முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் தண்ணீர் தேக்கமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் தண்ணீர் தேக்கமா?

பழைய படங்களை பதிவேற்றி உண்மைக்கு மாறாக பா.ஜ.க.வினரின் அவதூறு

சென்னை,நவ.6- ஆட்சியில் யார் இருந்தாலும் அதைப்பற்றி ஒரு பொருட்டாகக் கொள்ளாமல், கடந்த காலங்களில் இயற்கை இடர்ப்பாடுகள் ஏற்பட்ட காலங்களில், குறிப்பாக சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது, மக்கள் நலனை முன்னிறுத்தி திமுக தொண்டர்கள் அனைவரும் மக்களை சந்தித்து நிவாரணப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி, இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளை வழங்கினார். கரோனா காலமாக இருந்தாலும், மக்கள் நலனை முன்னிறுத்தியே அனைத்து வகையிலும் திமுக தொண்டர்களை செயல்படுமாறு ஊக்குவித்து வந்தார்.

தற்பொழுது ஆட்சியில் உள்ள நிலையில், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும்  மழைக்கால இடர்ப்பாடுகளைக் கையாளுவது தொடர்பாக ஆலோ சனைக் கூட்டம் நடத்தி, அதற்குரிய பணிகளை போர்க்கால வேகத்தில் முடுக்கிவிட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

சென்னை மட்டுமல்லாமல், அனைத்து மாவட்ட ஆட்சி யர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டு, உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முன்னெச்சரிக் கையாக களப் பணிகளில் அரசு கவனம் செலுத்தி வந்துள் ளதை நாளேடுகள் பாராட்டுகின்றன.

ஆனால், மக்கள் நலனை முன்னிறுத்தி தீவிரமாக களப்பணியாற்றி வரும் நிலைகளை இருட்டடிப்பு செய்து, உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடுவது என்பதை ஒரு திட்டமாகவே முடிவெடுத்து சமூக ஊடகங்களில் அவ தூறுகளை பரப்புவதையே பாஜகவினர் வழமையாக்கிக் கொண்டுள்ளனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் தண்ணீர் தேங்கவில்லை. எனினும், வட சென்னை பகுதியில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக வில்லிவாக்கம், கொளத்தூர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது. இந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

கொளத்தூர் தொகுதியில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலத்திற்கு முன்பு தண்ணீர் தேங்கி உள்ளதாக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் மற்றும் அதிமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு கோவை சத்யன் ஆகியோர் டிவிட்டர் பக்கத்தில் படங்களை பதிவு செய்து இருந்தனர்.

பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஆர். சேகர்  என்பவர் பதிவில், “நேற்றைய படம்  என்று அவதூறு பரப்பும் நோக்கில் பழைய படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார். அதேபோன்று, அதிமுக கோவை சத்யன் என்பவரின் பதிவில்,  “மழைநீர் வடிகால் 4000 கோடி பேக்கேஜ். 10 வருஷமா சட்டமன்ற உறுப்பினர் - இப்போ முதலமைச்சர். அவர் தொகுதி அலு வலகத்தின் நிலைமை நேற்றுவரை. மக்களை ஏமாற்றுவது என்றுதான் முடியுமோ. இதில் சென்னை 2.0 ஒரு வெத்து விளம்பரம் சுத்துது” என்று குறிப்பிட்டு அதே பழைய படத்தை பதிவேற்றியுள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலுவலகத்தில் தண்ணீர் தேங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவதூறு பரப்பும் நோக்கில் பதிவிடப்பட்டு பகிரப்பட்ட படம் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் பழைய படம். பழைய படத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக பலகையில் நீல வண்ணத்தில் உள்ளது. திமுக ஆட்சியில் புதுப்பிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகக்கட்டடத்தின் படம் அவர் களின் பதிவில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 7 ஆண்டுகளுக்கு முந்தைய படத்தை வெளியிட்டு அவதூறு பரப்பியுள்ளார்கள்.

கோபாலபுரம் கலைஞர் இல்லத்தில் வெள்ளம் சூழ்ந் துள்ளதாக ‘தினமலர்' வெளியிட்ட அவதூறு பரப்பும் செய்திக்கு, தக்க ஆதாரங்களுடன் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் பதிலடி கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment