சென்னை, டிச. 27, தமிழ்நாடுஅரசு அறிவித்துள்ள ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு வழங்குவதற்கான வீடு வீடாக டோக்கன் வழங்கும் நடவடிக்கை 27ஆம்தேதி இன்று முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. திமுக அரசு பதவி ஏற்றதும், கடந்த ஆண்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் மஞ்சள் பை, முழு கரும்பு ஆகிய 21 பொருள்களுடன் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில், பச்சரிசி, சர்க்கரை உடன் ரூ.1000 ரொக்கம் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு ள்ளது.
அதன்படி, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ரூபாய் 1000 ரொக்கம் பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த டோக்கனில் எப்போது பொருள்களை பெற வேண்டும் என்ற விவரம் இடம்பெற்றிருக்கும். அந்த தேதியில் குடும்ப அட்டைதாரர்கள் யாராவது ஒருவர் சென்று கைரேகை பதிவு செய்து பரிசுத்தொகுப்பை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1000 வழங்கும் திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment