புரட்சிக்கவிஞர் படைப்புகள்பற்றி புரட்சிக்கவிஞருக்கே விளக்கிக் கூறி, புரட்சிக்கவிஞரின் பாராட்டைப் பெற்றவர் புலவர் இராமநாதன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

புரட்சிக்கவிஞர் படைப்புகள்பற்றி புரட்சிக்கவிஞருக்கே விளக்கிக் கூறி, புரட்சிக்கவிஞரின் பாராட்டைப் பெற்றவர் புலவர் இராமநாதன்

பெரியார் நமக்குத் தேவைப்படுகிறார் - பெரியாரியலை விளக்கும் பெரியார் பேருரையாளர் இராமநாதனும் தேவைப்படுகிறார்!

அவர் படைப்பை எங்கெங்கும் கொண்டு சேர்ப்போம்!

‘‘பெரியார் பேருரையாளர்'' பெரும்புலவர்  ந.இராமநாதன் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் உரை

சென்னை அக்.6  புரட்சிக்கவிஞர் படைப்புகள்பற்றி புரட்சிக்கவிஞருக்கே விளக்கிக் கூறி, புரட்சிக்கவிஞரின் பாராட்டைப் பெற்றவர் புலவர் இராமநாதன். பெரியார் நமக்குத் தேவைப்படுகிறார் - பெரியாரியலை விளக்கும் பெரியார் பேருரையாளர் இராமநாதனும் தேவைப்படு கிறார் அவர் படைப்பை எங்கெங்கும் கொண்டு சேர்ப்போம்! என்றார் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்..

‘‘பெரியார் பேருரையாளர்’’  பெரும்புலவர் ந.இராமநாதன் நூற்றாண்டு விழா

30.9.2022 அன்று மாலை  தஞ்சாவூர் பேருந்து  நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற் றாண்டு அரங்கத்தில் ‘பெரியார் பேருரையாளர்’ பெரும்புலவர் ந.இராமநாதன் நூற்றாண்டு விழாவிற்குத்  தலைமை தாங்கிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

‘‘சில்லியல் ஓதிக் கொங்கைத் திரள்மணிக் கனகச் செப்பில்

வல்லியும் அனங்கன் வில்லும் மான்மதச் சாந்தின் தீட்டிப்

பல்லியல் நெறியில் பார்க்கும் பரம்பொருள் என்ன யாருக்கும்

இல்லை உண்டு என்ன நின்ற இடையினுக்கு இடுக்கண் செய்தார்''

கம்ப இராமாயணத்தில் கோலம்காண் படலத்தில் கம்பன் இவ்வாறு  பாடுகிறான்.

சீதையினுடைய இடையில் புகுந்திருக்கிறார் கடவுள்

திருமணத்திற்குமுன் சீதையை சிங்காரித்து வரும் பொழுது, பெண்களுக்கே சந்தேகம் வந்துவிட்டதாம். இடை எங்கே இருக்கிறது? என்று தேடுகிறார்களாம்.

சிலர் இடை இல்லை என்கிறார்களாம் - 

சிலர் இடை உண்டு என்கிறார்களாம் -

இது எப்படி இருக்கிறது என்றால், கடவுள் உண்டு என்று சொல்கிறார்களே, கடவுள் இல்லை என்று சொல்கிறார்களே அதுபோன்று இருக்கிறதாம்.

கடவுளை எங்கே கொண்டு போய் விட்டிருக்கிறார்கள் பாருங்கள்; சீதையினுடைய இடையில் புகுந்திருக்கிறார் கடவுள்.

நான் பேசியதற்காக நாளைக்கு எனக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள், பரவாயில்லை.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

தந்தை பெரியார் அவர்கள் எழுதியதை, டாக்டர் மா.இராசமாணிக்கனார், ‘‘கம்பர் யார்?'' என்கிற புத்த கத்தில் எழுதியிருப்பார், அந்த நூலையும் நான் படித்தேன்.

அந்தப் புத்தகத்தில், கம்பர் யார்? என்று இந்த இடத்தில் சொல்கிறார்,

‘‘சீதையைப்பற்றி சொல்லுகிறபொழுது, மெய்யறிவு உள்ள மேலோர், படைத்தவன் உண்டு என்ற உண் மையை உணர்ந்து, உண்டு - பின்பு இல்லை என்ற பிரச்சினைக்கு வந்து, பிறகு இல்லை, இல்லை, இடை இருக்கிறது என்று முடிவு செய்தார்களாம்.''

அதுமட்டுமல்ல, இன்னொரு நண்பர் சொன்னார்,

தந்தை பெரியார் எழுதிய அறிக்கைகளைப்  புலவர் இராமநாதன் அய்யா அவர்கள், ஓர் எழுத்துவிடாமல் படித்து, நோட்டில் குறித்து வைப்பார்.

அப்படி வரும்பொழுது, அதிலிருந்து இதே கம்ப இராமாயணத்தைப் பெரியார் அய்யா எந்தெந்த கோணத்தில்  எடுத்துச் சுட்டிக்காட்டியிருக்கிறார் என்ப தைத் தெரிந்துகொள்ளலாம்.

இராஜகோபாலாச்சாரியாரின் தரக்குறைவான பேச்சும் -  பெரியாரின் கோபமும்!

இராஜகோபாலாச்சாரியார், சுதந்திரா கட்சியை ஆரம்பித்து, ‘‘காமராசர் என்கிற கருப்பு காக்கையை கல்லால் அடியுங்கள்'' என்று சொன்னார்.

இதைக் கேட்டதும், பெரியார் அய்யாவிற்குக் கோபம் ஏற்பட்டது. ஆச்சாரியாரும், பெரியாரும் மதிப்பிற்குரிய நண்பர்கள். இருந்தாலும், ‘‘இராஜகோபாலாச்சாரியார் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுகிறாரே? அவர் இவ் வளவுதூரம் தரம் தாழ்ந்து பேசுவதா?'' என்று நினைத்தார்.

காமராசர் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக இருந்து, அதற்குப் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஆனார். அந்தக் காலகட்டத்தில் காமராசருக்குப் புகழ் உச்சகட்டத்தில் இருந்தது.

அதை இராஜகோபாலாச்சாரியாரால் தாங்க முடிய வில்லை என்பதினால், சுதந்திரா கட்சி என்ற ஒரு கட்சியைத் தொடங்கினார்.

விமர்சனத்தைப்பற்றி பெரியார் அவர்கள் கவலைப் படமாட்டார். ஆனால், தரக்குறைவாகப் பேசக்கூடாது என்று சொல்வார்.

இன்றைய அரசியலில் தரக்குறைவாகப் பேசுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தரக்குறைவாகப் பேசினால் தான், அரசியல் என்று நினைக்கக்கூடிய அளவிற்குக் கொச்சைத்தனம் மிகுந்து இருக்கிறது; மிகக் கேவலமாக இருக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இந்தத் தரக் குறைவு பொதுவாழ்க்கையில் வரக்கூடாது என்று நினைப்பவர்.

தந்தை பெரியாரின் அறிக்கை!

அதைச் சுட்டிக்காட்டி தந்தை பெரியார் ஓர் அறிக்கை எழுதுகிறார்.

இராஜகோபாலச்சாரியார் ஏன் இப்படி எழுதி னார்? எங்கள் நண்பர் இராஜாஜி, எப்பொழுதுமே இவ்வளவு கீழிறங்கிப் பேசுமாட்டாரே; ஏன் இவ்வளவு கீழிறங்கித் தரக்குறைவாகப் பேசுகிறார்? என்று கோபத்தோடு எழுதும்பொழுது சொல்கிறார்,

கம்ப இராமாயணத்தில் ஒரு பாட்டு இருக்கிறது.

சி.ஆர். அவர்களுடைய கோபத்திற்கு இந்தச் சந்தர்ப்பத்தில் கம்ப இராமாயணக் கதையில் உள்ள கம்பன் கற்பனையில் காணும் ஓர் இடத்தை உதாரணமாக எடுத்துக்காட்ட ஆசைப் படுகிறேன்.

இராமன், வாலியைக் கோழைத்தனமாகவும், மோசடியாகவும் மறைந்து நின்று கொன்றான் என்ற செய்தியை வைத்துக்கொண்டு, இராமனைப் பார்த்து வாலி கேட்பதாக, ஒரு கருத்துச் சித்திரம் காணப்படுகிறது.

அந்தக் கவியின் பாகமாவது, 

‘‘ஆவியை, ஜனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தில் வந்த தேவியைப் பிரிந்த பின் திகைத் தனை.''

தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவி - காமராசர் பறித்துக்கொண்டு போய்விட்டார்

சீதையைப் பிரிந்தவுடன், இராமனுடைய அறிவு, நிதானம் எல்லாம் போய்விட்டது.

சீதை எந்த இடம் - தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவி.

சீதையை யார் பறித்துக்கொண்டு போனார்?

காமராசர் பறித்துக்கொண்டு போய்விட்டார்.

ஆகவே, 

‘‘ஆவியை, ஜனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தில் வந்த தேவியைப் பிரிந்த பின் திகைத்தனை போலாம் உன் செய்கை.''

‘‘உன்னுடைய செய்கை எப்படி இருக்கிறது? கேவலமான செய்கை'' என்று சொன்னார்.

ஆகவே, இப்படி பல செய்திகளைச் சொல்லலாம்.

‘கரிய மாலினும், கண்ணுத லானினும்,

உரிய தாமரை மேல் உரைவானினும்,

விரியும் பூதம் ஓர் அய்ந்தினும், மெய்யினும்,

பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால்'

‘வேதம் வல்ல வேதியர்; கருநிற உருவினனாய திருமாலைக் காட்டிலும்; நெற்றிக் கண்ணுடைய சிவ பெருமானைக் காட்டிலும்;  தனக்கே உரிய திருவுந்தித் தாமரை மேல் வீற்றிருந்தருளும் பிரமனைக் காட்டிலும்;  பரந்து  விளங்கும்; ஒப்பற்ற பஞ்ச பூதங்களைக் காட்டிலும்; சத்தியத்தைக் காட்டிலும்; மேம்பட்டவர் ஆவர்; (அவர்களை) மனப்பூர்வமாக;  புறந்தருவாயாக.’

கடவுள் முக்கியமல்ல; கடவுள் இரண்டாவதுதான் - பிறகு யார் முக்கியம்? ‘‘பிராமணர்''தான் முக்கியமாம்!

பெரும்புலவரை திகைக்க வைத்த பெரியார்; அவரையே வியக்க வைத்த பெரியார்

கம்ப இராமாயணத்தில் - வால்மீகி இராமாயணத்தில் இருக்கக்கூடிய ஒரு பாடலை அய்யா சுட்டிக்காட்டுகிறார்.

புலவர் அவர்கள், நூற்றாண்டு விழா நாயகர் இராம நாதன் அய்யா அவர்கள், அதில் ஊறிப் போய் திளைத்த பெரும்புலவர். அந்தப் பெரும்புலவரையே திகைக்க வைத்தவர் பெரியார். அவரையே வியக்க வைத்தவர் பெரியார்.

ரிக் வேதத்தில் 62 ஆவது பிரிவில்...

வேதத்தில் என்ன சொல்கிறார்கள் - இதை பல மேடைகளில் நான் சொல்லியிருக்கிறேன்.

ரிக் வேதத்தில் 62 ஆவது பிரிவில் ஒரு சமஸ்கிருத சொல் இருக்கிறது.

‘‘தெய்வாதீனம் ஜகத்சர்வம்;

மந்த்ரா தீனம் து தெய்வதம்;

தன் மந்திரம் பிரம்மணாதீனம்;

தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்''

“உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது 

கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டது 

மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது 

பிராமணர்களே நமது கடவுள்கள்”

ஆகவே, கடவுள் இரண்டாம் பட்சத்திற்குப் போய் விட்டார். அதனால்தான், ‘இவன், ‘சாமிங்கிறான்' - உள்ளே இருக்கிறதும் சாமி - வெளியில் இருக்கிறதும் சாமி.'

கம்பனின் அறிவு யாருக்குப் பயன்பட்டது? எதிரிக்குப் பயன்பட்டது!

தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத் என்று சொன்ன நேரத்தில், இதற்கு அய்யா சொன்னார், ‘‘ஏன் எனக்குக் கம்பன்மீது கோபம்? அவனுடைய அறிவுத் திறனில் எங்களுக்கு என்ன சந்தேகமா? என்றால், இல்லை. ஆனால், அந்த அறிவு யாருக் குப் பயன்பட்டது? எதிரிக்குப் பயன்பட்டது'' என்றார்.

எதிரிக்குத் தன்னை விற்கத் தெரியாத ஒரு பெரும்புலவர் இராமநாதன் அய்யா அவர்கள்

அதைத்தான் நான் சொன்னேன், எதிரிக்குத் தன்னை விற்கத் தெரியாத ஒரு பெரும்புலவர் இருக்கிறார் என்றால், நேர்மையாளரான  நம்முடைய இராமநாதனார் அவர்கள்தான்.

நம்முடைய மானத்தைத் திரும்பப் பெறுவதற்காக வருகிற நேரத்தில், அந்தப் பாடல், இந்தி துளசிதாஸ் இராமாயணத்தில் இருக்கிறது - வால்மீகி இராமா யணத்தில் கிடையாது.

அதில்,

‘கரிய மாலினும், கண்ணுத லானினும்,

உரிய தாமரை மேல் உரைவானினும்,

விரியும் பூதம் ஓர் அய்ந்தினும், மெய்யினும்,

பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால்’

எனவே, இவர்கள் எல்லாரையும்விட மேலானவர்கள் யார் என்றால், அந்தணர் என்ற வார்த்தைக்கு வியாக்கி யானம் சொல்லி, அது வேறு; இது வேறு என்று சொல்வார்கள்.

துளசிதாஸ் இராமாயணத்தைப் பார்த்து காப்பியடித்தார்

கம்பர் என்ன பொருளில் சொல்லியிருக்கிறார் என்பதற்கு, துளசிதாஸ் இராமாயணத்தைப் பார்த்துக் காப்பியடித்தார். அதனால்தான் அவருக்கே உறுத்திற்று.

‘‘வையம் என்னை இகழ்ந்தாலும்

மாசு எனக்கு எய்தாலும்'' என்று பாட வேண்டிய கட்டத்திற்கு வந்தார்.

எனவே, சமுதாயத்தில் ஒரு புலவருக்கு எவ்வளவு ஆற்றல் இருந்தாலும், அதை எதிரிக்குப் பயன்படுத்தி, அதன்மூலம் தாங்கள் புகழும், பெருமையும் அடைய வேண்டும் என்றிருந்த ஒரு சமுதாயத்தில், பாரம்பரியமாக இருந்த இடத்தில், தன் மொழியை நீஷ பாஷை என்று சொன்னவன்மீது கோபம் வரவேண்டாமா? ஆத்திரம் வரவேண்டாமா?

என்னுடைய தாய்மொழி - நான் பேசுகின்ற மொழி - அம்மா என்று அழைக்கக்கூடிய மொழி. அம்மா என்று மட்டுமல்ல, என்னுடைய வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தக் கூடிய மொழியை உள்ளே விடாதே என்று சொல்கிறானே!

எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை; ஆனால், என்னுடைய சகோதரர்  நம்புகிறாரே? அவர் உள்ளே போகும்போது, தமிழில் பேசக்கூடாது; தமிழில் பாடக்கூடாது என்று இன்னமும் சொல்கிறானே!

பல புலவர்கள் தவறிய இடத்தில், பேராசிரியர் இராமநாதனார்  பெரும் இமயமாய் நின்றார்

இத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆன பிறகு, ஒரு திராவிட மாடல் ஆட்சி வந்து - அந்தத் திராவிட மாடல் ஆட்சி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று சொல்லி, அதற்குப் பிறகு, ஆகமக் கோவில்களில் ஆகமம் இருக்கலாம்; ஆகமம் இல்லாத கோவிலில் வேறு விதமாக இருக்கலாம் என்று சொல்லி உள்ளே போகிறார்கள் என்றால், இன்னமும் ஜாதி அடிப் படையில், வருணாசிரம தரும அடிப்படையில்தான் கடவுளுக்கே இடம் என்று சொன்னால், இதைச் சுட்டிக்காட்ட பலர் தேவை என்று நினைக் கின்றபொழுது, பல புலவர்கள் தவறிய இடத்தில், பேராசிரியர் இராமநாதனார் பெரும் இமயமாய் நின்றார்.

மற்றவர்கள் செய்ய மறந்த அல்லது பயந்த அந்தப் பணியை அவர் துணிந்து, துணிச்சலாகச் சொன்னார். தனக்குப் பெயர் வரவேண்டும்; புகழ் வரவேண்டும் என்பதற்காக அல்ல.

‘‘வாழ்க, வாழ்க’’ என்று சொல்வதினால்  நான் மகிழ்ச்சியடைபவன் அல்ல என்றார்  தந்தை பெரியார்!

‘‘வாழ்க, வாழ்க'' என்று அய்யாவைப் பார்த்து சொன்ன நேரத்தில், தத்துவஞானியான பெரியார் சொல்வார்,

‘‘நீங்கள் வாழ்க என்று சொல்வதினால் நான் சந் தோசப்படமாட்டேன்; ஏனென்றால், நீங்கள் வாழ்க என்று சொல்வதினால், மகிழ்ச்சியடைவேண்டும் என்று சொன்னால், எவ்வளவு பேர் என்னை வாழ்க என்று சொல்கிறார்களே, அதைவிட என்னை ஓழிக என்று சொல்பவர்கள்தான் அதிகம். வாழ்க என்று சொல் வதினால் நான் மகிழ்ச்சியடைவேன் என்று சொன்னால், ஒழிக என்று சொல்வதினால், நான் எவ்வளவு வருத்தப் பட்டு என்னுடைய வேலையை விட்டுவிட்டுப் போக வேண்டும். ஆகவே, அதனை நான் செய்வதற்குத் தயாராக இல்லை'' என்று தெளிவாகச் சொல்வார்.

அரிய எழுத்துகளை, ஆய்வுகளை  இந்த சமுதாயத்திற்குக் கருவூலமாக விட்டுச் சென்றிருக்கிறார்

ஆகவே, ஒரு பெரிய பணியை தன் தலைமேல் சுமந்து, அரிய எழுத்துகளை, ஆய்வுகளை இந்த சமுதாயத்திற்குக் கருவூலமாக விட்டுச் சென் றிருக்கிறார் அய்யா இராமநாதன் அவர்கள்.

அதனால்தான் புரட்சிக்கவிஞர் அவர்கள், வேறு யாரையும் இப்படிப் பாராட்டியது கிடையாது.

‘‘கவிஞரின் காதல்'' என்ற புத்தகத்தைப் படித்தால் உங்களுக்குத் தெரியும்.

நம்முடைய ஈரோடு தமிழன்பன் அவர்களைக்கூட இந்த நிகழ்ச்சிக்கு நான் அழைத்திருந்தேன். அவருடைய உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் அவர் வர வாய்ப்பில்லை, மன்னித்துக் கொள்ளுங்கள் என்று தொலைப்பேசியில் கூறினார்.

தந்தை பெரியாரிடம் நெருங்குவதற்கு மற்றவர்கள் எப்படி பயப்படுவார்களோ அதேபோன்று புரட்சிக்கவிஞர் அவர்களிடமும் நெருங்கப் பயப்படுவார்கள்.

புரட்சிக்கவிஞரின் வியப்பு - ஆச்சரியம்!

அந்தப் புத்தகத்தைக் காட்டி, ‘‘ஏம்ப்பா, நம்முடைய இராமநாதன் இருக்கானே, என்னப்பா, அவ்வளவு எழுதியிருக்கிறான்; எனக்கே தெரியலே, நான் இப்படி எழுதியிருக்கிறேன்னு, அவன் சொல்லித்தாம்பா தெரியுது; ம்,  அவ்வளவா?'' என்பார்.

இதுபோன்று யாராவது புரட்சிக்கவிஞர் அவர்களுடைய பாராட்டைப் பெற்றவர்கள் உண்டா?

பெரியாரியல் என்பது - அது பெரியாருக்காக அல்ல!

இதுதான் இராமநாதன் -

இதுதான் இந்த நூற்றாண்டு விழா நாயகருடைய பெருமை!

எனவே, யாரெல்லாம் இமயம் போல் நின்றவர்களோ, 

யாரெல்லாம் கொள்கைகளுக்காக வாழ்ந்தார்களோ, அவர்களையெல்லாம் பின்பற்றி வாழ்ந்த இராமநாதன் அய்யா அவர்கள் விட்டுச் சென்ற கருவூலங்களையெல்லாம் நாம் காப்பற்றுவோம் - அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு செல்வோம். பெரியாரியல் என்பது அது பெரியாருக்காக அல்ல.

வழக்கமாக நான் சொல்லுகிற உதாரணத்தோடு என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன். 

மருந்து சாப்பிடுகிறோமே, டாக்டருக்காகவா? மருந்து கண்டுபிடித்தவருக்காகவா? அல்லது மருந்து கடையில் வியாபாரம் ஆகவேண்டும் என்பதற்காகவா? அல்ல, நம்முடைய நோய் போகவேண்டும் என்றுதான்.

பெரியார் தேவைப்படுகிறார்! பெரியாரியலை விளக்குகின்ற இராமநாதன் தேவைப்படுகிறார்!

எனவேதான், 

பெரியார் தேவைப்படுகிறார்!

பெரியாரியலை விளக்குகின்ற இராமநாதன் தேவைப்படுகிறார்!

இவர்களைப் பாதுகாக்கின்ற புரட்சிக்கவிஞர் தேவைப்படுகிறார்!

‘திராவிட மாடல்' ஆட்சி - சமூகநீதிக்காக இருக்கின்ற ஆட்சி என்றைக்கும் தேவை!

எல்லாவற்றையும் இன்றைக்கு செய்துகொண்டிருக்கின்ற ‘திராவிட மாடல்' ஆட்சி - சமூகநீதிக்காக இருக்கின்ற ஆட்சி என்றைக்கும் தேவை என்று சொல்லி,

வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்!

வாழ்க அய்யா இராமநாதன் புகழ்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment