அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் அன்னை மணியம்மையாரின் பங்களிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 15, 2022

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் அன்னை மணியம்மையாரின் பங்களிப்பு!

அன்னை மணியம்மையாரிடம் நெருங்கிப் பழகாதவர்களைக் கேட்டால், ”அவங்க ரொம்பவும் எளிமையானவங்க; சாந்தாமான குணமுடையவங்க; ஒரு மாற்றுத்துணியும், மஞ்சள் பையும் இருந்தால் போதும் சுற்றுப்பயணத்திற்கே தயாராகிவிடுவார் என்றுதான் இன்றுவரை குறிப்பிடுகிறார்கள். அது உண்மையும்கூட! ஆனால், வரலாறு அவரை வேறு வகையில் உருவகப்படுத்தி வைத்திருக்கிறது! ஒரு வேளை அவருடன் நெருங்கிப் பழகியவர்களிடம் கேட்டால், கிடக்கும் விடையில், வியப்பில் நம் புருவங்கள் நிச்சயம் உயர்ந்துவிடும்! அந்த உயரத்தில் இருக்கிறது இராவணலீலா! அந்த உயர்த்துதலில் இருக்கிறது அவசரநிலை அறிவிப்புக் காலம்! 

இது அவருடைய இன்னொரு பக்கம்! 

இதுமட்டும்தான் அவரா? இல்லை! இதைவிடவும் இக்கட்டான ஒரு சூழலை அவர் கையாண்ட முறை திராவிடர் இயக்கத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக் களால் பொறிக்கப்பட்டுள்ளது. ஆம், ஜாதி ஒழிப்புக்காக இந்திய அரசியல் சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவுகளைக் கொளுத்தி 3,000 க்கும் மேற்பட்டோர் சிறை சென்றதி லிருந்து ஏறக்குறைய ஒரு ஆண்டு காலம் அன்னை மணியம்மையாரின் செயல்பாடுகள் மலைக்க வைப்பவை. இராவண லீலாவும், அவசரநிலையும் தந்தை பெரியாருக்குப் பிறகு நடந்தவை. ஆனால், ஜாதி ஒழிப்புப் போர் தந்தை பெரியார் இருக்கும் போதே, அவர் அறிவித்து நடைபெற்ற போராட்டம்.

1957 நவம்பர், 26 இல் ஜாதியைப் பாதுகாக்கின்ற அரசியல் சட்டப்பிரிவுளைக் கொளுத்தப்போவதாக போர்முரசு கொட்டிவிடுகிறார் பெரியார்! அந்தப் போருக்கு ஒரு நாள் முன்னதாகவே அதாவது 1957, நவம்பர் 25 இலேயே தடுப்புக் காவல் தடைச் சட்டத் தின்படி பெரியார் கைது செய்யப்பட்டுவிடுகிறார். 10,000 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு, 3,000 க்கும் மேற்ப்பட்டோர் கைதாகி சிறையேகினர். அதுவரையிலும், தலைவர் ஆணையிட்டார்! தொண் டர்கள் சிறை சென்றனர். அவ்வளவுதான். அதற்குப் பிறகு? 

சிறைசென்றவர்களின் பலகுடும்பங்கள் கடுமை யான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகிவிட்டன. கணவனைப் பிரிந்த மனைவி அவனைப் பார்க்க சிறைக்கு வந்தபோது, அவளைப் பார்த்துவிட்டால் எங்கே மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு விடுதலை கோருகிற பலவீனம் தனக்கு ஏற்பட்டு விடுமோ என்றும், அதனாலேயே தனது தலைவரின் கட்டளையை மீறிவிட்டதாக வரலாற்று அவப்பெயர் நேர்ந்துவிடுமோ என்றும் மனைவியை பார்க்காம லேயே இருந்துவிட, காரணம் புரியாமல் ஏமாந்து திரும்பிய மனைவியின் மனநிலையே பாதிக்கப்பட்டு விடுகிறது. ஒரு ஆண்டு தண்டனை முடிந்து சிறையிலிருந்து வெளிவந்து தகவல் அறிந்து கணவனும் மனநிலை பாதிக்கப்பட்டுவிடுகிறான். இது ஒருபானை சோற்றில் ஒரு சோறுதான்! இதுபோல ஆயிரக்கணக் கான விளைவுகள்!  அத்தனைக்கும் ஈடுகொடுத்து அங்கும், இங்கும் ஊடாடி தோழர்களின் குடும்பத்தி னரை ஆற்றுப்படுத்தினார்!

இது ஒரு பக்கம் இருக்க, சிறைப்பட்ட சிலநாட்களி லேயே இதைவிடவும் கொடுமை சிறையினுள்ளேயே நடந்தது. ஆம், சிறையில் கொடுத்த உணவு ஒத்துக் கொள்ளாமலும், கடுமையான வெப்பத்தினாலும் பல ருக்கும் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டுவிட, பட்டுக்கோட்டை இராமசாமி 1958, மார்ச் 8 இல் சிறையி லேயே மாண்டு போனார். 

இந்தக்கொடுமையை எப்படி எதிர்கொள்வது என்று இருக்கும்போது அடுத்த இடி வந்தது. ஆம், சட்டம் ஒழுங்கைக் காராணம் காட்டி, சட்ட விரோத மாக சிறையில் மாண்ட பட்டுக்கோட்டை இராம சாமியை சிறைக்குள்ளேயே புதைத்துவிட்டது சிறை நிர்வாகம். பிணத்தைக்கூட வெளியில் கொண்டுவர முடியவில்லை! வழக்குரைஞர்களும் கைவிரித்து விட்டனர்! குமுறுகின்ற எரிமலையாக கருஞ்சட்டை வீரர்கள்! இதோ, இப்போது வெடித்துவிடுவோம் என்று தகித்து நின்றனர்! தொண்டர்களை கட்டுப் பாடாக வழிநடத்தும் தகைமையுள்ள தலைவரும் சிறையில்! இப்படிப்பட்ட பல்முனைத் தாக்குதல் நிகழ்ந்த சூழலில் யாராக இருந்தாலும் தடுமாறிப் போயிருப்பார்கள்! திராவிடர் இயக்கத்தின் வரலாறும் தாறுமாறாகப் போயிருக்கும்!

என்ன செய்தார், நம் அன்னையார்? 

இந்தக் கொந்தளிப்பான தகவல் அன்னை மணியம் மையாருக்கு 1958 மார்ச், 9 இல் கிடைத்தது. அப்போது அவர், சென்னையில் இருந்தார். (மெட்ராஸ் பிராவின்சி) உடனடியாக நடிகவேள் எம்.ஆர்.ராதா, சட்டக்கல்லூரி மாணவர் கி. வீரமணி ஆகியோருடன், ராதாவின் மகிழுந்திலேயே திருச்சிக்கு விரைந்து வந்து சேர்ந்தார். திருச்சியிலிருந்தே நிலைமையை விளக்க சென்னை யில் இருக்கும் முதலமைச்சருக்கு தந்தி அடித்தார். 

அந்தப் பிரச்சினையில் தீர்வு காணும் முன்பே அடுத்த இடி இறங்கியது. ஆம், அதே பிரச்சினையில் மணல்மேடு வெள்ளைச்சாமி வெளியில் மருத்துவ மனைக்குக் கொண்டுவரப்பட்டு, சிகிச்சை பலனில்லா மல் அவரும் மாண்டு போகிறார். அந்த உடலைப் பெற்றுக்கொண்டு, இராமசாமியின் உடலைப் பெற போராட்டத்தைத் தொடர்ந்தார். முடியவில்லை. உடனடியாக சட்டக்கல்லூரி மாணவர் கி. வீரமணியை திருச்சியிலேயே இருக்கச்சொல்லிவிட்டு, முதலமைச் சர் காமராசர், உள்துறை அமைச்சர், சிறைத்துறைத் தலைவர் ஆகியோரக் காண அன்னையார் சென் னைக்கு விரைந்தார்.

சென்னையில் சிறைக்கைதியாக பொது மருத்துவ மணையில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரைச் சந்தித்து தகவலைச் சொன்னார் அன்னையார்! அய்யா தாங்கொணாத வேதனையடைந்தார்.

சென்னையில், 1958 மார்ச் 10 இல் வழக்குரைஞர் பி.ரெங்கசாமியுடன் முதலமைச்சர் காமராசர் இல்லத் திற்குச் சென்று பேசினார். முதலமைச்சர் சிறைத்துறை அமைச்சரான எம். பக்தவத்சலத்திடம் பேசினார். சென்னையிலிருந்து திருச்சி சிறைக்கு உத்தரவு பறந்தது. இராமசாமியின் உடல் திருச்சியிலிருந்த பெரியார் மாளிகைக்கு கொண்டுவந்து வைக்கப்பட்டது. தகவ லறிந்த தோழர்கள் பெரியார் மாளிகை நோக்கி திரண் டனர். அன்னையார் தொலைபேசி வாயிலாக சட்டக் கல்லூரி மாணவரான கி.வீரமணியை ஏற்பாடு களை கவனிக்கச்சொல்லிவிட்டு, அதே எம்.ஆர்.ராதாவின் மகிழுந்திலேயே சென்னையிலிருந்து திருச் சிக்கு விரைந்தார். கொள்ளைக்காக தனது இன்னுயிரையே தத்தம் செய்த போராளிகளை எண்ணி கண்ணீர் விடக்கூட நேரமில்லை அன்னைக்கு!

கூட்டம் அதிகமாகக் கூடுவதைக்கண்டு அச்சமுற்ற காவல்துறையினர், ’உடனடியாக அடக்கம் செய்யுங் கள்’ என்று கெடுபிடி காட்டினர். சட்டக்கல்லூரி மாண வர் கி. வீரமணியும் மற்ற தோழர்களும், “அன்னையார் திருச்சிக்கு விரைந்து வந்துகொண்டிருக்கிறார். அவர் வந்தபிறகுதான் உடல்களை ஊர்வலமாக ஓயாமாரி சுடுகாட்டுக்குக் கொண்டு செல்வோம்” என்று காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டி ருக்கும்போது, மத்திய நிர்வாகக் குழுத் தலைவரான வழக்குரைஞர் தி.பொ.வேதாசலமோ, “காவல்துறையினரிடம் கூறிவிட்டோம். உடனே எடுத்துச் செல் வோம்” என்று குறுக்குச்சால் ஓட்டினார். தோழர்கள் ஒத்துக்கொள்ளா ததால், அவர் கோபித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று விட்டார். இந்த குழப்பத்திற்கிடையில் அன்னையார் திருச்சிக்கு வந்து சேர்ந்தார். 

அன்னையார் தலைமையில் ஊர்வலம் காந்தி கடைவீதி வழியே சென்றது. மாவட்டக் கண்காணிப் பாளரான சோலை என்பவர் அனுமதி மறுத்தார். நெருக்கடி முற்ற, முற்ற அன்னையார் சற்றும் அஞ்சவில்லை. அதனினும் துணிச்சலுடன், “தோழர்களே அப்படியே சாலையில் அமருங்கள்” என்று ஆணையிட்டார்! இம்மி பிசகாமல் அன்னையின் ஆணையை நிறைவேற்றினர் கழகத்தோழர்கள்! அன்னையாரின் ஆணையும், தோழர்களின் கட்டுப்பாடும் காவல்துறை யினரை வெலவெலக்கச் செய்துவிட்டது. மணியம் மையார் பெண்ணாயிற்றே, நமது ஆணவத்தையும், அதிகாரத்தையும் காட்டலாம் என்று அவர்கள் எண்ணியிருக்கக்கூடும். அந்த எண்ணத்தில் வண்டி, வண்டியாக மண்ணையள்ளிக் கொட்டி விட்டார் அன்னையார். எரிமலையென நின்றிருந்த அன் னையார் முன் பேச வார்த்தையில்லாமல் நடுநடுங்கி நின்றனர் காவல்துரையினர். 

வேறுவழி! 

அனுமதி தானாகக் கிடைத்தது!

முன்னும், பின்னுமாக லட்சக்கணக்கான கருஞ்சட்டை தோழர்கள், தந்தை பெரியார் இருந்தால் எப்படி கட்டுப்பாட்டுடன் இருப்பார்களோ அப்படியே, உறங்கும் எரிமலைகளென அமைதியாக ஊர்வலத்தில் கலந்துகொண்டு, கடமை முடித்துத் திரும்பினர். மயானத்திலேயே இரங்கல் கூட்டத்தையும் நடத்தினார் மணியம்மையார். சட்டக்கல்லூரி மாணவர் கி.வீரமணி, திருவாரூர் தங்கராசு ஆகியோரும் பேசினர்.

உறங்கிக்கிடந்த எரிமலையை அன்னையார், 1958, மார்ச் 12 இல் திருச்சி பென்சனர் தெருவில் நடந்த கூட்டத்தில் வீசியெறிந்தார்! ஆம், சிறையில் நடந்த கொடுமை பற்றி பொறிபறக்கப் பேசினார். சினத்தை அடக்கி, தேவையான போது வெளியிட்ட அன்னையா ரின் இந்தப் போக்கு தோழர்களுக்கு, அன்னையார் மீது அளவுகடந்த மதிப்பையும், மரியாதையையும் அதிகரித்தது!

இப்படி சிறைப்பட்ட ஓராண்டுக்குள் ஏழு பேரை இழந்தோம். இவர்களைத் தவிர, வாளாடி பெரியசாமி, லால்குடி நன்னிமங்கலம் கணேசன், திருச்சி சின்னச் சாமி, இடையாற்று மங்கலம் தெய்வானை, மாதிரி மங்கலம் ரத்தினம், புதுமணக்குப்பம் கந்தசாமி, மணல் மேடு அப்பாதுரை, கண்டராதித்தம் சிங்காரவேல், திருச்சி டி.கே.எஸ். வாசன், தாராநல்லூர் மஜீத், கீழ் வாளவாடி பிச்சை என மொத்தம் 18 தோழர்கள் ஜாதி ஒழிப்புப்போரில் தம் உயிர்களை ஈகம் செய்தனர்.

இப்படியொரு போராட்டத்தை இந்த இந்திய துணைக்கண்டத்தில் அதுவரையிலும் யாரும் கண்ட தில்லை! அன்னை மணியம்மையார் கையாண்ட விதத்தையும் அதற்குமுன் யாரும், எங்கும் கண்ட தில்லை! இப்படிப்பட்ட ஆளுமைத்திறம்தான் பின்னா ளில், அய்யாவுக்குப்பின் அவர் திராவிடர் கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றபோது உதவியது! ஹிந்து சமூகத்தில் ஒரு பெண் அடைந்த உயரத்தை அறிய வேண்டுமென்றால், குறைந்தது அவரொரு நாத்திகராக இருக்க வேண்டும்! இல்லையென்றால் அன்னை மணியம்மையாரின் இந்த உயரத்தை மற்றவர்களால் உணரமுடியாது! உலக அளவில் எந்த ஒரு பெண் ணுக்கும் இப்படியொரு சிறப்பு கிடைத்திடவில்லை!

அவர்தான், அன்னை மணியம்மையார்!

- உடுமலை வடிவேல்


No comments:

Post a Comment