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.  இதற்கான  பகுதி சபை வரைபடம் வெளியிடப்பட்டு நியமனம் ஏற்கனவே நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


No comments:

Post a Comment