மறக்கவே முடியாத டிசம்பர் 20! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 20, 2022

மறக்கவே முடியாத டிசம்பர் 20!

1916 டிசம்பர் 20 என்பது பார்ப்பனரல்லாத சமூகத்தின் விடி வெள்ளி நாள்! ஆம். இந்த நாளில்தான் நீதிக்கட்சியின் தோற்றுநர்களுள் ஒருவரான வெள்ளுடைவேந்தர் பிட்டி. தியாகராயர் "பார்ப்பனரல் லாதார் கொள்கை" (The Non-Brahmin Menifesto) அறிக்கையைப் பிரகடனப்படுத்திய நாள்!

அந்தப் பிரகடனம் ஏன் வந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் கீழ்க்கண்ட தகவலையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

"அய்.சி.எஸ். உத்தியோகஸ்தர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஏக காலத்தில் பரீட்சைகள் நடத்த வேண்டுமென்று கிளர்ச்சி செய்தபோது - 1916இல் சென்னை நிர்வாக சபை மெம்பராக இருந்த சர். அலெக்சாண்டர் கார்ட்யூ -   1913இல் ப்ப்ளிக் சர்வீஸ் கமிஷன் முன் சாட்சியம் கொடுக்கையில், அவ்வாறு ஏக காலத்தில் பரீட்சைகள் நடத்தினால், கடுமையான வகுப் புணர்ச்சியுடைய ஒருசிறு சமூகத்தைச் சேர்ந்த பிராமணர்களே அப்பரீட்சையில் அதிகமாக வெற்றி பெறுவார்கள். சிவில் சர்வீஸ் பிராமண மயமாகி விடும் எனக் கூறினார். மற்றும் மாகாண சிவில் சர்வீசுக்கு 1892 முதல் 1904 வரை நடத்திய போட்டிப் பரீட்சைகளில் வெற்றியடைந்த 16 பேரில் 15 பேர் பிராமணர் என்றும் கூறினார். அதே காலத்தில் அசிஸ்டெண்ட் என்ஜினியர் வேலைக்கு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் வெற்றி பெற்ற 21 பேரில் 17 பேர் பிராமணர்கள் அம்மட்டோ! அக்காலத்தில் உத்தியோகம் வகித்த 140 டிப்டி கலெக்டர்களில் 77 பேர் பிராமணர்கள். 30 பேர் பிராமணரல்லாத ஹிந்துக்கள், பாக்கிப் பேர் முகம்மதியர், இந்தியக் கிறித்துவர், அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர். நீதி இலாகாவிலும் நிலைமை இவ்வாறாகவே இருந்தது. 1913இல் உத்தியோகம் நடத்திய 128 ஜில்லா முனிசீப்புகளில் 93 பேர் பிராமணர். 25 பேர் பிராமணரல்லாத ஹிந்துக்கள், பாக்கிப் பேர் முகம்மதியர், இந்தியக் கிறித்துவர், அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர்கள். இவ்வாறு எல்லாத் துறைகளும் பிராமண மயமாகவே இருந்தன.

பிரிட்டிஷ் ஆட்சியிலேயே நிலைமை இவ்வாறு இருக்க வேண்டுமானால், அவர்கள் ஆட்சி ஒழிந்து, பிராமண ஆதிக்கம் பெற்ற காங்கிரஸ்காரர் கோரிக்கைப்படி சுயராஜ்யம் வந்தால், பிராமணரல்லாதார் நிலைமை எவ்வளவு கேவலமாகுமென்று கூறவும் வேண்டுமா?"

நூற்றுக்கு 3 விழுக்காடு உள்ள பார்ப்பனர்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 90 விழுக்காட்டுக்குமேல் ஆதிக்கம் செலுத்தினர் என்றால், பெரும்பான்மையான பார்ப்பனர் அல்லாத மக்களிடையே விழிப்புணர்வும், உரிமைகளைப் பெறுவதற்காக ஒரு அமைப்பும் தோன்ற வேண்டியது காலத்தின் கட்டாயமல்லவா?

அந்த வரலாற்றுக் கடமையைச் செய்த கண்ணியத்துக்குரிய பெரு மக்கள்தான் டாக்டர் சி. நடேசனார், வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் என்ற முப்பெரும் மாமனிதர்கள் ஆவார்கள்.

அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்புதான் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற நீதிக்கட்சி.

அந்தக் கட்சி தன் கொள்கையை வெளியிட்டது சென்னை ரிப்பன் கட்டடம் அருகே உள்ள வி.பி.ஹால் என்று சொல்லப்பட்ட விக்டோரியா பப்ளிக் ஹாலில்தான் அந்தக் கொள்கை அறிக்கை மூவேந்தர்களுள் ஒருவரான வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களால் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கை வெளியிடப்பட்ட நாள்தான் இந்நாள். (1916 டிசம்பர் 20).

இந்நாளை ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும் மனதில் கல்வெட்டாய் செதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த அறிக்கை முக்கியமாக என்ன கூறுகிறது?

"இந்திய ஹோம்ரூல் இயக்கம் எனப்படும் கிளர்ச்சியைப் பற்றியும் தத்தம் அரசியல் நிலைமையைப்பற்றியும் ஒவ்வொரு பிராமணரல்லாத சமூகத்தாரும் தத்தம் அபிப்பிராயங்களைத் தெளிவாக விளக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இம் மாகாண மக்கள் சுமார் 4 கோடி 75 லட்சம் பேரில் சுமார் 4 கோடி பேர் பிராமணரல்லாதார், வரி கொடுப்போரில் பெரும்பாலார் இவர்களே - மற்றும் விவசாயிகளும், மிராசுதாரர்களும், ஜமீன்தாரர்களும் பிராமணரல்லாதாரே. எனினும் சென்னை மாகாண அரசியல் உலகத்தில் அவர்களுக்கு உரிமையுள்ள ஸ்தானத்தை அவர்கள் பெறவில்லை. பொதுவாக தேச முன்னேற்றத்திற்குத் தமக்குள்ள செல்வாக்கை இவர்கள் பாமர மக்களிடையே பிரயோகம் செய்யவும் இல்லை. இதுவே சட்ட திட்டங்களுக்கும், கட்டுப்பாட்டுக்கும் உள்பட்ட ஸ்தாபனங்களின் கிளர்ச்சிக் காலம். ஆனால், தமது பொதுநலத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், அரசியல் கிளர்ச்சியை வயிற்றுப் பிழைப்புக் கருவியாகக் கொண்டவர்களும், பொறுப்பற்றவர்களும் ஜனத் தலைவர்கள் என நாடகமாடுவதைத் தடுக்கவும் பிராமணரல்லாதாருக்கெனத் தனி ஸ்தாபனம் எதுவும் இல்லை. உண்மை நிலைமையை விளக்கிக் கூற அவர்களுக்குச் சொந்தப் பத்திரிகைகளும் இல்லை. ஆகவே, பிராமணர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்குங்கால். பிராமணர் அல்லாதாரின் அரசியல் நிலைமை மிக மோசமாகவே இருந்து வருகிறது"

அரசியல் துறையிலும் பொது ஸ்தாபனங்களிலும் பிராமணர்கள் அவர்களது ஜனத் தொகை விகிதாசாரத்துக்கு அதிகமாக இடம் பெற்றிருப்பதைப் புள்ளி விவரங்களுடன் எடுத்துக்காட்டி விட்ட அவ்வறிக்கை மேலும் கூறுவதாவது:

"பிராமணர்கள் சிறுபான்மை வகுப்பாராய் இருந்தாலும், சர்வகலாசாலைப் பட்டம் பெற்றவர்கள் அவ்வகுப்பில் அதிகமாக இருப்பதே அரசியலிலும் பொது ஸ்தாபனங்களிலும், பொது வாழ்விலும் அவர்கள் ஆதிக்கம் வகிப்பதற்குக் காரணமென ஒரு சமாதானம் சொல்லப்படுகிறது. இதை மறுப்பாரில்லை. சமூக வாழ்வில் பிராமணர் முதலிடம் பெற்றிருப்பதனாலும், உடலுழைப்பில்லாத அவர்களது வாழ்க்கை முறையினாலும், பிரிட்டிஷ் ஆட்சியினால் ஏற்பட்ட புதிய நிலைமைக்குத் தக்கபடி நடந்துகொள்ள அவர்கள் தங்களைத் தகுதியுடையவர்களாக்கிக் கொள்ள அவர்களுக்கு வசதி வாய்த்தது. கல்வித்துறையில் பிராமணரல்லாதார் எந்நிலைமையில் இருந்தாலும், பெருவாரியான உரிமை உடையவர்கள் பிராமணரல்லாதாரே. நாட்டின் செல்வ நிலையை உயர்த்தப் பாடுபடுபவர்களும் அவர்களே, சமூக வாழ்வில், அவர்களுக்கு அந்தஸ்தும், மதிப்பும், பாமர மக்களிடையே அபாரமான செல்வாக்கும் இருந்து வருகிறது. இவ்வளவு பெருமை வாய்ந்த பிராமணரல்லாதாருக்குச் சர்க்கார் மதிப்பும் ஆதரவும் அளிக்க வேண்டாமா?"

எவ்வளவு கழிவிரக்கத்துடன் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை வேண்டுகோளை வைக்கிறது.

டிசம்பர் 20 (1916) அன்று நீதிக் கட்சியால் விதைக்கப்பட்ட விதைதான் இன்று வளர்ந்து ஆலமரமாய்த் தழைத்தோங்கி நிற்கிறது. 

அந்த நீதிக்கட்சியின் நீட்சிதான் "சமூக நீதிக்கான சரித்திர நாயகர்" மாண்புமிகு மானமிகு முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தி.முக.. ஆட்சியாகும்.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே சாதனைகளில் முதல் இடத்தில் இருக்கும் ஆட்சிக்குப் பெயர்தான் 'திராவிட மாடல்' ஆட்சியாகும்.

இதற்கு வித்திட்ட நீதிக்கட்சியை, பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை பிரகடனப்படுத்தப்பட்ட டிசம்பர் 20  அன்று நன்றி உணர்வுடன் நினைவு கூர்வோம்.

தந்தை பெரியார் ஊட்டிய போர்க் குணத்துடன் - சமூகநீதிக்கு எதிராகத் தீட்டப்படும் கத்தியைப் - பறிமுதல் செய்வோம்! வெல்க திராவிடம்!


No comments:

Post a Comment